search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பக்தர்கள் அமராவதி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம்
    X

    பக்தர்கள் அமராவதி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம்

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது.
    • அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது.

    இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னிகள் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. மேலும் இங்குள்ள பஞ்சலிங்க அருவி வனப்பகுதியில் உள்ள ஆறுகளின் உதவியுடன் மூலிகை தண்ணீரை அளித்து வருகிறது.

    இயற்கை சூழலில் அமைந்துள்ள அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்தோடு வருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கார்த்திகை, பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குறிப்பாக ஆடி மற்றும் தை மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற தை அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் முதல் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் குதிரைகள் மற்றும் மாடுகள் பூட்டிய வண்டியில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் இரவு முழுவதும் பெருமாள் கோவில் மற்றும் அணைப் பகுதியில் தங்கினர்.இன்று அதிகாலையில் எழுந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்துவிட்டு மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சிலர் தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தாராபுரம் அமராவதி ஆற்றில் தை அமாவாசையை யொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர். இதனால் காலை முதலே அமராவதி ஆற்றில் பொதுமக்கள் குவிந்தனர்.

    இதேபோன்று அமராவதி ஆற்றங்கரையோர பல்வேறு இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில்,அங்காளம்மன் கோவில், தண்டபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசை தினமான இன்று திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், வாலிபாளையம் சுப்ரமணியர் கோவில், நல்லூர் ஈஸ்வரன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மங்கலம் ரோடு பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். கோவில்களுக்கு குடும்பத்துடன் வந்த பக்தர்கள், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பக்தர்களுக்கு வெண்பொங்கல், தயிர்சாதம், தக்காளிசாதம், சுண்டல், துளசி உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், நல்லா ற்றங்கரை மண்டபத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

    Next Story
    ×