என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
- இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் பழனிச்சாமி (வயது 23). இவர் படித்து முடித்த பின்னர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இவரது உறவினர் தம்பி பட்டியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சக்தி (16). இவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து விட்டு பின்னர் கல்வியை தொடரவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு பழனிச்சாமி, இவரை அழைத்துக் கொண்டு, ஊர்குளத்தான் பட்டியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி நோக்கி தபால்துறைக்கு சொந்தமான அஞ்சலக வாகனம் சென்றது.
அந்த வாகனம் மணமேல்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக இருவரையும் நெடுஞ்சாலைதுறை ரோந்து வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
- யானைகள் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக - கேரளா எல்லையான வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் மதிவேந்தன் இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
* யானைகள் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* யானைகளை காக்க உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட திட்டம் என்று அவர் கூறினார்.
- பாரதிய ஜனதா ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை விட அதிகமான நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
- பா.ஜ.க. புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தமிழகத்தில் மாறி வருகிறது.
கோவை:
பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தை விட பின்தங்கி இருந்த மாநிலங்கள் தற்போது முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசு கட்டுப்பாடுகள் போடுவதால் மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகள் தமிழகத்தில் தாமதம் ஆகிறது.
தமிழக அரசால் கோவை விமான நிலையப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலைய நடவடிக்கையை மட்டுமே மத்திய அரசு அமல்படுத்த முடியும்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 10 ஆண்டுகள் குறித்து வெள்ளை அறிக்கையை கொடுத்திருக்கிறார். அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக சமமான நிதி பங்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது
பாரதிய ஜனதா ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை விட அதிகமான நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்கும் சட்டமாக பார்க்க வேண்டும். பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் என்ற வகையில் அதனை நான் வரவேற்கிறேன்.
அரசியலில் தனிப்பட்ட தாக்குதல் இருக்கக்கூடாது. கூட்டணி தொடர்பான தெளிவான முடிவுகள் வரும் வரை தேவையற்ற பேச்சுக்களை அ.தி.மு.க.வினர் தவிர்க்க வேண்டும்.
பா.ஜ.க. புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தமிழகத்தில் மாறி வருகிறது. பாஜகவை, மோடியை எதிர்த்தவர்கள் தற்போது பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும்.
- இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும்.
சென்னை:
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவரும் மற்றும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இணையவழியில் திட்ட அனுமதி வழங்கப்படுவதால் விண்ணப்பங்கள் விரைவாக முடிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு, வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும்.
இது திட்ட அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். திட்ட அனுமதி விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி மூலமே பெறப்பட்டு கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்கும் முறை செயல்பாட்டிற்கு வந்தபின், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உயர்ந்துள்ளது மற்றும் இணையவழி ஒப்புதல் வழங்கியது 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் உயரமான கட்டடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதி பொறுத்தவரையில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 65 விண்ணப்பங்கள் பெறப்படும். இணையவழி திட்ட அனுமதி மென்பொருள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக முன்பு எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 100-க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் விண்ணப்பதாரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தெற்கு ரெயில்வேயில் சுமார் 10000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
- தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2-ந்தேதி ஒன்றிய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில்வே தேர்வு வாரியங்கள் மூலம் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்து, அதற்கான கால அட்டவணையை வெளியிட்டார்.
இதன்படி தெற்கு ரெயில்வேயில் சுமார் 10000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் மதுரைக் கோட்டத்தில் உள்ள 750 காலி பணியிடங்களும் அடங்கும்.
ஆனால் தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
ரெயில்வே நிர்வாகத்தின் இந்த தவறான முடிவினால் தமிழக இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 750 காலி பணியிடங்கள் கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளது.
இதனால் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும்.
1990 காலகட்டங்களில் ஜாபர் ஷெரீப் ஒன்றிய ரெயில்வே அமைச்சராக இருந்பொழுதுதான் மொழி வாரி மாநிலங்களின் அடிப்படையில் ரெயில்வே தேர்வு வாரியங்கள் உருவாக்கப்பட்டது. மேலும் சில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
முன்பு கர்நாடக மாநிலம் ஹுப்பிலி கோட்டமானது செகந்திராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரெயில்வேயின் கீழ் இருந்தது. ஆனால் அந்தக் கோட்டத்தின் காலியிடங்கள் முன்பு தெற்கு ரெயில்வேயில் இருந்த பெங்களூரு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.
அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த விசாகப்பட்டினம் கோட்டம் புவனேஸ்வரத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்கரை ரெயில்வேயில் கீழ் வருகிறது. புவனேஸ்வரத்தில் ஒரு ரெயில்வே தேர்வு வாரியம் உள்ளது ஆனாலும் ஆந்திர இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக அங்கு ஏற்படும் காலியிடங்களை தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள செகந்திராபாத் தேர்வு வாரியம் மூலமாகவே இன்றும் நிரப்பப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று வகுத்து வைத்துள்ளது பெரும் கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தில் ஏற்படும் வேலை வாய்ப்பு கேரள இளைஞர்களுக்குச் செல்லும் விதமாக உள்ள தற்போதைய நடமுறையை மாற்றி, மதுரைக் கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் தான் நிரப்பப்பட வேண்டும். இதற்கான உத்தரவினை ஒன்றிய ரெயில்வே அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போலீசார் பணத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்த ஆனந்தனை பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்(40). ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ஆட்டோவில் வந்த பயணி ஒருவர் அவரது ஏ.டி.எம்., கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க ஆனந்தன் சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணம் கிடந்தது. இதைப் பார்த்த அவர் உடனே வெளியே வந்து அங்கிருந்த பொது மக்களிடம் விசாரித்துள்ளார். அங்கிருந்த யாரும் சரியான தகவல் தெரிவிக்கவில்லை.
பணத்தின் உரிமையாளர் யார் என்றும் தெரியவில்லை. இதனால் ஆனந்தன் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரனிடம் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் பணத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்த ஆனந்தனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
- 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
- வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இன்று 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
ஊட்டி கேரட், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைவால் அதன் விலை அதிகரித்து உள்ளது. கேரட் கிலோ ரூ.90-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ், அவரைக்காய் மற்றும் பன்னீர் பாகற்காய் ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது. தக்காளி ரூ40-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கும், முருங்கைக்காய் மற்றும் இஞ்சி கிலோ ரூ.120 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.
- வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
- மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.
மதுரை:
கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.
- பாரதிய ஜனதா ஆட்சி பல ஆண்டுகள் தொடரும்.
- அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
கோவை:
டெல்லியில் பாரதிய ஜனதாவில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்களான சேலஞ்சர் துரை, சின்னசாமி, ரத்தினம், செல்வி முருகேசன் ஆகியோர் விமானம் மூலம் கோவை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு பாரதிய ஜனதாவினர் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்புக்கு பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, சின்னசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிய ஜனதா ஆட்சி பல ஆண்டுகள் தொடரும். கோவைக்கு தேசிய நீரோட்டம் தான் பக்கபலமாக இருக்கும். அதை நினைத்து தான் நாங்கள் பாரதிய ஜனதாவில் இணைந்திருக்கிறோம்.

ஊழல் பட்டியல் வெளியிடும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாங்கள் பயணித்து அவரது கரத்தை வலுப்படுத்துவோம். அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பா.ஜ.க.வில் தற்போது இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வினர் வயதானவர்கள் என விமர்சிக்கின்றனர். அப்படியானால் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பா.ஜ.க. துணை தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி. ராமலிங்கம் கூறுகையில் எம்.ஜி.ஆர். உடன் பணிபுரிந்த நேர்மையானவர்கள் இன்று தூய ஆட்சியை தமிழகத்துக்கு பாரதிய ஜனதாவால் தான் தர முடியும் என்பதற்காகவும், அண்ணாமலை கரத்தை வலுப்படுத்தவும் இணைந்துள்ளனர். தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் வரும்போது அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்து இன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைய உள்ளனர் என்றார்.
- தி.மு.க. நிர்வாகி மீது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த ஜீவா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
தேனி:
தேனி வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக இருந்தவர் ஜீவா. இவர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வந்தார். இவர் சமூக வலைதளங்களில் தங்கதமிழ்ச்செல்வன் மற்றும் சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மீதும் தி.மு.க. நிர்வாகிகள் மீதும் பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.யிடம் தி.மு.க. நிர்வாகிகள் புகார் அளித்தனர். தி.மு.க. நிர்வாகி மீது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஜீவாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த ஜீவா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.
செங்கோட்டை:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- தமிழகத்தில் பா.ஜனதா கட்சி பெரிய எழுச்சியை கண்டுள்ளது.
- தி.மு.க.வினரிடம் வாய் சவடால் உள்ளது.
சேலம்:
சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பட்டியில் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி பெரிய எழுச்சியை கண்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தேசியமும், தெய்வீகமும் இனி இந்த நாட்டுக்கு தேவை என்று நினைக்கிறார்கள். கடவுளுக்கு பயப்படுபவர்கள் தான் நியாயமாக இருக்க முடியும், கடவுளை நம்புகிறவன் நியாயமாக இருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வளவு காலமும் சமூக நீதி, சமுதாய மாற்றம் என்று பேசி அந்தந்த குடும்பத்தினர் தான் வளர்ச்சி பெற்றனர். ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதாக கூறினர். ஆனால் அவர்கள் குடும்பத்தை மட்டும் தான் பார்த்து கொண்டார்கள். எங்கேயும் ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் அமைக்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இருக்கும் குடும்பம் வாரிசு அரசியல் செய்யவில்லை. வாரிசுகள் அரசியலுக்கு வருவார்கள், ஆனால் வாரிசுககள் தலைமைக்கு வரக்கூடாது என்பது பா.ஜ.க.வின் திட்டம். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசும் போது கட்சியை விட, இயக்கத்தை விட தேசம் தான் முக்கியம் என பேசியுள்ளார். பா.ஜனதா கட்சியை நோக்கி பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
வருகிற 11-ந் தேதி பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா 200-வது ஜென்ம ஜென்மத்தில் யாத்திரையில் கலந்து கொள்வதற்காகவும் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவை சந்திக்கவும் மாவட்ட தலைவர்களை சந்திக்கவும் தமிழகம் வருகிறார். பாரத பிரதமர் வருகிற 25-ந் தேதி என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பல்லடத்திற்கு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு எவ்வளவு உதவி செய்தது என்று அவர் முதலமைச்சராக இருந்த போதும் எதிர்கட்சி தலைவராக இருந்த போது கூறி உள்ளார். அவர் கேட்ட போதெல்லாம் மத்திய அரசு நிதி கொடுத்தது. இதனை சட்டமன்றம் மற்றும் வெளியிலும் அவர் சொல்லி உள்ளார். எங்கள் இயக்கத்தால் அவர் பயன்பெற்றுள்ளார். ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை போல லாவனி கச்சோரி நடத்த நாங்கள் தயாராக இல்லை.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பவர் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு,
உடல் நலம் சரியில்லை என்றால் லேகியம் வாங்குவார்கள், நோய் பிடித்தவர்கள், ஊழல் வாதிகளை திருத்துவதற்கும், குடும்ப ஆட்சி நடத்துபவர்களை திருத்துவதற்கும் அவர் லேகியம் விற்கிறார். அந்த நோய் தமிழகத்தில் வேகமாக வளர்ந்திருக்கிறது, அரசை நடத்துபவர்கள் மத்தியில் அந்த நோய் இருக்கிறது. அந்த நோயை தீர்க்க எங்கள் தலைவர் லேகியம் விற்பது உண்மை தான், ஊழல் நோயை ஒழிக்க அதனை வேரறுக்க லேகியம் விற்கிறார்.
தி.மு.க.வினரிடம் வாய் சவடால் உள்ளது. ஆனால் உள்ளூர பயந்து தான் உள்ளனர். மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துள்ளது. 95 சதவீத மக்கள் பா.ஜ.க.வுக்கு அதரவாக உள்ளனர். கருத்து கணிப்புகளை விட மக்கள் மன நிலையே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






