என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர்.
    • மத்திய அரசு இந்த சாலையை செப்பனிட போதிய நிதி ஒதுக்கி விரைவில் செப்பனிட வேண்டும் என கேட்டு கொண்டார்.

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து இருப்பதால் அவற்றை விரைவில் செப்பனிட நிதி ஒதுக்க வேண்டும் எனவும், நான்கு வழி சாலை பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் எனவும் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்து அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    கடும் மழை காரணமாக தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. மேலும் இந்த சாலை வழியாக அதிக பாரம் ஏற்றி கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால் சாலையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் இந்த சாலையை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். கேரளா மாநிலத்திற்கு செல்ல இந்த சாலை மிகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாலை இப்பொழுது குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    குறிப்பாக மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர். இந்த சாலை மிகவும் ஆபத்தானதாக மாறி பல உயிர்களை இழந்துள்ளோம். ஆகவே மத்திய அரசு இந்த சாலையை செப்பனிட போதிய நிதி ஒதுக்கி விரைவில் செப்பனிட வேண்டும் என கேட்டு கொண்டார்.

    அது போல் இந்த சாலைக்கு மாற்றாக பணி நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பல்வேறு காரணங்களால் பணிகள் மெதுவாக நகர்கிறது. இதனை வேகப்படுத்த வேண்டும். மேலும் நான்கு வழி சாலை பணிகளுக்கு நிலத்தை அளித்த நில உரிமையாளர்களுக்கு 12 கிராமங்களில் போதிய நிதி வழங்காத காரணத்தால் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஆகவே இந்த பிரச்சனைக்கும் மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • பிறந்த நாளை மக்கள் பயன்பெறும் வகையிலும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

    சென்னை:

    மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மார்ச்-1 முதல் மார்ச் 25-ந் தேதி வரை தொடர்ந்து பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச்-1 வருகிறது. அவரது பிறந்த நாளைமக்கள் பயன்பெறும் வகையிலும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

    மார்ச்-1 முதல் மார்ச் 25 வரை மாவட்டம் முழுவதும் தொடர் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 1-ந் தேதி காலை அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படும். அன்று பகல் 12 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 37 ஆதரவற்றோர் இல்லங்களிலும் அறுசுவை உணவு வழங்கப்பட உள்ளது. பரனூர் தொழு நோயாளிகளுக்கு உணவு, உடை வழங்கப்பட உள்ளது.

    மார்ச்-1 அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காலை 10 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பல்லாவரம் வடக்கு பகுதி தி.மு.க. சார்பில் பகல் 12 மணிக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. மார்ச் -2ந் தேதி திண்டுக்கல் லியோனி பொதுக்கூட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி, 3-ந் தேதி கம்பம் செல்வேந்திரன் கந்திரி கரிகாலன், செங்கல்பட்டு நகரம், 4-ந் தேதி நாஞ்சில் சம்பத், செங்கை தாமஸ்-ஆலந்தூர் தெற்கு பகுதி.

    5-ந் தேதி சுப.வீர பாண்டியன், வெ.அன்புவாணன்-குன்றத்தூர் தெற்கு ஒன்றியம், 6-ந் தேதி புதுக்கோட்டை விஜயா ஆரணி மாலா- ஸ்ரீபெரும்புதூர், 7-ந் தேதி கோவி செழியன், மலர் மன்னன், பம்மல் தெற்கு பகுதி, 8-ந் தேதி நெல்லிக் குப்பம் புகழேந்தி, பிரபாகரன்- திருப்போரூர் தெற்கு ஒன்றியம், 9-ந் தேதி சபாபதி மோகன், ஒப்பிலா மணி- செம்பாக்கம் வடக்கு, 10-ந் தேதி ஈரோடு இறைவன் தேவபாலன்-செம்பாக்கம் தெற்கு.

    11-ந் தேதி சைதை சாதிக், அரங்கநாதன்-மறைமலை நகர், 12-ந் தேதி தமிழன் பிரசன்னா, செங்கை சந்தானம்-பல்லாவரம் தெற்கு, 13-ந் தேதி ராஜீவ் காந்தி, பரிதி இளம் சுருதி- ஆலந்தூர் வடக்கு, 14-ந் தேதி மதிவதனி, கவிஞர் நன்மாறன்-குன்றத்தூர் 15ந் தேதி குத்தாலம் கல்யாணம், போடிகாமராஜ்-திருக்கழுக்குன்றம், 16-ந் தேதி கரூர் முரளி, சிவா, - காட்டாங்குளத்தூர், 17-ந் தேதி சேலம் சுஜாதா, நாகம்மை- தாம்பரம் கிழக்கு, 18-ந் தேதி காரமடை நாக நந்தினி, குடியாத்தம் புவியரசி-கண்டோன் மென்ட். 19-ந் தேதி கவிஞர் தமிழ்தாசன், தமிழ் சாதிக்- பம்மல் வடக்கு 20-ந் தேதி சைதை சாதிக், எழும்பூர் கோபி-குன்றத்தூர் நகரம். 21-ந்தேதி ஈரோடு இறைவன், காம்ராஜ்- ஸ்ரீபெரும்புதூர், 22-ந் தேதி ராஜீவ் காந்தி, முரசொலி மூரத்தி-மாங்காடு 23-ந் தேதி தமிழன் பிரசன்னா- திருவொற்றியூர் கருணா நிதி-காட்டாங்குளத்தூர், 24-ந் தேதி கான்ஸ்டைன் ரவீந்திரன், தாம்பரம் ஜின்னா ஸ்ரீபெரும் புதூர், 25-ந் தேதி கோவி செழியன், வண்ணை புகாரி-புனித தோமையார் மலை ஒன்றியம்.

    பொதுக்கூட்ட மேடைகளில் ஆங்காங்கு உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.

    • கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், புதிய ராஜகோபுரங்களை கட்டுதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் அக்கோவிலுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பசுமடம், தங்கமேடு, தம்பிக்கலை அய்யன் சுவாமி கோவிலில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகம், பவானி சங்க மேஸ்வரர் கோவிலில் ரூ. 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை மணிமண்டபம் மற்றும் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலான பணியாளர் குடியிருப்பு மராமத்துப் பணிகள், அந்தியூர், செல்லீஸ்வரர் கோவிலில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் மதில் சுவர் கட்டும் பணி என மொத்தம் 5 கோவில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

    இப்பணிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டிலான பணி உபயதாரர் நிதியின் மூலமாகவும், ரூ. 2.65 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அந்தந்த கோவில் நிதியின் மூலமாகவும் மேற்கொள்ளப் படுகின்றன. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் ப.செல்வராஜ் ஏ.ஜி.வெங்கடாசலம், டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி. பரஞ்சோதி, துணை ஆணையர் ரா.மேனகா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    • சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பின்னி மில்லுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடத்தை கடந்த 2015-2017ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 கட்டுமான நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளன.

    லேண்ட் மார்க் ஹவுசிஸ், கே.எல்.பி. ஆகிய 2 கட்டு மான நிறுவனங்கள் மேற்கண்ட இடத்தை வாங்கிய போது அரசியல் பிரமுகர் கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2 கட்டுமான நிறு வனங்களிலும் வருமான வரிதுறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நடத்திய சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வருமான வரிதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கட்டுமான நிறுவனங்கள் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்து உள்ளன என்கிற பட்டியல் கிடைத்தது. இதில் அ.தி. மு.க. முன்னாள் எம்.பி.க் கள் உள்பட அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இதன்மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த வாரம் இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் 2 கட்டுமான நிறுவனங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    தி.நகர் சரவணா தெருவில் உள்ள லேட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கே.எல்.பி. கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில், மற்றும் வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மனிஸ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடை பெற்றுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெறும் இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆடிட்டர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடை பெறும் இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரூ.50 கோடி லஞ்ச விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையை தொடர்ந்து அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தி வருவதால் அரசியல் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றபோது தீ வேகமாக பரவ தொடங்கியது.
    • 130 தொழிலாளர்கள் இருந்த நிலையில் அனைவரும் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோவை:

    கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் நகை பெட்டி தயாரிக்கும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றபோது தீ வேகமாக பரவ தொடங்கியது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    குடோன் முழுவதும் பரவிய தீ, அருகே உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கும் பரவியதால் தீயை அணைக்கும் முயற்சியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    குடோனில், சமையல் எரிவாயு சிலிண்டரும் பயன்பாட்டில் இருந்துள்ளது. 130 தொழிலாளர்கள் இருந்த நிலையில் அனைவரும் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    • வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
    • மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் புதுவை காவல் துறையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு ராஜேஷ் தனது வீட்டின் முதல் தளத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவரது அறையில் தீப்பிடித்து எரிந்து அறையில் இருந்த பிரிட்ஜ் பீரோ மற்றும் மரத்திலான மேசை நாற்காலி, உடைகள் உள்ளிட்ட பொருள்கள் மளமளவென எரிந்தது.

    ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அவர்களால் வீடு எரிந்தது தெரியவில்லை. புகை மூட்டத்தில் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட பின்னரே வீடு தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்தனர் ஆனால் புகை மூட்டத்தால் அவர்களால் வெளியேற முடியவில்லை.

    வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டது.

    புகை மூட்டத்தில் மூச்சு திணறி சிக்கிக் கொண்ட போலீசாரின் குடும்பத்தினரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.

    இந்த சம்பவத்தால் சேதராப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணி களம் காண்கிறது.
    • பாரதிய ஜனதா கட்சியும் புதிய கூட்டணிக்கு தயாராகி வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப் படுத்தி உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணி களம் காண்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றியது. தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    இதனால் தி.மு.க. தலைமையிலான இந்த அணி பலம் வாய்ந்த அணியாகவே பார்க்கப்படுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டு வருகிறது.


    மற்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அந்த கூட்டணி கட்டுக்கோப்புடனேயே உள்ளது.

    இதனால் நிச்சயம் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெல்லும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். இப்படி பலம் வாய்ந்ததாக கருதப்படும் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியும் புதிய கூட்டணிக்கு தயாராகி வருகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் எப்போதும் போல தனித்தே களம் காண உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களத்தில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

    தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பலம் வாய்ந்த புதிய கூட்டணியை உருவாக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

    பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை உதறிவிட்டு வெளியேறியுள்ள அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி அமைப்பதற்கான வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதுபோன்று ஒரு கூட்டணியை ஏற்படுத்தி விட்டால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று அக்கட்சி கணக்கு போட்டுள்ளது.

    இந்த கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும் சேரும்போது நிச்சயம் அது வெற்றிக் கூட்டணியாகவே இருக்கும் என்று அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராகவும் பிரசார வியூகத்தை மேற் கொள்ள தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.

    அதே நேரத்தில் தி.மு.க. அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறது.

    தேர்தல் களத்தில் இதையே அ.தி.மு.க. பெரிய பிரசாரமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெரும் வகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டிலும் பங்கேற்று உள்ளார். இதனை மையப்படுத்தியும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் அவர் பிரசார வியூகங்களை வகுக்க உள்ளார்.

    இப்படி தேர்தல் களத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியும் புதிய கூட்டணியை அமைப்பதற்கு காய் நகர்த்தி வருகிறது.

    பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சி வலை விரித்துள்ளது. ஆனால் அது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. ஒரு வேளை இந்த முயற்சி கைகூடாவிட்டால் சிறிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தங்களது பலம் என்ன? என்பதை நிரூபிக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

    இதனால் பாராளுமன்ற தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி 2 திராவிட கட்சிகளுக்கும் எதிராக என்ன செய்யப் போகிறது? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எப்போதும் போல நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற தேர்தலை தனித்தே சந்திக்க உள்ளது. தமிழகம் புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் 20 பெண் வேட்பாளர்களையும் அந்த கட்சி களம் இறக்குகிறது.

    நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரையில் ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தேர்தலில் நிச்சயம் மற்ற கட்சிகள் வியந்து பார்க்கும் அளவுக்கு இதுவரை இல்லாத வகையில் வாக்குகளை பெறுவோம் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இப்படி தமிழக தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி உருவாகி இருப்பதன் மூலம் வாக்குகள் சிதறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை பிரிக்கும் ஓட்டுகள் இரண்டு திராவிட கட்சிகளுக்குமே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு நாம் தமிழர் கட்சி பிரித்த ஓட்டுக்கள் பல தொகுதிகளில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாராளுமன்ற தேர்தல் களத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிராக பாரதிய ஜனதா கட்சியும் குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படி இரண்டு பிரிவுகளாக தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக பிரியும் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் அதிரடி மாற்றங்களையும் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். எனவே பாராளுமன்ற தேர்தல் களம் இந்த முறை கணிக்க முடியாத அளவுக்கு மாறி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    • கடந்த 3-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சுமார் 500 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
    • அதிகாரிகள் மினிக்காய் தீவிற்கு சென்று பழுதாகி நின்ற படகில் இருந்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மரியான் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ஜெயராஜ்.

    இவருக்கு சொந்தமான விசைப்படகில் தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த ஜெனிஸ்டன் (வயது 24), கார்த்திக், அருள், பிச்சையா, இஸ்ரவேல், அழகாபுரியை சேர்ந்த மதன், பாலா, நிவாஸ், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த குணா உள்ளிட்ட 10 மீனவர்கள் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி தங்குகடல் மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்கள் கடந்த 3-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சுமார் 500 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அருகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் மூலம் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், நடுக்கடலில் தவித்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கேரளா மாநிலம் மினிக்காய் தீவில் இருந்து சுமார் 250 கடல் மைல் தொலைவில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மினிக்காய் தீவு கடலோர காவல்படை, அதிகாரிகள் மினிக்காய் தீவிற்கு சென்று பழுதாகி நின்ற படகில் இருந்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து கொச்சி துறைமுகத்தில் இருந்து படகு வரவழைக்கப்பட்டு அந்த படகு மூலம் கயிறு கட்டி பழுதான படகை மீட்கும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்களும், பழுதான படகும் அருகில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின்னர் தூத்துக்குடிக்கு அழைத்துவரப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

    • வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • பயணிகள் தங்களது உடமைகளை எளிதாக வைத்து சிரமமின்றி பயணம் செய்ய முடியும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள் ளது. இங்கிருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் தேவையை அறிந்து தேவையான வசதிகள் ஒவ்வொன்றாக செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியூர் செல்ல கிளாம்பாக்கத்திற்கு மாநகர பஸ்களில் வரும் பயணிகள் தங்களது உடமைகள் மற்றும் பொருட்களை வைக்க இடம் இல்லாமல் கடும் சிரமப்பட்டனர். கூட்ட நெரிசலில் பயணிகளில் பொருட்களுடன் பயணம் செய்யும் நிலை இருந்தது.

    இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்திற்கு செல்லும் மாநகர பஸ்கள் மற்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் மாநகர பஸ்களிலும் பயணிகளின் பொருட்களை வைக்க உரிய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதல் கட்டமாக கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரும் 20 மாநகர பஸ்களில் முன் பக்கம் மற்றும் பின்பக்கம் உள்ள படிக்கட்டுகளுக்கு அருகே தலா ஒரு இருக்கை என மொத்தம் 2 இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களது உடமைகளை எளிதாக வைத்து சிரமமின்றி பயணம் செய்ய முடியும். இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். வரும் நாட்களில் மற்ற கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் மாநகர பஸ்களிலும் பொருட்கள் வைக்க வசதியாக இருக்கை அகற்றப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில்தான் கோவையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
    • தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றை முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும்.

    அவினாசி:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பற்றி விமர்சித்து பேசிய ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து அவரது தொகுதியான நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள்தான் தி.மு.க.வினர். அதிலும் குறிப்பாக ஆ.ராசா போன்றவர் எம்.ஜி.ஆரை பற்றி இழிவாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. எம்.ஜி.ஆர். பற்றி இழிவாக பேசிய அவருக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தது அ.தி.மு.க.தான். இந்த 30 ஆண்டுகால ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் கல்வியில் புரட்சி ஏற்படுத்தினார்.

    50 ஆண்டுகால மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் அத்திகடவு-அவிநாசி திட்டத்திற்கு ரூ. 1512 கோடி மாநில நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீதம் முடிந்த நிலையில் 10 சதவீத பணியை முடிக்காமல் 2½ ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தொடங்கிய திட்டம் என்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    கடுமையான மின் கட்டண உயர்வால் திருப்பூர்-கோவை மாவட்டத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிநீர் திட்டங்களுக்கு தி.மு.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கின்றனர். நாளை மறுநாள் 11-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் குடிநீர் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. முதியவர்கள் கொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளை திருடும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில்தான் கோவையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றை முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும்.

    கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க., பாதுகாப்பில்லாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    2019, 2021 தேர்தல் அறிக்கையை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்ததால் மகளிர் உரிமைத் தொகையை வழங்கினார்கள் . அதுவும் தகுதியின் அடிப்படையில் என மூன்றில் ஒரு பங்கு வழங்கினார்கள். இது தி.மு.க.வின் இரட்டை வேடம். திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு.

    திருப்பூர் என்றாலே அந்நிய செல்வாணியை ஈட்டி தரும் நகருக்கு நிறைய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றார். 11 நாட்கள் தங்கியிருந்தார். 3 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக செய்தி. ஆனால் அந்த 3 நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தது. சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இந்த ஒப்பந்தம் போடவில்லை. வெளிநாடு செல்வதற்காக நாடகம் போட்டு சென்றுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க போகவில்லை. முதலீடு செய்ய போயுள்ளார்.

    ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு, வந்த பின்னர் ஒரு பேச்சு என திமுக, அரசு இருக்கின்றது. தி.மு.க.வினர் கவர்ச்சிகரமாக பேசுவார்கள். தேர்தலுக்கு பின்னர் வாக்குறுதிகள் கரைந்து விடும்.

    எம்.ஜி.ஆரை பற்றி பேசிய ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சித்தால் இதுதான் தண்டனை என்பதை மக்கள் உணர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி., வேலுமணி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செ.ம.வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், தனபால், வி.பி.கந்தசாமி, கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் அமைப்பு செயலாளர் தாமோதரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே அவினாசியில் திரண்டு போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தையொட்டி அவினாசியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவினாசியில் இன்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குஜராத் மாநிலத்தில் முதலமைச்சாரக பிரதமர் மோடி இருந்த போது மத்திய அரசை விமர்சித்து பேசினார்.
    • இதுதொடர்பான வீடியோவை தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    சென்னை:

    மத்திய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அடுத்த நாள் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    இந்த பட்ஜெட்டில் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மத்திய அரசு குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது எனக்கூறி கர்நாடகா, தமிழ்நாடு, கேரள அரசுகள் போராட்டம் அறிவித்தன.

    நேற்று முன்தினம் மத்திய அரசை கண்டித்து கர்நாடக அரசும், நேற்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டமும் நடைபெற்றது. தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரியாக பிரதமர் மோடி இருந்தபோது ஒன்றிய அரசை விமர்சித்துப் பேசிய வீடியோவை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், 'ஒரு காலத்தில் முதலமைச்சர், இப்போது பிரதமர்' என தலைப்பிட்டு தி.மு.க. எம்.பி. கனிமொழி பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில் பேசும் மோடி, குஜராத் மாநில அரசு, மத்திய அரசுக்கு வரியாக ரூ.60,000 கோடியை அளித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு குஜராத் அரசு திருப்பிக்கொடுப்பது ரூ.8,000 கோடி. ரூ.10,000 கோடி. ரூ.12,000 கோடி. குஜராத் மாநில அரசை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறீர்களா?

    மத்திய அரசிடம் நிதியைப் பெற குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா? என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • உத்தரவை எதிர்த்து வன்னியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கு நீதுபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    சென்னை அருகே பரங்கி மலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

    இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு அலுவலகமாக செயல்பட்டு வந்த, நிலையில் இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி பல்லாவரம் தாசில்தார், அந்த நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இதையடுத்து, வன்னியர் சங்க கட்டிடத்துக்கு அரசு 'சீல்' வைத்தது. அந்த உத்தரவை எதிர்த்து வன்னியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வன்னியர் சங்க கட்டடத்துக்கு 'சீல்' வைத்த அரசின் உத்தரவை ரத்து செய்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு நீதுபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், இந்த நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அரசு கூறியுள்ளது. யாருடைய இடம் என்பதை கண்டறிய வேண்டி உள்ளது. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக வன்னியர் சங்கம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்தனர்.

    இந்த வழக்கில் புற எதிர் மனுதாரர்களான காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம், கன்டோன்மென்ட் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

    ×