என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன்.
- திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை
சென்னை தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன்.
* சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது.
* திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்கின்றன? - வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினோம்.
* முதலீட்டாளர் மாநாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் தரவில்லை.
* மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - செலவினம் குறித்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.
* நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை.
* திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரெயில் சேவையை அதிகரிக்கும் வகையில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
- பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
சென்னை:
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி மக்களில் முக்கிய போக்குவரத்தாக புறநகர் ரெயில் சேவை உள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை பயணிகளுக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரிப்பு காரணமாக மின்சார ரெயில்சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.
இதேபோல் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரெயில் சேவையை அதிகரிக்கும் வகையில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரெயில்பாதை கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதுவரை இந்த வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் வழக்கமாக இயக்கப் பட்ட ரெயில் சேவையும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் ரெயில் நிலையங்களில் நீண்டநேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 90 ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது 83 ஆக குறைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரபூர்வ தகவலை ரெயில்வே அறிவிக்க வில்லை. எனினும் குறைந்த அளவு ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை செங்கல்பட்டு-தாம்பரம் வழித்தடத்தில் 45 மின்சார ரெயில் சேவை, தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்திற்கு 45 ரெயில் சேவை கள் இயக்கப்பட்டன. பின்னர், பராமரிப்பு பணி கள் காரணமாக ரெயில் சேவைகள் குறைக்கப் பட்ட தாக ரெயில்வே தெரிவித்து உள்ளது.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 42 ெரயில்களும், செங்கல்பட் டில் இருந்து தாம்பரத்திற்கு 41 ரெயில்களும் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிக ரிக்கப்படவில்லை. இதனால் மக்கள்அதிகம் பயன்படுத்தும் வழித்தடத்தில் 83 ரெயில் சேவைமட்டுமே உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் பரித விக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும் தற்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ள தால் அதிகமானோர் மின்சார ரெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணி கள் சென்னை நகர் பகுதியில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வாகனங்களில் செல்ல கூடுதல் செலவு மற்றும் பயணநேரம் அதிகம் உள்ளிட்ட காரணங்களால் ரெயில் சேவை பயணம் மேலும் உயர்ந்து உள்ளது.
அதிகாலை நேரத்தில் தென்மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பஸ்பயணிகள் தற்போது வண்டலூர், மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்களில் இறங்கி செல்கிறார்கள். அதிகாலை நேரத்தில் மாநகர பஸ்போக்குவரத்து போதிய அளவில் இல்லாதததும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஏற்கனவே மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் பயணிகள் கூட்டத்தால் ஊரப்பாக்கம், பொத்தேரி ரெயில் நிலையங்களிலேயே ரெயில் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காலை நேரங்களில் வழக்கமாக சென்னை நகருக்குள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு தினந்தோறும் செல்லும் பய ணிகள் கடற்கரை மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலில் செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள்.
அவர்கள் கூட்ட நெரிசலை கண்டு அடுத்த மின்சார ரெயிலில் காத்திருந்து ஏறினாலும் அதே அளவு கூட்டம் வருவதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, செங்கல்பட்டு -சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போது, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை தயார் நிலையில் இருந்தபோது செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது 3-வது ரெயில் பாதை செயல்பாட்டுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகியும் ரெயில் சேவை அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை மாலை மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் இதுபற்றி தெரியாமல் ரெயில் நிலையங்களுக்கு சென்றனர். ரெயில்நிலையங்களில் இது போன்று ரெயில்கள் ரத்து மற்றும் நேரம் மாற்றங்கள் குறித்து தெரிவிக்க எந்த அறிவிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதில்லை. இதுபற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க ரெயில்வே கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பயணிகளை பற்றி ரெயில்வே துறையினர் கவலைப்பாடாமல் அவர்கள் விரும்பியபடி ரெயில் சேவைகளை இயக்குகின்றனர் என்றனர்.
- சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.
சென்னை:
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினரும் ஒன்று சேர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.
சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.
இதையொட்டி சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.
அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.
- வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
சென்னை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மென்ட் பெங்களூர் சிட்டி ஜங்ஷன் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது.
வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
360 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் டபுள் டக்கர் ரெயில் சென்றடைகிறது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என மாறிய டபுள் டக்கரில் பொது பிரிவு என்று அழைக்கப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க வேண்டும்.
ஏசி இல்லாத சேர் கார் பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரெயில்வே நிர்வாகம் டபுள் டக்கர் ரெயிலில் புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி டபுள் டக்கரில் ஏசி வசதி இல்லாத 5 சாதரண பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர சரக்குகளை கையாள ஒரு பெட்டி என மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வசதியுடன் இன்று முதல் சென்னை பெங்களூர் டபுள் டக்கர் ரெயில் இயக்க படுகிறது.
குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
- தங்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது நியாயமற்றது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.
ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஜாமின் வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, தங்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது நியாயமற்றது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், இது தொடர்பாக காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை பிப்.21-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
- இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.
- நாள்காட்டியின் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்லாருக்கும் எல்லாம் என்னும் விதையை விதைத்தவர் பெரியார். அதனை ஆட்சியில் செய்து காட்டியவர் கருணாநிதி.
* இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.
* தமிழ்நாட்டு மக்களுக்காக ஒவ்வொரு நாளும் சிந்தித்து செயல்படுகிறேன்.
* அரசின் உரையை அப்படியே வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை. கவர்னர் அவரது அரசியலுக்காக சட்டசபையை பயன்படுத்திக்கொண்டார்.
* திராவிட மாடல் வழித்தடத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.
* சிறு பிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்துவிட மாட்டோம்.
* புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். எவர்வரினும் நில்லேன். அஞ்சேன் என்பதுதான் இவர்களுக்கு என் பதில்.
* கலைஞர் இன்று ஆட்சி செய்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே நான் ஆட்சி நடத்தி வருகிறேன்.
* தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களில், தமிழகம் 3-வது இடத்தில் உள்ளோம்.
* ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* இந்திய பொருளாதாரத்துக்கு 9 சதவீத பங்கை தருகிறது, தமிழ்நாட்டின் பொருளாதார வளம். இது திராவிட மாடலின் சாதனை.
* திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டால் நேரம் போதாது.
* நாள்காட்டியின் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.
* முதலமைச்சர் பொறுப்புக்கு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை அனைத்தும் சாதனை, முன்னேற்ற மாதங்கள்.
* ஜி.டி.பி.யில் இந்தியா 2ம் இடம்.
* மின்னணு உற்பத்தியில் 6-வது இடம்.
* செஸ் விளையாட்டு, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மூலம் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
* காலை உணவு திட்டத்தை தினத்தந்தி நாளிதழ் "அன்று காமராஜர், இன்று ஸ்டாலின்" என பாராட்டியது.
* ஜி.எஸ்.டி. வரி முறையால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு
* மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்துக்கு மத்திய அரசு நிதி தரவில்லை.
* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொழில் திட்டங்களை தருவதில்லை.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சோக கதையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
* பாஜக உடன் கூட்டணியில் இருந்தபோது பேசாத எதிர்க்கட்சி தலைவர் இப்போது குரல் கொடுப்பது மகிழ்ச்சி என்று கூறினார்.
- மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
- தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் 2 வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, டிக்கெட் பெறக்கூடிய கவுண்டர், உள்ளே நுழையக் கூடிய பகுதியில் நீண்ட வரிசையும் காணப்படுகிறது.
ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் 4 பெட்டிகள் உள்ளன. அதில் 3 பெட்டிகள் பொதுவானவை. ஒரு பெட்டி மட்டும் பெண்கள் பயணம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் பெண்கள் பெட்டியில் பயணம் செய்து இடையூறு செய்வதாக புகார்கள் வருகின்றன.
மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணத்தின் போது மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிக்கக்கூடாது என அறிவிப்பையும் வெளியிடுகிறது.
ஆனாலும் சிலர் தெரியாமலும் ஒரு சிலர் தெரிந்தே அதில் பயணம் செய்வதால் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், ஆண்-பெண் ஒன்றாக மகளிர் பெட்டி யில் பயணம் செய்கின்றனர். இதனால் தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.
மேலும் ரெயில் நிலையங்களிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக நின்று பேசுவது, உட்கார்ந்து இருப்பது போன்றவை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்பு படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.
பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இளஞ்சிவப்பு படையில் கராத்தே தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 25 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தற்காப்பு கலைகளில் பிரவுன் பெல்ட் பெற்றவர்கள். பெண் பயணிகளின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் ஒவ்வொரு ரெயில் மற்றும் நிலையத்திலும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த ஆய்வின் அடிப்படையில் இளஞ்சிவப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பெண் பயணிகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான பெண்கள் மெட்ரோ ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
ஆனாலும் சில இடையூறுகள் இருப்பதாக ஆய்வில் உறுதியானது. இந்த இளஞ் சிவப்பு படையிடம், பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த புகார்களை தெரிவிக்கலாம். அவற்றை அவர்கள் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.
நந்தனத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இளஞ்சிவப்பு பாதுகாப்பு படையை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்.
- தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 5 நாட்கள் நடக்கிறது.
- சேலத்தில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடக்கிறது. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அதில் கலந்துகொண்டு பேசுவோர் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டியில் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.பி. பாலகங்கா, வேளச்சேரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், தாம்பரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, தி.நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின், பொன்னேரி தொகுதியில் முன்னாள் எம்.பி. வேணுகோபால், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.சேதுராமன், திருவொற்றியூர் தொகுதியில் ஆர்.கமலக்கண்ணன், பெரம்பூர் தொகுதியில் ச.கல்யாண சுந்தரம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பூந்தமல்லி தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின், திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார், ஆலந்தூர் தொகுதியில் நடிகை விந்தியா, மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகு மாறன், ஆவடி தொகுதியில் ராயபுரம் மனோ, விருகம்பாக்கம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, எழும்பூர் தொகுதியில் ராஜ் சத்யன், ஆர்.கே.நகர் தொகுதியில் கே.சிவசங்கரி, செங்கல்பட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், நடிகை பபிதா ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை மாதவரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அண்ணாநகர் தொகுதியில் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஆதிராஜாராம், மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. ஆ.இளவரசன், சோழிங்கநல்லூர் தொகுதியில் கோபி காளிதாஸ், வில்லிவாக்கம் தொகுதியில் மணவை மாறன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராயபுரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பல்லாவரம் தொகுதியில் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, அம்பத்தூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. தாமோதரன், திருத்தணி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோ.சமரசம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் சினிமா இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) திரு.வி.க.நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா, காஞ்சிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆதி ராஜாராம், திருப்போரூர் தொகுதியில் கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கார் மூலம் வந்தார்.
- ஆண்டாள் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கு தேசியக்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல் மாநிலக்கட்சிகளும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4 முனை போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அவர் நேற்று இரவு ராஜபாளையம் சென்று அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கார் மூலம் வந்தார். அங்கு அவருக்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து அவர் ஆண்டாள் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் கார் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு அடிவார பகுதியில் உள்ள அவரது குலதெய்வமான வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுமார் இரண்டு மணி நேரம் இருந்து சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் அவரது குடும்பத்தின் சார்பில் வனப்பேச்சிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
அரசியலில் எந்த ஒரு முடிவு எடுப்பது என்றாலும் ஓ.பன்னீர்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செண்பகத்தோப்பில் அமைந்திருக்கும் தனது குல தெய்வமான வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று அனுமதி வாங்கிவிட்டு தான் முடிவு செய்வார். இந்த திடீர் வருகை குறித்து அவரது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ஓ.பி.எஸ். சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்துள்ளார். இதில் எந்த அரசியலும் கிடையாது என்று திட்டவட்டமாக கூறினர்.
- மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.
- தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 4820 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மது பிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.
இதைத்தொடர்ந்து நீதி மன்ற உத்தரவின்படி காலி மது பாட்டில்களை மதுக் கடைகளில் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்தது. இந்த திட்டம் தற்போது பரீட்சார்த்த முறையில் நீலகிரி, பெரம்பலூர், கோவை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
அந்த மாவட்டங்களில் மதுபானங்கள் விற்கும் போது அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை மதுக்கடையில் கொடுத்தவுடன் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.
இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.
டெண்டர் எடுக்கின்றவர்கள் காலி பாட்டில்களை திரும்ப பெற்று மீண்டும் பயன்படுத்த மொத்தமாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும். டாஸ்மாக் மதுக்கடைகளில் திரும்ப கொடுக்கப்படும் ஒவ்வொரு காலி பாட்டில்களுக்கும் ரூ.10 வழங்கப்படும்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனைத்து மதுக்கடைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வழியாக மதுபாட்டில் திரும்ப பெறப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. 28-ந்தேதி டெண்டர் இறுதி செய்யப்பட்டு காலி மதுபாட்டில் திரும்ப பெறப்படும் திட்டம் தொடங்கப்படும்" என்றார்.
- பழனி பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
- பழனி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி:
மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் கோவையில் 105வது பட்டாலியனில் அதிவிரைவுப்படையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த படையினர் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பழனி பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
பழனி போலீசாரிடம் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து பழனி சரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்ற அதி விரைவுப்படையினர் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் குறித்தும் அதில் கைதான குற்றவாளிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
வழக்கமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிவிரைவுப்படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பழனி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா கொண்டாடப்படும்.
- கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தென்காசி:
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான மாசி மக பெருவிழா இன்று காலை சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

முன்னதாக அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப்பட்டம் ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு, வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நாளான வருகிற 21-ந்தேதி நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், 28-ந் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி ரத வீதி உலாவும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நாளான வருகிற 23-ந்தேதி அன்று சுவாமி-அம்பாள் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.






