என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தார் சாலை அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விசுவநாதபுரம், சுப்பன் ஆசாரி களப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாமல் மழை காலங்களில் சேரும் சகதியுடன் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் தார் சாலை அமைத்து தர வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆனால் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தார் சாலை வசதி செய்து தராமலும், கன்னி வாய்க்கால் பகுதியில் பயன்படுத்தி வந்த வாய்க்கால் பகுதியில் தனி நபர்கள் கம்பி வேலி கட்டி தடுத்துள்ளதாலும் இதனை அகற்றவும், தார் சாலை அமைக்கவும் வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதனால் கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு கொடி தோரணங்கள் கட்டியும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திரிஷா குறித்து மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- மன்சூர் அலிகானுக்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில் திரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கூறியதோடு எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், நடிகராக இருக்கும் ஒரு நபரை பல இளைஞர்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துங்கள் என்று மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார். அத்துடன் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து மறுஆய்வு மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், தனி நீதிபதி தள்ளுபடி செய்த உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது.
இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
- நான் காங்கிரசில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று எனது தந்தை கூறினார்.
நாகர்கோவில்:
குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. பொருளாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர் சிவக்குமார் கட்சியிலிருந்து விலகி, விஜய் வசந்த் எம்.பி. முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினரும் இணைந்தனர்.
தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி பழமையான கட்சியாகும். பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. விஜயதரணி எம்.எல்.ஏ. கட்சியை விட்டு சென்று விட்டதால் கட்சி பலவீனம் அடைந்து விடாது. விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினரை விஜய்வசந்த் எம்.பி. சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி.
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விளவங்கோடு தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு விஜயதரணி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இங்கு பாதுகாப்பு இல்லை என்று எப்படி கூற முடியும்.
அவருக்கு கேட்ட பதவி வழங்க வேண்டும். இப்போது கேட்ட பதவி வழங்கவில்லை என்பதற்காக கட்சி மாறி சென்று உள்ளார். பா.ஜனதாவை விமர்சித்த விஜயதரணி எப்படி அவர்களை புகழ் பாட முடிகிறது என்று தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சட்டமன்ற தொகுதி வாரியாக மினி ஸ்டேடியங்களை அமைத்து வருகிறது.
நான் காங்கிரசில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று எனது தந்தை கூறினார். காங்கிரசில் இருப்பது தான் எங்களுக்கு பெருமை. காங்கிரசின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலமாக வேலை வழங்கியுள்ளோம்.
நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் கிடப்பில் கிடந்தது. அந்த திட்டத்தை செயல்படுத்த 1041 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு கனவு திட்டமாகும். புதிய ரெயில்வே திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் புதிய ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். பா.ஜனதாவிற்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதற்காக குறை கூறி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரி பிடித்தத்தை கூட மத்திய அரசு கொடுக்காமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.
- மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் மத்திய அரசிலிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணமாக வழங்கப்படவில்லை.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 30-வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் கடவுளான முருகப் பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வண்ணம் உலகெங்கும் இருக்கின்ற முருக பக்தர்கள் ஒன்றுகூடி பல முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவதென்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 45,477 கோவில் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்திடவும், கிராம தெய்வ வழிபாட்டை ஆன்மிக அன்பர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அக்கோவில் வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த அரசு பொறுப்பேற்ற பின், தேர்வாணையத்தின் மூலம் 379 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 24 நபர்களுக்கும், கோவில்களில் 108 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளன. மேலும், 713 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க.விற்கு முடிவு எழுதுவோம் என்று சொன்னவர்களின் அரசியல் பாதை முடிவுற்று இருக்கிறதே தவிர தி.மு.க.விற்கு இதுவரையில் முடிவு என்பதே கிடையாது. இது ஆயிரம் காலத்து பயிர். இந்த கட்சியும், ஆட்சியும் தொடர்ந்து கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் இந்த மண்ணிலே இருக்கும்.
ஒன்றிய அரசு தேவையான நிதியை மாநிலத்திற்கு கொடுப்பதே இல்லை. வஞ்சிக்கிறது என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் மத்திய அரசிலிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணமாக வழங்கப்படவில்லை. வஞ்சிப்பது ஒன்றிய அரசு தான். ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் முதலமைச்சர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளை கருதி மாநில நிதியிலேயே அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துக் கொண்டிருக்கின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 4300 டன் எடை கொண்ட இந்த கப்பல், ஆய்வுப்பணிகளுக்காக மாலத்தீவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பபட்டது.
- இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்டது.
இந்தியா- மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவின் சியாங்யாங் ஹாங்-03 என்ற உளவுக்கப்பல் மாலத்தீவை நோக்கி வந்தது.
4300 டன் எடை கொண்ட இந்த கப்பல், ஆய்வுப்பணிகளுக்காக மாலத்தீவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பபட்டது. இந்திய பெருங்கடல் வழியாக சென்ற சீன உளவுக்கப்பல் கடந்த 22-ந்தேதி மாலத்தீவை சென்றடைந்தது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து மேற்கே 7.5 கி.மீ. தொலைவில் உள்ள திலா புஷி துறைமுகத்தில் சீன உளவுக்கப்பல் நிலைநிறுத்தப்பட்டது.
உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த சீன கப்பல் நுண்ணுயிர் மரபணு ஆய்வு, உப்புத் தன்மை, நீருக்கடியில் கனிம ஆய்வு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாலத்தீவு துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன உளவு கப்பல் ஒரு வாரத்துக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீன கப்பல் மாலத்தீவு கடற்கரையை விட்டு வெளியேறியதாக மாலத்தீவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் துறைமுகத்தில் இருந்து சீன கப்பல் புறப்பட்ட போதிலும் கப்பலின் கடைசி சிக்னல் மாலத்தீவின் ஹுல்ஹு மாலே அருகே காட்டின என்றும் தெரிவித்தது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதிபராக பதவியேற்றவுடன் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி இந்திய படைகள் வெளியேற்றம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.
- இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.
பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் இன்று தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி பரவியது. 77-வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது விழாவில் சிகப்பு கம்பளத்தின் மீது பளபளக்கும் சேலையை அணிந்திருந்த போது அவர் தனது வயிற்றுப்பகுதியை மறைத்ததாக கூறப்படுகிறது. தீபிகா படுகோனே தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ள செய்தி பரவியதும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் தீபிகா தாய்மை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். "நிச்சயமாக ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறோம்" என்று அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புரட்சித்தலைவரையும், அம்மாவையும் புகழ்ந்து பேசி உள்ளார்.
- இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள், 8 கோடி தமிழக மக்களின் நன்மதிப்பை எடப்பாடியார் பெற்றுள்ளார்.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், விருப்ப மனுவினை 1-ந்தேதிக்குள் அளிக்கவேண்டும் என்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், அம்மா பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கழக அம்மா பேரவை சார்பில், எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுவை தாக்கல் செய்ய மதுரையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வளர்த்த அ.தி.மு.க. இயக்கத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பாதையில் நடத்தி வருகிறார். இன்றைக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இரண்டு கோடி தொண்டர்கள் விருப்ப மனுவை பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.
40 தொகுதிகளில் தனித்தொகுதியைத் தவிர, அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடியார் போட்டியிட வேண்டும் என்று அம்மா பேரவை தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் பெயரில் சென்னை தலைமைக் கழகத்தில் அம்மா பேரவை சார்பில் எடப்பாடியார் போட்டியிட விருப்ப மனுவை நாளை தாக்கல் செய்ய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புரட்சித்தலைவரையும், அம்மாவையும் புகழ்ந்து பேசி உள்ளார். இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். இதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து மக்களுக்கு பல்வேறு சாதனை திட்டங்களை தந்தது.
குறிப்பாக கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், மக்களின் வாழ்வாதார திட்டத்திற்காக தொலைநோக்கு திட்டங்கள், பசி பட்டினி இல்லாத வண்ணம் 20 கிலோ அரிசி உள்பட இதுபோன்ற திட்டங்கள் மூலம் அனைவரின் பாராட்டை அம்மா அரசு பெற்றது. அ.தி.மு.க. ஆட்சியை யாரும் குறை கூற முடியாது. அதற்கு தான் பாரத பிரதமர் புகழாரமாக சான்று அளித்துள்ளார்.
அந்த சான்று இன்றைக்கு புரட்சித்தலைவர், அம்மாவின் மறுவடிவமாக உள்ள எடப்பாடியாரையே சாரும். அதுமட்டுமல்ல 17 மருத்துவக்கல்லூரிகள், 2,000 அம்மா மினி கிளினிக், 69 சதவீத இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவருக்கு மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இதுபோன்ற திட்டங்களை யாரும் மறக்க முடியாது.
இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள், 8 கோடி தமிழக மக்களின் நன்மதிப்பை எடப்பாடியார் பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் 68,520 வாக்கு சாவடிகளில் அ.தி.மு.க.வின் வலுவான கட்டமைப்பு உள்ளது. சாமானிய மக்களின் இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. கூட்டணி குறித்து எடப்பாடியார் அ.தி.மு.க. நிலைப்பாட்டை மன உறுதியுடன் பலமுறை எடுத்துச் சொல்லி விட்டார்.
மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் கூட தெளிவாக கூறியுள்ளார். பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பது தான் அ.தி.மு.க. நிலைப்பாடு. ஆனால் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்பது அவர்கள் கட்சியை பொறுத்த விவகாரம். எனவே அ.தி.மு.க. நிலைப்பாட்டில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்த பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. முடிவை தெள்ளத்தெளிவாக எடப்பாடி யார் கூறிவிட்டார். இன்றைக்கு மூன்றாம் பெரிய கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. மக்களை காக்கும் பணியில் எடப்பாடியார் மன உறுதியுடன் உள்ளார். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து நின்று 100 சதவீத வெற்றி பெறுவார். இதுதான் அ.தி.மு.க. நிலைப்பாடு, இதில் நாங்கள் உறுதியாக பயணம் செய்வோம்.
இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட அனைவரும் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். தகுதி உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்து தலைமை கழகம் அறிவிக்கும். அவர்களை வெற்றி பெறச் செய்ய நாங்கள் பாடுபடுவோம். பாராளுமன்றத்தில் முல்லைப் பெரியாறு, காவிரி குறித்து தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசவில்லை. தமிழகத்தின் உரிமையை காக்க தி.மு.க. கூட்டணியில் உள்ள 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் அவர்களுக்கு சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள். அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும்.
- அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 1-ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் இத்தேர்வில் வெற்றி பெறவும், சாதனை படைக்கவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களின் வாழ்க்கையில் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவை ஆகும். மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்தத் தேர்வுகள் தான் தீர்மானிக்கின்றன.
அதற்குக் காரணம் மருத்துவம் தவிர்த்த மற்ற படிப்புகளில் சேருவதற்கான தகுதியை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் தான் உருவாக்குகின்றன.
அவ்வகையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும். ஒவ்வொரு பாடத்தாள்களுக்கும் இடையே போதிய கால இடைவெளி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கால இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு அனைத்துத் தேர்வுகளையும் மாணவர்கள் சிறப்பாக எழுத வேண்டும். அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
பொதுத்தேர்வுகளில் வெற்றி பெறவும் சாதனை படைக்கவும், படிப்பதை விட, தேர்வுகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும். தேர்வின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது பதற்றத்தைக் குறைப்பதாகும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும்.
அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும். மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக கருதி அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல், அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்குத் தெரிந்த அனைவரும் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி ஊக்குவிக்க வேண்டும்.
12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். உயர்கல்வியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர வாய்ப்பு கிடைக்க வேண்டும்; அவற்றின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாகவும், எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்று கூறி, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தொழில் தொடங்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலாளர் அருண்ராய், மின் வாரிய தலைவர், தகவல் தொழில் நுட்ப துறை செயலாளர் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
- பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை.
- அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தூத்துக்குடி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். குறிப்பாக பல்லடத்தில் பேசிய பேச்சில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை.
10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதையும், என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.
குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார்.
தமிழ்நாட்டில் கொள்கைகளை பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பா.ஜனதா, பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இங்கு ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது, அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் புகழை பேசுவது போன்ற யுக்தியை அவர் கையில் எடுத்திருக்கிறார்.
பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை. தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது.
எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அ.தி.மு.க.வின் வாக்கை பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும், அதன் வாக்கு சதவீதத்தை சரிய செய்ய வேண்டும் என பா.ஜனதா கணக்கு போடுகிறது என்று உணர முடிகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடிய நிலை வந்தால் தமிழ்நாட்டிற்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், சுற்றி சுழன்று வந்து பிரசாரம் மேற்கொண்டா லும் தமிழ்நாட்டு மக்கள் மோடி வித்தையை நம்ப மாட்டார்கள்.
பா.ஜனதாவுக்கு பெரிய செல்வாக்கு உருவாகாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்துள்ளார்கள்.
- இன்றைய கூட்டம் முடிந்ததும் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது பற்றியும் முடிவு செய்கிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா முழுவீச்சில் தயாராகி வருகிறது. மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலையில் டெல்லியில் நடக்கிறது.
அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், குழு உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், எடியூரப்பா, சர்பானந்தா சோனாவால், லட்சுமணன், இக்பால் சிங் லால்புரியா, சுதா யாதவ், பூபேந்திர யாதவ், ஓம் பிரகாஷ் மாத்தூர் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் 160 வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்படுகிறது.
இந்த 160 தொகுதிகளை பொறுத்தவரை கடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறாத தொகுதிகள். ஆனால் 2 மற்றும் 3வது இடத்தை பிடித்த தொகுதிகள். இந்த தொகுதிகளை தேர்வு செய்து கடந்த 2 வருடங்களாக அந்த தொகுதிகளில் பா.ஜனதா தேர்தல் வேலைகளை செய்து வருகிறது.
தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்துள்ளார்கள். அதே போல் யாரை வேட்பாளராக களம் இறக்கினால் வெற்றி வாய்ப்பு என்பது பற்றியும் தொகுதி முழுவதும் சர்வே நடத்தி மக்கள் விரும்புபவர்களை வேட்பாளர்களாகவும் தேர்வு செய்துள்ளார்கள்.
கடந்த தேர்தலில் தோற்ற தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் இந்த பணியை பா.ஜனதா மேற்கொண்டு உள்ளது. இந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு எளிதானது என்பதால் முதற்கட்ட பட்டியலில் இந்த தொகுதிகள் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
இன்றைய கூட்டம் முடிந்ததும் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது பற்றியும் முடிவு செய்கிறார்கள். எனவே எப்போது வேண்டுமானாலும் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.
இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் உறதி செய்யப்பட்டுவிட்டார்கள். வேலூரில் ஏ.சி.சண்முகம், கள்ளக்குறிச்சியில் பாரிவேந்தர் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் ஆகியோரது பெயர் அடிபடுகிறது.
- மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.
- மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
பவானி:
பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது செல்லாண்டி அம்மன், மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.
செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு இந்து அறநிலைத்துறை அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் 2 கோவிலிலும் கும்பாபிஷேக பணிகள் தொடக்க விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்தில் செல்லியாண்டி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடத்துவது பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது கட்டளைதாரர்கள், ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு கோவில் திருப்பணி நடைபெறும் காரணத்தால் மாசி திருவிழா நடத்த வேண்டாம் என ஒரு மனதாக முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பவானி நகரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடி உடலில் சேறு பூசி பல்வேறு வகையான வேடங்களில் அணிந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்குத்தெரு மாரியம்மன் கோவில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள மூலவருக்கு பக்தர்கள் மற்றும் கட்டளை தாரர்கள் கும்பாபிஷேக விழா குழுவினர் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
பவானி நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த மாசி திருவிழா ரத்து செய்யப்பட்டதால் தொடர்ந்து பவானி நகரம் களை இழந்து காணப்பட்டது.






