search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
    X

    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

    • கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.
    • மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் மத்திய அரசிலிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணமாக வழங்கப்படவில்லை.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 30-வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் கடவுளான முருகப் பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வண்ணம் உலகெங்கும் இருக்கின்ற முருக பக்தர்கள் ஒன்றுகூடி பல முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவதென்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், 45,477 கோவில் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்திடவும், கிராம தெய்வ வழிபாட்டை ஆன்மிக அன்பர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அக்கோவில் வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த அரசு பொறுப்பேற்ற பின், தேர்வாணையத்தின் மூலம் 379 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 24 நபர்களுக்கும், கோவில்களில் 108 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளன. மேலும், 713 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.

    தி.மு.க.விற்கு முடிவு எழுதுவோம் என்று சொன்னவர்களின் அரசியல் பாதை முடிவுற்று இருக்கிறதே தவிர தி.மு.க.விற்கு இதுவரையில் முடிவு என்பதே கிடையாது. இது ஆயிரம் காலத்து பயிர். இந்த கட்சியும், ஆட்சியும் தொடர்ந்து கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் இந்த மண்ணிலே இருக்கும்.

    ஒன்றிய அரசு தேவையான நிதியை மாநிலத்திற்கு கொடுப்பதே இல்லை. வஞ்சிக்கிறது என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் மத்திய அரசிலிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணமாக வழங்கப்படவில்லை. வஞ்சிப்பது ஒன்றிய அரசு தான். ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் முதலமைச்சர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளை கருதி மாநில நிதியிலேயே அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துக் கொண்டிருக்கின்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×