என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு.
- உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சாந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த நிலையில், அவரது உடல்நிலை மாரடைப்பால் மோசமானது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சென்னை மருத்துவமனையில் மரணம் அடைந்தது வரை உள்ள தகவல்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம், உடல் பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 4 ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை அனுப்பி வைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியதை அடுத்து, வரும் மார்ச் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- 10 கோரிக்கைகளில் ஒன்றை மட்டும் நிறைவேற்றுவது நியாயமல்ல.
- காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பணியிறக்கத்தில் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளில் முதன்மையானதான துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கம் செய்யப்படாமல் பாதுகாப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
அதைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால், 10 கோரிக்கைகளில் ஒன்றை மட்டும் நிறைவேற்றுவது நியாயமல்ல. ஒற்றை கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்றும், தங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவித்து உள்ளனர்.
இளநிலை/முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையை வெளியிட வேண்டும், பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மீதமுள்ள 9 கோரிக்கைகளில் குறைந்தது 5 கோரிக்கைகளையாவது நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் அவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- ஈரானில் இருந்து இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் கடந்த வாரம் புறப்பட்டதாக தெரிகிறது.
- போதைப்பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த பைகளில் பாகிஸ்தான் நிறுவனம் என்றுதான் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.
சென்னை:
இந்திய கடல் பகுதியில் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடல் வழியே கப்பல் மற்றும் படகுகளில் கடத்தப்படும் போதைப்பொருட்களை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஈரான் நாட்டில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் புகுந்துள்ள கப்பல் ஒன்றில் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இந்த தகவலை கசிய விட்டனர். இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் குஜராத் கடல் பகுதியில் வைத்து போதைப்பொருள் பண்டல்களை கைமாற்றி விட திட்டமிட்டிருப்பதையும் அதிகாரிகள் ரகசியமாக கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்து என்.சி.பி. என்று அழைக்கப்படும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், இந்திய கடற்படையில் உள்ள உணவு மற்றும் சுங்கப் பிரிவு, குஜராத் போலீசார் ஆகியோர் கூட்டாக இணைந்து போதைப்பொருள் வேட்டையில் அதிரடியாக இறங்கினார்கள். ஆபரேஷன் சாகர் மந்தன் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையின்போது ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் ஆகியவை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருட்களை கடத்தி வந்த கப்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கப்பலில் மூட்டை மூட்டையாக பதுக்கி கடத்தி எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போதைப்பொருட்களை மொத்தமாக பறிமுதல் செய்தனர். 3,300 கிலோ எடை கொண்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு பல ஆயிரம் கோடிகளாகும்.
போதைப்பொருட்கள் கப்பலில் இருந்தன. 3,100 கிலோ எடை கொண்ட சரஸ் ஹஷீஸ் என்கிற போதைப்பொருள், 158.3 கிலோ மதிப்பிலான மெத்த பெட்டமைன், 26.6 கிலோ ஹெராயின் ஆகியவை பிடிபட்டன. இந்த போதைப்பொருட்களை கடத்தி வந்த வெளிநாட்டினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து செயற்கைகோள் செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர 4 செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இவைகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். பிடிபட்ட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரானில் இருந்து இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் கடந்த வாரம் புறப்பட்டதாக தெரிகிறது. அப்போதே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதனை மோப்பம் பிடித்து விட்டனர். இதை தொடர்ந்தே கப்பலின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்ட 5 பேரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நடுக்கடலில் வைத்தே மீன் பிடி படகுகளில் போதைப்பொருட்களை கைமாற்றி விடுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இப்படி ஈரான் கப்பலில் பிடிபட்ட 3,300 கிலோ போதைப்பொருட்களையும் தமிழகத்துக்கு முக்கிய புள்ளி ஒருவருக்கு அனுப்பி வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மீன்பிடிபடகு மூலமாக இந்த போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வருவதற்கு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் திட்டம் போட்டு செயல்பட்டுள்ளனர். அதற்குள் போதைப்பொருள்கள் அத்தனையும் மொத்தமாக பிடிபட்டு விட்டது.
இருப்பினும் இந்த போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு யாருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது? இந்த போதைப்பொருட்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேல் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வர உள்ளனர். அவர்கள் சென்னைக்கு வந்து விசாரணை நடத்திய பிறகு 3,300 கிலோ எடை கொண்ட இந்த ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களும் தமிழகத்துக்கு யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது அம்பலமாகும் என தெரிகிறது.
போதைப்பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த பைகளில் பாகிஸ்தான் நிறுவனம் என்றுதான் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இதன் மூலமாக போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஈராக்கை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
இதன் பின்னணி பற்றியும் விசாரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக கடத்தல் கும்பலை பிடிக்கவும் வலை விரித்துள்ளனர்.
- ராக்கெட் ஏவுதளம் முதன்முதலில் ஆரம்பிக்க குரல் கொடுத்தது கலைஞரும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் தான்.
- தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அரசியல் பேசியுள்ளார் என்றார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மீனவர்களுக்கான ஒருவார கால இலவச பயிற்சி தொடக்க விழா இன்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடந்தது.
விழாவில் தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் தி.மு.க. விளம்பரத்தில் சீன தேசிய கொடி இடம்பெற்ற சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், "இந்த விவகாரத்தில் சிறிய தவறு நடந்துவிட்டது. இது தெரியாமல் நடந்த தவறு. அதில் எந்த நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று இருக்கிறது என்றார்.
ராக்கெட் ஏவுதளம் முதன்முதலில் ஆரம்பிக்க குரல் கொடுத்தது கலைஞரும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் தான்.
அதன்பிறகு எங்களுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் குரல் கொடுத்தனர். அதனால் குலசேகரபட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது.
ஒரு அரசு விழாவில் திட்டத்தையும் பயனையும், புதிய திட்டங்களையும், தொடங்க இருக்கும் திட்டங்களையும் பற்றி பேசுவார்களே தவிர அரசியல் பற்றி பேச மாட்டார்கள். நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அரசியல் பேசியுள்ளார் என்றார்.
மேலும் தி.மு.க. தனித்து நின்றால் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்ற அண்ணாமலை கேள்விக்கு பதில் அளித்த அனிதா ராதாகிருஷ்ணன், எங்களது கனிமொழி எம்.பி. மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இதற்கு பதில் கூறியுள்ளார்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
- கடந்த ஜனவரி மாதம் சுமார் 9 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்பு கொண்டு மன அழுத்தத்தை நீக்கும் வகையில் பயன்பெற்றனர்.
- பொதுவாக தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் கடைசி நிமிடத்தில் பதட்டமும் பரபரப்பும் அடைவதுண்டு
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வு 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
பிளஸ்-2 தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. மன நல நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் மாணவ-மாணவிகளின் பதட்டத்தை தணிக்க எந்தநேரத்திலும் உதவி கேட்பதற்காக 14417 என்ற உதவி எண் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் இந்த உதவி எண்ணில் சுமார் 9 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்பு கொண்டு மன அழுத்தத்தை நீக்கும் வகையில் பயன்பெற்றனர். கடந்த மாதம் சுமார் 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் 14417 உதவி எண்ணில் பேசி மன அழுத்தத்தை நிவர்த்தி செய்தனர்.
இன்றும் இந்த உதவி எண்ணில் தேவைப்படும் மாணவ-மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்வுக்கு பயப்படும் மாணவ-மாணவிகள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் கடைசி நிமிடத்தில் பதட்டமும் பரபரப்பும் அடைவதுண்டு. அதை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக தேர்வுக்கு தேவையானவற்றை வரிசைப்படுத்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுத பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
- எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.
- மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர்.
'மதுரை தொகுதி MP-யை காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டருடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் பல்வறு தொகுதிகளிளும் எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மற்றும் கரூர் தொகுதிகளிலும் இதே மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இந்நிலையில் நேற்று மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் பக்கத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மீது தமிழக மக்கள் எந்த அளவு பாசம், அன்பு வைத்துள்ளார்கள் என்பதை 2 நாள் நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
திருச்செந்தூர்:
மத்திய மந்திரி எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி நேற்று தூத்துக்குடியில் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.17 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் சென்றுள்ளார். குலசேகரன்பட்டினத்தில் மட்டும் 986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கிருந்து ரோகிணி என்ற சிறிய வகை ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. இந்தியா இன்று விண்வெளி துறையில் மிகப்பெரிய சரித்திரம் படைத்து கொண்டிருக்கிறது. விண்வெளியில் உலகில் எந்த நாடும் செல்ல முடியாத பகுதிக்கு இந்தியாவின் சந்திராயன்-3 சென்று சாதனை படைத்துள்ளது.
இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் ரூ.560 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. சுமார் 1,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மூலம் தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

இதே போல் வ.உ.சி. துறைமுக விரிவாக்க பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையம், துறைமுகம், ரெயில் நிலைய மேம்பாடு, ரெயில் மின்மயமாக்க பணிகள், 9 புதிய ரெயில் பாதைகள், அம்ரித்-2 திட்டத்தின் கீழ் 34 ரெயில் நிலையங்கள் மேம்பாடு என பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
வருகிற 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். அதற்காக உட்கட்டமைப்பு மேம்பாடு வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட வேண்டும். இந்தியாவில் 80 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் தமிழகம் வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மீது தமிழக மக்கள் எந்த அளவு பாசம், அன்பு வைத்துள்ளார்கள் என்பதை 2 நாள் நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
என் மண் என் மக்கள் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். வெற்றிவேல் யாத்திரை மூலம் 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். இந்த யாத்திரை மூலம் புதுச்சேரி உள்ளிட்ட 40 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
மீன்வளத்தை பெருக்கவும் மாற்று தொழில் செய்யவும், மீனவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதுவரை 65 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மீனவர்களுக்காக 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கியது பா.ஜனதா அரசு.
இதுக்கு முந்தைய அரசு வெறும் ரூ.4 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. பா.ஜ.க. தான் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்களுக்காக மட்டுமே ரூ.1,800 கோடி கொடுத்துள்ளது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் கவுரவமாக கருதப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி.
- பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் என் பிறந்தநாள் செய்தி மடல்.
பிறந்தது முதலே தி.மு.க.காரன் என்பதுதான் என் நிரந்தரப் பெருமிதம். அதற்குக் காரணம், நம்மை இன்றும் இயக்கும் ஆற்றலாக விளங்குபவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
எனக்கு நினைவு தெரிந்த வயது முதல், என் பிறந்தநாளான மார்ச் 1-ம் நாளன்று தலைவர் கலைஞரையும், தாயார் தயாளு அம்மாவையும் வணங்கி வாழ்த்துகள் பெறுவதே என் முதல் கடமையாக இருக்கும். இப்போதும் தலைவர் கலைஞர் படத்தின் முன் வணங்குகிறேன். அம்மாவை அரவணைத்து வாழ்த்து பெறுகிறேன். உடன்பிறப்புகளாம் உங்கள் முகம் கண்டு உவகை கொள்கிறேன். உங்களின் வாழ்த்துகள்தான், நான் ஓயாமல் உழைத்திட ஊக்கம் தருகின்றன.
நம்மை வளர்த்தெடுத்த உயிர்நிகர் தலைவராம் கலைஞரின் வழியில்தான் உங்களின் ஒருவனான நான் முதலமைச்சராகப் பொறுப் பேற்றுள்ள திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. நாளெல்லாம் திட்டங்கள்; பொழுதெல்லாம் சாதனைகள்; அதனால் பயன்பெறும் மக்களின் வாழ்த்துகள் என அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்போரும், மனச்சாட்சி விழிக்கும்போது மனதிற்குள் பாராட்டும் வகையிலான நல்லாட்சியை வழங்கி வருகிறோம். இத்தகைய திராவிட மாடல் ஆட்சியானது இன்று இந்தியா முழுவதும் கவனிக்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் மாபெரும் ஜனநாயகக் கடமை ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்திட நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிகமிக முக்கியமானதாகும். பாசிசத்தை வீழ்த்திட, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட மாநில உரிமைகளை மீட்டிட, 'இந்தியா' கூட்டணி வென்றிட வேண்டும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயகக் போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.வைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.
எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டித் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரெயில் திட்டங்களுக்குத் தடையாக இருந்தோமா? ஒன்றிய அரசின் எந்தத் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதைச் சொல்லட்டும். பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர்.
நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச் சாலையில் தடைக்கல் எழுப்புகிறார்கள். அதை எதிர்க்கத்தான் செய்வோம். மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தோம். உழவர்களை, நிலத்தில் இருந்து விரட்டுவது அது. குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மையினர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் எதிரானது. எதிர்க்கிறோம். எதை எதிர்க்கிறோமோ, அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டுத்தான் எதிர்க்கிறோம். ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.
தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு.
அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பா.ஜ.க.வுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்.
பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் 'இந்தியா' கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளை பா.ஜ.க. தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது.
'இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்' ஒலித்திடும் வகையில் உடன்பிறப்புகளின் களப்பணிகள் வீடு வீடாகத் தொடரட்டும். 'நாற்பதும் நமதே-நாடும் நமதே' என்கிற இலக்கினை அடைந்திடும் வகையில் உங்களின் உழைப்பு அமையட்டும். அது இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கட்டும். அதுதான் உடன்பிறப்புகளாகிய நீங்கள் உங்களில் ஒருவனான எனக்கு வழங்கிடும் இனிய பிறந்தநாள் பரிசாகும். தலைவர் கலைஞருக்கு அவரது நூற்றாண்டு விழாவில் நாம் அளிக்கும் உண்மையான பரிசாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தார் சாலை அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விசுவநாதபுரம், சுப்பன் ஆசாரி களப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாமல் மழை காலங்களில் சேரும் சகதியுடன் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் தார் சாலை அமைத்து தர வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆனால் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தார் சாலை வசதி செய்து தராமலும், கன்னி வாய்க்கால் பகுதியில் பயன்படுத்தி வந்த வாய்க்கால் பகுதியில் தனி நபர்கள் கம்பி வேலி கட்டி தடுத்துள்ளதாலும் இதனை அகற்றவும், தார் சாலை அமைக்கவும் வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதனால் கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு கொடி தோரணங்கள் கட்டியும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திரிஷா குறித்து மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- மன்சூர் அலிகானுக்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில் திரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கூறியதோடு எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், நடிகராக இருக்கும் ஒரு நபரை பல இளைஞர்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துங்கள் என்று மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார். அத்துடன் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து மறுஆய்வு மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், தனி நீதிபதி தள்ளுபடி செய்த உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது.
இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
- நான் காங்கிரசில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று எனது தந்தை கூறினார்.
நாகர்கோவில்:
குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. பொருளாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர் சிவக்குமார் கட்சியிலிருந்து விலகி, விஜய் வசந்த் எம்.பி. முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினரும் இணைந்தனர்.
தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி பழமையான கட்சியாகும். பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. விஜயதரணி எம்.எல்.ஏ. கட்சியை விட்டு சென்று விட்டதால் கட்சி பலவீனம் அடைந்து விடாது. விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினரை விஜய்வசந்த் எம்.பி. சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி.
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விளவங்கோடு தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு விஜயதரணி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இங்கு பாதுகாப்பு இல்லை என்று எப்படி கூற முடியும்.
அவருக்கு கேட்ட பதவி வழங்க வேண்டும். இப்போது கேட்ட பதவி வழங்கவில்லை என்பதற்காக கட்சி மாறி சென்று உள்ளார். பா.ஜனதாவை விமர்சித்த விஜயதரணி எப்படி அவர்களை புகழ் பாட முடிகிறது என்று தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சட்டமன்ற தொகுதி வாரியாக மினி ஸ்டேடியங்களை அமைத்து வருகிறது.
நான் காங்கிரசில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று எனது தந்தை கூறினார். காங்கிரசில் இருப்பது தான் எங்களுக்கு பெருமை. காங்கிரசின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலமாக வேலை வழங்கியுள்ளோம்.
நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் கிடப்பில் கிடந்தது. அந்த திட்டத்தை செயல்படுத்த 1041 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு கனவு திட்டமாகும். புதிய ரெயில்வே திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் புதிய ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். பா.ஜனதாவிற்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதற்காக குறை கூறி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரி பிடித்தத்தை கூட மத்திய அரசு கொடுக்காமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.
- மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் மத்திய அரசிலிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணமாக வழங்கப்படவில்லை.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 30-வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் கடவுளான முருகப் பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வண்ணம் உலகெங்கும் இருக்கின்ற முருக பக்தர்கள் ஒன்றுகூடி பல முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவதென்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 45,477 கோவில் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்திடவும், கிராம தெய்வ வழிபாட்டை ஆன்மிக அன்பர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அக்கோவில் வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த அரசு பொறுப்பேற்ற பின், தேர்வாணையத்தின் மூலம் 379 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 24 நபர்களுக்கும், கோவில்களில் 108 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளன. மேலும், 713 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க.விற்கு முடிவு எழுதுவோம் என்று சொன்னவர்களின் அரசியல் பாதை முடிவுற்று இருக்கிறதே தவிர தி.மு.க.விற்கு இதுவரையில் முடிவு என்பதே கிடையாது. இது ஆயிரம் காலத்து பயிர். இந்த கட்சியும், ஆட்சியும் தொடர்ந்து கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் இந்த மண்ணிலே இருக்கும்.
ஒன்றிய அரசு தேவையான நிதியை மாநிலத்திற்கு கொடுப்பதே இல்லை. வஞ்சிக்கிறது என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் மத்திய அரசிலிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணமாக வழங்கப்படவில்லை. வஞ்சிப்பது ஒன்றிய அரசு தான். ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் முதலமைச்சர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளை கருதி மாநில நிதியிலேயே அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துக் கொண்டிருக்கின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.






