என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயத்திலும் அவரது வீட்டு முன்பும் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்திருந்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்த கலைஞரின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு குடும்பத்தாருடன் 'கேக்' வெட்டினார்.

    அவருக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை மற்றும் குடும் பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரைக்கு சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். 

    இதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேளதாளம் முழங்க அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சக்கர பாணி, அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா, பரந்தாமன், புழல் நாராயணன், மதன் மோகன் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் உடன் வந்திருந்தனர். கலைஞர் நினைவிடத்தில் அவரது உத வியாளர் கே.நித்யா நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன் மற்றும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி தொகுதிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பிரபு கடந்த 2016-21-ல் பதவி வகித்தார். இவரது தந்தை அய்யப்பா அ.தி.மு.க.வின் தியாகதுருகம் முன்னாள் ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். இவரது தாயார் தையல்நாயகி அய்யப்பா தியாகதுருகம் ஒன்றியத்தின் முன்னாள் சேர்மனாக பதவி வகித்தார். இதில் பிரபு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பல்வேறு பகுதியில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வில் இணைந்து போட்டியிட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.

    இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 5.30 மணி முதல் தியாகதுருகத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அவரது பெற்றோர் வசிக்கும் அய்யப்பா வீடு மற்றும் பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் நிலையில், பெங்களூருவில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள்.
    • உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது.

    தமிழகத்தில் நாளை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது.

    இந்நிலையில், நாளை பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! 

    உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.

    தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.

    பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.
    • தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலை.

    தமிழகத்தில் நாளை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது.

    இந்த தேர்தலில், 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர்.

    இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.

    இதற்காக, தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாளை தமிழ் பாடத்தேர்வுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதற்கு அடுத்த தேர்வு வருகிற 5-ந் தேதி என ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ந் தேதி வரை அவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

    இதற்கிடையில், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரையிலும், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது.

    • நடத்துநர்களுக்கு மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் வழங்கினர்.
    • புதிய முறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று (பிப்ரவரி 28) துவங்கி வைத்தனர்.

    மேலும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்துள்ளது. இதற்காக நடத்துநர்களுக்கு மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.

    யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.

    இன்று முதல் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதி நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார். 

    • அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
    • அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.

    சென்னை அடுத்த வண்டலூரில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திமுக நிர்வாகி ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

    இதையடுத்து, திமுக நிர்வாகி ஆராமுதனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    திமுக நிர்வாகியை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
    • மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 அன்று வேலை நாளாக அறிவிப்பு

    மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துளளார். 

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் கட்டடம் இல்லாததால், மருத்துவக் கல்லூரியை நடத்த மீண்டும் வாடகைக்கு இடம் தேடப்பட்டு வருகிறது.
    • மதுரையை சுற்றியுள்ள பகுதியில் வாடகை கட்டிடத்தில் மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை எய்ம்ஸ் நிர்வாகம் எடுத்திருந்தது.

    2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் அதிநவீனமான அமைக்கப்படும் என தெரிவிக்கபட்டது.

    அந்த அடிப்படையில், சுமார் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் ஜப்பானில் இருக்கக்கூடிய ஜெய்கா நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2019-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டு முழுமையாக அந்த இடம் எந்த வித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.

    3 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக எய்ம்ஸ் மருத்தமனைக்கான மாணவர்கள், ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனாலும் அங்கு, பயிற்சி உபகரணங்கள் போதுமானதாக இல்லாத நிலை தான் நீடித்தது.

    இதனை தொடர்ந்து 3 ஆண்டுகள் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை அங்கு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் வாடகை கட்டிடத்தில் மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை எய்ம்ஸ் நிர்வாகம் எடுத்திருந்தது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டியும் இன்னும் கட்டடம் இல்லாததால், மருத்துவக் கல்லூரியை நடத்த மீண்டும் வாடகைக்கு இடம் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இதற்காக டெண்டர் வெளியிடபட்டு, திருமங்கலத்தில் உள்ள செயல்படாத ஒரு நர்சிங் கல்லூரியை வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்த எய்ம்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    • நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது.
    • எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

    நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது!

    எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்.
    • பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்தும்,

    காவிரி நீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, நகர செயலாளர்கள், இந்நாள், முன்னாள் எம்.பி, எம்எல்ஏக்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக வந்து நேரடியாக தஞ்சை திலகர் திடலுக்கு வந்தார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

    • பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடிதான் வெற்றி பெறுவார் என்ற சூழல் இருப்பதால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க அன்புமணி விரும்பி இருக்கிறார்.
    • 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வலிமையான கூட்டணி அவசியம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உறுதியாகும் நிலையில் உள்ளது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் பா.ம.க. தரப்பில் ஒரு மேல் சபை பதவியும் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு 66 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். டெல்லி மேல்சபைக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போதும். மேலும் பா.ம.க.விடமும் 4 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். எனவே மேல்சபைக்கு 2 எம்.பி.க்களை அனுப்ப முடியும். அதில் ஒரு பதவியை பா.ம.க. வற்புறுத்தி வருகிறது. இந்த டீல் முடிந்தால் கூட்டணி இறுதியாகி விடும் என்கிறார்கள்.

    கூட்டணி விஷயத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், பா.ம.க. தலைவர் அன்புமணியும் இரு வேறு கணக்கு போட்டு உள்ளார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடிதான் வெற்றி பெறுவார் என்ற சூழல் இருப்பதால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க அன்புமணி விரும்பி இருக்கிறார்.

    ஆனால் டாக்டர் ராமதாசின் கணக்கு வேறுவிதமாக இருப்பதாக கட்சியினர் கூறுகிறார்கள். 2016 சட்டமன்ற தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற கோஷத்துடன் ஆட்சியை பிடிக்க தனித்து களம் கண்டது.

    ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க. அமர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனவே 2026-ல் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.

    எனவே டெல்லி அரசியலை பார்ப்பதைவிட தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியில் நாம் இருந்தால்தான் அந்த கட்சிக்கும் பலம். இது அவர்களுக்கும் தெரியும்.

    2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வலிமையான கூட்டணி அவசியம்.

    எனவே சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு துணை முதல்வர் பதவி என்பதையும் இப்போதே பேசி வருவதாக கூறப்படுகிறது.

    அவ்வாறு அதிகாரத்துக்கு வந்தால்தான் கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள்.

    எனவே இந்த தேர்தல் நிபந்தனையுடன் அடுத்த தேர்தலில் துணை முதல்வர் பதவி என்ற தங்கள் திட்டத்தையும் அ.தி.மு.க.விடம் ரகசியமாக தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அ.தி.மு.க.வுக்கு முக்கியமல்ல. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில்தான் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். அதற்காக துணை முதல்வர் பதவியை பா.ம.க.வுக்கு வழங்கவும் எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்வார் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

    • 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
    • அகழாய்வு பொருட்களை, பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை.

    கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை மாநில அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதில், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

    அதன்படி, இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

    மத்திய அரசு ஒப்படைக்கும் அகழாய்வு பொருட்களை, பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். அதில் எந்த முடிவும் எடுக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ×