search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது: எல்.முருகன்
    X

    பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது: எல்.முருகன்

    • கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
    • பிரதமர் மீது தமிழக மக்கள் எந்த அளவு பாசம், அன்பு வைத்துள்ளார்கள் என்பதை 2 நாள் நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

    திருச்செந்தூர்:

    மத்திய மந்திரி எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நேற்று தூத்துக்குடியில் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.17 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் சென்றுள்ளார். குலசேகரன்பட்டினத்தில் மட்டும் 986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அங்கிருந்து ரோகிணி என்ற சிறிய வகை ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. இந்தியா இன்று விண்வெளி துறையில் மிகப்பெரிய சரித்திரம் படைத்து கொண்டிருக்கிறது. விண்வெளியில் உலகில் எந்த நாடும் செல்ல முடியாத பகுதிக்கு இந்தியாவின் சந்திராயன்-3 சென்று சாதனை படைத்துள்ளது.

    இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் ரூ.560 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. சுமார் 1,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மூலம் தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

    இதே போல் வ.உ.சி. துறைமுக விரிவாக்க பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையம், துறைமுகம், ரெயில் நிலைய மேம்பாடு, ரெயில் மின்மயமாக்க பணிகள், 9 புதிய ரெயில் பாதைகள், அம்ரித்-2 திட்டத்தின் கீழ் 34 ரெயில் நிலையங்கள் மேம்பாடு என பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். அதற்காக உட்கட்டமைப்பு மேம்பாடு வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட வேண்டும். இந்தியாவில் 80 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது.

    பிரதமர் மோடியின் தமிழகம் வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மீது தமிழக மக்கள் எந்த அளவு பாசம், அன்பு வைத்துள்ளார்கள் என்பதை 2 நாள் நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

    என் மண் என் மக்கள் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். வெற்றிவேல் யாத்திரை மூலம் 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். இந்த யாத்திரை மூலம் புதுச்சேரி உள்ளிட்ட 40 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    மீன்வளத்தை பெருக்கவும் மாற்று தொழில் செய்யவும், மீனவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதுவரை 65 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மீனவர்களுக்காக 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கியது பா.ஜனதா அரசு.

    இதுக்கு முந்தைய அரசு வெறும் ரூ.4 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. பா.ஜ.க. தான் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்களுக்காக மட்டுமே ரூ.1,800 கோடி கொடுத்துள்ளது.

    குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் கவுரவமாக கருதப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×