என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் நிச்சயம் பேசு பொருளாக இருக்கும்
சென்னை:
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று நிச்சயம் ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. மேல்-சபை எம்.பி. பதவி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்டுள்ள கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்து உள்ளார்.
நாட்டின் நலன் கருதி கை குலுக்க வேண்டிய இடத்தில்கை குலுக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் 39 தொகுதிகளிலும் கமல்ஹாசன் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து அவரது சுற்றுப்பயண திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார். இந்த பிரசாரத்தின் போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வை கண்டித்தும் பல்வேறு விஷயங்களை கமல்ஹாசன் எடுத்து வைத்து ஆதரவு திரட்ட இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு இடம் கிடைக்காத நிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பிரசார வேலைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டு ஆயத்தமாகி வருகிறார்கள்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும் போது, "பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் நிச்சயம் பேசு பொருளாக இருக்கும் என்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அவரது பிரசாரம் வலு சேர்க்கும்" என்றும் தெரிவித்தார்.
- முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது.
- மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, வி.கே.சிங் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும்.
* பாஜக பொறுப்பாளர்கள் எங்களுடைய கோரிக்கைகளை தெளிவாகக் கேட்டுள்ளனர்.
* தொகுதிகள் குறித்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.
* மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும்.
* டிடிவி தினகரன் தனியாக அரசியல் கட்சியை நடத்துகிறார். அவரையும் அழைத்துப் பேச இருக்கிறார்கள் என்று கூறினார்.
- கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது.
- வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும்.
சென்னை:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். 16 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தாலுகாகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.
மேலும் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் வீராணம் ஏரிக்கு முக்கிய பங்கு உள்ளது. அதாவது வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், காவிரியில் இருந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. இதனால் கடந்த மாதம் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.
கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் கடந்த 2 வாரத்துக்கு முன்பு சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கி இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாத காலங்களில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அனுப்புவது வழக்கம். அதன்படி என்.எல்.சி. சுரங்க நீரை வடலூா் அருகே உள்ள வாலாஜா ஏரியில் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும். தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 50 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு தனி கால்வாய் வெட்டி அதில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் வீராணம் குழாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வீராணம் ஏரி கைவிட்டபோதிலும் சென்னை மக்களின் தாகத்தை என்.எல்.சி. சுரங்க நீர் தீர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிமுகவை தவிர்த்து தற்போது பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக மேற்கொண்டு வருகிறது.
- சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதாவை பாஜக மேலிட பொறுப்பாளர்கள் இன்று சந்திக்கின்றனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவுக்கு அழைப்பு இல்லை.
இந்நிலையில் அதிமுகவை தவிர்த்து தற்போது பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
பாஜகவுடன் இன்று அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை தேமுதிக தொடங்கி உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதாவை பாஜக மேலிட பொறுப்பாளர்கள் இன்று சந்திக்கின்றனர்.
தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.
- பா.ஜ.க.-வை சேர்ந்த குஷ்பு தேர்தலில் போட்டியிடுவது குறித்து பதில் அளித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்த போது, பாராளுமன்றத்தில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "கமல்ஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளார்கள். தி.மு.க.வில் பிரசாரம் செய்வதற்கு யாரும் இல்லை. தி.மு.க.வுக்கு கமல்ஹாசன் போன்ற முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை. அதைத் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைத்துள்ளார். கூட்டத்திற்காக முதலமைச்சருக்கு கமல்ஹாசன் தேவையா?"
"பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா எங்கு நிற்க சொன்னாலும், நிற்பேன். நாடு முழுக்க பிரசாரம் செய்ய சொன்னாலும் முழுவீச்சில் பிரசாரம் செய்வேன்," என்று தெரிவித்தார்.
- தூத்துக்குடியில் குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள் உயிரிழப்பு.
- உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் ஆறுதல்.
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே உள்ள நீராவி குளத்தில் மூழ்கி சந்தியா, கிருஷ்ணவேணி மற்றும் செல்வன் என மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் மூவரும் உறவினருடன் குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தை கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்த முதல்வர், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்த வழங்க உத்தரவிட்டுள்ளார்.
- நிலவிய நமது மோசமான அச்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
- கவலையை கடந்த ஓராண்டுக்கும் மேலாக என்னிடம் பகிர்ந்து வந்தனர்.
தமிழகத்தில் சமீப காலங்களில் போதை பொருள்கள் பறிமுதல் மற்றும் இது தொடர்பான கைது சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில், போதை பொருள்கள் புழக்கம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "சமீபத்தில் கணிசமான அளவில் போதைப் பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்களின் பறிமுதல் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பாக தமிழ்நாட்டிலும் மற்ற இடங்களிலும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளது நமது மாநிலத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாக நிலவிய நமது மோசமான அச்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது."
"உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் தங்களின் பிள்ளைகளின் நிலை குறித்து கவலைப்படும் பெற்றோர்கள், கடந்த ஓராண்டாக மாநிலத்தில் உள்ள கல்வி வளாகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் போன்றவற்றில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் இருப்பது குறித்த தங்களுடைய தீவிர கவலையை கடந்த ஓராண்டுக்கும் மேலாக என்னிடம் பகிர்ந்து வந்தனர்."
"மத்திய உளவுத்துறை, புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், சர்வதேச கடத்தல் கும்பலைப் பிடிக்கும் நடவடிக்கையில், நமது மாநிலத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் முக்கிய மூளையாக ஈடுபட்டு வந்தவர்களை கண்டறிந்துள்ளன."
"இந்த போதைப்பொருள்கள் மிகவும் அடிமையாக்கும் தன்மையையும் அழிவை ஏற்படுத்தவும் கூடியது. இதை பரிசோதிக்காமல் விட்டால் விரைவில் அது நமது எதிர்கால தலைமுறையையே அழித்துவிடும். போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது."
"துல்லிய அவசர நடவடிக்கை உணர்வுடனும் மிகுந்த முன்னுரிமையுடனும் இந்த அச்சுறுத்தலைக் கையாள வேண்டும். மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க அமைப்புகள், தங்கள் பணிகளை செய்யும் அதே வேளையில், நம் மாநிலத்தில் உள்ள பெற்றோர் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகங்கள் இதுபோன்ற போதைப்பொருட்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்."
"போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முதன்மை இலக்கு இளைஞர்கள் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்."
"இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் இதுதான்: தயவு செய்து இதுபோன்ற சலனங்களில் இருந்து விலகி இருங்கள். ஏனெனில் இது உங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு அழித்துவிடும்."
"இத்தகைய போதைப்பொருள்கள் தங்களுடைய வளாகத்திலோ அருகாமையிலோ நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு சிறப்புப் பொறுப்பு உள்ளது. நமது மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் எதிர்காலத்துக்காகவும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு இந்த தடவை மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடக்கும் என்று தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாக்காளர்களுக்கு நேரடி யாக பணம் கொடுப் பதை தவிர ஜிபே, போன்பே மூலமாகவும் பணம் கொடுக் கப்படலாம் என்று கருதப் படுகிறது. இதையடுத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்த னைகளை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
குறிப்பாக டிஜிட்டல் மூலம் மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்தால் அதுபற்றி விரிவாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதற்காக அவர்கள் தனித்தனி குழுக்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது. அதுபோல மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் வினியோகத்தை தடுப்பதற்கு ஜிஎஸ்டி துறை சார்பில் தனித்தனி குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை-பெங்களூர்- மைசூர் வழித்தடத்தில் ரெயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் 2-வது வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து காலையில் புறப்பட்டு மதியம் மைசூரை அடையும். ஆனால், இப்போது அறிமுகப்ப டுத்தப்படும் வந்தே பாரத் ரெயில் காலையில் மைசூரில் இருந்து கிளம்பி, மதியம் சென்னை வந்தடையும். இந்த வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் இந்த வந்தே பாரத் ரெயில் மாண்டியா, எஸ்எம்விடி பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மைசூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் காலை 7.45 மணிக்கு பெங்களூர் வரும். மதியம் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 9.25 மணிக்கு பெங்களூர் சென்றடையும். இரவு 11.20 மணிக்கு மைசூர் செல்லும்.
சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.
- வைகோ 2 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டுமே கொடுத்து இருப்பதால் விரும்பும் தொகுதியையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது.
- கடந்த முறை திருவள்ளூர் தனித்தொகுதி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 9 தொகுதிகள் தமிழ்நாட்டிலும் ஒரு தொகுதி புதுவையிலும் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த முறை கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் தேனியில் மட்டும் தோல்வி அடைந்தது.
கடந்த முறை வெற்றி பெற்ற 8 தொகுதிகளும் வேண்டும், தேனிக்கு பதில் வேறு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.
ஆனால் 4 தொகுதிகளை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் திருச்சி அல்லது விருதுநகர் வேண்டும் என்பதில் ம.தி.மு.க. பிடிவாதமாக உள்ளது.
வைகோ 2 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டுமே கொடுத்து இருப்பதால் விரும்பும் தொகுதியையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது.
அவ்வாறு திருச்சி அல்லது விருதுநகரை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கினால் மயிலாடுதுறையை காங்கிரசுக்கு வழங்கப்படும்.
அதேபோல் கிருஷ்ணகிரி தொகுதிக்கு பதிலாக கடலூர் அல்லது அரக்கோணத்தை எடுத்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.
கரூருக்கு பதிலாக ஈரோடு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஈரோடு தொகுதி கடந்த தேர்தலில் ம.தி.மு.க. வென்ற தொகுதி. ஆனால் இந்த முறை அந்த தொகுதியை ம.தி.மு.க. கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கலில் இருந்த ஆரணியை கை வைக்கவில்லை. மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த முறை திருவள்ளூர் தனித்தொகுதி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த முறை தேனிக்கு பதிலாக தென்காசி தனித்தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரசில் ஏற்கனவே தலித்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
காங்கிரஸ் தரப்பில் தொகுதிகளை மாற்ற வேண்டாம் என்று வற்புறுத்தப்படுகிறது.
கம்யூனிஸ்டு மற்றும் ம.தி.மு.க. தொகுதிகள் இன்றைக்குள் முடிவாகி விடும் என்று கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது ஆசிரியரின் கடமை.
- தி.மு.க. அரசு தன் கடமையை செய்யாமல், குறை கூறிய ஆசிரியரின் குரல்வளையை நெருக்கியிருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி என்பவர் பொதுமக்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறை பற்றியும் தனது முகநூல் பக்கத்தில் கட்டுரையாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது ஆசிரியரின் கடமை. அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், தி.மு.க. அரசு தன் கடமையை செய்யாமல், குறை கூறிய ஆசிரியரின் குரல்வளையை நெருக்கியிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் தனது கருத்துகளை ஆசிரியர் தெரிவித்து வருகிறார். ஆனால், இவர் எழுதிய கருத்துகள் தி.மு.க. அரசிற்கு எதிராக இருக்கிறது என்பதற்காக அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் ஆகும்.
அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரே சுட்டிக்காட்டும் அளவுக்கு பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் இருக்கிறது என்றால், அந்த அளவுக்கு மோசமான நிலைமை பள்ளிக்கல்வித்துறையில் நிலவுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல், குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை அடக்குவது என்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு. தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. கல்வித் துறையில் நிலவும் குறைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணவும், ஆசிரியரின் தற்காலிக பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்யவும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.
- 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.
திமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று காலை தொடங்கியது.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.
நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்நிலையில், 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.
நாமக்கல், விழுப்புரம், சிதம்பரம், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கு மட்டும் நேர்காணல் நடைபெறவில்லை.






