என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
- தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவாக வந்து அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அங்காளம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன், சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத்தொடர்ந்து பனை, புளி, காட்டுவாகை, சவுக்கு உள்ளிட்ட மரங்களைக்கொண்டு புதிதாக கோவிலின் மேற்கு வாசலில் தேர் வடிவமைக்கப்பட்டது. அந்த தேருக்கு பலவித பூக்களால் ஆன மாலைகள், பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, வாழை மரங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.
பின்னர் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் பம்பை, மேள, தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினர். அதன் பிறகு ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்தவுடன் அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவிந்தா... அங்காளம்மா... ஈஸ்வரி தாயே என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்களின் வெள்ளத்தில் கோவிலைச்சுற்றி அசைந்தாடியபடி நிலைக்கு வந்தது.
தேர் சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதுமட்டுமின்றி சில பக்தர்கள், திருநங்கைகள் பலவித அம்மன் மற்றும் சித்தாங்கு வேடமணிந்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும், நாக்கு, தாடைகளில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மன், வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
- போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி 13-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அதியமான் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சட்ட விரோதமாக மது விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இத்தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுவும் அளித்து இருந்தனர். எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையும், மது விற்பனையும் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அதியமான் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென ஈரோடு-பவானி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை நேரம் என்பதால் பள்ளிகளுக்கு, அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே 24 மணி நேரமும் மது விற்பனையும், சட்டவிரோத மாக லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது. மது குடித்து வரும் நபர்களால் எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
மேலும் கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல் எங்கள் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றனர்.
இதனை அடுத்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு இருந்தது.
- பயணிகளின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஏ.சி. மின்சார ரெயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.
சென்னை:
சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஏ.சி. ரெயில் விடுவது தொடர்பாக ரெயில்வே முடிவு செய்தது. முதலில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி.மின்சார ரெயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
இதையடுத்து தலா 12 ரெயில் பெட்டிகள் கொண்ட 2 மின்சார ரெயில்களை தெற்கு ரெயில்வேக்கு ரெயில்வே வாரியம் ஒதுக்கியது.
ஏ.சி.ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி ஐ.சி.எப்.பில் நடந்து வருகிறது. கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏ.சி.மின்சார ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும். அதன் பின்னர் பயணிகளின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.சி. மின்சார ரெயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும்.
- நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாயைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும். அது மட்டுமல்ல வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும். குறிப்பாக நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும்.
மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை நிரூபிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை பாராட்டி, வாழ்த்தி, நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது.
- சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்த சுவாமி நெல்லையப்பர் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று பங்குனி மாதம் பிறந்ததை யொட்டி அதன் ஒரு நிகழ்வாக இன்று பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து கொடி மரத்துக்கு மாப்பொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
விழாவில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளன்று ஆலயம் உருவான வரலாற்றுத் திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வும், 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெறும்.
- பணம் ஈட்டுவதற்காக நான் வெவ்வேறு ஊர்களுக்கு செல்லவில்லை.
- வருகிற தேர்தலில் மோடி வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் ஆவார்.
மேலசொக்கநாதபுரம்:
யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான அகோரி சாமியார் தற்போது தேனி மாவட்டம் போடியில் வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவதுடன் தான் இங்கேயே ஜீவசமாதி அடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி புதுக்காலனி அன்னை இந்திரா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தவர் கலையரசன். இவர் இங்குள்ள சந்தனமாரியம்மன் ஆசியால் அருள்வாக்கு கூறும் சித்தராக மாறி தற்போது அகோரி சாமியாராக உருவெடுத்துள்ளார்.
காசிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தீட்சை பெற்றதாக கூறும் இவர் கடந்த சில மாதமாக கோவையில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் பிரபலமான அகோரி கலையரசன் சந்தனமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின்பு அங்கு வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், சித்திரை திருவிழாவுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள எனது சொந்த ஊருக்கு வந்துள்ளேன்.
நான் போடியில் பிறந்து வளர்ந்த காலத்தில் இறைவனின் அருள் எனக்கு கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளி தேவியின் அருளால் அகோரியாக மாறி என்னை பிரகனப்படுத்திக் கொண்டபிறகு பல்வேறு ஊர்களில் இருந்து என்னைத் தேடி பக்தர்கள் வரத் தொடங்கினர்.

அகோரியாக மாறிய நான் விஜயகாந்த் சமாதிக்கு சென்று வழிபாடு செய்தது ஏன்? என கேட்கிறார்கள். விஜயகாந்த் இறப்பது எனக்கு முன்பே தெரியும். அவர் இறந்த சமயத்தில் நான் காசியில் இருந்தேன். இதனால் அப்போது அவரை பார்க்க வரமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரை அது சமாதி கிடையாது. கோவில். மக்களுக்காக வாழ்ந்த மனிதக்கடவுள்.
எனவே அவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும். எனக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. பணம் ஈட்டுவதற்காக நான் வெவ்வேறு ஊர்களுக்கு செல்லவில்லை. என்னை யார் வேண்டுமானாலும் இழிவாக பேசட்டும். எனக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் அதனை காண்பதற்காக காசியில் இருந்து வந்தேன். நான் பிரேமானந்தாவோ, நித்யானந்தாவோ கிடையாது. மக்களுக்கு என்னால் ஆன நல்ல காரியங்களை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.
எனது இறுதி காலம் போடியில்தான் இருக்க வேண்டும். எனக்கு இங்கே ஜீவசமாதி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான இடத்தையும் பக்தர்களை தேர்வு செய்ய கூறியுள்ளேன். சமீப காலமாக ஆன்மீகத்துக்கு எதிராக பலர் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு கடவுள் உரிய தண்டனை கொடுப்பார். தமிழகத்தில் ஆன்மீகத்துக்கு எதிராக பேசும் நபர்களால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும். வருகிற தேர்தலில் மோடி வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் ஆவார். மோடி சித்தர் வடிவானவர். அதனால்தான் அவருக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டி அதனை திறப்பு விழா நடத்தும் பாக்கியம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அகோரி கலையரசன் போடிக்கு வந்திருப்பதை அறிந்ததும் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் அவரை காணக் குவிந்தனர். அவர்களுக்கு அருளாசி வழங்கியபடி அவர் மற்ற கோவில்களில் தரிசனம் செய்ய செல்வதாக கூறிச் சென்றார்.
- அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை இழுக்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது.
- அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க.வுடன் சந்திக்க தே.மு.தி.க. முடிவு செய்து உள்ளது. இரு கட்சி நிர்வாகிகளும் 2 கட்ட பேச்சு வார்த்தை நடத்தி முடித்து உள்ளனர். தே.மு.தி.க.விற்கு 3 அல்லது 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
ஆனால் மேல்சபை எம்.பி. ஒன்றையும் தே.மு.தி.க. கேட்டு வருவதால் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு மேல்சபை எம்.பி. கொடுக்க முடியாத சூழலை விளக்கி கூறினாலும் தே.மு.தி.க. பிடிவாதமாக உள்ளது.
இதற்கிடையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை இழுக்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது. பா.ம.க. வந்தால் அ.தி.மு.க. கூட்டணி வலுவடையும் என கருதி அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படுகின்ற நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் அறிவிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு தே.மு.தி.க. தயாராக இருந்த நிலையில் அழைப்பு இல்லாததால் பேசவில்லை. பா.ம.க.வை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளதால் பேச்சுவார்த்தை தள்ளிப் போனது. இன்று மாலை தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு கொடுத்துள்ளது.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு இன்று சென்னை திரும்புகிறார். இதையடுத்து தொகுதி பங்கீட்டு குழுவினர் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு விடும். ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
- நமது இந்திய தேசத்தில் பிரிண்ட் ரக துணிகள் அதிகம் உற்பத்தி ஆவது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தான்.
- எல்லோரும், எல்லா வயதினரும் விரும்பும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டு பிரிண்ட் செய்கிறோம்.
சென்னிமலை:
சென்னிமலை பகுதியில் செயல்படும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு துணி ரகங்கள் நெசவு செய்யப்படுகிறது. பெட்ஷீட்கள், படுக்கை விரிப்புகள், திரை சீலைகள், தலையணை உறை, துண்டு ரகங்கள், வீட்டு உபயோக துணி வகைகள், மேட் ரகங்கள், துணி பைகள், மேட் ரக பைகள், சால்வை ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் என பல வடிவங்களில், பல வண்ணங்களில் மக்கள் விரும்பும் விதமாக நெசவு செய்யப்படுகிறது.
இதில் குறிப்பாக சென்னிமலை பகுதி கைத்தறிகளில் கோரா நூலில் நெசவு செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பிரிண்ட் செய்யப்படும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரை சீலைகள் 25 வருடங்களாக விற்பனை தொய்வில்லாமல் நடந்து வருகிறது.
நமது இந்திய தேசத்தில் பிரிண்ட் ரக துணிகள் அதிகம் உற்பத்தி ஆவது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தான். இங்கு பிரிண்ட் செய்யப்படும் துணி ரகங்கள் உலக புகழ் பெற்றவை.
இதை சென்னிமலை படுக்கை விரிப்புகளில் புகுத்த 25 வருடங்களுக்கு முன்பு கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் முடிவு செய்து சென்னிமலையில் கைத்தறியில் உற்பத்தியாகும் கோரா நூல் துணி ரகங்களை அனுப்பி அங்கு பிரிண்ட் செய்யப்பட்டு படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள், திரை சீலை ரகங்கள் அறிமுகம் செய்தனர்.
இந்த ஜெய்பூர் பிரிண்ட் ரக துணிகள் நல்ல விற்பனை ஆனது. அதை தொடர்ந்து 25 வருடங்களாக புது புது வண்ணங்கள், தற்போதுள்ள இளம் தலைமுறையினறும் விரும்பும் டிசைன்கள் பிரிண்ட் செய்யப்பட்டு விற்பனை நடக்கிறது.
25 வருடங்களாக ஜெய்பூர் ரக பிரிண்ட படுக்கை விரிப்புகளை பிரிண்ட் செய்து கைத்தறி சங்கங்களுக்கு கொடுக்கும் ஜெய்பூரை சேர்ந்த ராஜேந்திரகுமார் பட் கூறும்போது:-
எங்கள் ஜெய்பூர் பிரிண்ட் துணிகளில் மிக நேர்த்தியான பிரிண்ட் செய்கிறோம், இயற்கை சாயம் கொண்டு ஆர்க்கானிக் முறையில் பிரிண்ட் செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு சரும பிரச்சனைகளை உண்டாக்காது.
மேலும், எல்லோரும், எல்லா வயதினரும் விரும்பும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டு பிரிண்ட் செய்கிறோம். இந்த ரக பிரிண்ட் படுக்கை விரிப்புகள் வண்ணம் பளபளப்பாக இருக்கும். துணிகளை துவைப்பது எளிது. மேலும் எத்தனை சலவை செய்தாலும் சாயம் போகாது. மினுமினுப்பு தன்மை குறையாது.
இதனால் கடந்த 25 வருடங்களாக இந்த படுக்கை விரிப்புகள் மவுசு குறையாமல் சென்னிமலை பகுதி கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் விற்பனை தொய்வில்லாமல் நடக்கிறது என்றார்.
எந்த துணி ரகங்கள் ஆனாலும், 25 வருடங்களாக விற்பனையினை குறிப்பாக ஒரு தலைமுறை தாண்டியும் மவுசு குறையாமல் வைத்திருப்பது போற்ற தகுந்தது தான். அப்படிதான் சென்னிமலை கைத்தறி ஜெய்பூர் பிரிண்ட் ரக படுக்கை விரிப்புகளும் மவுசு குறையாமல் உள்ளது.
தற்போது வரும் தீபாவளி விற்பனையினை கருத்தில் கொண்டு புதிய ரக ஜெய்பூர் பிரிண்ட் படுக்கை விரிப்புகளை உருவாக்க கைத்தறியாளர்கள் சோதனையினை தொடங்கி உள்ளனர்.
- கோடை வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பாசன பரப்புகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.
- திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் வகையில் பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதை ஆதாரமாக கொண்டு முதலாம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் 12-ந்தேதி முதல் 100 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 2½ சுற்றுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அதே போன்று பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கோடை வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பாசன பரப்புகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.
அத்துடன் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணை மண் திட்டுக்களாகவும், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறியும் வருகிறது. ஆனாலும் காண்டூர் கால்வாயின் உதவியால் பாசனத்திற்கு தண்ணீரும், அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீரும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்து வருகிறது. தற்போது முதலாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்று தண்ணீர் நிறைவடைந்து 2-ம் சுற்றுக்காக தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 36.31 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 724 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 119 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல கூட்டம், கோவில்பட்டி மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெறுவதை 3 ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றி தருவதாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெற வேண்டும் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இருக்கிறோம்.
வணிக உரிமை பெறுவதற்கு கட்டிட உரிமையாளரும் வரி கட்ட வேண்டும், அதனை இணைக்க வேண்டும் என்பதனை தவிர்த்து உரிமத்தினை தனியாக வழங்க வேண்டும் என்பதனையும் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்க்க இருக்கிறோம். ஆகவே தான் மே 5-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு வணிகர் விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
உற்பத்தியாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் அனைத்து கடைகளுக்கு ஒரே விலையில் பொருட்களை தர வேண்டும். அந்நிய நாட்டு சக்திகள் ஆன்லைனில் புகுந்து கொண்டு வணிகத்தினை சீரழிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்கின்றனர். அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பாரபட்சம் இல்லமால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள் பாரபட்சம் இல்லமால் செயல்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதனை அதிகளவு பயன்படுத்துவது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
சிறு வணிக நிறுவனங்களில் பறிமுதல் செய்து அதிகளவு அபராதம் விதிக்கின்றனர். பிளாஸ்டிக்குக்கு பதில் மாற்று எது என்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும். அதனை முறைப்படுத்த வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை வாங்கியுள்ளனர். மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள், எதிர்கட்சிகளிடம் எங்களின் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள், மாநாட்டு தீர்மானங்கைள நிறைவேற்றி தருகிறோம் என்று யார் உறுதி அளிக்கிறார்களோ, அது குறித்து ஆலோசனை நடத்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதனை தெரிவிப்போம்
பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வணிகர்களை மிரட்டும் ரவுடிகள் மீது புகார் அளித்தால் கைது செய்யப்பட்ட சில நாள்களில் வெளியே வந்து மிரட்டும் சூழ்நிலை உள்ளது.
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் ரவுடியிசம் ஒழியும். வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். தவறு செய்யும் வணிகர்களுக்கு அவர்களின் பொருளாதரத்தினை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்து தவறும் செய்யும் வியாபாரிகளை நீக்குவது என்று சங்கத்தில் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்னத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து உள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,125-க்கும் சவரன் ரூ.49,000-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- ரோடு ஷோ நடக்க உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரமாண்ட பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லடம், தூத்துக்குடி, நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வருகிற 18-ந்தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். அன்றைய தினம் கோவை மாவட்டத்திற்கு வருகை தரும் அவர், கோவையில் நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்று மக்களை சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 3.5 கி.மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட உள்ளது.
பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் நின்றபடி, மக்களை பார்த்து கையை அசைத்து பேச உள்ளார். குறிப்பிட்ட சில இடங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுதவிர கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும், அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கூட்டத்தின் போது, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரோடு ஷோ நடக்க உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பாதுகாப்பு, மக்கள் கூட்டம் வந்தால் எப்படி சமாளிப்பது, எந்த இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். உயர்ந்த கட்டிடங்கள், மரங்கள் நிறைந்த பகுதி, போக்குவரத்து உள்ள பகுதி, பதற்றமான பகுதிகள் என பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
17-ந்தேதி முதல் கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவையில் நேற்று முதலே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அந்த வழியாக வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி கோவை கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்புரம், வடகோவை, சாய்பாபா காலனி, துடியலூர் பகுதிகளில் ரெட்சோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று முதல் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.






