என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கோடை காலம் என்பது பொதுவாக ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும். கோடை காலம் தொடங்க இன்னும் 1 மாதம் இருக்கும் நிலையில் தற்போதே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது. மேலும் தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 4 வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது. மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் (103.38 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் (104.36 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. மதிய நேரம் வெளியே செல்லும்போது தீப்பிடிப்பது போல் இருப்பதால் மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர். வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும், குடை பிடித்த படியும் சென்று வருகின்றனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாள் ஒன்றுக்கு 4 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்து உள்ளனர். இதேபோல் நீர்ச்சத்து ஆகாரங்களை அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் மே மாதத்தில் என்ன செய்ய போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்.

    • சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
    • திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரகதகல்லால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    சிறுவாபுரி கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மேலும் இந்த கோவில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோவில் என்றும் கூறப்படுகிறது. இதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்களின் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிக்கி திணறி வருகிறார்கள்.

    இதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்தி ருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவிவருகிறது. ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்கிறார்கள்.

    இதேபோல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதிலும், வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிறுவாபுரி-புதுரோடு சாலையிலும், சிறுவாபுரி-அகரம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே செவ்வாய்க்கி ழமை மற்றும் விழா காலங்களில் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரையில் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

    சிறுவாபுரி கோவிலில் முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் விடியற்காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி, நிழல் தரும் பந்தல் வசதி, தேவையான கழிவறை வசதி தேவையான அளவு இல்லை.

    மேலும், கோவிலுக்கு செல்லும் வழியையும், தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியையும் ஒவ்வொரு வாரமும் மாற்றி, மாற்றி அமைப்பதால் பக்தர்கள், முதியவர்கள், பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்வதிலும், வெளியே வருவதிலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    சாலையின் இருபுறமும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர். காவல்துறையினரும், வருவாய் துறையினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒருவருக்கு, ஒருவர் ஒத்துழைப்பு இல்லாததால் சாலை ஓரம் உள்ள கடைகளை அப்புறப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

    இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் விழா காலங்களில் பக்தர்கள் தரிசன நேரத்தை அதிகரித்தால் கூட்ட நெரிசல் ஏற்படாது. வாகன நெரிசலை தவிர்க்க கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்து போக்கு வரத்தை சரிசெய்யவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    பின்பு பேச தொடங்கிய பிரதமர், என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    * தமிழக மண்ணில் நான் ஒரு மாபெரும் மாற்றத்தை காண்கிறேன்.

    * தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கர்வத்தை தமிழகம் அடக்கும்.

    * தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக எப்போதும் மாற்றாது.

    * மக்களை கொள்ளையடிக்கவே இவர்கள் ஆட்சியமைக்க நினைக்கிறார்கள்.

    * நாங்கள் 5ஜி கொண்டு வந்தோம். அவர்கள் 2ஜியில் ஊழல் செய்தார்கள்.

    * இந்தியா கூட்டணி ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்தார்கள்.

    * இந்தியா கூட்டணியின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது.

    * பா.ஜ.க அரசு ஏராளமான விமான நிலையங்களை கட்டியது.

    * கன்னியாகுமரி பா.ஜ.க.வுக்கு எப்போதும் மாபெரும் ஆதரவு தந்திருக்கிறது.

    * வாஜ்பாய் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வந்தார்.

    * கன்னியாகுமரி- திருவனந்தபுரம் 4 வழிச்சாலை கொண்டு வர மாநில அரசு உதவவில்லை.

    * இரட்டை ரெயில் பாதை வேண்டும் என்ற மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை இவர்கள் நிறைவேற்றவில்லை.

    * பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * நாம் தமிழ்நாட்டின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முனைப்போடு இருக்கிறோம்.

    * உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.

    * மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை உணர்ந்து பாராட்டுகிறேன்.

    * தமிழ்நாட்டின் ரெயில்வே, சாலை வசதிகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார்.

    • திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • பங்குனி உத்திர விழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவள்ளூர்:

    திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் உத்திர விழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா இன்று காலை 9 மணிக்கு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் காலை, மாலை உற்சவர் சோமாஸ்கந்தர் பல்வேறு வாகனத்தில் திருவலாங்காட்டில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    விழாவின் 7ம் நாளான 21-ந்தேதி கமலத்தேர் விழா நடக்கிறது. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி இரவு வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைப்பெறுகிறது. 24-ந்தேதி இரவு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி செய்து வருகின்றனர்.

    • மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்குப் பிறகே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மாடு பிடி வீரர்கள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினர்.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அடுத்த ஆதனக்கோட்டை மோட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை வட்டாட்சியர் பரணி கொடியசைத்து ஜல்லிக்கட்டினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்து துறையினரால் அனுமதிக்கப்பட்ட 100 மாடு பிடி வீரர்களும் 700 ஜல்லிக்கட்டு காளைகளும் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள், கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பிறகு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல், மாடுபிடி வீரர்களும் பரிசோதனைக்குப் பிறகே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.ர் ராகவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    இப்போட்டியில் மாடு பிடி வீரர்கள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினர். மேலும், இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ, எவர்சில்வர் பொருட்கள், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு மருத்துவ குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

    • குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.
    • மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    இக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    * குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.

    * கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் பிரதமர் மோடி.

    * குமரியில் 1995-ல் ஏக்தா யாத்திரை துவங்கிய போது மோடி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    * அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார்.

    * 400 தொகுதிகள் வெற்றி என்பது வெறும் வார்த்தை அல்ல, இந்திய மக்களின் உணர்வு.

    * 1892-ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்.

    * தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்.

    * மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.

    * 147 கோடி மக்களின் விஸ்வ குருவாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்றார்.

    இதையடுத்து மகளிர் அணியின் சார்பில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி பா.ஜ.க. சார்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. 40 மக்களவை தொகுதிகளிலும் நாம் நிச்சயம் வெல்வோம் என்றார்.

    • நாட்டில் உணவு பஞ்சத்தை விட கொடியது தலைமை பஞ்சம் தான்.
    • மனிதர்களை கவரும் தலைமை பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில் லயோலா கல்லூரியில் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டில் உணவு பஞ்சத்தை விட கொடியது தலைமை பஞ்சம் தான். தலைமை பஞ்சம் வந்தால் அதனை சீர் செய்ய முடியாது. நல்ல ஆளுமைக்கு பயிற்சி வேண்டும். ஒவ்வொரு துறையிலும் பயிற்சி பெற்ற பிறகுதான் அதில் சிறந்து விளங்க முடியும்.

    ஆனால் தலைவர்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழகமோ, கல்லூரிகளோ பயிற்சி நிறுவனங்களோ கிடையாது. ஆனால் தலைவர்கள் தான் தேசத்தின் சக்தி. எனவே தலைவர்களுக்கு சேவை மனப்பான்மை வேண்டும். ஒரு பிரச்சினையை கையாள தெரிய வேண்டும். துறை ரீதியான அறிவு மட்டும் போதாது. புரிதல் ஞானம் வேண்டும். இது தவிர மனிதர்களை கவரும் தலைமை பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும்.

    கிறிஸ்தவ பாதிரியார்கள் பொது வாழ்வில் சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறார்கள். நல்ல தொண்டுள்ளம் வேண்டும். நல்ல தலைவர்கள் கொள்கையில் இருந்து மாறக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம்.
    • இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. பா.ம.க.வுடன் சில கட்ட பேச்சுவார்த்தை நடந்தது உண்மை தான். யார் வந்தாலும் வராவிட்டாலும் தனித்து நிற்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம்.


    பல்வேறு சவால்களை திறம்பட கையாண்டு வந்துள்ளோம். எத்தனை தடைகள் வந்தாலும் அ.தி.மு.க. துணிச்சலாக எதிர் கொள்ளும். கட்சிக்கே தொடர்பில்லாத சூர்யமூர்த்தி இரட்டை இலை குறித்து வழக்கு போட்டுள்ளார். சூரிய மூர்த்தியை பின்னால் இருந்து யாரோ தூண்டி விடுகிறார்கள்.

    இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இல்லை. இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற ஓ.பி.எஸ். கனவு பலிக்காது. சி.ஏ.ஏ. விவகாரத்தில் தி.மு.க. தொடர்ந்து பொய் கூறி வருகிறது.



    அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்தது என்ற மாயையை உருவக்க முயற்சி நடக்கிறது. அது எடுபடாது. தமிழ்நாட்டில் மக்களுடன் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணிதான் மெகா கூட்டணி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதே பா.ம.க.வின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என்கிற கருத்தும் கூறப்பட்டுள்ளது.
    • பா.ஜனதா-பா.ம.க. இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது பற்றி பா.ம.க. எந்த முடிவையும் எடுக்காமலேயே உள்ளது.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரும்புவதாகவும், ஆனால் பா.ஜனதா கூட்டணியை அன்புமணி ராமதாஸ் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியானது.

    இப்படி பா.ம.க. மேலிடத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவி வருவதாலேயே கூட்டணி விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நீடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதே நல்லது என்றும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே மீண்டும் அமையப் போகிறது என்றும் கட்சியில் கருத்துக்கள் பேசப்பட்டுள்ளன.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதே பா.ம.க.வின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என்கிற கருத்தும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியுடனேயே பா.ம.க. கூட்டணி சேருவதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளது.

    இது தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையிலும், ரகசியமாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு போதிய ஆர்வம் காட்டாத நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடனான பேச்சுவார்த்தை திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது.

    இதனால் பா.ஜனதா-பா.ம.க. இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் வைத்து பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாக கூறப்பட்டது.

    இது தொடர்பாக நேற்று இரவு தகவல்கள் வெளியான நிலையில் இன்று காலையில் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பா.ஜனதா உடனான கூட்டணிக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், மாநில அரசியலை நம்மால் வேகமாக முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் மாவட்ட செயலாளர்கள் தொலைபேசி வாயிலாகவும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    மாநில அரசியலில் நாம் காலூன்ற வேண்டுமென்றால் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதே நல்லது என்றும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இப்படி கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பால் பா.ம.க. மேலிடம் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவை எடுக்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இருப்பினும் இன்னும் சில தினங்களில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பா.ம.க. இறுதி முடிவை எடுக்கும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம்.
    • மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் களம் அனைத்து மாநிலங்களிலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    தி.மு.க. தன் வழக்கமான கூட்டணி கட்சிகளோடு களம் இறங்க, அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி முறிந்து தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ள பா.ஜனதா அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை அமைத்து செயலாற்றி வருகிறது.

    குறிப்பாக தமிழகம், கேரளாவில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 மாநிலங்களிலும் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

    சமீபத்தில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னை பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில் அவர் கேரளா மற்றும் தமிழகத்தில் இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இதற்காக கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விஜயதாரணி, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, மாநில செயலாளர் மீனா தேவ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


    இக்கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் உள்ளது. தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம் என்றார்.

    இதன்பின்னர் பேசிய சரத்குமார், நாட்டை ஆள்வதற்கான நல்ல தலைவர் மோடி. 3-வது முறையாக பிரதமராக அமர உள்ளார். மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். ஊழல் அற்ற, சுயநலம் அற்ற சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்றார்.

    • மீனவர்கள் காங்கேசன்நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் அவ்வாறு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமிநகரை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ந்தேதி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்காலை சேர்ந்த முருகானந்தம், இரும்பன், பாபு, பரசுராமன், முருகன், சுந்தரவேல், வடிவேல் உள்ளிட்ட 15 பேர் விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று யாழ்பாணம் அருகே மயிலட்டி என்ற பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்தாக கூறி மீனவர்கள் 15 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் மீனவர்கள் காங்கேசன்நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னர் அவர்கள் யாழ்பாணம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 74-வது திருஏடு வாசிப்பு விழா.
    • நாளை மறுநாள் பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை நெட்டியான்விளையில் அய்யா வைகுண்டர் பதி உள்ளது. இங்கு 192-வது அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 74-வது திருஏடு வாசிப்பு விழா ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் திருஏடு வாசிப்பு, விளக்கவுரை, உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்து வருகிறது.

    8-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, விளக்க உரை, இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, சுருள் வைப்பும் சாமிதோப்பு தலைமை பதியை சேர்ந்த பால் பையன் தலைமையில் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு சமய வகுப்பு மாணவ மாணவிகளின் நாடகம் நடக்கிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பால் வைப்பு, 3.30 மணிக்கு பணிவிடை, 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடை, 8.30 மணிக்கு உகப்படிப்பும் நடக்கிறது.

    18-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு பள்ளி உணர்த்தல் 9.30 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×