என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜனதா கூட்டணிக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கடும் எதிர்ப்பு
    X

    பா.ஜனதா கூட்டணிக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கடும் எதிர்ப்பு

    • அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதே பா.ம.க.வின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என்கிற கருத்தும் கூறப்பட்டுள்ளது.
    • பா.ஜனதா-பா.ம.க. இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது பற்றி பா.ம.க. எந்த முடிவையும் எடுக்காமலேயே உள்ளது.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரும்புவதாகவும், ஆனால் பா.ஜனதா கூட்டணியை அன்புமணி ராமதாஸ் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியானது.

    இப்படி பா.ம.க. மேலிடத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவி வருவதாலேயே கூட்டணி விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நீடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதே நல்லது என்றும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே மீண்டும் அமையப் போகிறது என்றும் கட்சியில் கருத்துக்கள் பேசப்பட்டுள்ளன.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதே பா.ம.க.வின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என்கிற கருத்தும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியுடனேயே பா.ம.க. கூட்டணி சேருவதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளது.

    இது தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையிலும், ரகசியமாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு போதிய ஆர்வம் காட்டாத நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடனான பேச்சுவார்த்தை திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது.

    இதனால் பா.ஜனதா-பா.ம.க. இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் வைத்து பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாக கூறப்பட்டது.

    இது தொடர்பாக நேற்று இரவு தகவல்கள் வெளியான நிலையில் இன்று காலையில் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பா.ஜனதா உடனான கூட்டணிக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், மாநில அரசியலை நம்மால் வேகமாக முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் மாவட்ட செயலாளர்கள் தொலைபேசி வாயிலாகவும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    மாநில அரசியலில் நாம் காலூன்ற வேண்டுமென்றால் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதே நல்லது என்றும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இப்படி கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பால் பா.ம.க. மேலிடம் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவை எடுக்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இருப்பினும் இன்னும் சில தினங்களில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பா.ம.க. இறுதி முடிவை எடுக்கும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×