என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.
- மத்திய சென்னை தொகுதியில் ப.பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் கு.நல்லதம்பி போட்டியிடுகின்றனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

மத்திய சென்னை தொகுதியில் ப.பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் கு.நல்லதம்பி, கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து, தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து தேமுதிக சார்பாக விருதுநகரில் களமிறங்கும் கேப்டன் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் இன்று வேட்பாளர் பட்டியல் அறிவித்த பிறகு தனது தந்தையிடம் ஆசி பெற்றார்.

- வேலன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த எர்ரஅள்ளி கருகன்சாவடி சேர்ந்தவர் வேலன் (வயது42).
இவர் குடிநீர் தொட்டி டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று மாலை 5 மணிக்கு காவேரிப்பட்டணத்தில் ஏழுஜடை முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஏரி அருகேமின் மோட்டார் அணைக்க சென்றார்.
அங்கு அதே பகுதியை சார்ந்த முனியப்பன் என்பவர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து வேலன் முனியப்பனுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முனியப்பன் அங்கிருந்த மீன் வெட்டும் கத்தியால் வேலனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்தம் அதிகமாக வெளியேறி சம்பவ இடத்திலேயே வேலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த பக்கம் சென்றவர்கள் வேலன் கீழே பிணமாக இருப்பதை பார்த்து உடனடியாக காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து வேலனின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வேலன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஏரியில் இருந்த மீன் ஷெட்டுக்கு தீ வைத்தனர்.
இதனால் மீன்பிடிக்கும் செட்டுக்குள் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்தது.
பின்பு பாலக்கோடு ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினர். பின்பு அவர்கள் அங்கிருந்து காவேரிப்பட்டணம்-சேலம் மெயின் ரோடு, பாலக்கோடு பிரிவு சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்தவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பேப்பருக்கு தீவைத்து கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி உட்கோட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் அவர்களை சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. அப்பொழுது அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். இதனை அடுத்து வேலனை கொலை செய்த முனியப்பன் தருமபுரிக்கு தப்பி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் மற்றும் போலீசார் உடனே விரைந்து வந்து தருமபுரி பஸ் நிலையத்தில் தலைமறைவாக இருந்த முனியப்பனை நேற்று இரவு கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்குள்ளாகவே கொலையாளி முனியப்பனை போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.
மேலும் 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள ஒரு சந்து கடையில் மது பானங்கள் விற்கப்படுகிறது.
குறிப்பாக பாலக்கோடு ரோட்டில் உள்ள சந்து கடையில் 24 மணி நேரமும் கிடைக்கிறது. இதனால் இப்பகுதியில் குடித்துவிட்டு ரோட்டில் செல்பவர்களை குடித்துவிட்டு வீண் தகராறுகள் ஏற்பட்டு தற்போது நடந்த கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது என்றனர்.
எனவே இப்பகுதியில் உள்ள சந்துகடைகளில் 24 மணிநேரமும் நடைபெறும் மது விற்பனையை உடனடியாக அதிகாரிகள் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன.
நெல்லை:
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வயதில் மூத்த வாக்காளர்களை வீடு தேடி சென்று அழைப்பிதழ் கொடுத்து 12-டி படிவத்தை கொடுத்து வாக்களித்திட அழைக்கும் நிகழ்ச்சி இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் விசுவாசம் என்ற 87 வயது முதியவர் வீட்டிற்கு நெல்லை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் தலைமையில் அலுவலர்கள் சீர்வரிசையுடன் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு சகிதம் அழைப்பிதழ் மற்றும் மேளதாளத்துடன் நேரில் சென்று வழங்கி விசுவாசம் என்பவரை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவரிடம் வாக்களிக்க வேண்டிய 12-டி விண்ணப்ப படிவத்தையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் கூறியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன.
மேலும் அவர்கள் தேர்தல் வாக்களிக்கும் நாளில் வர முடியாத சூழ்நிலை இருந்தால் அவர்களுக்கு 12டி என்ற விண்ணப்ப படிவத்தையும் வழங்கினர்
மேலும் குறைவான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் வருகிற ஏப்ரல் 13-ந்தேதி பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள், நடனங்கள் ஆகியவற்றுடன் ஒரு தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது.
மேலும் முதல் வாக்காளர்களை கவரும் விதமாக புதிய தொழில்நுட்பத்தில் டிரோன்கள் மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
- வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், வேலை காரணமாக வாக்குரிமையை யாரும் இழந்து விடக் கூடாது என்பதற்காக, தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதனால் வர இருக்கும் மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
அதன்படி விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இந்த விடுமுறையை பயன்படுத்தி தொழிலாளர் கள் வாக்களித்தார்களா? என சரிபார்க்க எந்த நடை முறையும் இல்லை.
அதனால் தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறையை பெற, வாக்களித்ததற்கான சான்றை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் தேதியில் வழங்கப்படும் விடுமுறையை பயன்படுத்தி தொழிலாளர்கள் வாக்களிக்காமல் இருப்பது விடுமுறையின் நோக்கம் நிறைவேற்றப்படாமல் போகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தேர்தல் நாளில் வாக்களிக்க விரும்பாமல் வேலை செய்ய விரும்பினால் சம்பந்தப்பட்ட தொழிலாளியை தனியார் நிறுவனம் வேலை செய்ய அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததை அடுத்து, வாக்களிக்க வேலை தடையாக இருக்கக் கூடாது; தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டுமென்ற அடிப்படையில் தான் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
வாக்களிக்க வேண்டும் என எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும்? தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை பெற, வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது" என்று உத்தர விட்டு நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
- ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
- ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பள்ளிக்கூடம் உள்ளிட்ட ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் நரேன். தற்போதும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் நரேன் இன்று தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார். அப்போது நீங்கள் நடிக்கும் படங்கள் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர். அதற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் நரேன் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை.
- கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள்.
நாகர்கோவில்:
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் அமைச்சராக இருந்தபோது 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளேன். மீண்டும் இந்த மாவட்டம் வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு கட்டுமான பணிக்காக கனிம வளங்கள் கிடைப்பதில்லை.
கனிமவள டாரஸ் லாரிகள் மோதி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும். எந்த லாரியாக இருந்தாலும் அவசியம் இல்லாமல் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை இல்லை. இதிலிருந்து அவர் பொய் சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை. இதனால் 3 ஆண்டு காலத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நான்கு வழிசாலை அமைக்கும் பணிக்காக 1046 கோடி ரூபாய் கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 350 கோடி ரூபாய் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தின் கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமலாக்கத்துறை பொறுத்திருந்து நடவடிக்கை மேற்கொள்ளும். அந்த வகையில் தான் காத்திருந்து அவர்கள் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள். அப்போது அவர் ஆஜராகவில்லை. அப்போதே அவர் ஆஜர் ஆகி இருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் பத்திர விவகாரத்தை பொறுத்தவரை நாங்கள் எதையும் மறைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.
- வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை:
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.
இவர், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கு இன்று 11-வது முறையாக விசாரணைக்கு வந்தது.
விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா இன்று ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களது வக்கீல் ஆஜரானார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி பூரணஜெயா ஆனந்த் உத்தரவிட்டார்.
- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செயலாளர்கள் சிலர் தங்களுக்கு ‘சீட்’ கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.
சென்னை:
பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் அவருக்கு ராமநாதபுரம் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் தொகுதி பங்கீட்டில் முறையாக செயல்பட வில்லை என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை எழும்பூரில் உள்ள மண்டபத்தில் கூட்டினார். அதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஓ.பி.எஸ். முன்னிலையில் மோதிக் கொண்டனர். மாவட்ட செயலாளர்கள் சிலர் தங்களுக்கு 'சீட்' கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் ஒரு தொகுதி மட்டுமே பா.ஜ.க. தரப்பில் கொடுக்க முன் வந்ததால் மாவட்ட செயலாளர்கள் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, எம்.எம்.பாபு ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஓ.பி.எஸ்.முன்பாகவே இருவரும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓ.பி.எஸ். மற்றும் மாவட்ட செயலாளர் சதீஷ் ஆகியோர் அவர்களை விலக்கி சமாதானப்படுத்தினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.
- தமிழகத்திலே புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
திருச்சி:
திருச்சி சிறுகனூரில் திருச்சி மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.
பின்னர் திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் இது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள் சனாதன சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கிறது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.
தமிழகத்திலே புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். பா.ஜ.க. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கெஜ்ரிவாலை கைது செய்து கொண்டு போனார்கள். இந்துத்துவா அஜண்டா ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியருக்கு கொடுக்க வேண்டிய உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஜனநாயகத்திற்கு மதச்சார்பற்ற தன்மைக்கும் சமதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக ஒரு கூட்டம், இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது. இது பெரியார் பூமி.
இவ்வாறு வைகோ கூறினார்.
- தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
- தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டராக உள்ள சுரேஷ் பாபுவிடம் 2 தவணைகளாக ரூ.40 லட்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த 20-ந் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.
அந்த உத்தரவில் திண்டுக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அப்போது அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் அங்கித் திவாரியின் பெற்றோர் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வந்தனர். அதனுடன் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால நிபந்தனை ஜாமீன் நகலையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து விரைவில் அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.
- திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பி.வி. லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாமணி (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் திருடப்பட்டிருந்து.
இதே போன்று எஸ்.வி.புரம் ஆர்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்யாதேவி (29). இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டைக்கு சென்று விட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதே போன்று பூட்டியிருந்த கணேசபுரம் நாச்சம்மாள் (75) என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து ரூ.36 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.
இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரம் அங்கு சென்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.
- கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேர் பத்மநாதன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் கடந்த 9-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அதேபோல் காரைக்காலை சேர்ந்த செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மேட்டை சேர்ந்த கந்தசாமி, கிழிஞ்சல் மேட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி, தரங்கம்பாடி சேர்ந்த ஆனந்தாபால், புதுப்பேட்டையை சேர்ந்த கிஷோர், ராஜ்குமார், அன்புராஜ், மதன் நாகப்பட்டினத்தை சேர்ந்த செந்தில் உள்ளிட்ட 15 பேர், கடந்த 6-ந்தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.
கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன் 19 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். படகோட்டிகள் 3 பேருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்தும் அவர் தீர்ப்பு கூறினார். 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஜூன் மாதம் 7-ந்தேதி விசாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.






