என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
- பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.
இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.
இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர்.
இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தேவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட தேவபாலன் மீது கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு இருந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலையானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்துள்ளார். அந்த வீட்டிற்கு துரைபாண்டியின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். இந்நிலையில் தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழைய வழக்கு தொடர்பான முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக தேவபாலன் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் தகராறு காரணமாக தேவபாலன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
- பாசிச சக்திகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம் என்றார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான சுப்ரீம் கோர்ட்டு, சரியான நேரத்தில் தலையிட்டு அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த தசாப்தத்தில் இந்திய மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சி வறண்டு போவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முன் கூர்முனைகளை வைக்கும் தவறான சாகசங்களையும், பழமையான மரபுகளை வழங்குவதையும் கண்டனர்.
2024 தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்கி, அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்.
என பதிவிட்டுள்ளார்.
- 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார் கதிர் ஆனந்த்.
- வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது.
அதில் முக்கியமானவர் கதிர் ஆனந்த்... அமைச்சர் துரைமுருகன் மகனான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
கதிர் ஆனந்த் கட்சி பணி மற்றும் மக்கள் பணி இரண்டிலும் சிறப்பான வகையில் செயல்பட்டதாலேயே மீண்டும் ஒருமுறை கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
அதன்படி அவரின் முக்கிய செயல்பாடு என எடுத்துக் கொண்டால், எம்.பி. தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது, வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மக்களவையில் குரல் கொடுத்தது போன்றவை மிக முக்கியமானவையாகும். வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது என கூறினால் அது மிகையாகாது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் மக்களுக்கு தேவையான விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்திருக்கிறார்.
இதனாலேயே அவரை மீண்டும் வேட்பாளராக கட்சி தலைமை தேர்வு செய்ய வைத்துள்ளது.
- விமான நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் என தெரிவித்துள்ளனர்.
- போலீசார் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு ஆண்டரசன் சாலை-மூர்ஸ் சாலை சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.6.7 லட்சம் பணம் இருந்ததை பார்த்தனர். காரில் இருந்த வருமான வரித்துறை பணியாளர்கள் நாராயணசாமி, அட்சய் குமார் ஆகியோர் விமான நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வருமான வரித் துறை ஆய்வாளர் ஸ்ரீராமுலு இது தொடர்பாக முறைப்படி விளக்க கடிதம் கொடுத்து, பறிமுதல் செய்த 6.7 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகளிடமிருந்து பெற்றுச்சென்றார்.
போலீசார் நடத்திய விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி டெல்லிக்கு பணத்தை எடுத்துச் செல்ல முயன்ற தனியார் நிறுவன பணியாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் என தெரியவந்தது.
- அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
- தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த வருடம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜாமின் கிடைக்காத நிலையில் புழல் ஜெயில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப்பிரிவின் வழக்கில் விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும்?. தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை வாதத்தை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, வருகிற 28-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையினரால் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை கடந்த மாதம் 16-ம்தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குற்றச்சாட்டுப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியானது நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து பதவியை இழந்த பொன்முடி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியானது நடைபெற்றது. பொன்முடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சரானார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.
- சென்னையில் புலம் பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வீட்டு வாடகை உயர்கிறது.
- வீட்டு வாடகை உயர்த்துவதற்கு முக்கிய காரணமே சொத்து வரி கூட்டப்பட்டதுதான்.
சென்னை:
சென்னையின் மையப் பகுதிகளை நோக்கி மக்கள் நகர்ந்து வருவதால் வீடுகளுக்கு தேவை அதிகரிக்கிறது. இதனால் வீட்டு வாடகை உயர்ந்துள்ளது.
சென்னையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் தேவை தொடர்ந்து இருக்கும் நிலையில் மாதவரம், கொளத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் சிறந்த வேலைவாய்ப்புகள், வீட்டில் இருந்து வேலை செய்தல் மற்றும் தனி குடும்பங்களின் அதிகரிப்பு காரணமாக வீடுகளின் தேவை கூடியுள்ளது. இதனால் வீட்டு வாடகை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்தன. மேலும் வாடகை உயர்வுக்கு சொத்து வரி உயர்வு ஒரு முக்கிய காரணமாகும். அதே நேரத்தில் புறநகர் பகுதிகளில் இருந்து மக்கள் உள் நோக்கி மாறுவது மற்றொரு முக்கிய காரணமாகும்.
சென்னையில் புலம் பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வீட்டு வாடகை உயர்கிறது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் முதலீடுகளை வீடுகளில் செய்து வாடகைக்கு விடுகின்றனர். பழைய வீடுகளை மேம்படுத்தி அதிக வாடகைக்கு விடும் நிலை உள்ளது.
சென்னையில் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ. புரம் போன்ற பகுதிகளில் புதிய பிரீமியம் வீடுகளுக்கான வாடகை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உள்ளதாக சொத்து ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். மயிலாப்பூர், மந்தைவெளியின் பழைய பகுதிகளில் கட்டிடங்கள் பழமையானவை. அவற்றில் வசதிகள் குறைவாகவே உள்ளன. இங்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வாடகை உள்ளது. மற்ற பகுதிகளில் 2 மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வாடகை உள்ளது.
வீட்டு வாடகை உயர்த்துவதற்கு முக்கிய காரணமே சொத்து வரி கூட்டப்பட்டதுதான். கே.கே.நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பழைய சொத்துக்களை பெரிய அளவில் மறு சீரமைப்பு செய்வதால் உரிமையாளர்கள் தற்காலிகமாக வாடகை வீடுகளை தேடுகிறார்கள். இதுபற்றி ரியல் எஸ்டேட் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் கூறும் போது, மெட்ரோ ரெயில் இணைப்பு நிறைய வேலை வாய்ப்புள், சமூக உள் கட்டமைப்பு ஆகியவை மக்களை நகரத்தை விட்டு வெளியேற ஊக்குவிப் பதோடு அந்த பகுதிகளில் வாடகை தேவையும் அதிகரித்து வருகிறது என்றார்.
- பொன்முடிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
- அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என். ரவி எழுதியுள்ள கடிதத்தில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 13.3.2024 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, பொன்முடிக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாகவும், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தற்போது அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்கிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
- ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
- சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
திருப்பூர் பூண்டி ரிங்ரோடு பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் பொல்லி காளி பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.93,200ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தேர்தல் துணை மாநில வரி அலுவலர் பக்கிரி சாமி (பறக்கும் படை குழு) உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வீரபாண்டி, பிரியங்கா நகர் பகுதியை சேர்ந்த கே. சாமிநாதன் என்பவர் ரொக்கப்பணம் ரூ.57 ஆயிரத்து 980ஐ முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு வந்தது தெரிய வந்தது.
தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று ஒரே நாளில் ரூ.8 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பறக்கும் படையினரின் சோதனையில், சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-
என்னதான் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்த போதும் சில நேரங்களில் ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டு தான் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறாக ரொக்க பரிவர்த்தனை வழக்கமாக நடைபெறும் ஒன்று.ஆவணங்களை வைத்து கொண்டு இது போன்ற பரிவர்த்தனைகள் பெரும்பாலும் நடப்பதில்லை. தேர்தல் நேரத்தில் நடக்கும் பண பட்டுவாடாவை தடுக்க இதுவரை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
மாறாக சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் சிறிய வியாபாரிகளே இது போன்ற சோதனையில் சிக்குகின்றனர். பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெறுவதற்காக ஏற்படும் தேவையற்ற அலைச்சல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
- மறியலால், பெட்டமுகிலாளம் சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலளாம் மலைபகுதி, கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி உயரமான மலை கிராமம் என்பதால், பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் அப்பகுதியில் நிலங்களை விலைக்கு வாங்கி ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் கட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், தேன்கனிக்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களில், ஆயிரம் அடிவரை அழ்துளை கிணறு அமைத்தும், தண்ணீர் கிடைப்பதில்லை.
இந்நிலையில், பெட்டமுகிலாளம் மலை பகுதி, காவேரி வடக்கு உயிரின சரணாலய பகுதியாக உள்ளதால், மண் வளம், வன உயிரினங்களை பாதுகாக்க, ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பெட்டமுகிலாளம் மலை பகுதிக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதோடு, பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க முடியாததால், பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று அய்யூர்- பெட்ட முகிலாளம் சாலையில் உள்ள வனத்துறை விடுதி அருகே, அரசு டவுன் பஸ்சை மறித்து சாலை மறியல் செய்தனர். மேலும், அவர்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த மறியலால், பெட்டமுகிலாளம் சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.
- மத்திய சென்னை தொகுதியில் ப.பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் கு.நல்லதம்பி போட்டியிடுகின்றனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

மத்திய சென்னை தொகுதியில் ப.பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் கு.நல்லதம்பி, கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து, தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து தேமுதிக சார்பாக விருதுநகரில் களமிறங்கும் கேப்டன் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் இன்று வேட்பாளர் பட்டியல் அறிவித்த பிறகு தனது தந்தையிடம் ஆசி பெற்றார்.







