என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார்
    • வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணி கட்சியை பாஜக அழித்துவிடும்

    அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சி சார்பாக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஈரோடு தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈஸ்வரன் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அழித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கட்சியை பாஜக அழித்துவிடும். அதிமுக என்ற கட்சி இருக்காது.

    எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்றும், பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் பேசியுள்ளார்.

    • போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவக்கரை எனும் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமத்தில் ரேஷன் கடை, சமுதாய கூடம், மீன் ஏலக்கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வில்லை எனவும், கடலில் தூண்டில் வளைவு அமைத்து தர வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும், தேர்தலின் போது பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டும் வருவதாகவும், வெற்றிக்கு பின் கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் திடீரென கையில் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கடலில் இறங்கி கோஷங்கள் எழுப்பினர். கடலில் எழுந்துள்ள ராட்சத அலைகளையும் பொருட்படுத்தாது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என முழக்கமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் இளங்கோவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    கடலில் இறங்கிய போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    உடன்பாடு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி மீண்டும் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    • அமித்ஷா பங்கேற்கும் ரோடு-ஷோவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
    • அமித்ஷாவின் வருகை குமரியில் திருப்பு முனையாக அமையும் என்றும் பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    தக்கலை:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொன். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த், அ.திமு.க. சார்பில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி தொகுதியில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

    பிரதான கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி, ஏராளமான சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். இதனால் கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று மேற்கு மாவட்ட பகுதியில் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது கனமழை கொட்டி தீர்த்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரியஜெனிபர், பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மழையையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

    வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அடுத்தடுத்து குமரி மாவட்டத்துக்கு வருகை தந்தபடி இருக்கின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜி.கே.வாசன் ஆகியோர் பிரசாரம் செய்தார்கள்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளைமறுநாள் (5-ந்தேதி) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். அவர் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தக்கலையில் நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    அவர் அழகிய மண்டபத்தில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு-ஷோ செல்ல பாரதிய ஜனதா கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீசார் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். தக்கலை மேட்டுக்கடையில் இருந்து பழைய பஸ் நிலைய வரையிலான அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரோடு-ஷோ நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அரை கிலோ மீட்டர் தூரமே அமித்ஷா ரோடு-ஷோ சென்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    அமித்ஷா பங்கேற்கும் ரோடு-ஷோவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அமித்ஷாவின் வருகை குமரியில் திருப்பு முனையாக அமையும் என்றும் பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் 11-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் வருகை தர உள்ளார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியும் வருகை தர உள்ளதையடுத்து குமரி மாவட்ட தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

    • ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இரு சக்கர வாகனம், மினி லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் ஒரு குடோனில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

    இச்சோதனையில் 5400 லிட்டர் ஸ்பிரிட், போலி லேபில்கள் மற்றும் காலி மது பாட்டில்கள், மூடிகள், வெண்ணிலா சுவையூட்டி உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருச்செங்கோடு டி.எஸ்.பி இமயவரம்பன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் அடிப்படையில் வட்டூர் பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ், விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல், விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மற்றும் முரளி ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

    இதில் வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ் என்கிற மாதேஸ்வரன் தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அப்பகுதிகளில் விற்று வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானம் தயாரிக்க பயன்படும் ஸ்பிரிட் 50 லிட்டரை கேன்களில் கொண்டு வந்து போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபானம் தயாரித்த குடோனில் இருந்து ஆல்கஹால் மீட்டர், 60 ஆயிரம் பாட்டில்கள், 40 ஆயிரம் மூடிகள் போலி லேபிள்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இரு சக்கர வாகனம், மினி லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார்? எங்கெல்லாம் போலி மது பாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர்? என்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுல்தான் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பிடிபடுவார்கள் என தெரியவருகிறது.

    • சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினம் இன்று.
    • உயிர்நீத்த மாயாக்காள் உள்ளிட்ட 16 பேரின் தியாகமும், வீரமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினம் இன்று.

    ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி உயிர்நீத்த மாயாக்காள் உள்ளிட்ட 16 பேரின் தியாகமும், வீரமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி விளம்பர பலகையும் வைத்தனர்.
    • மீண்டும் ஒரு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள கொட்டக்குடி மலைகிராமத்தில் அதிக அளவு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் புகார் வைத்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது.

    ஆனால் இன்று வரை அந்த இடம் எங்கு உள்ளது என தெரியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து வட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    இதனால் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி முழுவதும் நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள மலை கிராமம் தேர்தல் புறக்கணிப்பு செய்யபோவதாக வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி விளம்பர பலகையும் வைத்தனர். தற்போது மீண்டும் ஒரு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.
    • திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

    திருச்சி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரை கடந்த ஆண்டு விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு முகாமில் இருந்த அவர்கள் 4 பேரும் தங்களை முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இதில் சாந்தன் இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. தற்போது அவர்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, நேற்று இரவு 3 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

    பின்பு அங்கிருந்து இன்று (புதன்கிழமை) காலை இலங்கை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 33 ஆண்டுக்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பிரதமர் மோடி பேசுவதை அங்குள்ள நாளேடுகள் கவலையோடு எச்சரித்திருக்கின்றன.
    • தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்வார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கையில் தமிழர்களுடைய உரிமைகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் கச்சத்தீவு பிரச்சனை குறித்து நரேந்திர மோடியும், நிர்மலா சீதாராமனும் பேசியது இலங்கை தமிழர்களிடையே பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.

    பிரதமருடைய பேச்சுகளால் இலங்கை உடனான நமது உறவுகள் பாதிக்கப்படுமேயானால் ஏற்கனவே சீனாவின் வலையில் சிக்கியிருக்கிற அந்நாடு, நமது புவிசார் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிடும் என்பதை மறந்து பிரதமர் மோடி பேசுவதை அங்குள்ள நாளேடுகள் கவலையோடு எச்சரித்திருக்கின்றன.

    ஒரு மாநிலத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை தாரை வார்க்கிற பிரதமர் மோடியை எவருமே மன்னிக்க மாட்டார்கள்.


    சீனாவோடு 13 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 2000 சதுர கி.மீ. நிலத்தை மீட்பதற்கு பிரதமர் மோடி இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    நிர்மலா சீதாராமன் தனது நிதியமைச்சகத்தை தொழிலதிபர்களுக்காகத் தான் பயன்படுத்தினார் என்பதை ஆதாரத்தோடு தெரிந்து கொள்ளலாம். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாத நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்ததை விட விவசாயிகள் விரோத நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும்?

    எனவே, பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், 20 ஆயிரம் புத்தகங்களை படித்த அறிவு ஜீவி என்று தன்னைத் தானே கூறிக் கொள்கிற அண்ணாமலை ஆகியோரின் ஆதாரமற்ற அவதூறான கோயபல்ஸ் பிரசாரத்தினால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். கடந்த மக்களவைத் தேர்தலை விட வருகிற தேர்தலில் மிகத் தெளிவாக தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடகா அரசும், அம்மாநில கட்சிகளும், அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன.
    • காவிரி தண்ணீரில் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது. இதில் அரசியலை புகுத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூட இருக்கிறது. இம்முறையாவது தமிழகத்திற்கு உரிய பங்களிப்பை அளிக்க கர்நாடகா அரசிற்கு உரிய உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையம் 28 கூட்டங்களை கூட்டியுள்ளது, ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழகத்திற்கு உரிய நீரை அளிக்க கர்நாடக அரசிற்கு ஆணையம் வலியுறுத்துவதும், அதை அம்மாநில அரசு மறுப்பதும் தொடர் கதையாக உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு மாநில மக்களின் தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்ப உத்தரவுகளை இடவேண்டும்.

    கர்நாடகா அரசும், அம்மாநில கட்சிகளும், அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன. இது சரியான செயலல்ல. காவிரி தண்ணீரில் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது. இதில் அரசியலை புகுத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    நாளை (4-ந்தேதி) நடைபெற இருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழக மக்களின் தேவையறிந்து, கடந்த காலத்தில் இரு மாநில அரசுகளும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய, உரிய தண்ணீரை பெற்றத்தர உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.
    • ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது.

    பாஜகவின் 'வாஷிங் மெஷின்' பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க.வின் 'வாஷிங் மெஷின்' பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு!

    பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

    10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

    "பேச நா இரண்டுடையாய் போற்றி" எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!

    மோடியின் குடும்பம் என்பது 'E.D – I.T. – C.B.I.'தான்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • சுட்டெரிக்கும் வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. இதனால் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது.
    • கோடை காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை இருக்கும் நிலையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் 11.75 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும்.

    ஆனால் இந்த ஏரிகளில் 8 டி.எம்.சி.க்கு குறைவாக தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 9.3 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சுட்டெரிக்கும் வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. இதனால் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது.

    கோடை காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை இருக்கும் நிலையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னைக்கு தினமும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. 2021-ம் ஆண்டு முதல் இந்த அளவிலேயே குடிநீர் தேவை இருந்து வந்தது.

    ஆனால் இந்த ஆண்டு குடிநீர் தேவை சற்று அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீர் பயன்பாடு உயர்ந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி 1073 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவையாக அதிகரித்துள்ளது. வீடுகளுக்கான குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் லாரிகளின் நடை (டிரிப்) கூடியுள்ளது. டயல் வாட்டர் என்ற திட்டத்தில் பணம் செலுத்தி குடிநீர் பெறுவது தற்போது அதிகரித்துள்ளது. இதுவரையில் 900 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 1020 லாரிகளாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் லாரி நடைகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாரிகள் மூலம் தெருக்களுக்கு இலவசமாக குடிநீர் வினியோகம் செய்தல், தொட்டியில் குடிநீர் வழங்குதல் போன்றவற்றிற்கு 3600 முதல் 3,800 லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. லாரிகள் மூலம் மட்டும் தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. ஆனாலும் கோடை காலத்தை சமாளிக்க போதுமான தண்ணீர் இருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    8 மாதத்திற்கான குடிநீர் தேவையை சமாளிக்கும் அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் சென்னைக்கு தேவைப்படுகிறது. அக்டோபர் மாதம் வரைக்கான குடிநீர் உள்ளது.

    அதனால் பயப்பட தேவையில்லை. மேலும் கடல்நீரை குடிநீராக்கும் மையங்களில் பெறப்படும் குடிநீர் சென்னைக்கு கை கொடுப்பதாக தெரிவித்தனர்.

    • டி சர்ட்டுகள் கரூர், மதுரைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
    • கண்டெய்னர் லாரியை வெண்ணந்தூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    ராசிபுரம்:

    சேலம் அருகே உள்ள மல்லூர் பகுதியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அ.தி.மு.க. கட்சி சின்னம் பதித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசர்ட்டுகள் இருப்பது தெரிய வந்தது. டி சர்ட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி கண்டெய்னர் லாரி டிரைவர் மூர்த்தி (48) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த டி சர்ட்டுகள் கரூர், மதுரைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட டி சர்ட்டுகளின் மதிப்பு ரூ.2லட்சத்து 36ஆயிரத்து 250 என தெரிய வந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை வெண்ணந்தூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    ×