என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் முகாமில் இருந்து வெளியே வந்த காட்சி.
திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன் உள்பட 3 பேர் இலங்கை சென்றனர்
- திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.
- திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.
திருச்சி:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரை கடந்த ஆண்டு விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு முகாமில் இருந்த அவர்கள் 4 பேரும் தங்களை முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இதில் சாந்தன் இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. தற்போது அவர்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, நேற்று இரவு 3 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.
பின்பு அங்கிருந்து இன்று (புதன்கிழமை) காலை இலங்கை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 33 ஆண்டுக்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






