search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinkning Water"

    • சுட்டெரிக்கும் வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. இதனால் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது.
    • கோடை காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை இருக்கும் நிலையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் 11.75 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும்.

    ஆனால் இந்த ஏரிகளில் 8 டி.எம்.சி.க்கு குறைவாக தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 9.3 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சுட்டெரிக்கும் வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. இதனால் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது.

    கோடை காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை இருக்கும் நிலையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னைக்கு தினமும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. 2021-ம் ஆண்டு முதல் இந்த அளவிலேயே குடிநீர் தேவை இருந்து வந்தது.

    ஆனால் இந்த ஆண்டு குடிநீர் தேவை சற்று அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீர் பயன்பாடு உயர்ந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி 1073 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவையாக அதிகரித்துள்ளது. வீடுகளுக்கான குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் லாரிகளின் நடை (டிரிப்) கூடியுள்ளது. டயல் வாட்டர் என்ற திட்டத்தில் பணம் செலுத்தி குடிநீர் பெறுவது தற்போது அதிகரித்துள்ளது. இதுவரையில் 900 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 1020 லாரிகளாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் லாரி நடைகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாரிகள் மூலம் தெருக்களுக்கு இலவசமாக குடிநீர் வினியோகம் செய்தல், தொட்டியில் குடிநீர் வழங்குதல் போன்றவற்றிற்கு 3600 முதல் 3,800 லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. லாரிகள் மூலம் மட்டும் தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. ஆனாலும் கோடை காலத்தை சமாளிக்க போதுமான தண்ணீர் இருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    8 மாதத்திற்கான குடிநீர் தேவையை சமாளிக்கும் அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் சென்னைக்கு தேவைப்படுகிறது. அக்டோபர் மாதம் வரைக்கான குடிநீர் உள்ளது.

    அதனால் பயப்பட தேவையில்லை. மேலும் கடல்நீரை குடிநீராக்கும் மையங்களில் பெறப்படும் குடிநீர் சென்னைக்கு கை கொடுப்பதாக தெரிவித்தனர்.

    ×