search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    500 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
    X

    500 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

    • போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவக்கரை எனும் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமத்தில் ரேஷன் கடை, சமுதாய கூடம், மீன் ஏலக்கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வில்லை எனவும், கடலில் தூண்டில் வளைவு அமைத்து தர வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும், தேர்தலின் போது பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டும் வருவதாகவும், வெற்றிக்கு பின் கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் திடீரென கையில் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கடலில் இறங்கி கோஷங்கள் எழுப்பினர். கடலில் எழுந்துள்ள ராட்சத அலைகளையும் பொருட்படுத்தாது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என முழக்கமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் இளங்கோவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    கடலில் இறங்கிய போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    உடன்பாடு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி மீண்டும் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    Next Story
    ×