என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை மாநகராட்சி பகுதிகளில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- மழைக்காலங்களில் கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில், உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி முகாமில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், குட்டிகள், பெரிய நாய்கள், ஆண் அல்லது பெண் நாய்கள் என அனைத்து விவரங்களையும் சேகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் துணை கமிஷனர் ஜெய சந்திரபானு ரெட்டி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவன இயக்குனர் கேர்லெட் அன்னே பெர்ணாண்டஸ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 ஆயிரத்து 100 நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றில் 7 ஆயிரத்து 265 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம் அதிகரித்ததால் கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் புகார்கள் குறைந்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கு அடுத்த 3 மாதத்துக்குள் உரிமம் பெற வேண்டும். ரேபிஸ் தவிர மற்ற தடுப்பூசிகளும் நாய்களுக்கு போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ப்பட்டு வருகிறது.
மூளையை தாக்கும் அமீபா நுண்ணுயிர் குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டாம். தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.
மழைக்காலங்களில் கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவவேண்டும். பாதுகாப்பற்ற உணவை உண்ணக்கூடாது. இவைகள் கொரோனா காலத்தின் வழிமுறைகள் அல்ல. தொற்று நோய் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற போலீசார், துணை ராணுவத்தினர், சிறப்பு காவல் படையினர் என 2 ஆயிரம் பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நா.புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை கடந்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி வெளியிட்டது. அதன்படி நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இடைத்தேர்தல் போட்டியில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆனாலும், ஆளும் கட்சியான தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே தான் மும்முனை போட்டி நிலவுகிறது.
தி.மு.க.வில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வை பொறுத்தவரை அதன் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தொகுதியிலேயே முகாமிட்டு தினசரி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.
அதேவேளை தமிழக சட்டசபையில் பிரதான எதிர்கட்சியாக உள்ள அ.தி.மு.க. இடைத்தேர்தலை புறக்கணித்தது. இதனால் அவர்களது வாக்கு வங்கியை பெறுவதில் பா.ம.க., நாம் தமிழர் கட்சியும் மல்லுகட்டுகிறார்கள்.
இதனால் இடைத்தேர்தல் களம் வழக்கத்தை விட மாறுபட்டு, தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தேர்தல் விதிமுறைப்படி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்படி நேற்று மாலை 6 மணியுடன் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது.
நேற்றைய இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொகுதிக்கு உட்பட்ட தும்பூர், நேமூரில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். மாலையில் ராதாபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், விக்கிரவாண்டி பேரூராட்சியில் தனது பிரசாரத்தை முடித்தார்.
அதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சூரப்பட்டு, வாழப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு மாலையில் கெடாரில் முடித்துக்கொண்டார்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்களும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வெவ்வேறு இடங்களில் இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்தனர். இதையடுத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூர்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க அங்கிருந்து வெளியேறினார்கள்.
பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை(புதன்கிழமை) வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக வாக்குச்சாவடிகள் மும்முரமாக தயார் படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 பேர் ஆண்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 29 பேர் ஆவார்கள்.
இந்த தேர்தலில் 552 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகள் 276-ம், வி.வி.பேட் கருவிகள் 276-ம் ஆக மொத்தம் 1,104 எண்ணிக்கையிலான எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
தேர்தலுக்கு இன்று ஒரு நாளே இருப்பதால் பணப்பட்டுவாடாவை முற்றிலும் தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற போலீசார், துணை ராணுவத்தினர், சிறப்பு காவல் படையினர் என 2 ஆயிரம் பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. பின்னர் வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி (சனிக்கிழமை) பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- குற்றவியல் சட்டம் என்பது அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் வரக்கூடிய ஒன்று.
- அனைவரிடமும் ஒருநபர் ஆணையம் ஆலோசனை பெற வேண்டும்.
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வரவேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களில் மாநிலத் திருத்தங்களை பரிந்துரைக்க ஒரு குழுவை நியமிப்பதற்கான தமிழக அரசின் முடிவை நான் வரவேற்கிறேன்.
குற்றவியல் சட்டம் என்பது அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் வரக்கூடிய ஒன்று. இதில் திருத்தங்கள் செய்ய மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
நீதிபதி (ஓய்வு) திரு கே.சத்தியநாராயணன் ஒரு நபர் குழுவாக நியமிக்கப்பட்டதையும் வரவேற்கிறேன்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை, சட்ட ஆசிரியர்கள், வல்லுநர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரிடமும் ஒருநபர் ஆணையம் ஆலோசனை பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
I welcome the decision of the Government of Tamil Nadu to appoint a Committee to suggest State amendments to the three criminal laws that came into force on 1 July 2024
— P. Chidambaram (@PChidambaram_IN) July 9, 2024
Criminal Law is a subject in the Concurrent List of the Constitution and the State Legislature is competent to…
- லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்திருந்தது.
- மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.
9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கரூர், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் 11-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இணைந்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
- கால்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

கால்பந்து போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இணைந்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
கால்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி விஜய் வசந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
- JEE தேர்வில் பழங்குடியின மாணவிகள் ரோஹிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை.
- திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
2024 JEE தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோஹிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
JEE தேர்வில் மாணவி ரோஹிணி 73.8% மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.
திருச்சி NIT-ல் மாணவி ரோஹிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
- தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இது குறித்து புகார் தெரிவிக்க உள்ளோம்.
- வேங்கை வயல் உள்ளிட்ட 17 சம்பவங்கள் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.
ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இதுபோல் நடந்திருக்க கூடாது. சென்னையில் ஒரு அரசியல் தலைவர் அவரது சொந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்த உள்ளோம். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சிபிஐ விசாரணை கோர உள்ளோம்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இது குறித்து புகார் தெரிவிக்க உள்ளோம்.
சித்தாந்தத்தில் நேர் எதிராக இருந்தாலும் இந்த படுகொலையை பாஜக ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னை கூலிப்படைகளின் தலைநகரமாக மாறி உள்ளது.
வேங்கை வயல் உள்ளிட்ட 17 சம்பவங்கள் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.
முதலமைச்சரின் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு கொலை நடந்த உடன் ஒரு பெரிய குற்றவியல் வழக்கறிஞரை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை சமாதானம் செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன.
காவல் துறையின் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும். என்கவுன்ட்டர் போன்ற நடவடிக்கைகள் சரி வராது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
- வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம..க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பிரசாரம் செய்தார். மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சவுமியா அன்புமணி மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதா கூட்டணி தலைவர்களும் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல இடங்களில் வாக்குகளை சேகரித்தார்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூர், காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.
பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று மாலை அய்யூர்அகரம், தென்னமாதேவி, திருவாமாத்தூர், சோழகனூர், கொசப்பாளையம், சங்கீதமங்கலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
இன்று தும்பூர், நேமூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாலை விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் பிரசாரத்தை முடித்தார்.
இதனிடையே வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.
தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளை போலீசார் துணையுடன் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.
- 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம்.
- இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை.
விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை.
நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம்.
நான் தமிழன் என்பது தான், எனது அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர். அது தவறு.
ஒரு மொழியை பேசும், குழுக்கள் தான் இனம். நான் போதிக்கும்போது உங்களுக்கு புரியாது. பாதிக்கும்போது உங்களுக்கு புரியும்.
இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.
- மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும்.
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை "பாரதிய நியாய சன்ஹிதா, 2023", "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023" மற்றும் "பாரதிய சாக்ஷியா சட்டம், 2023" என மாற்றப்பட்டு, 1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
பாராளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல், மத்திய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது.
நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெளிவாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது 17-6-2024 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துக்களைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதலமைச்சர் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (8-7-2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சத்யநாராயணன் அவர்கள் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்கள்.
இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
- முன்னாள் கிராம உதவியாளர் மணி என்பவர் பிறழ் சாட்சியமானதால் பரபரப்பு.
- அதிகாரிகளின் வற்புறுத்தல் பேரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன் என பிறழ் சாட்சியம்.
கடந்த 2006-11 காலகட்டத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடிபதவி வகித்தபோது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடிஅளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரன், வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் ஆகியுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு வந்த முன்னாள் கிராம உதவியாளர் மணி என்பவர் பிறழ் சாட்சியமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று அரசு அதிகாரிகளின் அறிவுரைப்படி சோதனை நடத்த சென்றதாக முன்னாள் கிாரம உதவியாளர் மணி கூறியுள்ளார்.
சோதனை முடித்த பின்னர் அதிகாரிகளின் வற்புறுத்தல் பேரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன், மற்ற விவரங்கள் ஏதும் தனக்கு தெரியாது என பிறழ் சாட்சியமாகியுள்ளார்.
இதுவரை 34 பேர் அரசு தரப்பு சாட்சியமாக சாட்சியம் அளித்துள்ள நிலையில், 27 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
- கிராமத்தில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
- இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனும், அவரது நண்பரும், புகைப்படம்எடுப்பதற்காக ஒரு கிராமத்திற்கு செல்வார்கள். அப்போது அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுகளிலும் திரும்பி போ என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.
இதனை பார்க்கும் கதாநாயகனின் நண்பர், அங்குள்ள ஊர் பெரியவரிடம், பெரியவரே ஏன் வீட்டின் கதவுகளில் திரும்பி போ என்று எழுதி வைத்துள்ளீர்கள் என கேட்பார்.
அதற்கு, எங்கள் ஊரில் இரவு நேரங்களில் ரத்தக்காட்டேரி ஒன்று சுற்றி வருவதாகவும், அது வீட்டின் கதவை வந்து தட்டுவதாகவும், அப்படி அது தட்டாமல் இருப்பதற்காக இதனை எழுதி இருப்பதாகவும், அதனை பார்க்கும் அவை திரும்பி போய்விடும் எனவும் ஊர் பெரியவர் தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
இந்த காட்சியை நாம் அனைவரும் பார்த்து ரசித்து வாய் விட்டு சிரித்து மகிழ்ந்திருப்போம். ஆனால் இதுபோன்று ஒரு சம்பவம் உண்மையிலேயே ஒரு கிராமத்தில் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் தங்கள் கிராமத்தில் இரவு நேரங்களில் குட்டிச்சாத்தான்கள் சுற்றி திரிவதாக தெரிவிக்கின்றனர் அங்கு வசித்து வரக்கூடிய மக்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பாளையம் காலனி தான் குட்டிச்சாத்தான்கள் நடமாடுவதாகவும், கற்கள் வீசப்படுவதாகவும் கூறப்படும் மர்ம கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கூலித்தொழில், விவசாயம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தானாகவே வீடுகளின் மீது மழை பெய்வது போன்று கற்கள் பொழிந்து கொண்டே இருக்கின்றனவாம்.
இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து கற்கள் விழுந்து கொண்டே இருப்பதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். அத்துடன் இது குட்டிச்சாத்தான்களின் வேலை தான் என்றும் அடித்து கூறுகிறார்கள்.
தங்கள் கிராமத்தில் குட்டிசாத்தான்கள் நடமாட்டம் இருப்பதாகவும், இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரியும் அவை தான், வீடுகளின் மீது கற்களை எறிவதாகவும் நம்பும் மக்கள், அதற்கான ஆதாரமாக கற்களையும் சேமித்து வைத்துள்ளனர்.
வீட்டின் கூரை மீது, மக்கள் இளைப்பாற அமரக்கூடிய மரத்தின் மீது இருந்தும், தெருவில் நடந்து செல்லும் போதும் தானாகவே கற்கள் வந்து விழுகின்றனவாம்.

இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்தால் தொடர்ந்து கற்கள் விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் குழந்தைகள் மிகவும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். பகல் நேரங்களிலேயே வெளியில் தனியாக செல்வதற்கு குழந்தைகள் அச்சப்படுகிறார்கள்.
இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும், பகலில் தங்கள் வீடுகளிலும், இரவு நேரத்தில் தங்கள் ஊரில் உள்ள கருப்பராயன் கோவிலிலும் தங்குகின்றனர். மாலை 6 மணியானதும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, கருப்பராயன் கோவிலுக்கு வந்து விடுகின்றனர்.
அங்கு வைத்து அனைவரும் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு, அங்கேயே தங்கள் நேரத்தை கழிக்கின்றனர். அப்போதும், இன்று என்ன நடக்க இருக்கிறதோ, குட்டி சாத்தான் நம் வீட்டை என்ன பாடு படுத்துகிறதோ என ஒவ்வொரு நாளும் அச்சத்தில் அதனை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த பயத்தில் உள்ளனர். அவர்களும் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தூங்க வைப்பதற்காக பெற்றோர்கள் இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து வருகின்றனர். இப்படி இரவு முழுவதும் கண்விழித்து விட்டு, மறுநாள் காலையில் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் அந்த கிராம மக்கள்.
உண்மையிலேயே இது குட்டிச்சாத்தான் தானா? அல்லது குட்டிச்சாத்தான் வேடத்தில் சுற்றும் குள்ளநரிகளா? என்பதிலும் கிராமத்தினரிடையே ஒருவித குழப்பமாகவே இருக்கிறது. கற்கள் வீசப்படுவதற்கு யார் காரணம் என்பதை அறிய அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இரவு நேரங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் அவர்களிடம் பிடிபட்டது என்னவோ கற்கள் தானே தவிர. வேறு எதுவும் இல்லை. இதன் பின்னரே குட்டிச்சாத்தான் தான் நடமாடுவதாக மக்கள் நம்ப தொடங்கி, குடும்பத்துடன் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். தங்கள் நாள் பொழுது முழுவதையும் கோவிலிலேயே கழித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் வீடுகளின் மீது கற்கள் விழுந்து வருகின்றன. இது குட்டிச்சாத்தான்களின் வேலை தான். இரவு நேரங்களில் அவை கற்களை தூக்கி வீடுகளின் மீது போட்டு வருகின்றன.கடந்த 4 வருடங்களுக்கு முன்பும் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்தது. ஒரு வீட்டின் மீது தினமும் கற்கள் விழவே, அவர்கள், தங்கள் நிலம், தோட்டம் உள்ளிட்டவற்றை விட்டு விட்டு இங்கிருந்து காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடியேறிவிட்டனர்.
தற்போது மீண்டும் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள் மீது கற்கள் மழை போல பொழிந்து வருகிறது. இதனால் நாங்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், நான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தேன். அப்போது திடீரென மேலே இருந்து ஒரு கல் என் காலில் விழுந்தது. சுற்றி பார்த்தால் யாரும் இல்லை. இதனால் எங்களுக்கு பயம் ஏற்பட்டு, அங்கிருந்து ஓடினோம்.
நாங்கள் சென்ற பின்பும், கற்கள் விழுந்து கொண்டே இருந்தன. அதில் சில கற்கள் வீட்டின் கூரைகள் மீது விழுந்து சிக்கி கொண்டன. அப்படி இருக்கும் போது இதனை நம்பாமல் இருக்க முடியுமா என ஒருவித பயத்துடனேயே தெரிவித்தார்.
ஆனால் கிராமத்தில் உள்ள ஒரு சிலர் இது குட்டிச்சாத்தான் இல்லை. குட்டிச்சாத்தான் வேடத்தில் மர்மநபர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் இது தொடர்பாக அந்த கிராமத்திற்கு சென்று தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
குட்டிச்சாத்தான்கள் நடமாடுவதாக ஒரு கிராமமே அச்சத்தில் உறைந்து போய், வீட்டை விட்டு வெளியேறி இரவு நேரங்களில் கோவிலில் தஞ்சம் அடைந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






