என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
    • 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தான் மோதி உள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோற்றது. கோவை கிங்சிடம் 13 ரன்கள் வித்தியாசத்திலும், நெல்லை அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றியை பறி கொடுத்தது.

    முன்னாள் சாம்பியனான அந்த அணி வெற்றி கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன்பால், சந்தோஷ்குமார், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், சதீஷ், பெராரியோ ஆகியோரும் பந்து வீச்சில் பெரியசாமி, ரஹில்ஷா, அஸ்வின் கிறஸ்ட் ஆகியோரும் உள்ளனர்.

    விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் தோற்றது. அந்த அணியும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.

    அந்த அணியில் துஷார் ரஹேஜா, சாத்வீக், அனிரூத், முகமது அலி, கணேஷ் அஜித்ராம், புவனேஷ்வரன், டி.நடராஜன், மதிவாணன், கருப்பசாமி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    • கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
    • 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையத்தில் 2 உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இவற்றின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தொடர்ந்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளால் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2-வது அணு உலையில் கடந்த மே மாதம் 13-ந்தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

    தொடக்கத்தில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இன்று காலை திடீர் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சுமார் 57 நாட்களுக்கு பிறகு நேற்று மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பழுதை சரி செய்யும் முயற்சியில் அணுமின் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அணுமின்நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • மிக அதிக அளவில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகஅளவில் உயர்ந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் கால்வாய் பாசன சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க சாத்தியப்படும்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாய தொழிலாளர்களும் வேலை இழந்து காணப்படுகின்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு மரபுப்படி ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க இயலவில்லை. மேட்டூர் அணையின் வரலாற்றில் 61-வது ஆண்டாக குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விட இயலாத ஆண்டாக 2024 அமைந்துள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு ஆகிய கூட்டங்கள் நடைபெறுகின்றன, தமிழகத்தின் பாதிப்புகள் குறித்து எடுத்துச் சொல்லியும் விதிகளை எடுத்துக் கூறியும் கர்நாடக அரசு செவிசாய்க்க மறுத்து தமிழகத்தின் உரிய உரிமை தண்ணீரை விடுவிப்பதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.

    இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை பயிரிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8,951 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 214 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22,805 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93,750 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு இலக்குகளை மீறி 5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாத சூழ்நிலையில் ஆழ்துளை கிணற்று தண்ணீரை கொண்டு இந்த மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற நிலங்கள் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் தரிசாக போடப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதைப்போலவே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமான அளவிற்கு உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டினால் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சாத்தியமாகும். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இம்மாத இறுதிக்குள் நடவு செய்யப்பட வேண்டும் . இனி நாற்று விட்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். தற்போதுள்ள நிலையில் மிக அதிக அளவில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகஅளவில் உயர்ந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் கால்வாய் பாசன சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க சாத்தியப்படும்.

    இந்த சூழ்நிலையில் நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்வரத்து 2,366கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 40.29 அடியாக உள்ளது. நீர் இருப்பு 12.340டி எம்.சியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்றே அதிகரித்து 3,341 கன அடியாக உள்ளது. வழக்கம்போல குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாய தொழிலாளர்களும் வேலை இழந்து காணப்படுகின்றனர்.

    விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு கர்நாடக அணைகள் நிரம்பியுள்ள சூழலில் வற்புறுத்தி தண்ணீர் பெற்று தர நடவடிக்கைகள் எடுத்து சம்பா சாகுபடியை உறுதிப்படுத்தி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    • போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீஸ்காரர் ஜெயராஜ் ஆகியோர் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணி சென்றனர்.

    திட்டுமலை காளி கோவில் சென்றபோது அங்கு நின்றிருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை அய்யனார் கோவில் செல்லும் பாதையில் ஓட்டி சென்றனர்.

    தொடர்ந்து அவர்களை விரட்டி சென்றபோது வாகனம் செல்ல பாதை இல்லாததால் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அந்த வாகனத்தை கைப்பற்றிய போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் பாதரக்குடி அய்ய னார் கோவில் செல்லும் மண் ரோட்டில் தண்ணீர் வழித்தடத்தில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ எடையுள்ள, 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

    பின்னர் ஏற்கனவே சந்தேகத்திற்கிடமாக நின்றி ருந்த வாகனம் குறித்து மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருச்சி மாநகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று இரவு திருச்சி சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் சோதனை நடந்தது.

    இதில ஆந்திரா மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த ஆந்திரா மாநிலம் மக்காவரப்பள்ளம் ஜி நகரம் துர்கா ராவ், அல்லூர் அண்ணாவாடு காலனி சித்தம்பள்ளி சண்டிபாபு, கிழக்கு கோதாவரி வெக்கவ ரம் அபிலேஷ் வர்மா, கிருஷ்ணலங்கா விஜயவாடா சுபாஷ், விசாகப்பட்டினம் பக்கனபாலம் வித்யாசாகர் ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமி ருந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனம் உள்பட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றி குன்றக்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பிடிபட்டவர்களில் வித்யாசாகர் என்பவரின் தந்தை ஆந்திர மாநில காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ஆனி திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் காலை, மாலை வேளையில் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று முன்தினம் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

    இரவு 11 மணிக்கு கீழவீதியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி, சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    இதையடுத்து அங்கிருந்த திரளான பக்தர்கள் சப்பரத்தை 4 வீதிகள் வழியாகவும் இழுத்து சென்றனர். தெருவடைச்சான் சப்பரம் 4 வீதிகள் வழியாக வீதிஉலா சென்று நேற்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் கீழவீதியை அடைந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 11-ந்தேதி தேரோட்டமும், 12-ந்தேதி மதியம் 2 மணிக்கு ஆனி திருமஞ்சன மகா தரிசனமும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தலைமைக் கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
    • பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் 267-வது குருபூஜையை முன்னிட்டு வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு, சென்னை, எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தலைமைக் கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி,

    இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • சொக்கம்பட்டி ராஜா, ஜெகன் உள்ளிட்டவர்கள் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    தென்காசி:

    அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்க இருப்பதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் சசிகலா வருகிற 17-ந்தேதி தனது சுற்றுப்பயணத்தை தென்காசி மாவட்டத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக 16-ந் தேதி இரவு 9 மணியளவில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் சசிகலா, மறுநாள் 17-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து உரையாட உள்ளார். அதனை தொடர்ந்து அவர் மற்ற மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தென்காசிக்கு 16-ந்தேதி வருகை தரும் சசிகலாவிற்கு இலத்தூர் விலக்கு பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர் 21-ந்தேதி வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை சந்திக்க உள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், அதற்கு தேவையான அனுமதியை பெறுவதற்காகவும் வக்கீல் பூசத்துரை தலைமையில், குத்துக்கல்வலசை செல்வம், சின்ன ஆணைக்குட்டி பாண்டியன், செந்தூர் பாண்டியன், ரமேஷ் பாண்டியன், சுந்தரராஜன், பண்பொழி பேரூர் உறுப்பினர் சுப்பையா கண்ணு, சுரேஷ், சொக்கம்பட்டி ராஜா, ஜெகன் உள்ளிட்டவர்கள் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தேவையான பாதுகாப்புகள் அளிக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜேஇஇ தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
    • தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது.

    திருச்சி:

    2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

    ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் ரோகிணி கூறுகையில்,

    பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் பழங்குடியினர் அரசு பள்ளியில் படித்தேன். ஜேஇஇ (JEE) தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

    திருச்சி என்ஐடியில் (NIT) சீட் பெற்று, கெமிக்கல் பாடத்தை தேர்வு செய்துள்ளேன். தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது. எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி. எனது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஊழியர்களால் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதற்கட்டமாக டிசம்பரில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • 2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரெயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில்களில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் பயன்படுத்துவற்கான செயலியை உருவாக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    செயலியை உருவாக்க Moving Tech Innovation Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.

    முதற்கட்டமாக டிசம்பரில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரெயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பெங்களூருவில் மட்டும் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,

    அரசியல்வாதிகள் படுகொலை, பாலியல் பலாத்காரம், கள்ளச்சாராய மரணங்கள், பட்டாசு ஆலையில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என பல அச்சுறுத்தல்களுக்கு இடையே, கேரளாவில் அமீபா தொற்றுநோய் பரவி வருவதும், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

    அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா என்னும் தொற்றுநோய் காரணமாக நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிக்கப்பட்டால் 97 விழுக்காடு உயிரிழப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

    தலைவலி, காய்ச்சல், வாந்தி போன்றவை அமீபாவின் ஆரம்ப அறிகுறிகள் என்றும், பராமரிக்கப்படாத நீர்நிலைகள், ஏரி, ஆறு, நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர் கோடைக் காலத்தில் நீண்ட நாட்கள் அதிக வெப்ப நிலையில் இருக்கும்போது, அதில் குளிப்பவர்களுக்கு அமீபா என்னும் உயிரி மூலம் தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தத் தொற்று நோய், சுகாதாரமற்ற நீர் நிலைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக உடலுக்குச் சென்று பாதிப்பினை ஏற்படுத்துவதால், தமிழ்நாட்டில் உள்ள நீச்சல் குளங்களை சுத்தம் செய்யவும், நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும்போது மூக்கு கிளிப் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தவும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தீவிரக் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இதேபோன்று, அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பெங்களூருவில் மட்டும் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெங்குக் காய்ச்சல் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை உபயமாக வழங்குவதாக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டியிருந்தார்.
    • கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அற்புதமணி, பேஷ்கார் ரமேஷ், பணியாளர் கிட்டு சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த போஸ் என்ற பக்தர் தற்போது மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். அரசு ஒப்பந்ததாரரான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை உபயமாக வழங்குவதாக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டியிருந்தார்.

    இதனை நிறைவேற்றுவதற்காக நேற்று போஸ் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள், ரூ.70 லட்சம் மதிப்பிலான 978 கிராம் எடையுள்ள தங்க காசு மாலையை கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் வழங்கினர்.

    கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அற்புதமணி, பேஷ்கார் ரமேஷ், பணியாளர் கிட்டு சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்?
    • திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர்.

    சென்னை :

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை அன்று படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

    கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

    இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:

    1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

    2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல்துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?

    3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக்கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

    4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.

    5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?

    6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. 'அவரே ஒரு ரவுடி', 'ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்', 'கட்டப்பஞ்சாயத்து செய்பவர்', 'பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்' என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?

    7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், ஒடுக்குதலுக்கு எதிராக அண்ணன் ஆம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

    முடிவாக, சிறுவயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை)வழிநடத்தும். ஜெய்பீம்!

    ×