என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளும் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே பழையவலம் கிராமத்தில் சிவன்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமாக பெரியகுளம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்தக்குளத்திற்கு பொதுமக்கள் சென்றனர்.
அப்போது அங்கு மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் இது குறித்து வைப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் சிவன் கோவில் பெரிய குளத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கு கிடந்த அடையாளம் தெரியாத மனித மண்டை ஓடு மட்டும் எலும்பு துண்டுகளை சேகரித்து பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக பழையவலம் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளும் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- யாகசாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி கிராமம், பூர்த்திகோவில் திருமுக்தீஸ்வரர் கோவிலுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி அன்று குடமுழுக்கு நடை பெறுகிறது.
இதற்கான குடமுழுக்கு பணிகள் மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் குடமுழுக்கு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த 07.5.2021 முதல் 8.7.2024 வரை தமிழ்நாட்டில் 1,844 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.5,097 கோடி மதிப்பீட்டிலான 20,166 திருப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 7,648 திருப்பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
- பணிக்கு வராத ஊழியர்களுக்கு இன்று ஒருநாள் சம்பளம் கிடையாது.
சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்திட வேண்டும். நீண்ட காலமாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணப் பயன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மின் வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன் காரணமாக மின்வாரிய பணிகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. வேலைக்கு வந்திருந்த மற்ற ஊழியர்களை வைத்து பணிகள் நடைபெற்றது.
மேலும் பணிக்கு வராத ஊழியர்களுக்கு இன்று ஒருநாள் சம்பளம் கிடையாது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முன்னாள் அமைச்சர்களிடம் வெற்றி வியூகங்களை எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.
- பிரிந்த தலைவர்களை கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை என தகவல் வெளியாகவில்லை.
சேலம்:
சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 2026 தேர்தலில் பாஜக சவால்களை எப்படி சமாளிப்பது, அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தன்னை சந்தித்த முன்னாள் அமைச்சர்களிடம் வெற்றி வியூகங்களை எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார். மேலும் பிரிந்த தலைவர்களை கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை என தகவல் வெளியாகவில்லை.
மூத்த நிர்வாகிகள், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
- அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
- பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்கள் மற்றும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது நடந்த சம்பவம் பற்றி பொற்கொடி விரிவாக எடுத்துக் கூறினார்.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பொற்கொடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
இதற்காக இன்று காலை தலைமை செயலகத்தில் இருந்து அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
#WATCH | Chennai: Tamil Nadu CM MK Stalin visited the house of late BSP State President K Armstrong and met his family.
— ANI (@ANI) July 9, 2024
Source: DIPR pic.twitter.com/8EgCnE2lRV
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
- விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுபவர் சுந்தரவடிவேல். இவரது கார் நேற்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது. காரில் போலீஸ் சூப்பிரண்டின் மனைவி மற்றும் உறவினர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. காரை தமிழ்குடிமகன் என்ற போலீஸ்காரர் ஓட்டி வந்தார்.
கார் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் போலீஸ் சூப்பிரண்டின் கார் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை தடுத்து அணைத்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அல்தாப் (21), அவரது நண்பர் முகமது ஜூனைத் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அல்தாப் நேற்று மரணம் அடைந்தார்.
முகமது ஜூனைத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் தமிழ்குடிமகனிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
பலியான அல்தாப் தனியார் காட்டேஜில் ஊழியராக பணியாற்றி வந்தார். முகமது ஜூனைத் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அன்சார் எனபவரின் மகன் ஆவார்.
காந்தல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரும், வாலிபரும் இறந்ததால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கி உள்ளது. அவர்களது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தனர்.
- இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உயர் பதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர்.
- தவ்பீக் மற்றும் அப்துல் தமீம் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனையிட சென்றனர்.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2019-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி தவ்பீக், அப்துல் தமீம் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உயர் பதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த சோதனை குழுவினர் சிறையில் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். அதன்படி தவ்பீக் மற்றும் அப்துல் தமீம் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனையிட சென்றனர். அப்போது அவர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வார்டன்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அந்த அறை முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பேரையும் வேறு சிறைக்கு மாற்ற சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர்தயாள் உத்தரவிட்டார். அதன்படி தவ்பீக் கடலூர் சிறைக்கும், அப்துல் தமீம் கோவை மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.
- கடந்த 5-ந்தேதி ரூட் தல விவகாரத்தில் பேருந்து மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
- போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியிலிருந்து பேருந்து ஏறும் மாணவர்களில் யாராவது ஒருவர் தன்னை உயர்வாகக் காட்டிக் கொண்டு, மற்றவர்களை அடக்கியாள நினைத்தால் அவர் 'ரூட் தல' என்று கூறப்படுகிறார். குறிப்பிட்ட அந்த வழியில்ரூட்டு தல யார் என்பதில் தான் மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது.
இந்த ரூட் தல விவகாரத்தில் மாணவர்கள் அவ்வப்போது இருதரப்பாக மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்தமோதலை தடுக்க போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ரூட் தல விவகாரத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5-ந்தேதி ரூட் தல விவகாரத்தில் பேருந்து மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
பிராட்வே- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் உள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
- கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது.
- யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலையங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ராமாபுரம் பிரிவு பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லு (50) என்பவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் மல்லு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்ற போது கரும்பு பயிர்களுக்கு இடையே 4 காட்டு யானைகள் முகாமிட்டபடி கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் நடமாடுவதை கண்டு உடனடியாக யானைகளை விரட்ட முயற்சித்தனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியேறாமல் போக்கு காட்டி வந்தது.
இதையடுத்து யானைகள் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்க வனத்துறையின் டிரோன் கேமரா குழுவினர் வர வழைக்கப்பட்டனர். டிரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதில் கரும்புத் தோட்டத்தில் முகாமிட்ட 4 யானைகளும் ஆண் யானைகள் என தெரிய வந்தது.
யானைகள் அப்பகுதியில் முகாமிட்டதை அறிந்த பொதுமக்கள் யானைகளை வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டமாக திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தான் கரும்பு தோட்டத்தில் முகாமிட்டது தெரியவந்தது.
தொடர்ந்து இரவு வரை டிரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இரவில் அந்த 4 யானைகளும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றது.
இதன் பிறகு வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி மல்லு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 99.00-க்கும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து பார் வெள்ளி ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்று தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,770-க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ. 54,160-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 99.00-க்கும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து பார் வெள்ளி ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
- விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு காளையார்குறிச்சி, சிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் குடோன் அமைந்துள்ள அறையில் வெடி மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.
விபத்து ஏற்பட்டதும் அங்கு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் பட்டாசு ஆலையை விட்டு பதறியடித்து கொண்டு வெளியில் ஓடினர். மேலும் அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் எம்.புதுப் பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சிவகாசி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டன. அத்துடன் பலியான மாரியப்பன், முத்துமுருகன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சாத்தூர் பகுதியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
- சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள காட்டுவளைவு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 31), இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மணி ஓமலூரில் இருந்து மேச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






