என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இத்தகைய விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது.
    • பல்வேறு அளவுகளில் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன் எக்ஸ் தளத்தில் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் கால வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    தமிழர்கள் பொதுவாக ஓய்வு நேரங்களில் தங்களது பொழுதுப்போக்கிற்காக உடல் உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம். மருங்கூரில் வாழ்விடப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் கடந்த வாரம் இராசராசன் காலச் செம்புக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    தற்போது, பல்வேறு அளவுகளில் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெண்களும் சிறுவர்களும் இந்த வட்டச்சில்லுகளைப் பயன்படுத்தி விளையாடியுள்ளனர்.

    இத்தகைய விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது. வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளதன் வாயிலாகத் தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் மக்கள் கூடி வாழ்ந்த ஒரு வாழ்விடப்பகுதிதான் என்பது உறுதியாகின்றது.

    • வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
    • தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கிளாம்பாக்கம் பஸ் நிலையம் 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி திறக்கப்பட்டது.

    பஸ் நிலையம் அமைக்கும் போது, பயணிகள் சுலபமாக அணுக ஏதுவாக விமான நிலையம்-கிளாம்பாக்கம், வேளச்சேரி-தாம்பரம் மெட்ரோ ரெயில் இணைப்பு ஏற்படுத்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வரை, கோயம்பேட்டில் இருந்து முன்பு போல அரசு மற்றும் ஆம்னி பஸ்களை இயக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு, விமான நிலையம்-கிளாம்பாக்கம், வேளச்சேரி-தாம்பரம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வரையும், புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வான்வெளி நடைபாதை மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பெருங்களத்தூர் மார்க்கம் செல்லும் வாகனங்களுக்கு யு வளைவு பாலம் அமைக்கும் வரையில், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கவும், இலகு மற்றும் கனரக வணிக வாகனங்களை சென்னை அவுட்டர் ரிங் ரோடு வழியாக இயக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து, தனி நீதிபதி முன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

    • பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
    • பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார்குறிச்சி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன்.

    தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரவுடி ஒழிப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
    • சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரவுடி ஒழிப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.

    தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக கணக்கிட்டு போலீசார் ஏற்கனவே தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒழித்துக்கட்ட புதிய போலீஸ் கமிஷனர் அருண் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

    அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள சரித்திர பதிவேடுகளை தூசு தட்டுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களில் யார்-யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது பற்றிய விவரங்களை புள்ளி விவரத்தோடு பட்டியல் போட்டு வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏ.பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவுகளாக ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. தாதாக்கள் போல செயல்படும் ரவுடிகள் ஏ.பிளஸ், பிரிவிலும், அவர்களுக்கு கீழே ரவுடி கும்பலுக்கு தலைமை தாங்கும் ரவுடிகள் ஏ பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர்.


    சிறிய குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் பி மற்றும் சி பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரை பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்கிற உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் 6 ஆயிரம் ரவுடிகள் போலீசாரின் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 750-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். போலீசுக்கு பயந்து ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களுக்கும் தப்பிச் சென்றிருந்தனர்.

    இவர்களில் சிலர்தான் வெளிமாநிலங்களில் இருந்து வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இதுபோன்ற நபர்களையெல்லாம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ரவுடிகளை ஒழித்துக்கட்டுவதற்காக சென்னை மாநகர காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ள 'பருந்து செயலி'யை போலீசார் முறையாக பராமரித்து ரவுடி ஒழிப்பில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை மத்திய குற்றப் பிரிவில் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுறுசுறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் ரவுடிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டனர். சிறையில் உள்ள ரவுடிகள் வெளி வந்ததும் அவர்களை தீவிரமாக கண்காணித்து குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

    ரவுடிகள் மத்தியில் 'கேங் ஸ்டார் டீம்' என்று அழைக்கப்பட்டு வரும் இந்த ரவுடி ஒழிப்புப் பிரிவை பலப்படுத்தவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அதே போன்று சட்டம்-ஒழுங்குப் பிரிவில் மின்னல் வேகத்தில் செயல்படும் இன்ஸ்பெக்டர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரை இடமாறுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இப்படி ரவுடிகள் ஒழிப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருவதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    தாம்பரம்:

    பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மறு சுழற்சிக்கு பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனும் உள்ளது. சுமார் 20-க் கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நள்ளிரவு திடீரென பிளாஸ்டிக் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பரவி அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திலும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    தீ விபத்து ஏற்பட்டபோது குடோனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் உள்ளே இருந்துள்ளனர். குடோனில் தீப்பற்றியதும் அவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். உடனடியாக அவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
    • டி.ஜி.பி.சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டி இருந்தனர்.

    இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி.சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    முன்னதாக, அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது நடந்த சம்பவம் பற்றி பொற்கொடி விரிவாக எடுத்துக் கூறினார்.

    • தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளது.
    • நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயராக தி.மு.க.வை சேர்ந்த மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். மாநக ராட்சியில் தி.மு.க., அ.தி. மு.க., பா.ம.க., காங்கிரஸ், த.மா.கா, சுயேட்சை என 51 கவுன்சிலர்கள் உள்ளனர்.

    இதில் அ.தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தி.மு.க. கவுன்சிலர்களே மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    மாநராட்சி கூட்டங்களை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி போர்க் கொடி தூக்கி உள்ள தி.மு.க. உள்ளிட்ட கவுன்சிலர்கள் 33 பேர் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு அளித்தனர்.

    ஏற்கனவே பணிக்குழு கலைக்கப்பட்ட நிலையில் பொது சுகாதார குழு, கணக்கு குழு, நகரமைப்பு குழு, வரிவிதிப்பு குழு உறுப்பினர்கள் பதவியை தி.மு.க. கவுன்சிலர்கள் உட்பட 18 எதிர்ப்பு கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து உள்ளனர்.

    மீண்டும் மாநகராட்சி ஆணையரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி 33 எதிர்ப்பு கவுன்சிலர்களின் பிரமாணம் பத்திரங்களையும் தாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் 13 கவுன்சிலர்களை உள்ளடக்கி செயல்பட்டு வரக்கூடிய 2-வது மண்டல குழுவின் தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறி 7 எதிர்ப்பு கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 33 பேர் மீண்டும் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

    அதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், என்ற எங்கள் கோரிக்கையை தவிர்க்கும் வகையில் மேயருக்கு ஆதரவாக செயல்படும் கமிஷனரை மாற்றி, மன்ற கூட்டத்தை வேறொரு ஆணையரை வைத்து நடத்திட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

    • நேற்று ஒரே நாளில் 200 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
    • மாணவிகள் முதன் முதலாக கால் பதித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையின் மிகப் பழமையான கலை அறிவியல் கல்லூரி என்ற பெருமையை நந்தனம் அரசு கல்லூரியை சாரும். இந்த கல்லூரி 1969-ம் ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் தொடங்கப்பட்டது.

    அண்ணாசாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1901-ல மதராஸ் பள்ளி தொடங்கப்பட்டது. 1918-ல் காயிதே மில்லத் கல்லூரியும் அதே வளாகத்தில் ஆரம்பிக்கப் பட்டது. 1969-ல் ஆற்காடு நவாப் பெண்களுக்கு தனியாக மகளிர் கல்லூரி தொடங்கினார். அப்போது தான் நந்தனத்தில் ஆண்களுக்கு தனியாக கல்லூரி உருவானது.

    இக்கல்லூரியில் படித்தவர்கள் பலர் முக்கிய தலைவர்களாக உருவாகி சாதனை படைத்து இருக்கிறார்கள். பெருமை சேர்த்த இக்கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் போராட்டம், மோதல், பஸ்சின் கூரையின் மீது ஆட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன சம்பவங்கள் நடந்தன. இதனை கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகள் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்டனர். அரசின் அனுமதி பெற்று விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்று ஒரே நாளில் 200 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். அதில் 130 பேருக்கு கல்லூரியில் சேர கடிதம் கொடுக்கப்பட்டது.

    மாணவர்கள் மட்டும் படித்து பந்த கல்லூரியில் மாணவிகள் முதன் முதலாக கால் பதித்துள்ளனர். பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி, பி.பி.ஏ. உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஆர்வத்துடன் மாணவிகள் சேர்ந்தனர்.

    இதுகுறித்து நந்தனம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசன் கூறியதாவது:-

    இக் கல்லூரியில் மொத்தம் 1192 இடங்கள் உள்ளன. 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க அரசு அனுமதி கொடுத்ததின் பேரின் 1480 இடங்கள் உள்ளன. குன்றத்தூர், நெமிலி, பெரும்பாக்கம் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவர்கள் அதிகளவில் வருவார்கள்.

    முதலில் இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள், பின்னர் தங்கள் பகுதியில் உள்ள அரசு கல்லூரிகளில் சேர்ந்து விடுவதால் இங்கு இடங்கள் காலியாகி விடுகிறது.

    வருடத்திற்கு 200 முதல் 300 இடங்கள் காலியாக கிடக்கின்றன. அதனை சரி செய்வதற்காக மாணவிகளை சேர்க்க முடிவு செய்தோம்.

    குயின்மேரீஸ், காயிதே மிலலத் பெண்கள் கல்லூரிகளை தொடர்ந்து இந்த பகுதியில் மகளிர் கல்லூரி இல்லை. அதனால் அரசிடம் அனுமதி பெற்று தொடங்கி உள்ளோம்.

    முதல் ஷிப்டில் மட்டும் மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி வேதியியல், தாவரவியல் பாடப்பிரிவுகள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    மாணவிகள் உற்சாகமாக வகுப்பிற்கு வருகிறார்கள்.

    கல்லூரி வளாகத்தில் எவ்வித ஒழுங்கீனத்தையும் அனுமதிக்க மாட்டோம். பேராசிரியர்கள் தலைமையில் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாணவ- மாணவிகளை கண்காணிக்கும். ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் முதல்வருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த வருடம் எந்த பிரச்சனையும் கல்லூரியில் ஏற்படவில்லை. இக்கல்லூரியின் அடையாளம் மாறிவிட்டது. இனிவரும் காலங்களில் மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும். அதற்கான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கல்லூரி நிர்வாகம் கவனித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சையது சலீம் காரை இங்கே நிறுத்தக்கூடாது வியாபாரம் பாதிப்பதாக கூறியதாக தெரிகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). சம்பவத்தன்று இவரும் இவரது மைத்துனர் சின்னதுரை ஆகிய இருவரும் நேற்று நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றர்.

    பின்னர் சமையல் பாத்திரங்களை ஜெயங்கொண்டம் ஜூப்ளி சாலையில் உள்ள பாத்திரக்கடையில் கொடுப்பதற்காக எதிரே உள்ள சையது சலீம் என்பவரின் ரெடிமேட் கடையின் முன்பு காரை நிறுத்தினர். உடனே சையது சலீம் காரை இங்கே நிறுத்தக்கூடாது வியாபாரம் பாதிப்பதாக கூறியதாக தெரிகிறது.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சையது சலீம் கார்த்திக்கின் காரின் நான்கு பக்க கண்ணாடிகளையும் கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளார். உடனே இதுபற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து கடை உரிமையாளர் சையது சலீமிடம் விசாரித்த போது போலீசாரிடமும் அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து சின்னதுரை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் தொடர்ச்சியாக சையது சலீமை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதை அறிந்த சையது சலீமின் நண்பர் அப்பு என்கிற தசரதன் (28) என்பவர் கார் உரிமையாளர் கார்த்திக்கிடம் தகராறு செய்தார். இதுகுறித்து கார்த்திக்கும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிவு செய்து சையது சலீம், தசரதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை.
    • திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

    கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:

    * புதுக்கோட்டையில் மர்மநபர்களால் வாலிபர் வெட்டிப் படுகொலை.

    * தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது வாலிபர் வெட்டிப்படுகொலை.

    * தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.

    இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை.

    எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

    விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது.

    மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு!

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.




    • தடயவியல் நிபுணர்கள் கை ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வாகைக்குளம் மாயன் நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி காசம்மாள் (வயது 70). இவர்களுக்கு பாண்டியராஜன், பரசுராமன் என்ற 2 மகன்களும், பாண்டியம்மாள் என்ற மகளும் உள்ளனர்.

    மகன்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். பாண்டியம்மாளை பிச்சை என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து பல்கலை நகர் அருகே உள்ள ராஜம் பாடியில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கராசு விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் ராஜம்பாடியில் உள்ள தனது மகள் பாண்டியம்மாள் வீட்டில் தங்கி அவரது பராமரிப்பில் ஓய்வெடுத்து வந்தார்.

    இதற்கிடையே காசம்மாள் மட்டும் மாயன் நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்துள்ளார். நேற்று இரவு காசம்மாளுக்கு தங்கராசு போன் செய்து ஏன் நீ மட்டும் அங்கு தனியாக இருக்கவேண்டும்? நீயும் மகள் பாண்டியம்மாள் வீட்டுக்கு வந்துவிட வேண்டியதுதானே? என்று கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த காசம்மாள் விரைவில் மகள் வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.


    இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் காசம்மாள் வசித்து வந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. வழக்கமாக அதிகாலையில் வாசல் தெளித்துவிட்டு செல்வார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் காசம்மாள் தலைக்குப்புற பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக அவர்கள் இதுபற்றி அவரது கணவர் தங்கராசுவுக்கும், சிந்துப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். இதில் காசம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் விரசாரணையை தீவிரப்படுத்தினர். மோப்ப நாய் சார்லி வரவழைக்கப்பட் டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் சோதனை நடத்தினர். இதில் காசம்மாள் கழுத்தில் கிடந்த 15 பவுன் தங்க தாலிச்சங்கிலி, பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகள் உள்பட 65 பவுன் நகைகளை 'மர்ம' நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. கொள்ளையடிக்க வந்த கும்பல் காசம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மோப்ப நாய் சார்லி அந்தப் பகுதியில் சிறிது தூரம் சென்று திரும்பி வந்தது. சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் கை ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று 65 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2,832 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,149 கன அடியாக குறைந்தது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 6,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 103.40 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 574 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 82.45 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 6,148 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 2,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து 5000 ஆயிரம் கன அடியில் இருந்து 5,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இங்கு நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியாக நீடிக்கிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2,832 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,149 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 3,341 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.59 அடியாக உயர்ந்தது. அணையில் 12.39 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×