என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விசாரணை நடைபெற்று வருகிறது.
- தங்கம் கடத்தலுக்கு குடியுரிமை அதிகாரி உடந்தை.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்புவதற்காக, குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றிய அதிகாரி சரவணன் வெளிநாடுகளுக்கு செல்ல வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதிக்கும் போது, முறைகேடுகளில் ஈடுபடுவதும், தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரி சரவணன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில் கடத்தல் காரர்களிடம் இருந்து தங்கத்தை, சரவணன் வாங்கி வைத்துக் கொண்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்வதற்கு உதவி புரிந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 267 கிலோ தங்கம் கடத்தலுக்கும் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சரவணனுக்கும் சம்பந்தம் இல்லை.
அவர் யார்-யாருக்கு உதவினார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். தங்கம் கடத்தலுக்கு குடியுரிமை அதிகாரி உடந்தையாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
- சதீஸ்வரன் இறப்புக்கு 2 மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அலைக்கழித்தது தான் காரணம்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மகன் சதீஸ்வரன் (வயது 37). இவர் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
ஊருக்கு வந்திருந்த சதீஸ்வரன், இன்று காலையில் வீட்டில் டீ குடிக்கும் போது மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் அது வராததால், சதீஸ்வரனை ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் 108 ஆம்புலஸ்சு மூலம் செண்பகராமன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது அவரது உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கூறுகையில், 108 ஆம்புலன்சு டிரைவரின் அலட்சியம் தான் சதீஸ்வரன் உயிரை பறித்து விட்டது. அவர் மயங்கியதும் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தோம்.
ஆனால் வரவில்லை. ஆட்டோவில் சென்ற போது, ஆம்புலன்சை நடுவழியில் பார்த்தோம். அதன் டிரைவர் பரிசோதித்து பார்த்து விட்டு, சதீஸ்வரனுக்கு நாடி துடிப்பு சரியாக இல்லை. வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்றார்.
அதன்படி வீட்டுக்கு வந்த நிலையில், சதீஸ்வரன் உடலில் அசைவுகள் காணப்பட்டன. எனவே மீண்டும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அப்போது 108 ஆம்புலன்சு டிரைவர், எங்களை மறித்து சதீஸ்வரனை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த போதே சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
சதீஸ்வரன் இறப்புக்கு 2 மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அலைக்கழித்தது தான் காரணம். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால் அவர் பிழைத்து இருப்பார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
சென்னை:
சிதம்பரம், நடராஜர் கோவிலில், நாளை முதல் 3 நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ''கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதனால், பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதில் விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். யாராவது சாமி தரிசனத்தை தடுக்கும் விதமாக சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டால், அவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறநிலையத்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
- சசிகலாவின் செயல்பாட்டை வரவேற்கிறேன்.
- மாங்கனிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
மதுரை:
மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவ்வாறு கேட்பதற்கு அவர் யார்? என்னிடம் மன்னிப்பு கடிதம் கேட்பதற்கு அவருக்கு எந்த உரிமம் கிடையாது. 90 சதவீதம் தொண்டர்களை இணைத்து விட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த செயல்பாட்டை வரவேற்கிறேன்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் போட்டியிடவில்லை. அதனால் இரட்டை இலையுடன் மாங்கனி உள்ளது. மாங்கனிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு விரைந்து சரி செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கை சரி செய்ய தவறினால் தி.மு.க. அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அவருடன் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.எ. அய்யப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் ஸ்ரீதரன், அதே கோரிக்கையுடன் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
- இந்த வழக்கை ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து வருகிற 11-ந்தேதி விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
சென்னை:
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குடித்து பலர் பலியான விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த நிலையில், வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் ஸ்ரீதரன், அதே கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை, அரசியல் கட்சிகள் தொடர்ந்துள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் இந்த வழக்கை ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து வருகிற 11-ந்தேதி விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
- பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! அவரது சாதனைகளைப் பயின்று உரமூட்டிக் கொள்வோம்.
- திராவிடச் சமத்துவம் நிலைபெறத் தொடர்ந்து வெல்வோம்.
சென்னை:
முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத் துறை, இடஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்த சட்டங்களைக் கொண்டு வந்து திராவிட வரலாற்றில் துருவ நட்சத்திரமாக விளங்கும் பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! அவரது சாதனைகளைப் பயின்று உரமூட்டிக் கொள்வோம்! திராவிடச் சமத்துவம் நிலைபெறத் தொடர்ந்து வெல்வோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.
- கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
- இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.
இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்! என கூறியுள்ளார்.
- தொழிலாளர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.
- 21 கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சுமார் 100 ஆண்டுகளாக சரக்கு முனையம் செயல்பட்டு வந்தது.
கூட்ஸ் ரெயில் மூலம் கொண்டு வரப்படும் உரம், அரிசி, கோதுமை, நெல் உள்ளிட்டவைகள் இங்கிருந்து லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் சரக்கு முனையத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறி, இந்த சரக்கு முனையத்தை சமீபத்தில் கங்கைகொண்டான் ரெயில் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தனர்.
நெல்லை சரக்கு முனையத்தில் சுமார் 120 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் தங்களுக்கு கங்கைகொண்டானில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அவர்களுக்கு அங்கு பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கங்கை கொண்டான் சரக்கு முனையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி டிரைவர்கள் ஆகியோர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணியாற்றிய பணியாளர்களை கங்கை கொண்டானில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இன்று கங்கைகொண்டான் ரெயில் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா போராட்டத்தில் வட்டார லாரி சங்க தலைவர் அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொருளாளர் இஸ்ரவேல், மாரிமுத்து, செந்தில் குமரன், முருகன், ஆறுமுகம், வட்டார விவசாய சங்க தலைவர் இலோசியஸ், ஊர் நாட்டாண்மை துரைப் பாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் கவிதா பிரபாகரன், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் ராமர், மானூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் மகேஷ் குமார், விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, நாங்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் செயல்பட்ட போது பணிக்கு சென்ற நிலையில் அங்குள்ள தொழிலாளர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.
கங்கைகொண்டானை சுற்றியுள்ள 21 கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். அவர்களை இங்கே அனுமதித்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அவர்களை இங்கு அனுமதிக்க கூடாது. அதனை மீறி அனுமதித்தால் நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
தகவல் அறிந்ததும் தாழையூத்து டி.எஸ்.பி. பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் ஆய்வாளர் அமுதா, தாசில்தார் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரி உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- கடைவீதிகளில் திடீரென அதிரடி சோதனையில் சோதனையில் ஈடுபட்டனர்.
- 7 கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது
திருப்பூர்:
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையையும் மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே திருப்பூர் அரிசி கடை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் இன்று காலை முதல் மாநகர நல அதிகாரி கௌரி சரவணன் மற்றும் உதவி ஆணையர் வினோத், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சின்னத்துரை, தங்கமுத்து, ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரிசி கடை வீதியில் உள்ள கடைவீதிகளில் திடீரென அதிரடி சோதனையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 7 கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- செய்திகள் அடிப்படையில் தாமாக முன் வந்து பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கும் பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி.க்கு பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செய்திகள் அடிப்படையில் தாமாக முன் வந்து பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? விசாரணை நிலவரம் குறித்து ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
மேலும், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கும் பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- அண்ணாமலை நேற்று துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசி இருக்கிறார்.
- நான் புகார் கொடுத்தால் அண்ணாமலை மீது பல்வேறு வழக்குகளில் நடவடிக்கை எடுக்க முடியும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சாமியார் போலே பாபா இதுவரை கைது செய்யப்படவில்லை. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் குழு அமைத்து அவரை பிடிப்பார்களா? காமராஜர் பிறந்த நாளை வருகிற 15-ந்தேதி கன்னியாகுமரியில் கொண்டாட இருக்கிறோம்.
அண்ணாமலை நேற்று துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசி இருக்கிறார். இது என்ன நாகரிகம்? என்னை சமூக விரோதி, ரவுடி என்றும் கூறி அவதூறாக பேசியுள்ளார். எல்லா அரசியல் கட்சி தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருகிறார். அதிகாரம் எல்லாம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக இவ்வாறு அவர் பேசுகிறாரா?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் சரண் அடைந்துள்ளார். அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்? என்பதை அண்ணாமலை விளக்க வேண்டும்.
நான் புகார் கொடுத்தால் அண்ணாமலை மீது பல்வேறு வழக்குகளில் நடவடிக்கை எடுக்க முடியும். அரசியல் நாகரிகம் கருதி இதை வேண்டாம் என்று கருதுகிறேன். என்னை அவதூறாக பேசியதற்காக அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 19 ஆண்டுகளாக கவிதேவி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார்.
- பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்துள்ளனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திகானூர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் அத்திகானூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் ஒரு ஆசிரியையும், ஒரு ஆசிரியரும் மற்றும் தற்காலிக ஆசிரியர் ஆகிய 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக கவிதேவி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கவிதேவி மத்தூரில் உள்ள அரசு பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அதே ஆசிரியையை மீண்டும் அதே பள்ளிக்கு ஆசிரியையாக நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து உள்ளனர்.
இதுகுறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது, `அத்திகானூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக கவிதேவி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார்.
தற்போது நடைபெற்ற கலந்தாய்வு மூலம் அந்த ஆசிரியைக்கு மத்தூரில் பணிஇடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. இந்த ஆசிரியை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து நல்ல முறையில் பாடம் கற்பித்து வருவதால் அவரை பணிஇடமாற்றம் செய்தால், எங்கள் குழந்தைகளின் கல்வி பெரிதளவில் பாதிக்கப்படும்.
மேலும், அடுத்துவரக்கூடிய ஆசிரியர்கள் இதுபோன்று நல்ல முறையில் கல்வி பயின்றுவிப்பார்களா? என்பது சந்தேகம் தான். எனவே, இந்த ஆசிரியை பணிஇடமாற்றம் செய்யக்கூடாது. உடனே அவரை மீண்டும் அத்திகானூர் அரசு பள்ளிக்கே பணியாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






