என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.
    • ஏறத்தாழ 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டன.

    வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.8.14கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை இன்று (09.07.2024) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வைத்திநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார், மோகனகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் கேரள மாநில தொடர்பு அலுவலர் உண்ணிகிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்.


    பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

    1924ஆம் ஆண்டு வைக்கத்தில் உள்ள கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். இதற்காக அப்பகுதி தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள். முக்கிய தலைவர்கள் கைதான நிலையில் போராட்டத்தை தொடர்ந்து, தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் சென்று அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார்.

    அதன் நினைவாக, 1985 ஆண்டு கேரளா அரசு வழங்கிய நிலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டது. மேலும், அங்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நூலகம், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், வைக்கப்பட்டிருந்தது. நினைவகம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதால், அதனை இன்றைய காலகட்டத்திற்கு, ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.

    இப்புனரமைப்பு பணிகளுடன், அதிக புத்தகங்களை கொண்டதாக நூலகம் விரிவுப்படுத்தப்பட்டு அமைக்கப்படவுள்ளது. மேலும், பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக விடுபட்டிருந்த புகைப்படங்களும் அமைக்கப்படவுள்ளது. காலத்தால் அழியாத ஒரு நினைவு சின்னமாக விளங்கும் வகையில் இதனை அமைப்பதற்கான காரணம், கோயிலில் ஒரு குறிப்பிட்ட சமூகம் நுழையக்கூடாது என அந்த காலத்தில் அறிவித்திருந்த சமயத்தில், மகாத்மா காந்தி அவர்களின் உத்தரவை ஏற்று தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். கருதப்படுகின்றது. இது ஒரு சமூக நீதி போராட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புகள் பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஏறத்தாழ 95 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன.

    பெயிண்டிங், மின்இணைப்பு பணிகள் மழையின் காரணமாக தாமதம் ஆகியுள்ளன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

    • மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
    • நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டன.

    காஞ்சிபுரம்:

    விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ள ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுனை ஏரியில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் தொழிலாளர்களுக்கு கட்டணமின்றி ஏரிகளில் இருந்து களிமண் எடுத்துச் செல்வதற்கான ஆணைகளை வழங்கி மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    இதில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் ஆறுமுக நயினார், உதவி இயக்குனர் இளங்கோவன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டனர்.

    • மறவமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
    • திருக்குறள், சித்த மருத்துவ பயன்கள், பொதுஅறிவு தகவல்கள், தமிழ் ஆங்கில மாதங்கள் உள்ளிட்டவை எழுதப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.

     

    ரெயில் பெட்டிகள் போன்று வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டியதுடன், வகுப்பறைக்குள் பழமொழிகள், திருக்குறள், சித்த மருத்துவ பயன்கள், பொதுஅறிவு தகவல்கள், தமிழ் ஆங்கில மாதங்கள் உள்ளிட்டவை எழுதப்பட்டுள்ளன.

    சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருக்கும் வகுப்பறைகளில் கல்வி கற்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    • இதே அளவில் நீர் வரத்து நீடித்தால் தினமும் 2 டி.எம்.சி என்ற அளவில் நீர் இருப்பு அதிகரிக்கும்.
    • காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் கடந்த 15 நாட்களில் 30 டி.எம்.சி அதிகரித்திருக்கிறது. மழை தொடர்வதால் கர்நாடக அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டிற்கான தண்ணீரைப் பெற தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

    கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி. கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 67.20 டி.எம்.சியாக உள்ளது. இது அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 59% ஆகும். நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 23,528 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் 24-ஆம் நாள் நிலவரப்படி 4 அணைகளிலும் சேர்த்து 37.96 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருந்தது. கடந்த 15 நாட்களில் 30 டி.எம்.சி அளவுக்கு நீர் இருப்பு அதிகரித்திருக்கிறது. இதே அளவில் நீர் வரத்து நீடித்தால் தினமும் 2 டி.எம்.சி என்ற அளவில் நீர் இருப்பு அதிகரிக்கும்.

    கர்நாடக அணைகளின் நீர்மட்டம் இந்த அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். இன்று வரை 20 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை. அதை தமிழக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

    கர்நாடக அரசு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி நீரில் பாதியைக் கூட வழங்கவில்லை. நடப்பாண்டில் ஒரு டி.எம்.சி தண்ணீர் கூட கர்நாடகத்திலிருந்து காவிரியில் திறந்து விடப்படவில்லை. அதனால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு நான்கில் ஒரு பங்காக குறைந்து விட்டது. இதுவரை நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் தேவை. ஆனால், இதை அறியாமலேயே காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் துரோகங்களுக்கு திமுக அரசு துணை போய்க் கொண்டிருக்கிறது. இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்.

    எனவே, தமிழக அரசு அதன் பொறுப்பை உணர்ந்து மத்திய அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் அணுகி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியில் கஞ்சா விற்ற கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் (36) என்பவரை இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அவருடன் தொடர்பில் உள்ள கஞ்சா கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • பதற்றமான வாக்குச்சாவடி 45 உள்ளதால் அங்கு பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    * 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.

    * 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    * பதற்றமான வாக்குச்சாவடி 45 உள்ளதால் அங்கு பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

    பகுதிகளில் மாலை மாலை இரவு வேளையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 13-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • அரசு ஊழியர் பெறும் குடும்ப நல நிதி 5லட்சம் ரூபாயை, மின்வாரிய பணியாளருக்கும் வழங்க வேண்டும்.
    • மின் விபத்தில் பலியாகும் ஊழியர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) திருப்பூர் கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் பி.என். ரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    மின்சார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தத்துக்கு எதிராக வெளியிட்ட உத்தரவுகளை வாபஸ் பெற வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தை களைந்து, புதிய ஒப்பந்தம் உருவாக்க வேண்டும். பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.

    அரசு ஊழியர் பெறும் குடும்ப நல நிதி 5லட்சம் ரூபாயை, மின்வாரிய பணியாளருக்கும் வழங்க வேண்டும். மின் விபத்தில் பலியாகும் ஊழியர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும். கடந்த 2019 டிசம்பர் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, 6 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும். கேங் மேன்களுக்கு, இடமாற்றம் மற்றும் கள உதவியாளர் பணிமாற்றம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
    • எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு காளையார்குறிச்சி, சிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் குடோன் அமைந்துள்ள அறையில் வெடி மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    விபத்து ஏற்பட்டதும் அங்கு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் பட்டாசு ஆலையை விட்டு பதறியடித்து கொண்டு வெளியில் ஓடினர். மேலும் அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் எம்.புதுப் பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சிவகாசி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டன. அத்துடன் பலியான மாரியப்பன், முத்துமுருகன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து நானும் பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்வதுடன், வெடிவிபத்தை தடுப்பதற்கான புதிய கொள்கை வடிவமைத்து செயல்படுத்துமாறும் விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • தஞ்சாவூரில் அமைந்துள்ள ஐ.டி. பார்க்கின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது.
    • ஐ.டி. பார்க்கால் டெல்டா பகுதியை சேர்ந்த படித்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே மேலவஸ்தாசாவடியில் 55000 சதுர அடியில் ரூ.30.50 கோடி மதிப்பில் டைடல் நியோ ஐ.டி. பார்க் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு கட்டுமான பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்து முடிவடைந்துள்ளது.

    இன்று ஐ.டி. பார்க்கில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுக்கு பணிகள் முடிவடைந்த விவரம் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் தீபக்ஜேக்கப் எடுத்துக் கூறினார்.

    இதையடுத்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சிறப்பான ஆட்சியில் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. தஞ்சாவூரில் அமைந்துள்ள ஐ.டி. பார்க்கின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த ஐ.டி. பார்க்கால் டெல்டா பகுதியை சேர்ந்த படித்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இந்த ஐ.டி. பார்க்கில் ஏற்கனவே 2 நிறுவனங்கள் முன்பதிவு செய்துவிட்டன. இன்னும் 7 நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    மேலும் தஞ்சை பகுதியில் புதிதாக சிப்காட் வரவுள்ளது. அதன் மூலமும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். செங்கிப்பட்டி பகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனை அகற்றப்படும் எனக் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறமான தகவல். இந்த பொய் தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மலைவாழ் மக்களுக்காக ஊட்டி பகுதியில் ஐ.டி. சர்வீஸில் உள்ளவர்களுக்காக ஒரு புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இது இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை.

    பல லட்சம் கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீட்டை கொண்டு வந்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொழில் தொடங்க அதிக அளவில் நிறுவனங்கள் முன் வருகின்றன. அதற்கு முதலமைச்சரின் மகத்தான ஆட்சியே காரணமாகும். தொழில் தொடங்க முன்வருபவர்கள் முதலில் கதவை தட்டுவது முதலமைச்சரின் வீட்டு கதவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • மருத்துவமனையை தரமான முறையில் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் பிரசவ வார்டு மேம்படுத்தும் பணி ரூ.10 கோடியில் நடந்து வருகிறது.

    இந்த நிதியில் 3 மாடி புதிய கட்டிடம் கட்டுமான பணி கடந்த 2022 ஜனவரியில் தொடங்கியது. ஓராண்டில் பணிகள் முடிக்க வேண்டிய நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவு பெற வில்லை.

    இந்நிலையில் நேற்று போர்டிகோவின் மேல் பகுதியில் நின்று தொழிலாளர்கள் சிமெண்டு பூச்சு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருபுறங்களிலும் இருந்த பில்லர்கள் திடீரென இடிந்து விழுந்ததில் மதுரை ஊமச்சிக்குளத்தை சேர்ந்த நம்பிராஜன் (வயது40) என்பவர் உயிரிழந்தார்.

    மேலும் பணியில் இருந்த மதுரையை சேர்ந்த செல்வம் (32), சதீஷ்குமார் (42) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    தொழிலாளி உயிரிழந்ததை தொடர்ந்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையை தரமான முறையில் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் தரமற்ற முறையில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்ட காண்டிராக்டர் பாண்டியராஜ், என்ஜினீயர்கள் வெங்கடாசலம், மணிவண்ணன், நவீன் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய 5 பேர் மீது கம்பம் தெற்கு போலீசார் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர்.

    இதனிடையே உயிரிழந்த நம்பிராஜன் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து வழியை கம்பிவேலி போட்டு அடைக்க முற்படுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வது வார்டு வஞ்சி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அடுக்குமாடி குடியிருப்பு வழியாக 40 அடி வழித்தடம் விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அதை குடிசைமாற்று வாரியம் அடைத்து கம்பிவேலி போடுவதால் பல கிலோ மீட்டர் சுற்றி வஞ்சிநகர் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே பொதுமக்கள் செல்ல ஒதுக்கப்பட்ட சாலையை ஆக்கிரமிக்கும் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போக்குவரத்து வழியை கம்பிவேலி போட்டு அடைக்க முற்படுகின்றனர்.

    இதனை கண்டித்து வஞ்சிநகர் பகுதி பொது மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×