என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தேர்வாகியுள்ளார்.
    • கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை உதயநிதி வழங்கினார்.

    பாரீஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் 2024 – ல் மகளிருக்கான 67 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ள கஸ்தூரி ராஜாமணியை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்,

    இது குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக தேர்வாகியுள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் விமானப் பயணச் செலவு – தங்குமிடம் – உணவு – பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கினோம்.

    தங்கை கஸ்தூரி ராஜாமணி சர்வதேச அரங்கில் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 84 ரன்களில் சுருண்டது.
    • இந்தியாவின் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை:

    தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா இருவரும் சிறப்பான ஆடினர். ஸ்மிர்தி மந்தனா அரை சதமடித்து 54 ரன்னும், ஷபாலி 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி 10.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது.

    • டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருச்சி அணி 193 ரன்கள் குவித்தது.

    சேலம்:

    டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இன்று இரவு நடந்த 7-வது லீக்கில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற

    மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்னில் வெளியேறினார்.

    வசீம் அகமதுடன் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. வசீம் அகமது 55 பந்தில் 90 ரன்னும், சஞ்சய் யாதவ் 60 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    • சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் பணியிட மாற்றம்.
    • தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம்.

    தமிழ்நாடு முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் சென்னை வடக்கு கூடுதல் ஆணையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மதுவிலக்கு அமலாக்குத்துறை கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அபின் தினேஷ் மோடக் தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் குமார் அகர்வால், ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் நிர்வாக கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சிபிசிஐடி ஐஜி அன்பு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கான பொறுப்புகளையும் கவனிக்க உள்ளார்.

    இதற்கு முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 84 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சென்னை:

    இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்கா இந்திய அணியின் பந்துவீச்சில் சிக்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது.
    • துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

    இதையடுத்து, இந்த தொகுதிக்கு நாளை (ஜூலை 10-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது. நாளை விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்காக 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பனையபுரம், குண்டலபுலியூர், ராதாபுரம் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மிக பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பதற்றமானதாக 42 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வடக்கு மண்டல ஐ.ஜி.நரேந்திர நாயர் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. திஷா மிட்டல் தலைமையில் 3 எஸ்.பி.க்களின் கண்காணிப்பில் 700 சிறப்பு போலீஸ் படையினர், 220 துணை ராணுவத்தினர் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை முதல், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான 13-ந் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியையொட்டி உள்ள புதுவை மதுக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றினாலும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு நாளை பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?
    • குண்டாஸ் வழக்கில் செல்வப்பெருந்தகை கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா?

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக செல்வப்பெருந்தகை மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

    மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை.

    ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி

    2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)

    2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி

    2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல்

    2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்

    2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908.

    இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2008வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்

    கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.

    குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

    செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • ஆதித்தமிழ்க்குடி பிள்ளைகள் ஏராளமானவர்கள் சட்டம் பயில பேருதவி புரிந்த பெருந்தகையாவார்.
    • ஆம்ஸ்ட்ராங்க் ஆற்றிய சமூகப் பணிகள்தான், இத்தனை இலட்சம் மக்களின் பேரன்பைப் பெற்றிட முதன்மையான காரணமாகும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிமக்களின் அரணாக விளங்கிய அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க், தமது இறுதி மூச்சுவரை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் காட்டிய அறிவு வழியில் பயணித்த பெருமைக்குரியவர். மக்களாட்சி முறைமையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு அறிவாயுதம் ஏந்துவதே உறுதியான இறுதி தீர்வாகும் என்பதை உளமார நம்பியதோடு, அதனையே தம்மைப் பின்பற்றியவர்களுக்கும் கற்பித்தவர். அதனை அடியொற்றியே, தங்கள் மீது பூட்டப்பட்ட சமூக விலங்கை உடைத்தெறிந்து, தான் பிறந்த சமூகம் மேன்மையுற வேண்டும், அதிகாரத்தாலும், ஆட்சியாளர்களாலும் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆதித்தமிழ்க்குடி பிள்ளைகள் ஏராளமானவர்கள் சட்டம் பயில பேருதவி புரிந்த பெருந்தகையாவார்.

    தமிழர்கள் சாதிகளாக பிரிந்து, பிளந்து கிடப்பதுதான் தமிழ்ச்சமூகத்தின் மீட்சிக்கும், எழுச்சிக்கும் மிகப்பெரிய இடையூறு என்பதை சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் நன்கு உணர்ந்து 'இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் இப்படி சாதி, மதங்களாக பிரிந்து நிற்கப்போகிறோம்?' என்ற கேள்வியை மக்களிடத்தில் தொடர்ச்சியாக எழுப்பியவர். 'தமிழர்கள் நாம் ஒன்றாகாதவரை நமக்கென்று தனித்த அரசியல் வலிமையையோ, அதிகார வலிமையையோ ஒருபோதும் பெறமுடியாது' என்ற நாம் தமிழர் கட்சியின் தமிழர் ஓர்மை கோட்பாட்டையே, தாம் பயணித்த அரசியல் தளத்தில் நின்று முழங்கியவர்.

    அரசியல் களத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நாடறிந்த அமைச்சர் உள்ளிட்ட எவ்வித அதிகாரமிக்கப் பதவியும் வகிக்காத போதிலும், புரட்சிகர சிந்தனையுடன் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் ஆற்றிய சமூகப் பணிகள்தான், இத்தனை இலட்சம் மக்களின் பேரன்பைப் பெற்றிட முதன்மையான காரணமாகும்.

    ஆகவே, மறைந்த பகுஜன் ஜமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் அரசியல் மற்றும் சமூகப்பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பெரம்பூர் காகித ஆலை (பேப்பர் மில்) சாலைக்கு அவரது பெயரைச் சூட்டி நினைவைப் போற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

    • ரூ.5 லட்சம் குடும்ப நல நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை.
    • நியாயமான கோரிக்கைகள் என்று கடந்த காலத்தில் கூறிய முதலமைச்சர், இப்போது அவற்றை நிறைவேற்ற மறுப்பது ஏன்?

    பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 55000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    மின்வாரியத்தில் நிரப்பப்படாமல் உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும். ஓய்வுக்கால பணபலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும். ரூ.5 லட்சம் குடும்ப நல நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. மின்சார வாரியம் செம்மையாக செயல்பட வேண்டும் என்றால் இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.

    மின்வாரிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவும் புதிதாக முன்வைக்கப்படுபவை அல்ல. இவை அனைத்தும் பல ஆண்டுகளாக வலியுறுத்தபட்டு வருபவை தான். இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியுள்ளார். அப்போது நியாயமாக தெரிந்த கோரிக்கைகள் இப்போது நியாயமானவையாக தெரியவில்லையா? அவை நியாயமான கோரிக்கைகள் என்று கடந்த காலத்தில் கூறிய முதலமைச்சர், இப்போது அவற்றை நிறைவேற்ற மறுப்பது ஏன்? தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுகளின் போது இந்த கோரிக்கைகளை ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ள மறுத்தது ஏன்?

    தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் மின்வாரியம் தான். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் மீது 100 மாதங்களுக்கும் மேலாக அகல்விலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதே நிலை மின்சார வாரியத்திற்கும் வந்து விடக்கூடாது. மின்சார வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு நடத்தி, அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது.
    • உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது. அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தெரிவித்ததோடு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன். இந்தத் துயரத்தில் வாடும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மீண்டு வருவதற்கான மன உறுதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இந்தக் கொலையில் சரணடைந்த குற்றவாளிகள், உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்களையும், தொடர்புடைய அனைத்து உண்மைக் குற்றவாளிகளையும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்". செப்டம்பர் 29, 2021 அன்று சேலத்தில் உள்ள வாழப்பாடியில் மீண்டும் தொடங்கப்பட்டது.
    • 2008 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இறந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம்" தொடங்கப்பட்டது.

    அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது,

    அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சீர்மிகு மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சாதனைகள் குறித்து உரையாற்ற வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்குஎனது சிரம் தாழ்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறப்பான சாதனைகள் செய்து, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. 1923 இல் தொடங்கப்பட்ட பொது சுகாதார அமைப்பின் மூலம் முன்னோடியாக பல்வேறு பொது சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஏழை எளியோர்களுக்காக 23.07.2009 அன்று காப்பீடு திட்டத்தை தொடங்கியவர் 5 முறை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர். இந்த திட்டம் "முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக" கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கிய நாள் முதல் ஜூன் 2024 வரை ரூ.136.25 பில்லியன் செலவில், 14 மில்லியன் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

    மொத்தப் பயனாளிகளில், 4.32 மில்லியன் மக்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.49.45 பில்லியன் செலவில் உயர்சிகிச்சைகள் பெற்றுள்ளனர். மேலும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முன்னெச்சரிக்கை நோக்கத்துடனும் தொலைநோக்கு பார்வையுடன் 1999 ஆம் ஆண்டு கொண்டுவந்த மற்றொரு திட்டம் "வருமுன் காப்போம் திட்டமாகும்". இதன்மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு விரிவான சுகாதார பரிசோதனை, சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. 1,353 அவசர ஊர்திகளுடன் 15.09.2008 அன்று 108 அவசரகால பராமரிப்பு சேவை திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்தாலும், அவசர ஊர்த்தி சேவை மையத்தை தொடர்பு கொண்ட பிறகு 11 நிமிடங்கள் 23 வினாடிகளுக்குள் அவசர ஊர்த்தி அந்த இடத்திற்கு சென்றடையும் வகையில்

    மிகச் சிறப்பாக இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கண் பார்வை குறைபாடுகளை கண்டறிய 2009 ஆம் ஆண்டு "கண்ணொளி காப்போம் திட்டம்" தொடங்கப்பட்டது. இன்றுவரை. மொத்தம் 4.25 மில்லியன் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டு, 2.7 இலட்சம் மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மகனும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர், புதுமையான திட்டங்கள் மூலம், தனது தீவிர உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைத்து சாலை போக்குவரத்து விபத்துக்களுக்கும் இலவச அவசர மருத்துவ சிகிச்சை வழங்கும் "இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம்" 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ் 18.12.2023 முதல் 31.05.2024 வரை, ரூ.2.21 பில்லியன் செலவில் 2,52,981 நோயாளிகள் கட்டணமில்லா சிகிச்சையைப் பெற்றுள்ளனர். இதில் மொத்த பயனாளிகளில் 2,33,039 நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்". செப்டம்பர் 29, 2021 அன்று சேலத்தில் உள்ள வாழப்பாடியில் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 25 வகையான பரிசோதனைகளை, 17 சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2023-24 வரை மொத்தம் 36,69,326 பேர் பயனடைந்துள்ளனர். ஆய்வக மாதிரிகளைக் கொண்டு செல்வதற்கான "மக்களைத் தேடி ஆய்வகம் திட்டம்" (Hub and Spoke Model) பிப்ரவரி 5, 2024 அன்று 755 ஹப்கள் மற்றும் 2,427 ஸ்போக்குகளை உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 216 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஜூன் 2024 வரை, 2,27,000 மாதிரிகள் திறம்பட கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதய பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் நோக்கில் "இதயம் காப்போம் திட்டம்" 27.06.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊரட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. ஜூன் 2023 மற்றும் ஜூன் 2024 க்கு இடையில், சந்தேகத்திற்கிடமான இதயநோய் அறிகுறிகளுடன் மொத்தம் 8,500 நோயாளிகளுக்கு அவசர மாரடைப்பு மருந்துகள் (Loading Dose) வழங்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு,அவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. செல்ல அதேபோல் "சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம்" 10.07.2023 அன்று சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 4,60,000 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு, 3,361 நோயாளிகள் நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்கு சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

    தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் "தொழிலாளரை தேடி மருத்துவம் எனும் திட்டம்" 09.01.2024 அன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரில் உள்ள Hyundai Mobis தொழிற்சாலையில் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம் இதுவரை 486 தொழிற்சாலைகளில் 2,96,652 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 26,471 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே மாநிலம் தழுவிய, வெறிநாய் கடி (Rabies) கட்டுப்பாட்டு முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (ARV) மற்றும் ஆன்டி-ஸ்னேக் வெனோம் (ASV) வழங்கப்படுகிறது. ARV மற்றும் ASV இன் இருப்பு முறையாக கண்காணிக்கப்பட்டு ஆன்லைன் போர்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

    2008 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இறந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம்" தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், வயிறு, கைகள் என மொத்தம் 7,783 உறுப்புகள், 3,950 சிறிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில், அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கலைஞர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று 23.09.2023 அன்று அறிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த பிறகு இதுவரை 200 உடல்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

     

    கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிந்தைய பாதிப்புகளில் இருந்தும் மக்களுக்கு தேவையான மருத்துவம் அவர்களை சென்றடையும் நோக்கில், "மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.08.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. முதல் பயனாளியான கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளியில் உள்ள திருமதி.சரோஜம்மாளுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயஉதவி குழுவிலிருந்து பெண் சுகாதார தன்னார்வலர்களின் (WHVs) மருத்துவத் துறையுடன் இணைந்து மக்களுக்கு தேவையான மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர். கிராமப்புறங்களில் 8,713 மற்றும் நகர்ப்புறங்களில் 2,256 பேர் என்று மொத்தம் 10,969 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு WHV களால் வீட்டிற்கே சென்று மருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 463 பிளாக்குகளில் ஒரு செவிலியர் ஒரு பிசியோதெரபிஸ்ட் அடங்கிய குழுக்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுநீரக நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று CAPD பைகளை செவிலியர்களை கொண்டு வழங்கும் திட்டமும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மருத்துவமனைக்கு சென்று ஹீமோடையாலிசிஸ் மேற்கொள்ளும் நடைமுறை தவிர்க்கப்படுகிறது.

    மேலும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் ஒருகோடி பயனாளிகளை தாண்டி செயல்பட்டு வருகிறது. இதில் 23.02.2022 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கத்தில் 50 இலட்சமாவது பயனாளியாக திருமதி.பாஞ்சாலையும், 10.04.2022 அன்று மதுரை மாவட்டம் மையீட்டாம்பட்டி 60 இலட்சமாவது பயனாளியான திரு.பெரியசாமியும், 21.06.2022 அன்று நாமக்கல் மாவட்டத்தில் 75 இலட்சமாவது பயனாளியாக திருமதி.நல்லம்மாளும், 06.08.2022 அன்று சென்னை கோதாமேடு பகுதியில் 80 இலட்சமாவது பயனாளியாக திருமதி.சாந்தி, 25.09.2022 அன்று சென்னையில் 90 இலட்சமாவது பயனாளியாக திருமதி.ஜரீனா பேகமும், 29.12.2022 அன்று 1 கோடியாவது பயனாளியாக திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்த திருமதி மீனாட்சி என்பவருக்கு நேரடியாக சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மருத்துவ சேவைகள் மலிவாக கிடைக்கக்கூடிய, அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும். தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அதிக சமபங்கு. சமூக உள்ளடக்கம் மற்றும் சமூகப் பங்கேற்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வலுவடைந்து வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பயனாளிகளிடமிருந்து அவர்களின் வாழ்வில் இத்திட்டத்தின் நேர்மறையான தாக்கத்தைப் படம்பிடிக்கும் சான்றுகளைக் கொண்ட ஒரு நிமிட காணொளியின் மூலம், மிகவும் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் மக்களுக்கு சேவை செய்ய பாடுபடும் தமிழ்நாடு அரசின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான இந்த சிறந்த வாய்ப்பிற்காக எனது மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் உரையாற்றினார்கள்.

    • மர்மநபர்களின் செயலாக இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் எண்ணினர்.
    • வீடுகளின் மீது வந்து விழுந்த கற்களை சேகரித்து போலீசாரிடம் காண்பித்தனர்.

    ஒட்டப்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 12 நாட்களாக இங்குள்ள வீடுகளின் மீது மர்மமான முறையில் சிறிய மற்றும் பெரிய கற்கள் விழுந்தன. இதனால் பயந்து போன அப்பகுதி பொது மக்கள் இரவு முழுவதும் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் தஞ்ச மடைந்தனர்.

    கற்கள் விழுந்ததில் பல வீடுகளில் ஓடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்க்கும் போது கற்கள் விழவில்லை. உள்ளே சென்றதும் ஓடுகள் மீது கற்கள் விழுந்தன. இதனால் மர்மநபர்களின் செயலாக இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் எண்ணினர்.

    இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஓட்டப்பாளையம் கிராமம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். புதர் பகுதிகள், மறைவான இடங்களில் யாரும் பதுங்கியிருந்து கற்களை வீசுகின்றனரா? என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அப்படி யாரும் சிக்கவில்லை. இதனால் வீடுகளின் மீது கற்கள் எப்படி விழுகிறது. எங்கிருந்து வந்து விழுகிறது என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

    மேலும் மர்மமான முறையில் கற்கள் விழுவது குட்டிச்சாத்தானின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் பொது மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கற்கள் விழுவதின் உண்மையான பின்னணி என்னவென்று தெரியாமல் தவிப்புக்கு ஆளானதுடன் கடந்த 12 நாட்களாக இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்தனர். இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து படியூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். வீடுகளின் மீது வந்து விழுந்த கற்களை சேகரித்து போலீசாரிடம் காண்பித்தனர்.

    இதையடுத்து வீடுகளின் மேல் எங்கிருந்து கற்கள் வந்து விழுகிறது என்பதை கண்காணிக்க போலீசார், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி ஓட்டப்பாளையம் கிராமம் முழுவதும் 6 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் , 20 போகஸ் லைட்டுகள் பொருத்தப்பட்டன. ராட்சத கிரேன் ஒன்றும் வரவழைக்கப்பட்டது. இதன் மூலம் போலீசார் , அதிகாரிகள், பொதுமக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கிரேன் மூலமும் , டிரோன்களை பறக்க விட்டும் கண்காணிக்கப்பட்டது.

    நேற்றிரவு 7 மணி முதல் இன்று காலை வரை விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எந்தவித கற்களும் வீடுகளின் மீது வந்து விழவில்லை. எனவே மர்மநபர்கள்தான் மறைவான இடங்களில் பதுங்கியிருந்து கற்களை வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஒட்டப்பாளையம் கிராமம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் குட்டிச்சாத்தான் பீதியால் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் நேற்றிரவு பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று வீடுகளின் மீது கற்கள் வந்து விழுந்தன.

    அதேப்போல் இப்போதும் நிகழ்ந்துள்ளதால் கிராமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிறப்பு வழிபாடுகள் நடத்தினோம் என்றனர். காங்கயம் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒட்டப்பாளையம் கிராமத்தில் முகாமிட்டு நேற்றிரவு முதல் கண்காணிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடந்த 12 நாட்களாக வீடுகளின் மீது கற்கள் விழுந்ததில் தூக்கத்தை தொலைத்து தவித்து வந்த ஒட்டப்பாளையம் கிராமமக்கள் நேற்றிரவு கண்காணிப்பில் ஈடுபட்டதன் காரணமாக கற்கள் வந்து விழாததால் நிம்மதி அடைந்துள்ளனர்.

    ×