என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கும் பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160-ம், நேற்று சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து விற்பனையானது.
இந்நிலையில், இந்த வாரத்தின் மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,760-க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.54,080-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கும் பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மூன்று நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாக்குப்பதிவு தொடங்கியதும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தினார்.
- இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கியதும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தினார். பாமக வேட்பாளர் சி. அன்புமணியும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன.
- தங்க நாணயம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
- கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் அருகே ஆலக்குடி பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்த 2 வீடுகளின் கதவை உடைத்து நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தஞ்சாவூர் அருகே உள்ள ஆலக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 36). இவர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை அருகே உள்ள கல்விராயன் பேட்டையில் நடத்தினார். விழா முடிந்து அங்கேயே இளங்கோவன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தங்கினார்.
இந்த நிலையில் இளங்கோவனுக்கு அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் போன் செய்து வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு 20 கிராம் தங்கசெயின், 1 கிராம் தங்க நாணயம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேபோல், இளங்கோவனின் எதிர்வீட்டை சேர்ந்த சரவணன் மகன் மணிகண்டன் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவையும் உடைத்து ரூ.4,500 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து 2 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 5,248 கன அடி வீதம் தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
- நீர்வரத்தை கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 5,666 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 103.90 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 581 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை அணையின் நீர்மட்டம் 82.68 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 6,453 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 4,667 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 5,248 கன அடி வீதம் தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்தை கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியாக நீடிக்கிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2,149 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,341 கன அடியாக அதிகரித்தது.
தொடர்ந்து இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 4,521 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று 40.59 அடியாக நீடித்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.15 அடியாக உயர்ந்தது. அணையில் 12.69 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டார்.
- கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்செல்வன், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் உள்பட 9 போலீசார் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டார். கள்ளச்சாராய சாவு சம்பவத்தின் எதிரொலியாக புதிய போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட78 போலீசாரை பணியிடமாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அலெக்ஸ் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலமுருகன் மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும், உளுந்தூர்பேட்டை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை திருக்கோவிலூர் அமலாக்க மதுவிலக்கு பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 14 போலீசார், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 10 போலீசார், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 10 போலீசார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த போலீசார், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் ஒரே நாளில் 5 சப்-இன்ஸ் பெக்டர்கள் உள்பட 78 போலீசாரை பணியிட மாற்றம் செய்திருப்பது சக போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மின் நிலைய வளாகத்தில் உள்ள பராமரிப்பு மின் செயற்பொறியாளர் இயக்கத்தில் நடைபெற உள்ளது.
- பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (11-ந் தேதி) காலை 11 மணியளவில் தாம்பரம், புது தாங்கல் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள பராமரிப்பு மின் செயற்பொறியாளர் இயக்கத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
- கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான திமுகவின் தலைவருக்காக 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நாணயத்தை கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.
இந்நிலையில் நேற்று நாணயத்திற்கான அனுமதி கோப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையொப்பம் இட்டதாகத் தெரிகிறது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம் பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியாக உள்ளது. இதற்கான மாதிரி வடிவத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது.
- திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவரது குடும்பத்தினருடன் அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்களித்தார்.
- மாண்புமிகு முதலமைச்சரின் சாதனைகளின் அடிப்படையில் நான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவரது குடும்பத்தினருடன் அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்களித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் என்ற முறையில் நான் வாக்களித்துள்ளேன்.
* விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
* மாண்புமிகு முதலமைச்சரின் சாதனைகளின் அடிப்படையில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.
- மாநகராட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
- மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர், 49 மாநகராட்சி உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர். திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மாநகராட்சி மேயராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் உள்ளனர்.
மாநகராட்சி மேயர் தங்களை உரிய முறையில் மதிக்கவில்லை. தங்கள் வார்டுகளுக்கு தேவையான மக்கள் நல பணிகளை செய்து தரவில்லை என அதிமுக, பாமக, பாஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ், சுயேச்சை, உறுப்பினர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களும், சேர்ந்து கொண்டு மேயர் மகாலட்சுமி யுவராஜுடன் மோதல் போக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் திமுக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என 33 பேர் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரி டம் மனு வழங்கி இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் மேயரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.
இருப்பினும் மாநகராட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன், மாநகராட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் 1998 (திருத்தப்பட்ட சட்டம் 32, ஆண்டு 2022) பிரிவு 51 (2) (3) படி காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினர்களால் மாநகராட்சி மேயர் மீது அளிக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் இந்த மாதம் 29-ம்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது என்றும், மேற்படி கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு அதற்கான கடிதங்களை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் விவரம்
மொத்தம்:- 51
திமுக - 33
காங்கிரஸ் -1
அதிமுக -8
தமாகா -1
பாமக -2
பாஜனதா -1
விடுதலை சிறுத்தைகள் கட்சி-1
சுயேச்சை -4
- மிக ஆழம் குறைந்த பகுதியில் பாலம் இருப்பதால் கப்பல்கள் மூலம் சென்று அப்பகுதியை ஆய்வு செய்ய முடியாது.
- மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்திக்கு இடையே 2-3 மீட்டர் ஆழம் கொண்ட 11 குறுகிய கால்வாய்களும் கண்டறியப்பட்டு உள்ளன.
சென்னை:
இந்தியாவின் ராமேசுவரம் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் மன்னார் தீவில் உள்ள தலைமன்னாரின் வடமேற்கு முனை வரை ராமர் பாலம் பரவியுள்ளது. ராமர் பாலம் அல்லது ராமர் சேது என்று அழைக்கப்படும் ஆதாமின் பாலம், இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ராமேசுவரம் தீவுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இது நீருக்கடியில் உள்ள மலைமுகடு, சுண்ணாம்புக் கற்களின் சங்கிலியால் ஆனது. இதிகாசமான ராமாயணத்தில், சீதையை ராமன் மீட்பதற்காக ராவணனுடன் போரிடுவதற்காக இலங்கையை அடைய ராமரின் படையால் கட்டப்பட்ட ராமர் சேது என இது விவரிக்கப்பட்டுள்ளது. ராமரின் காலத்தால் அழியாத கதையில் பாலம் மையமாக இருப்பதால், இது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பா? என்பதை கண்டறிய கடந்த காலங்களில் பல ஆய்வுகள் உள்ளன.
இதற்கிடையே அமெரிக்க நாசாவின் ஐ.சி.இ.சாட்-2 லேசர் அல்டிமீட்டரை கொண்ட செயற்கைக்கோள், கடலின் ஆழமற்ற பகுதிகளில் நீரில் ஊடுருவும் போட்டான் அல்லது ஒளித் துகள்களை தண்ணீரில் ஊடுருவ செய்து, நீரின் அடியில் உள்ள எந்தவொரு கட்டமைப்பையும் படம் எடுக்கும் சக்தி படைத்தது.
இந்த செயற்கைக்கோள் எடுத்த ராமர் பாலம் தொடர்பாக பெறப்பட்ட தரவுகளை பயன்படுத்தி, இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ராமர் பாலத்தின் மிக விரிவான வரைபடத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்திய விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தொலையுணர்வு மையத்தின் ஜோத்பூர் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ராமர் பாலம் பற்றிய பல நுணுக்கமான விவரங்களை கண்டறிய நாசா செயற்கைக்கோள் எடுத்த படங்களை ஆய்வு செய்தனர். அவர்களின் ஆராய்ச்சியின் படி பாலத்தின் 99.98 சதவீத பகுதிகள் ஆழமற்ற மற்றும் மிக ஆழமற்ற நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. குறிப்பாக 29 கி.மீ. நீளம் கொண்ட ராமர் பாலம், கடற்பரப்பில் இருந்து 8 மீட்டருக்கு கீழே இருப்பதை வரைபடமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
மிக ஆழம் குறைந்த பகுதியில் பாலம் இருப்பதால் கப்பல்கள் மூலம் சென்று அப்பகுதியை ஆய்வு செய்ய முடியாது. அத்துடன், மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்திக்கு இடையே 2-3 மீட்டர் ஆழம் கொண்ட 11 குறுகிய கால்வாய்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அத்துடன் புவியியல் சான்றுகள், இந்தியா மற்றும் இலங்கையின் தோற்றம் நெருங்கிய தொடர்புடையது என்று தெரியவருகிறது.
கி.பி. 9-ம் நூற்றாண்டில், பாரசீக கடற்படையினர் இந்த அளவை 'சேது பந்தாய்' அல்லது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் கடலில் உள்ள பாலம் என்று குறிப்பிட்டு உள்ளனர். கடந்த 1480-ம் ஆண்டு வரை பாலம் தண்ணீருக்கு மேல் இருந்ததாகவும், புயலின்போது நீரில் மூழ்கியதாகவும் ராமேசுவரத்தில் இருந்து கோவில் பதிவுகள் தெரிவிக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறினர்.
- உந்துவிசைக்காக 3 நிலைகளிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.
- எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வகையில் மேம்படுத்தப்பட்ட ராக்கெட் வடிவமைக்கப்பட்டது.
சென்னை:
சிறிய வகையிலான மைக்ரோ மற்றும் நானோ வகை செயற்கைக்கோள்களை தயாரித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முன்பு பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் பொருத்தி விண்ணில் ஏவி வந்தது. இதற்கு அதிக பொருட்செலவு ஏற்படுவதால் சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக, 'சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்' (எஸ்.எஸ்.எல்.வி.) ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ தயாரித்தது.
இவை செலவு குறைந்த ராக்கெட்டாகும். தொழில் துறை உற்பத்திக்காக இந்த வகை ராக்கெட்டுகள் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிறிய வகை செயற்கைக்கோள்கள் தேவைக்கு ஏற்ப தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.
தனித்துவமான இந்த வகை ராக்கெட்டுகள் 3 நிலை கட்டமைப்புகளை கொண்டிருக்கும். உந்துவிசைக்காக 3 நிலைகளிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இவை வேகத்தை பயன்படுத்தி துல்லியமான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் சக்தி படைத்தது.
இந்தவகையில் முதல் எஸ்.எஸ்.எல்.வி.டி.-1 ராக்கெட், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த பணி அதன் நோக்கத்தை அடையவில்லை.
எனினும் இஸ்ரோ இந்த ராக்கெட்டில் இருந்து மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொண்டு, அடுத்து வந்த ராக்கெட்டில் அவற்றை பயன்படுத்தவும் திட்டமிட்டது. தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வகையில் மேம்படுத்தப்பட்ட ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. இதை கடந்த பிப்ரவரி 10-ந் தேதி வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் இ.ஓ.எஸ்.-07, ஜானஸ்-1 மற்றும் ஆசாதிசாட்-2 ஆகிய செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக பூமியில் இருந்து 450 கி.மீ. தூரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்டை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இதன் மூலம் தொழில்துறையினருக்கு செலவு குறைந்த ராக்கெட்டுக்களுக்கான கதவு திறக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 44 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருக்கிறது.
தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவுக்கு தலா ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொகுதி முழுவதுமாக 552 வாக்குப்பதிவு எந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் கருவிகள் (வி.வி.பேட்) 276-ம் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று அவர்கள் பணிபுரிய உள்ள இடங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்தார்.
மதியம் 2 மணிக்கு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து, வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்ட வேன்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். அப்போது வாக்குச்சாவடிக்கு தேவையான 66 பொருட்கள் அடங்கிய பையையும் உடன் எடுத்து சென்றார்கள்.
இந்த வாகனங்களில் ஏற்கனவே ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அந்த கருவியின் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக வாக்குச்சாவடிகளுக்கு சென்றடைந்ததா? என்பதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர்.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர 110 வாக்குச்சாவடிகளில் வெளிப்பகுதியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன்நாயர் மேற்பார்வையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் தலைமையில் மத்திய துணை ராணுவப்படையினர் 220 பேர் உள்பட 2,651 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.






