என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது.
- இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சமீப காலங்களில் இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. பல இளம் வயது நபர்கள் இதில் பலியாகின்றனர். இக்கால வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கங்களும், மன அழுத்தம், சமூதாய சூழல் மற்றும் பல காரணங்கள் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
பெரும்பாலும் ஒருவரின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள், அவர்களுக்கு முதலில் செய்யும் ஒரு சிகிச்சை ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி. இதில் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் எந்த இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதில் ஸ்டெண்ட் வைத்து அந்த அடைப்பை அகற்றுவர். இதில் இரத்த குழாயில் எந்தளவுக்கு அடைப்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மருத்துவர் சதவீத அளவை கணக்கிடுவர்.
இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பொதுவாக 100 சதவீத அடைப்பு ஏற்பட்டவர்கள் உயிர்பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த நிலையை புரட்டிப் போடும் வகையில், மருத்துவர்கள் ஒரு மனம் நெகிழும் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.
இதயத்தின் பெரிய இரத்தக்குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட 58 வயதான வழக்கறிஞர் எம்.ஸ்டாலின் மணி என்பவரை மருத்துவர்கள் குணப்படுத்தி உள்ளனர். இதற்காக அவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ரத்தக்குழாயில் "ஸ்டென்ட்" பொருத்தி அடைப்பை சரி செய்துள்ளனர். இதன் மூலம் அவர் மறுவாழ்வு பெற்றுள்ளார்.
பூரண குணமடைந்ததிற்கு பின் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் , மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதியை சந்தித்து சால்வை அணிந்து நன்றி தெரிவித்தார். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூட செய்யத் தயங்கும் அறுவை சிகிச்சையை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து நடத்தி வெற்றி பெற்று இருப்பது பாராட்டை குவித்து வருகிறது.
மேலும், இதுபோன்ற செயல்கள் நடக்கும் போது அரசு மருத்துவனை மீதும் அரசு மருத்துவர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
- பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
வார இறுதி நாளான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை-புறநகர் பகுதியில் இருந்து வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கி வருகின்றன.
வார விடுமுறை தினங்களான நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 265 பஸ்கள், (சனிக்கிழமை) 325 பஸ்கள் இயக்கப்படும்.
இதுபோல, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 65 பஸ்கள், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 15 என மொத்தம் 945 பஸ்கள் இயக்கப்படும்.
இதுதவிர ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்தார்.
- கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்து உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
பொது கலந்தாய்வு 29-ந் தேதி தொடங்குகிறது. 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்து உள்ளனர். அவர்களுக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது.
இதில் 65 மாணவர் கள் 200-க்கு 200 மதிப் பெண் பெற்று இருந்தனர். இது கடந்த ஆண்டை காட்டி லும் குறைவாகும்.
அதேபோல 195 கட்-ஆப் மார்க்கிற்கு மேல் பெற்றவர் களின் எண்ணிக்கை 2,862 ஆகும். கடந்த ஆண்டு 2,911 பேர் அதிக மதிப்பெண் பெற்று இருந்தனர். டாப் மார்க் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாலும் பொறியியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து இருப்பதாலும் டாப் கல்லூரிகளில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.
கட்-ஆப் மார்க் ஒன்று வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளில் கடந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. 4 வளாக கல்லூரிகளிலும் அனு மதிக்கப்பட்ட இடங்களில் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
மருத்துவ கவுன்சிலிங் தேதி இதுவரையில் அறி விக்கப்படவில்லை. அதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2 லட்சம் மாணவர்கள் இதற்காக காத்திருக்க கூடிய நிலைமையை தவிர்க்கும் வகையில் கவுன்சிலங் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
என்ஜினியரிங் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி அண்ணா பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் (இ.சி.இ) படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் தவிர 5 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற அவர் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 598 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.
- கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது.
- வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் ரூ.480 குறைந்து விற்பனையான நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,280-க்கும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,785-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும் கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
சென்னை:
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகு முத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
- இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன்.
- எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன். மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், ரவிச்சந்திரன், மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
#WATCH | Tamil Nadu Chief Minister M K Stalin pays tribute to freedom fighter Maveeran Alagumuthu Kone on the latter's birth anniversary, in Chennai.(Source: TN DIPR) pic.twitter.com/uIFkUzXPL4
— ANI (@ANI) July 11, 2024
- அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கவின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2 நாட்களுக்கு முன்பும் கவின் வீட்டில் சோதனை நடைபெற்றது.
கரூர்:
கரூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டாங்கோவில் மேற்கு, அம்மன் நகரில் உள்ள அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கவின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பும் கவின் வீட்டில் சோதனை நடைபெற்றது.
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- மதுசூதனன் பிராஜாப்தி மற்றும் கியானந்த பிரதாப் கவுத் ஆகியோர் நேற்று விடுமுறையில் இருந்தனர்.
- தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ஒலி எழுப்பியுள்ளார்.
மதுரை:
மதுரை சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமான பணிகள் நடக்கின்றன. இங்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதியை சேர்ந்த மதுசூதனன் பிராஜாப்தி (வயது 30), கியானந்த பிரதாப் கவுத் (22) உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி வேலை செய்தனர்.
இந்தநிலையில் மதுசூதனன் பிராஜாப்தி மற்றும் கியானந்த பிரதாப் கவுத் ஆகியோர் நேற்று விடுமுறையில் இருந்தனர். இதனால், அவர்கள் புளியங்குளம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர். அந்த நேரத்தில், மதுரையில் இருந்து மானாமதுரை வரை தண்டவாள ஆய்வுக்காக ரெயில் என்ஜினின் சோதனை ஓட்டம் இயக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ஒலி எழுப்பியுள்ளார். அதற்குள் அவர்கள் இருவர் மீதும் ரெயில் என்ஜின் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து என்ஜின் டிரைவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், என்ஜின் மோதி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- ஐகோர்ட்டு உத்தரவுப்படி இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொள்வதற்காக ஆன்டோ மதிவாணன் தம்பதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை:
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் (வயது 35). இவர், தனது மனைவி மெர்லினாவுடன் (32) திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இருவரும் தன்னை துன்புறுத்தியதாக வீட்டு பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், கடந்த ஜனவரி மாதம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதன்பின்பு ஐகோர்ட்டு உத்தரவுப்படி இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோருக்கு எதிராக போலீசார் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொள்வதற்காக ஆன்டோ மதிவாணன் தம்பதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் ஆன்டோ மதிவாணன் தம்பதி நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா?
- குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.
மதுரை:
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த சம்பவத்தில் சில மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என ஏராளமானவர்கள் கைதானார்கள். ஆள்மாறாட்டத்துக்கு உதவியதாக இடைத்தரகர்கள் சிலரையும் போலீசார் பிடித்தனர்.
ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 5 ஆண்டுகளாக நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கிடப்பில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தது.
மேலும், தமிழக மாணவர்களுக்காக வடமாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியவர்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமை தெரிவிக்காமல் இழுத்தடிப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் புகார் குறித்தும் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு விவரங்களை தேசிய தேர்வு முகமை வழங்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பின்னர் தேசிய தேர்வு முகமை சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என கோரினார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, 2019-ம் ஆண்டில் நீட் தேர்வு நடந்தபோது வெளிநாட்டில் இருந்த மாணவனுக்காக இங்கு 3 மாநில மையங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மோசடி நடந்து இருக்கிறது. ஆனால் தமிழக நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுத வருபவர்களின் தாலியைக்கூட கழற்றுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா? அப்படி என்றால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.
பின்னர், இதுகுறித்து தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க அவகாசம் வழங்கி, அடுத்த கட்ட விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
- கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரையும் அவர்களது 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது.
- ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சேலம்:
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி சேப்பாக் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மற்ற வீரர்கள் ஒருபுறம் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க இன்னொருபுறம் திருப்பூர் வீரர் கணேஷ் சேப்பாக் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து கொண்டிருந்தார்.
ஆனாலும் இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிரடியாக விளையாடிய கணேஷ் 35 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். சேப்பாக் அணி தரப்பில் கணேசன் பெரியசாமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இப்போட்டியில் 67 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட ப்ரதோஷ் ரஞ்சன் ஆட்டநாடகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.
முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.






