என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, வகுப்பறைகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை.
    • அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய தமிழக அரசோ, தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் கல்விக் கட்டணக் கொள்ளையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் என்று போற்றப்பட்ட கர்மவீரர் காமராசரின் 122-ஆம் பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமகனார் அவர் தான். தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது மட்டுமின்றி, வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.

    ஆனால், தமிழ்நாட்டில் இன்று அரசு பள்ளிகளின் நிலைமை கண்ணீரை வரவழைக்கிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, வகுப்பறைகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை. அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய தமிழக அரசோ, தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் கல்விக் கட்டணக் கொள்ளையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி அரசு பள்ளிகளை அனைவரும் தேடி வந்து கற்கும் கல்விக் கோயில்களாக மாற்றுவதற்கு இந்த நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.
    • CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது.

    தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.

    இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின்

    அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

    இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன்.

    இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

    • 2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.
    • கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு இந்த நிதி உதவி காசோலையாக அனுப்பப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் நலிந்தோருக்கு மருத்துவ உதவி நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. 2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு இந்த நிதி உதவி காசோலையாக அனுப்பப்பட்டது.

    • தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.

    சென்னை:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி, இடைத்தேர்தலை சந்தித்தது. தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சாா்பில் டாக்டா் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணித்ததால், இங்கு மும்முனை போட்டி நிலவியது.

    இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. இதில் 82.47 சதவீதம் வாக்குகள் பதிவாயின. அதாவது மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில், 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர்.

    இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் தபால் ஓட்டுகள் தொடங்கி இறுதி சுற்று முடிவு வெளியாகும் வரைக்கும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவின் கைதான் ஓங்கி இருந்தது.

    இறுதி சுற்றின் முடிவில் தி.மு.க.வை சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார்.

    இதன் மூலம் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். அப்போது அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தி மு க நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதையடுத்து, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா நாளை பதவியேற்கிறார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    • காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை.
    • கல்வி, விவசாயம் துறைகள் மோசமடைந்துள்ளன.

    திருச்சி:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது.

    திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் குணா வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கி பேசியதாவது,


    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதை கண்டு கொள்ளாமல் திமுக அரசு மவுனம் காக்கிறது. தமிழகத்தில் உண்மையான ஜனநாயகம் மலரவில்லை. கல்வி, விவசாயம் துறைகள் மோசமடைந்துள்ளன. விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    காவிரி நதிநீர் என்பது விவசாயிகளின் உயிர் பிரச்சனை. இதில் திமுக அரசு நாடகமாடுகிறது. திமுக கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கும் கர்நாடகாவுக்கு சென்று தண்ணீர் பெற்றுக் கொடுக்க திமுகவினர் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகி கொலை-கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. போலீசாரின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? இப்போது திமுக. அரசை பார்த்து திமுக. ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும் என்று நாங்கள் கூறுகிறோம்.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது அவசியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை பேசும்போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்காததால் திமுகவினர் தைரியமாக உள்ளனர். தமிழகத்தில் 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. 19,260 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. 10 ஆயிரம் பள்ளிகள் சிதிலம் அடைந்துள்ளன. 45 ஆண்டுகளாக வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 50 ஆண்டுகளில் அமையாத, காமராஜரின் சிறப்பான ஆட்சி 2026-ல் அமையும். என்றார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: தமிழக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் காமராஜர். அவர் கட்டிய பள்ளிகள், அணைகள், தொழிற்சாலைகள் தான் இன்றளவும் உள்ளது.


    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது.

    கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் மது விலக்கை நீக்கினார். காமராஜர் நூற்றாண்டுவிழாவை காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தப்படியாக பாமக தான் கொண்டாடியது. என்றார்.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியது:

    மக்கள் விரும்பும் நேர்மையான, ஊழலற்ற, பூரண மதுவிலக்கு ஆட்சியை தர வேண்டும் என்பது எங்கள் கனவு. காமராஜர் நேர்மையாக ஆட்சி நடத்தினார். இப்போதைய ஆட்சியில் ஊழல் தலை விரித்தாடுகிறது. என்றார்.

    முடிவில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி நன்றி கூறினார்.

    • பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். பொறியியல் கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ந் தேதி வரை நடைபெறும். பல்வேறு பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறும்.

    நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.

    அரசு பள்ளி மாணவர்கள் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    கலந்தாய்வு முடிந்த பிறகும் பொறியியல் இடங்கள் காலியாக இருந்தால் வரண்டா அட்மிஷன் நடத்தப்படும். மாணவர்கள் கல்லூரிகளில் நேரடியாக சேர்க்கப்படுவார்கள். பொறியியல் கலந்தாய்விற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே கலந்தாய்வு நடத்தப்பட உள்ள கல்லூரிகள் எண்ணிக்கை எத்தனை, அவற்றில் உள்ள இடங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

    இந்த ஆண்டு புதிய கல்லூரிகள் இடம் பெற்றுள்ளதா? ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் எதுவும் மூடப்பட்டதா? எந்தெந்த கல்லூரிகளில் புதிதாக பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரப்படி ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு இடங்கள் என்பது போன்ற முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த பணி நிறைவு பெற்று இன்று மாலை தொழில்நுட்ப கல்வி ஆணையரிடம் வழங்கப்படும்.

    சீட் மேட்ரிஸ் விவரம் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணைய தளத்தில் வெளியிடப்படும்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் செருதூர் பாலத்தடி அருகில் இறால் பண்ணை வைத்துள்ளார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் இறால் பண்ணையை வந்து பார்த்துள்ளார். அப்போது பண்ணையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பாாத்துள்ளார். அப்போது பண்ணையில் இருந்த ஏரேட்டர் மோட்டார், ஜெனரேட்டர் பேட்டரி, ஏரேட்டர் கேபிள், போக்கஸ் லைட் உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    உடனடியாக இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கீழையூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து இறால் பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில்:-

    இந்த பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகளில் தொடர் திருட்டு நடைபெறுவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    மேலும், இப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆன்மிகப் பயணமானது 6 மண்டலங்களில் வருகின்ற 19.07.2024 அன்று தொடங்குகிறது.
    • சிறப்பு தரிசனத்துடன் உணவு, பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2024-2025-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் மூத்த குடிமக்கள் பயன் பெறும் கட்டணமில்லா ஆடி மாத அம்மன் கோவில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணம் சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 19.07.2024 அன்று தொடங்குகிறது.

    ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்கள் சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர், கற்பகாம்பாள் கோவில், பாரிமுனை, காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில், மாங்காடு, காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்க ளுக்கும்,

    திருச்சி மண்டலத்தில் உறையூர், வெக்காளியம்மன் கோவில், உறையூர், கமலவள்ளி நாச்சியார் கோவில், திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம், மாரியம்மன் கோவில், சமயபுரம், உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்க ளுக்கும்,

    மதுரை மண்டலத்தில் மதுரை, மீனாட்சியம்மன் கோவில், வண்டியூர், மாரியம்மன் கோவில், மடப்புரம், காளியம்மன் கோவில், அழகர்கோவில், ராக்காயியம்மன் கோவில், சோழவந்தான், ஜனகை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும், கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர், கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி, மாரியம்மன், அங்காளம்மன் கோவில், ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், சூலக்கல், சூலக்கல் மாரியம்மன் கோவில், கோயமுத்தூர், தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும்,

    தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோவில், வராகியம்மன் கோவில், தஞ்சாவூர், பங்காரு காமாட்சியம்மன் கோவில், புன்னைநல்லூர், மகா மாரியம்மன் கோவில், திருக்கருகாவூர், கர்ப்பகரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம், துர்கையம்மன் கோவில் ஆகிய கோவில் களுக்கும்,

    திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, பகவதியம்மன் கோவில், முப்பந்தல், இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம், ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோவில், மண்டைக்காடு, பகவதியம்மன் கோவில், குழித்துறை, சாமுண்டியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    ஆடி மாத அம்மன் கோவில் முதற்கட்ட ஆன்மிகப் பயணமானது 6 மண்டலங்களில் வருகின்ற 19.07.2024 அன்று தொடங்குகிறது. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் உணவு, பயணவழிப் பை மற்றும் அந்தந்த கோவில்களின் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை விரைவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க உள்ளது.
    • கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை விரைவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க உள்ளது.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதையடுத்து, நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதனை தொடர்ந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், அவரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    • காவிரி நீர் இல்லாததால் பம்புசெட் மூலம் மட்டுமே சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • கர்நாடகா அரசை நம்பி காவிரி டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்ய தயங்குகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடியில் தலா 5 லட்சம் ஏக்கரை விஞ்சிய நிலையில் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 1.30 லட்சம் ஏக்கருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 500 ஏக்கருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 94 ஆயிரத்து 850 ஏக்கருக்கும், நாகை மாவட்டத்தில் 3250 ஏக்கருக்கு என மொத்தம் 3.20 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே ஆழ்துளை மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கினர். இதுவரை 4 மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி எட்டப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்து விட்டிருந்தால் குறுவை சாகுபடியில் மந்த நிலை ஏற்பட்டு இருக்காது. கடந்த 2 ஆண்டுகளை போல இம்முறையும் இலக்கை விஞ்சி சாகுபடி செய்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது காவிரி நீர் இல்லாததால் பம்புசெட் மூலம் மட்டுமே சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் ஆற்று நீரை மட்டும் நம்பியிருந்த விவசாயிகளால் சாகுபடி செய்ய முடியாததால் வேதனையில் உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சற்று நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் வழக்கம்போல் கர்நாடகா அரசு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட முடியாது. அதற்கு பதிலாக வினாடிக்கு 8000 கனஅடி தண்ணீரை திறந்து விடுவோம் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் வெறும் 43.22 அடி மட்டுமே உள்ளது. அப்படி இருக்கையில் 8000 அடி கனஅடி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடும்போது மேட்டூர் அணை நிரம்பவே 20 முதல் 30 நாட்களுக்கும் மேல் ஆகும்.

    அதுவும் தினமும் தண்ணீர் திறந்து விட்டால் தான். மற்றப்படி எங்கள் மாநிலத்தில் போதிய மழை பெய்யவில்லை என கூறி மிக குறைவான கனஅடி தண்ணீரை திறந்து விட்டால் அணை நிரம்ப அதைவிட கூடுதல் நாட்கள் பிடிக்கும். இது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைப்போம் என்றும், அத்துடன் காவிரிநீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. தற்போது திறந்து விட்டது உபரிநீர் தான்.

    இதனால் கர்நாடகா அரசை நம்பி காவிரி டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்ய தயங்குகின்றனர். மேட்டூர் அணையில் குறிப்பிட்ட அடி வரை தண்ணீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்காக திறந்து விடப்படும். அதற்கு 40 நாட்களுக்கு மேலேயே ஆகும். அந்த தண்ணீர் அடுத்து சம்பா சாகுபடிக்கு பயன்படுத்த தான் உதவியாக இருக்கும். அதுவும் கர்நாடகா அரசு கூறியப்படி தினமும் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே சாத்தியம். எனவே தற்போது குறுவை சாகுபடிக்கு எந்த பயனும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து மேலும் அவர்கள் கூறும்போது, தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும். கோர்ட், காவிரிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை கர்நாடகா அரசு மீறுவது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் நமக்குரிய நீரை தான் கேட்கிறோம். அதுவும் தரவில்லை என்றால் எப்படி. தொடர்ந்து உத்தரவுகளை மீறி விதிமுறைகளை மதிக்காமல் கர்நாடகா அரசு செயல்படுவது கண்டித்தக்கது. நமக்குரிய நீரை பெற்று தர தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு காவிரி நீர் தான் உயிர்நாடி. எனவே உரியநீரை பெற்று தந்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

    • கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி (வினாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். கர்நாடக அரசின் இந்த நியாயமற்ற முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கபினி அணைக்கு வரும் தண்ணீரை இனி ஒரு மணி நேரம் கூட அணையில் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் அணைக்கு வரும் தண்ணீரில் வினாடிக்கு 8000 கன அடி தண்ணீரை திறந்து விட்டு, மீதமுள்ள நீரை தனது பாசனத் தேவைக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறது. இப்போதும் தமிழ்நாட்டை தனது வடிகாலாகத்தான் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, தமிழகத்திற்கு மனமுவந்து தண்ணீர் வழங்கவில்லை.

    கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. இதைக் கண்டிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளை தி.மு.க. அரசு எந்த அளவுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது தான் வருந்தத்தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

    கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த இரு நாட்களுக்குள் கூட்டி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அதையும் கர்நாடகம் மதிக்காவிட்டால், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலை அடிவாரத்தில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் காலை முதலே குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில், அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆற்றுப்படுகையின் ஓரமாக யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பகுதி அருவிகளில் ஆனந்த குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடனே திரும்பி சென்றனர். இன்று காலை முதல் மழை நீடித்து வருவதால் தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×