என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பலரிடம் அவர்கள் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
- மறுநாள் செல்லும் போது போலி தங்க கட்டிகளை கொண்டு சென்றுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர்-பல்லடம் சாலை குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). இவரது மனைவி சுருதி (45). இவர்கள் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல்லடம் பகுதியில் வசித்து வரும் ரவி (41), அவரது மனைவி துர்கா (35) ஆகியோர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தில் ஒருவராக பழகி வந்துள்ளனர்.
இந்த தம்பதியினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சுருதியிடம் " பல்லடம் பகுதியில் குடியிருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மற்றொரு கணவன்-மனைவியிடம் ஒரு கிலோ தங்க கட்டி இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும், அதனை எப்படி விற்பனை செய்வதென்று தெரியாமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உடனே சுருதி அவர்களிடமிருந்து தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்று விடலாம் என்ற பேராசையில் தான் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மளிகை கடை நடத்தி வரும் தம்பதியை ரவியும், அவரது மனைவி துர்க்காவும், பல்லடம் பகுதியில் குடியிருக்கும் ஆந்திர மாநில மற்றொரு தம்பதியான முனுசாமி ( 38), அவரது மனைவி குமாரி (31) வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த தம்பதி தங்கக் கட்டி என்று கூறி 2 கட்டிகளை சக்திவேல் மற்றும் சுருதியிடம் கொடுத்துவிட்டு ரூ.13 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். அந்த கட்டிகளை வீட்டிற்கு கொண்டு வந்த மளிகை கடை தம்பதியினர் பரிசோதித்துப் பார்த்த போது அவை தங்க கட்டிகள் அல்ல என்றும், தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மளிகை கடை தம்பதியினர் உடனடியாக பல்லடம் சென்று தங்க கட்டி என்று கூறி ஏமாற்றிய தம்பதிகளை தேடிப்பார்த்தனர். அப்போது அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சக்திவேல் மற்றும் சுருதி வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநில மோசடி தம்பதிகளை தேடி வந்தனர். இதையடுத்து அவர்களை பிடிக்க திருப்பூர் தெற்கு இணை கமிஷனர் நந்தினி உத்தரவின் பேரில் வீரபாண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் ரவி அவரது மனைவி துர்கா, முனுசாமி அவரது மனைவி குமாரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 கிலோ போலி தங்க கட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் திருப்பூரை சேர்ந்த மேலும் சில பெண்களிடம் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை சந்தித்து பேசும் அவர்கள் உண்மையான தங்க கட்டிகளை கொடுத்து அதனை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். அந்த தங்க கட்டிகளை பெண்கள் வாங்கி பார்த்து ஆய்வு செய்யும் போது தங்க கட்டிகள் உண்மையானது என தெரியவரவே அவர்கள் தங்க கட்டிகளை வாங்க முன்வந்துள்ளனர்.
பின்னர் மறுநாள் செல்லும் போது போலி தங்க கட்டிகளை கொண்டு சென்றுள்ளனர். பெண்கள் அதனை உண்மை என்று நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி ஏமாற்றமடைந்துள்ளனர். இப்படி பலரிடம் அவர்கள் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
- தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
- நாளடைவில் இவர்கள் சமூகவிரோதிகளாக மாறுகின்ற அபாய சூழல் உள்ளது.
திருப்பூர்:
இந்து மக்கள் எழுச்சி பேரவை, இந்து மக்கள் புரட்சி படை, இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மது பாட்டில்களுடன் வந்து மதுவை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இளம் வயது சிறுவர்கள் முதல் வயதாகிய முதியவர்கள் வரை மதுவின் கோரப்பிடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கூலித் தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வருமானத்தை மதுகுடிக்கும் பழக்கத்திற்கே செலவு செய்யும் வண்ணம் உள்ளனர்.
நாளடைவில் இவர்கள் சமூகவிரோதிகளாக மாறுகின்ற அபாய சூழல் உள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளால் தினசரி விபத்துகளும் அதனால் பல உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றது. இதனால் மது குடிப்பவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே மாநில அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தி தமிழக முழுவதும் உடனடியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.
- வட மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. வட மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லேசான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்ப நிலை 31 முதல் 32 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 26 முதல் 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
- பூட்டை உடைத்து பீரோவில இருந்த தங்க நகைகளை திருடி சென்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கண்ணண்டஹள்ளி அருகே உள்ள கெட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சித்ரா (வயது 60). இவரது கணவர் ராமச்சந்திரன். இவர் பெங்களூர் பகுதியில் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சித்ரா கெட்டம்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று சித்ரா அவரது கணவரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்றார் . அதனை அறிந்த மர்ம நபர்கள் அன்று நள்ளிரவு சித்ராவின் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணத்தை திருடி சென்றனர்.
மறுநாள் காலை சித்ராவுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவரது உறவினர்கள் அவருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சித்ரா வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம், 750 கிராம் வெள்ளி நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சித்ரா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கெட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவுரப்பன் (வயது 65). இவருடைய மனைவி தவமணி(60). இந்த தம்பதியினருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.
இவர்கள் பெங்களூர், ஓசூர் பகுதியில் சுவிட் கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக வீட்டில் இருந்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வயதான தம்பதியினர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அங்கு வந்த மர்ம நபர்கள் இவர்கள் இருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு, அருகே உள்ள மற்றொரு அறையின் பூட்டை உடைத்து பீரோவில இருந்த தங்க நகைகளை திருடி சென்றனர்.
மறுநாள் காலை கவுரப்பன் எழுந்து கதவை திறந்து பார்த்தபோது கதவின் வெளியே பூட்டு போடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அக்கம்,பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து வெளியே வந்து அருகே இருந்த அறையை திறந்து பார்த்தபோது போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 14 3/4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கவுரப்பன் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், தடவியல் நிபுணர்கள் வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் இப்பகுதியில் ஒரே நாளில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை பணம், திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.
- பாம்பன் மீனவர்கள் 25 பேரும் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 1-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதிகாலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் சுற்றி வளைத்தனர்.
பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து பாம்பன் மீனவர்கள் 25 பேரும் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- சாரல் மழை காலை முதல் குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு பெய்து வந்தது.
- தளி, அமராவதி பகுதியில் காலை முதல் மாலை வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை, அமராவதி, மடத்துக்குளம் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை உடுமலை பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குளிர் வாட்டி வதைத்தது. குளிர்ந்து காற்று வீசியது. சாரல் மழை காலை முதல் குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு பெய்து வந்தது.
இதே போன்று தளி, அமராவதி பகுதியில் காலை முதல் மாலை வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்தது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
- முன்னோர்கள் வழிபாடு செய்தும், மலையை சுற்றி தேர் ஓட்டியும், பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வந்தனர்.
- சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் இல்லாததன் காரணமாக சிறப்பாக பூஜைகள் நடத்த முடியாமல் இருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் அறிவொளி நகர், ராக்கியாபட்டி, ஈட்டி வீரம்பாளையம், முட்டியங்கிணறு, ஊஞ்சப்பாளையம், பரமசிவம்பாளையம் மற்றும் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சியில் உள்ள செல்வமுத்துகுமாரசாமி ஆலயத்தில் எங்கள் முன்னோர்கள் வழிபாடு செய்தும், மலையை சுற்றி தேர் ஓட்டியும், பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வந்தனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் இல்லாததன் காரணமாக சிறப்பாக பூஜைகள் நடத்த முடியாமல் இருந்தது. 2 வருடங்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் சேர்ந்து சிறப்பாக வழிபாடு செய்து வணங்கி வருகிறோம். இந்த கோவில் அமைந்துள்ள இடத்தை வேறு எந்த அரசு பயன்பாட்டிற்கும் வழங்காமல் இந்த கோவிலில் தொடர்ந்து எங்களை வழிபாடு செய்ய அனுமதிக்குமாறு தங்களை கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
- சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெரம்பூர் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதல் நிலைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் சம்பவதன்று அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஆடு மேய்க்க வந்துள்ளார். அந்த சிறுமிக்கு, திருநாவுக்கரசு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து அவரை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ்காரர் திருநாவுக்கரசை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் போலீஸ்காரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெற வேண்டும்.
- வணக்கத்தினையும், மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளபதிவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்தும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தான் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று கருதுபவர்கள் சான்றோர்கள். இதற்கும் ஒருபடி மேலே சென்று, "தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெற வேண்டும்" என்ற பெருநோக்கோடு ஊர்கள் தோறும் தொடக்கப்பள்ளி, பேரூர் தோறும் நடுநிலைப் பள்ளி, நகரங்கள் தோறும் உயர்நிலைப் பள்ளி எனக் கொண்டு வந்து தமிழகத்தில் கல்விக் கண்ணைத் திறந்து வைத்த கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது வணக்கத்தினையும், மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் செய்த தியாகங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று கூறியுள்ளார்.
தான் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று கருதுபவர்கள் சான்றோர்கள். இதற்கும் ஒருபடி மேலே சென்று, "தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெற வேண்டும்" என்ற பெருநோக்கோடு ஊர்கள் தோறும் தொடக்கப்பள்ளி, பேரூர் தோறும் நடுநிலைப் பள்ளி, நகரங்கள் தோறும் உயர்நிலைப் பள்ளி எனக்… pic.twitter.com/mTt2dXUh4M
— O Panneerselvam (@OfficeOfOPS) July 15, 2024
- தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
- அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.
மதுரை:
முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்புகளும் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பெருமையாக உள்ளது., பெருந்தலைவர் காமராஜர் சிலையை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் எனது தலைமையில் ரூ.5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் மரணம், கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதில் எப்படி தி.மு.க.வினர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும்.?
சட்ட ஒழுங்கு இவ்வளவு சீர்கேட்டு இருக்கும்போது சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியாது என கூறுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்.?
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொண்டு வந்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவர்களின் இரு பெரும் ஆட்சியை நிலைநாட்டியது ஜெயலலிதா தான். அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வேகாத வெயிலில் ஓட்டு கேட்டோம்.! ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா.? குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர்.
சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர் இதில் அ.தி.மு.க.வினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம், பல இடங்களில் 2-வது இடம் பெற்றோம். இது தொடர்பாக சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொது செயலாளர் ஆலோசனை தான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும் இல்லை.
மதுரை அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியும், இப்போது தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்.! மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மதுரையில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மோடிக்கு வாக்களித்தனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு ரூ.. 8000 கோடிக்கு மேல் நிதியை வழங்கினோம். ஆனால் மதுரை மக்கள் ஏன் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடவில்லை என தான் எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் கேட்டார்.
நாங்க என்ன காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவா? நாங்களும் கூவி கூவித்தான் ஓட்டுக் கேட்டோம். வேகாத வெயிலில் சரவணனுக்காக ஓட்டு கேட்டோம், கழகத்தினர் பம்பரமாக வேலை பார்த்தார்கள். இதற்கு மேல் எப்படி வேலை பார்க்க முடியும்?
குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்ற அடிப்படையில் மோடிக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். சிறுபான்மையினர் ராகுலை விரும்பினார்கள். இதற்கு இடையில் நாங்கள் அடிபட்டுவிட்டோம்.
மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தான் வாக்கு குறைந்துள்ளது. சிறுபான்மை மக்கள் இன்னும் எங்களை நம்பவில்லை"
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்ற திருவேங்கடத்திற்கு கை விலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார் என காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இது போன்ற களங்கம் ஸ்டாலின் ஆட்சியில் தான் ஏற்படும்., கள்ளச்சாராயம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.
- வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து வீட்டிற்குள் போலீசார் சென்றனர்.
- வீட்டிற்குள் இருந்து கமலேஸ்வரி, சுகந்த், நிஷான் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கருகி இறந்து கிடந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 70). ஓய்வு பெற்ற மருந்தாளுனர். இவரது மனைவி கமலேஸ்வரி (60). இவர்களுக்கு சுகந்த் (40) என்ற மகனும், இஷான் (8) என்கிற பேரனும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ்குமார் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. மேலும், வீட்டிலிருந்து புகை வந்ததாக கூறப்படுகின்றது. இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து, நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து வீட்டிற்குள் போலீசார் சென்றனர். அப்போது, வீட்டினர் வெளியில் ரத்த கரைகள் படிந்திருந்தது.
வீட்டிற்குள் இருந்து கமலேஸ்வரி, சுகந்த், நிஷான் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கருகி இறந்து கிடந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இறந்து கிடந்த 3 பேரின் உடலை மீட்பதற்கு நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார் நமது முதலமைச்சர்.
- காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது.
சென்னை:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் நோக்கி அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர்-பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று. கடைக்கோடி மனிதர்களின் முன்னேற்றம் என்ற ஒருமித்த சிந்தனையோடு, பெருந்தலைவர் காமராஜர்- முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடையே இருந்த அன்பும்-நட்பும் நாடறிந்தவை.
விடுதலைப் போராட்டம்- மாநில முன்னேற்றத்துக்கான ஆட்சி நிர்வாகம் ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் என்று உழைத்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்தார்.
இன்று காமராஜரின் பிறந்த நாளில், உலகமே போற்றி பின்பற்றுகிற காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார் நமது முதலமைச்சர். இதனால் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது.
கல்வி வளர்ச்சி நாளையொட்டி விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம், நம் மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். பெருந்தலைவர் காமராஜரின் பணிகளை என்றும் போற்றுவோம். அவரது புகழ் ஓங்கட்டும்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.






