என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
- சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 9-வது நாளாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.
இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கிற மழையை பொறுத்து இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
நேற்றுமுன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இது சற்று குறைந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியானது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக நீடித்து வருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தும், குறைந்தும் வருவதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 9-வது நாளாக நீடிக்கிறது.
இதற்கிடையே காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிட கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பழிவாங்குவதற்காக கத்தியுடன் மறைந்திருந்தது தெரிந்தது.
- இரண்டரை அடி நீளமுள்ள பெரிய பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
ராயபுரம்:
பாரிமுனை ராஜாஜி சாலை, கடற்கரை ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு கத்தியுடன் சுற்றிய 3 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்களான தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சாமுவேல் (3-ம் ஆண்டு), கும்மிடிப்பூண்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லோகேஷ் (2-ம் ஆண்டு), மீஞ்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (3-ம் ஆண்டு) என்பது தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகையாக மாறியது. இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக கத்தியுடன் மறைந்திருந்தது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து இரண்டரை அடி நீளமுள்ள பெரிய பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கைதான மாணவர்கள் லோகேஷ், சாமுவேல், ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேர் மீது ஆயுத தடைச் சட்டம் உள்பட 3 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது பற்றி போலீசார் மாணவர்களின் பெற்றோருக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
- கார் தலைகுப்புற கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.
- காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஆலம்பாடி ஊராட்சியில் ஆவின் பால் கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி வருபவர் பேபி (வயது 45). இவரது மகள் ரஞ்சனி பிரியா (25). கல்லூரி படிப்பு முடித்து விட்டு அரசு வேலை தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் பேபி , மகள் ரஞ்சனி பிரியா மற்றும் உறவினர் சிவக்குமார், பால்பண்ணையில் டிரைவராக பணிபுரியும் பெரியசாமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்றிரவு திருச்செந்தூரில் இருந்து காங்கயத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை பெரியசாமி ஓட்டினார்.
இன்று காலை காங்கயம் கருக்கம்பாளையம் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.
காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ரஞ்சனி பிரியா மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் பேபி, சிவக்குமார் ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது.
- 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன.
பொன்னேரி:
பழவேற்காட்டில் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை கடற்கரையில் வைத்து செல்வது வழக்கம்.
அரங்ககுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் படகில் சென்று மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது மீன்பிடி வலைகளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கிருந்த மீன்பிடி வலைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மீனவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வலைகள் முழுவதும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் யாரேனும் வலைகளுக்கு தீவைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்து நாசமான வலைகளின் சேதமதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது, பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன. பழவேற்காடு திருமலை நகர், கோட்டை குப்பம் பகுதியில் கடந்த மாதத்தில் மீன்பிடி வலைகள் எரிந்ததாகவும் இது குறித்து மீன்வளத்துறை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் பழவேற்காடு பகுதியில் மர்ம நபர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் மீன்பிடி வலைகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- மத்திய பட்ஜெட்டை கண்டித்து 40 எம்.பி.க்களும் போராட்டம் நடத்தப் போகிறார்களாம்.
- தாமரை மலர்ந்தே தீரும்.
சென்னை:
வடசென்னை மாவட்ட பாஜக சார்பில் திருவொற்றியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டை கண்டித்து 40 எம்.பி.க்களும் போராட்டம் நடத்தப் போகிறார்களாம். அது மட்டும் தான் அவர்களால் முடியும். ஆனால் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தால் உரிமையோடு பல திட்டங்களை கேட்டு பெற்றுத் தந்திருக்க முடியும்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எவ்வளவு ஆட்டம் ஆடினீர்கள்? விலைவாசி உயர்வு என்றீர்கள்? மின் கட்டணம் உயர்வு, பால் கட்டணம் உயர்வு என்றீர்கள் ஆனால் இன்று நீங்கள் பல மடங்கு உயர்த்தி இருக்கிறீர்களே இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்.
தி.மு.க.வின் வேஷம் நிச்சயம் 2026 தேர்தலில் கலையும். சூரியன் உதிக்கிறதோ இல்லையோ? இலைகள் துளிர்கிறதோ இல்லையோ? கைகள் உயர்கிறதோ இல்லையோ? தாமரை மலர்ந்தே தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் பலர் வந்திருந்தனர்.
- பெயரளவுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக மனுக்களை அளிக்க வந்த பொது மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவம்பட்டி கிராமத்தில் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவம்பட்டி ஊராட்சி, கண்ணன்டஅள்ளி ஊராட்சி, நாகம்பட்டி ஊராட்சி மற்றும் பொம்மே பள்ளி ஊராட்சி ஆகிய 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் பலர் வந்திருந்தனர்.
சுமார் 10 அடி உயரம் கொண்ட கட்டிடத்தில் படிக்கட்டில் ஏற முடியாமல் சில மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு மேலே ஏறிச் சென்று மனு கொடுத்தனர்.
மேலும் சில மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகள் ஏற முடியாமல் திணறியதால், அவர்கள் மனுக்களை அளிக்காமல் திரும்பி சென்றனர். மேலும் முதியவர்களும் பலர் படிகட்டுகள் ஏற முடியாமல் தாங்கள் கொண்டு வந்த மனுவை அளிக்காமல் திரும்பி சென்றனர். பெயரளவுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக மனுக்களை அளிக்க வந்த பொது மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, இதெல்லாம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என மெத்தனப்போக்கில் பதில் அளித்தார்.
- 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.
- தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன.
சென்னை:
அதி நவீன சொகுசு மற்றும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலான வந்தே பாரத் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழகத்திலும் 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
2018 முதல் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரித்து வரும் ஐ.சி.எப். இதுவரையில் 70 ரெயில்களை தயாரித்து உள்ளது. 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் சுமார் 75 ஆயிரம் பெட்டிகளை தயாரித்துள்ளது.
இந்த நிதியாண்டில் 1,536 எல்.எச்.பி. பெட்டிகள் மற்றும் 650-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் உட்பட 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.
தற்போது 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கு பெட்டிகள் தயாராக உள்ளன. அவற்றை விரைவில் இயக்கவும் எந்த நகரங்களுக்கு அவை செல்கிறது என்பதும் ரெயில்வே வாரியம் தீர்மானிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 பெட்டிகளை கொண்ட இந்த ஆரஞ்சு நிற ரெயில்களின் இறுதி ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுபற்றி ஐ.சி.எப். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களை ரெயில்வே வாரியம் முடிவு செய்யும்.
தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன. எதிர் காலத்தில் 20 மற்றும் 24 பெட்டிகளுடன் இயக்கப்படும். வந்தே பாரத் மெட்ரோவின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது என்றார்.
- ஆடி கிருத்திகை திருவிழா 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.
- காவடிக்கான கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை திருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:-
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பா ர்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளன.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், கண்காணிப்பு காமிராக்கள் 160 இடங்களிலும், பொதுதகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட உள்ளன.
கூடுதல் பஸ்கள் இயக்கவும், 4 தற்காலிக பஸ்நிலையங்களும், சிறப்பு ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆடிக்கிருத்திகை விழாவுக்கு வருகை தரும் 50 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தில் சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவுக்கு 200 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி 27-ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு கட்டணம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதேபோல் பக்தர்கள் கொண்டு வரும் காவடிக்கான கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், சந்திரன் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- திருச்சி, திண்டுக்கல் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன.
- நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நெல்லை:
8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 3-வது கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.
நேற்றுடன் 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 6 ஆட்டத்தில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
திருச்சி, திண்டுக்கல் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அதே நேரத் தில் திண்டுக்கல்லுக்கு இன்னும் 2 ஆட்டம் இருக்கிறது. திருச்சி அணிக்கு ஒரே ஒரு போட்டியே உள்ளது.
நெல்லை 5 புள்ளியுட னும், திருப்பூர் தமிழன்ஸ் 4 புள்ளியுடனும், மதுரை 3 புள்ளியுடனும், சேலம் 2 புள்ளியுடனும் உள்ளன.
டி.என்.பி.எல். போட்டியின் 23-வது ஆட்டம் நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அதே நேரத்தில் நெல்லை அணி 5 புள்ளியுடன் இருக்கிறது. திருப்பூர் அணி 4 புள்ளியுடன் உள்ளது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
- தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டி, மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது.
- தேர்ந்தெடுக்கப்பட்டும் ஆராய்ச்சிப் படிப்பை தொடங்க முடியாமலும், உதவித்தொகை பெற முடியாமலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முனைவர் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் உதவித் தொகை வழங்குவதற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் படி தகுதியான மாணவர்கள் போட்டித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பின் 4 மாதங்களாகியும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்ச்சிக் கடிதம் இன்று வரை வழங்கப்படவில்லை.
அதனால் தேர்ந்தெடுக்கப்பட்டும் ஆராய்ச்சிப் படிப்பை தொடங்க முடியாமலும், உதவித்தொகை பெற முடியாமலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மாணவர்களின் ஆராய்ச்சி சார்ந்த இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டி, மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது. முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தேர்ச்சிக் கடிதங்களை வழங்கி, அவர்கள் குறித்த காலத்தில் முனைவர் பட்டப்படிப்பில் சேருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.
- ஆணையத்தின் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இன்னொருபுறம், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க மேலும் ஓராண்டு காலம் தேவை என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. அதற்குள் வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 12 மாதங்கள் கூடுதல் காலக்கெடு கோருவது தமிழ்நாடு அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் காலம் தாழ்த்தும் நாடகமாகவே தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக உச்சநீதிமன்றம் வகுத்துத் தந்த பாதை தெளிவாக கண்களுக்குத் தெரிகிறது. அந்தப் பாதையில் பயணிப்பதற்கு பதிலாக இடது புறத்தில் திரும்பலாம் என தமிழக அரசும், வலதுபுறத்தில் திரும்பலாம் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மீண்டும், மீண்டும் தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடாது.
வன்னியர்களின் வரமான இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர்களும் தயாராகவே உள்ளனர். அதற்கு இடம் கொடுக்காமல், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
- அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பயணிப்பதே நல்லது என்கிற கருத்தையும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
சென்னை:
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டமோதல் நீடித்துக் கொண்டே செல்கிறது.
அ.தி.மு.க.வில் இருந்து பன்னீர்செல்வத்தை முழுமையாக ஓரம் கட்டி விட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தலைமையேற்று நடத்தி வருகிறார். இவரது இந்த தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வையே தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வத்தை போலவே சசிகலாவும் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டு தனித்து செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வரும் அவர் நிச்சயம் எனது தலைமையில் அ.தி.மு.க. ஓன்றுபடும் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.
சசிகலாவின் இந்த சுற்றுப்பயணமும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. அதே நேரத்தில் டி.டி.வி. தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி கட்சியை நடத்தி வருகிறார். இப்படி அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள இந்த மூன்று பேரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ள போதிலும் எடப்பாடி அதனை கண்டு கொள்ளாமலேயே உள்ளார்.
இந்த நிலையில்தான் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் எம்.பி.யாகி விடலாம் என்று கனவு கண்டார். அதுவும் பலிக்காமல் போய்விட்டது. இதன் காரணமாக அரசியலில் அவர் திசை தெரியாமல் பயணித்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது தெரியவில்லை. சசிகலாவுடன் கைகோர்த்து அவர் செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவை விரைவில் சந்திப்பேன் ஓ.பி.எஸ். கூறியுள்ள நிலையில் நாளை மறுநாள் 26-ந்தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் முன்னணி நிர்வாகிகளின் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார். எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
அதில் செல்வம் தனது எதிர்காலம் பற்றி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தது போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அந்தக் கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என்பதே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சிலரின் விருப்பமாக உள்ளது.
அதே நேரத்தில் பா.ஜ.க.வுடனான இந்த பயணம் வெற்றி பயணமாக இருக்காது. அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பயணிப்பதே நல்லது என்கிற கருத்தையும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வத்தை சேர்க்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதால் சசிகலாவுடன் கைகோர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முக்கிய முடிவுகளை பன்னீர்செல்வம் எடுக்க இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.






