என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.
    • தமிழ் புதல்வன் திட்ட பணிகளை தீவிரப்படுத்திய தமிழக அரசு.

    6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்.

    ஆகஸ்ட் மாதம் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ள இத்திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ் புதல்வன் திட்ட பணிகளை தீவிரப்படுத்திய தமிழக அரசு கூறியிருப்பதாவது:-

    தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்.

    தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இந்த தகவல் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.

    அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை எடுக்க வேணடும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    அந்த பகுதியில் ஆதார் மையம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    • போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.

    செங்குன்றம்:

    புழல் அடுத்த ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.

    இந்த இடத்தை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றி ஏற்கனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

    அதிகாரிகள் வருவதை கண்டதும் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதம் செய்தனர். வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் உள்பட 8 பேர் தங்களது உடலில் மண்எண்ணை மற்றும் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், போதிய அவகாசம் அளித்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை அதிகாரிகள் ஏற்கவில்லை. பொது மக்களிடம் கோட்டாட்சியர் இப்ராகிம், உதவி பொறியாளர் தயாளன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை ஜே.சி.பி.எந்திரத்தால் உடைத்து அகற்றும் பணி தொடங்கியது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.
    • அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள்

    2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.

    ஆனால், மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் விமர்சனம் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், அரசை பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்" என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களே…

    "தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்" என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

    அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

    அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதி.
    • துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய் குறித்து விரைவில் தகவல் சொல்கிறேன் என்றார்.

    2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.

    இந்த நிலையில் மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் மாநிலத் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,"மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் எங்களுக்கு 25 எம்.பிக்கள் வென்று கொடுத்திருக்க வேண்டும்" என்றார்.

    பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறாமல் இருந்ததற்கு இதுதான் காரணமா ? என கேட்டதற்கு காரணம் என இல்லை, சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் எனக் கூறிய அன்புமணி சமாளித்துக் கொண்டார்.

    மேலும் பேசிய அவர், " இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் எவ்வளவு ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவாக சொல்கிறேன். தகவல் சேகரித்து கொண்டு இருக்கிறோம். துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய் குறித்து தகவல் சொல்கிறேன்" என்றார்.

    • இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள், 175 படகுகளை விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் 9 பேர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவித்திடக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    அக்கடிதத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது என கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

    இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள், 175 படகுகளை விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கர்நாடக பகுதிகளில் மழை பெய்வதால் இப்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சென்னை:

    காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர முடியாது என்று கர்நாடக அரசு பிடி வாதமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 11-ந் தேதி கூடிய போது தமிழகத்துக்கு 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங் காற்று குழு பரிந்துரை செய்திருந்தது.

    ஆனால் 20 நாட்களுக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் வழங்க முடியாது என்று சொன்ன கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தமிழகத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி இருந்தார்.

    இப்படிப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32-வது கூட்டம் இன்று மதியம் கூடியது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தார் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு கர்நாடகம் ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீர் ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய நீரின் அளவு பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

    கர்நாடக பகுதிகளில் மழை பெய்வதால் இப்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் போதிய தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்காது. எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும் ஆணையத்தில் வலியுறுத்தினார்கள்.

    இந்த கூட்டத்தில் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி, மாநில நீர்வளத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்கள் மாநில நிலவரங்களை எடுத்துக் கூறினார்கள்.

    • தோழிகள் 3 பேரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மதுரையில் இருந்து புறப்பட்டனர்.
    • பெண்ணுக்காக உருவான தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

    அலங்காநல்லூர்:

    மதுரை தல்லாகுளம் ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் மகன் காதர் இஸ்மாயில் (வயது 29). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் முருகன், ராஜா உசேன் ஆகியோரும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் காதர் இஸ்மாயிலின் நண்பரான சரவணக்குமார் என்பவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சசிகலா (24) என்பவரை காதலித்து வருகிறார். நேற்று சசிகலாவுக்கு பிறந்த நாளாகும். இதனை கொண்டாடுவதற்காக அவரது தோழிகளான சிக்கந்தர்சாவடியை சேர்ந்த வினோதினி, அண்ணா நகரை சேர்ந்த பபிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

    இதையடுத்து தோழிகள் 3 பேரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மதுரையில் இருந்து புறப்பட்டனர். அந்த காரில் அவர்களுடன் பரவை பொற்கூடல் நகரை சேர்ந்த முருகன் (32), கே.புதூர் அல் அமீன் நகரை சேர்ந்த ராஜா உசேன் (24) ஆகியோரும் சென்றிருந்தனர். தனது காதலி பிறந்த நாளுக்கு முருகன், ராஜா உசேன் சென்றதை அறிந்த சரவணக்குமார் கடும் ஆத்திரம் அடைந்தார்.

    இதற்கிடையே டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முருகன், ராஜா உசேன் ஆகிய இருவரும் சரவணகுமாரின் காதலியான சசிகலாவுடன் மதுரை-நத்தம் சாலையில் காஞ்சாரம் பேட்டை பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்திற்கு சென்றிருந்தனர். இதையடுத்து சரவணக்குமார் தனது நண்பர் காதர் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு காதலி சென்றிருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

    முன்னதாக டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முருகன், ராஜா உசேன் இருவரும் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததோடு, சசிகலா மற்றும் அவரது தோழிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த சரவணக்குமார், அவர்களை தட்டிக்கேட்டதோடு, என்னுடைய காதலியை நீ ஏன் காரில் அழைத்து வந்தாய் என்று கேட்டு வாக்கு வாதம் செய்தார். அவருக்கு ஆதரவாக காதர் இஸ்மாயிலும் முருகனை தட்டிக் கேட்டார்.

    இந்தநிலையில் உணவகத்தை பூட்ட வேண்டும் என்று கூறிய அதன் நிர்வாகத்தினர் தகராறில் ஈடுபட்டவர்களை வெளியே செல்லுமாறு கூறினர். அதே சமயம் பெண்ணுக்காக உருவான தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரையொருர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதர் இஸ்மாயிலை சரமாரியாக குத்தினார்.

    தடுக்க சென்ற சரவணக்குமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்களை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே காதர் இஸ்மாயில் பரிதாபமாக இறந்தார். சரவணக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண்ணுக்காக நடந்த மோதலில் டிராவல்ஸ் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி.
    • புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.

    டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ராணிப்பேட்டையில் அமைகிறது. இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை முதல் முறை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்.

    தற்போது வரை ஜாகுவார் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை பிரிட்டன் ஆலையில் உற்பத்தி செய்து, அதன் பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து பூனே ஆலையில் வைத்து அசெம்பில் செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ்-இன் ஜாகுவார் லேண்ட் ரோவர் ராணிப்பேட்டையில் அமைய இருக்கும் புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.

    இதுதவிர ஏராளமான இதர கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி செய்ய இருக்கிறது. இதில் ஹைப்ரிட் மாடல்களும் அடங்கும்.

    டாடா மோட்டார்ஸ்-இன் புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் இந்த ஆலை அமைய இருக்கிறது. இதற்காக ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.
    • தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

    சென்னை:

    ரேஷன் கார்டுகள் மூலம் சலுகை விலையில் தமிழக மக்களுக்கு தேவையான அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பருப்புகள், பாமாயில் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

    இதற்கிடையே தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் புதிய 'ஸ்மார்ட் கார்டு'கள் வழங்கும் முறையில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. விண்ணப்பித்த 30 நாட்களில் புதிய 'ஸ்மார்ட் கார்டு'கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதே வேளையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

    2021-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் 2 கோடியே 10 லட்சமாக இருந்தது. அதன்பின் 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்து 2 கோடியே 20 லட்சம் ஆனது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன.

    தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

    புதிய கார்டுகள் வழங்கும் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது ஆய்வு பணிகள் தொடங்கியது. இதையடுத்து புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • காவலில் எடுத்து ஜாபர்சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • 2 பேரும் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் கடந்த மார்ச் மாதம் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

    டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியானது.

    இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஜாபர்சாதிக் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையில் ஜாபர்சாதிக்கின் வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோதமாக அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதன் அடிப்படையிலேயே ஜாபர்சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர்சாதிக்கிடம் அங்கு சென்றே அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    தற்போது காவலில் எடுத்து ஜாபர்சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜாபர்சாதிக்கின் மனைவி அமீனா பானு, தம்பி முகமது சலீம் ஆகிய 2 பேர் மீதும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜாபர்சாதிக்கின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்தே இருவர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

    அமலாக்கத் துறையினரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அமீனா பானுவும், தம்பி முகமது சலீமும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு மீதான விசாரணை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன் ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதால் அதன் மீதான முடிவு தெரியும் வரையில் 2 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

    29-ந்தேதி ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணையின் போது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அமீனா பானு, முகமது சலீம் இருவரையும் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த நடவடிக்கைக்கு பயந்து 2 பேரும் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 °-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°- 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 28-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • இறக்குமதி வரி குறைக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.
    • தங்கத்தின் மீதான மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.44 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை திடீரென்று அதிகரிக்க தொடங்கியது. கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஒரே ஆண்டில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.11 ஆயிரம் அதிகரித்திருப்பது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ஆனாலும் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் விலை உயர்வு கூடுதல் சுமையாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிகரித்து வந்ததை கண்டு நகை வியாபாரிகளும், நகை வாங்குவோரும் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.54,600-க்கு விற்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் ஒரு கிராம் ரூ.275 குறைந்து ரூ. 6,550-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு மேலும் ரூ.480 குறைந்தது. இதனால் இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.51,920-க்கு விற்கப்படுகிறது. இறக்குமதி வரி குறைக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.335 குறைந்துள்ளது.


    இதையடுத்து தங்கத்தின் மீதான மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர். மேலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் இன்று வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நகைக்கடைகளில் இன்று தங்க நகைகள் விற்பனை அதிகரித்தது.

    இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    மத்திய அரசு வருவாயை பெருக்குவதற்காக இதற்கு முன்பு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதனால் அப்போது தங்கம் விலை அதிகரித்தது. இதையடுத்து தங்க நகைகள் விற்பனையும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இறக்குமதி வரி 9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் விலையும் 9 சதவீதம் குறைந்துள்ளது.

    இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை இந்த அளவிலேயே நீடிக்கும். இப்போதைக்கு விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தால் மட்டுமே தங்கம் விலை இனி மாற வாய்ப்பு உள்ளது. அதுவரை இந்த விலைதான் நீடிக்கும்.

    தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இன்று காலையில் இருந்தே நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. தங்க நகைகள் விற்பனையும் அதிகரித்தது. இன்று மட்டும் தங்க நகைகள் விற்பனை 10 சதவீதம் அதிகரித்தது.

    இனிவரும் நாட்களில் தங்கம் விலை இதே நிலையில் நீடிக்கும் நிலையில் தங்க நகைகள் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தர, ஏழை, எளிய மக்கள் அதிகளவில் தங்க நகையை வாங்குவார்கள்.

    தற்போது ஆடி மாதம் என்பதால் நகைக்கடைகளில் சிறப்பு விற்பனையும் நடந்து வருகிறது. இதன்படி தங்க நகைகள் வாங்குபவர்களுக்கு விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆடி மாதத்தில் தங்க நகைகள் விற்பனை களை கட்டும்.

    அடுத்த மாதம் ஆவணி மாதம் திருமண சீசன் என்பதால் இன்னும் 2 மாதங்களுக்கு நகைகள் விற்பனை நன்றாக இருக்கும். இதனால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைத்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் வெள்ளி மீதான இறக்குமதி வரியும் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி விலையும் 2 நாட்களில் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்துள்ளது. இதனால் வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனையும் இன்று அதிகரித்துள்ளது.

    பிளாட்டினம் மீதான இறக்குமதி விலையும் 15.4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாட்டினம் நகைகளும் அதிகமாக விற்பனையாகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×