என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி நீர் கிடைக்க வேண்டும் - அதிகாரிகள் வலியுறுத்தல்
- கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- கர்நாடக பகுதிகளில் மழை பெய்வதால் இப்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சென்னை:
காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர முடியாது என்று கர்நாடக அரசு பிடி வாதமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 11-ந் தேதி கூடிய போது தமிழகத்துக்கு 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங் காற்று குழு பரிந்துரை செய்திருந்தது.
ஆனால் 20 நாட்களுக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் வழங்க முடியாது என்று சொன்ன கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தமிழகத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32-வது கூட்டம் இன்று மதியம் கூடியது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தார் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு கர்நாடகம் ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீர் ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய நீரின் அளவு பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.
கர்நாடக பகுதிகளில் மழை பெய்வதால் இப்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் போதிய தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்காது. எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும் ஆணையத்தில் வலியுறுத்தினார்கள்.
இந்த கூட்டத்தில் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி, மாநில நீர்வளத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்கள் மாநில நிலவரங்களை எடுத்துக் கூறினார்கள்.






