என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.
- மொத்தம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.
திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 44 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.
தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 45-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.
மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், "1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது."
"25 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள்."
"கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கேன்."
"என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்," என்று கூறினார்.
- தூங்கி கொண்டிருந்த மர்மநபரை எழுப்பி விசாரணை.
- போதையில் படுத்து தூங்கிய கொள்ளையன்.
கோவை:
கோவை அருகே உள்ள காட்டூர் ராம்நகர் நேரு தெருவை சேர்ந்தவர் ராஜன்(வயது53). இவர் பாதாம் பிஸ்தா பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
இவரது மனைவி கதிர்நாய க்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். ராஜன் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு, கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்று விட்டார்.
இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர், அவர் சென்ற பின்னர் வீட்டின் அருகே வந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்.
பின்னர் வீட்டில் நகைகள், பணம் உள்ளதா என ஒவ்வொரு அறையாக தேடி பார்த்துள்ளார். அப்போது ஒரு அறையில் பொருட்களை தேடிய போது, எதிர்பாராத விதமாக கால்தவறி கீழே விழுந்து விட்டார்.
ஏற்கனவே கொள்ளையடிக்க வருவதற்கு முன்பு மது குடித்து விட்டு, வந்ததால் போதை தலைக்கேறிய அவர், கீழே விழுந்ததும், நாம் எதற்காக வந்தோம் என்பதை மறந்து அப்படியே அங்கேயே அசந்து தூங்கி விட்டார்.
இதற்கிடையே வெளியில் சென்றிருந்த ராஜன், சில மணி நேரங்களில் வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்த அவர், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக தனது நண்பர் ஒருவருக்கும் தகவல் தெரிவித்து, அவரை துணைக்கு அழைத்துக் கொண்டு பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தது யாராக இருக்கும் என தேடினர்.
அப்போது வீட்டில் உள்ள தரையில் ஒருவர் தூங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ராஜன் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, பெருமாள்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த மர்மநபரை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கருமத்தம்பட்டி அடுத்த பழைய பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது.
அவர் வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்ததும் கொள்ளையடிக்க முடிவு செய்து, கதவை உடைத்து உள்ளே நுழைந்ததும், வீட்டிற்குள் பொருட்களை தேடி பார்த்த போது, தவறி கீழே விழுந்ததில் அப்படியே தூங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கொள்ளையடிக்க சென்ற வீட்டில் போதையில் படுத்து தூங்கிய கொள்ளையனால் பரபரப்பு ஏற்பட்டது.
- மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் பேச உள்ளார்.
- காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக இந்த ஆணையங்கள் அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார். அவர் இன்று மாலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து பேச உள்ளார்.
காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து அவர் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவிரியில் உரிய நீரை திறந்து விட, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
- நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என கவர்னர் அறிக்கையாக கேட்டுள்ளார்.
சென்னை:
அங்கீகாரம் பெறுவதற்காக கல்லூரிகளில் முறைகேடாக பல பேராசிரியர்கள் பணியாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
2022-2023ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என கவர்னர் அறிக்கையாக கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமமும் விளக்கம் கேட்டுள்ளது.
- தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை கடந்த 2 தினங்களாக குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்தது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ6,430-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 89 ரூபாய்க்கும் கிலோவுக்கு ரூ.3000 குறைந்து பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3160 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
- தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தவிர மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தவிர மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் எனவும் சுதந்திர தினத்திற்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் எனவும் கூறியுள்ளார்.
3. Mettur dam will have chance to touch 120 ft (full level) before the Independence day.
— Tamil Nadu Weatherman (@praddy06) July 25, 2024
4. KTCC (Chennai) has chance of some isolated rains today evening / night.
5. Most other places of TN will be dry expect those districts near the Western Ghats
- சிலை வடிக்கும் பணியில் சிற்ப கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- கையில், ராட்சத அரிவாளுடன் கருப்பணசாமி நிற்கும் கோலத்தில் சிலை வடிக்கப்படுகிறது.
பழனி:
பழனி கிரிவீதி பகுதியில், தனியார் சிற்பக்கூடம் உள்ளது. இங்கு பல்வேறு சாமி சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிற்பக் கூடத்தில் 24 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன கருப்பண சாமி சிலை செய்யப்பட்டு வருகிறது. சிலை வடிக்கும் பணியில் சிற்ப கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மதுரையில் உள்ள ஒரு கோவிலுக்கு கருப்பணசாமி சிலை கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கரூரில் இருந்து சுமார் 70 டன் எடையில் ராட்சத கருங்கல் கொண்டு வரப்பட்டு 8 மாதங்களாக சிலை செய்யும் பணி நடக்கிறது. சுமார் 30 டன் கற்கள் பெயர்த்தது போக, மீதமுள்ள 40 டன் எடையில் பிரமாண்டமாக சிலை உருவாகிறது. கையில், ராட்சத அரிவாளுடன் கருப்பணசாமி நிற்கும் கோலத்தில் சிலை வடிக்கப்படுகிறது.
ஆடிப்பெருக்கு அன்று கோவில் நிர்வாகத்திடம் சிலை ஒப்படைக்கப்பட உள்ளது என்றனர்.
- சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார்.
- திரவுபதி முர்மு அவர்களின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நம் இந்திய திருநாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் தனது பணிகளை தொடங்கியிருக்கும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெருமைமிகு நம் பாரத தேசத்தில் 15-வது குடியரசுத்தலைவராக பெண் குடியரசுத்தலைவர் தேர்வானதும் உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்துகொண்டிருக்கிறது.
சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார். நம் முதல் குடிமகளாக திகழும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
- துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 41 ரன்களை விளாசினார்.
டிஎன்பிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு நடைபெற்ற 23 ஆவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
பேட்டிங்கை தொடங்கிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களை குவித்தது. இந்த அணியின் ராதாகிருஷ்ணன் 35 பந்துகளில் 50 ரன்கள், துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 41 ரன்கள் மற்றும் எஸ் கணேஷ் 25 பந்துகளில் 36 ரன்களை விளாசினர். நெல்லை சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளையும், இமானுவேல் செரியன் மற்றும் சோனு யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது. கடைசி ஓவர் வரை சென்ற போட்டியில் திருப்பூர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நெல்லை அணிக்கு ரித்திக் ஈஸ்வரன் 35 பந்துகளில் 59 ரன்கள், அருண் கார்த்திக் 36 பந்துகளில் 51 ரன்கள், சோனு யாதவ் 23 பந்துகளில் 40 ரன்களை எடுத்தனர். திருப்பூர் அணிக்கு நடராஜன் 4 விக்கெட்டுகளையும், ராமலிங்கம் ரோகித் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
- பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
- கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.
கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜருக்கு ஆயிரம் அடி உயர சிலை நிறுவ வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் நாட்டிற்கு செய்த நற்பணிகளை போற்றும் வகையில் அவருக்கு கன்னியாகுமரியில் ஆயிரம் அடி உயரத்திற்கு சிலை ஒன்றினை நிறுவ வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பினார்.
பாராளுமன்றத்தின் 377-வது விதியின் கீழ் இன்று கோரிக்கையை சமர்ப்பித்த விஜய்வசந்த் எம்.பி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விகண் திறந்த வள்ளல் கர்மவீரர் காமராஜர் நாட்டுக்கு செய்த சேவைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் ஆயிரம் அடி சிலை ஒன்றினை நிறுவ வேண்டும். இந்தச் சிலை பெருந்தலைவரின் புகழை பரவ செய்வதுடன் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.
இந்த சிலை அமையும் பட்சத்தில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அது ஈர்த்து உள்ளூர் வணிகத்தை பெருக செய்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் இதனால் பயனடைவார்கள்.
மேலும் கட்டுமான தொழில் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் இந்த சிலையை நிறுவிய பின்னர் வணிக ரீதியாகவும், வேலை வாய்ப்புகள் பெருகும் வகையிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு கன்னியாகுமரியின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியை நாம் காண வழி வகை செய்யும்.

மேலும் இந்த சிலையின் கீழ் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றினையும் அமைக்க வேண்டும்.
இந்த சிலை அமைக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் கடல் சூழலையும், கடல் உயிரினங்களையும் பாதிக்காத வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின் இதனை கட்ட வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜரின் இணை இல்லா சரித்திரத்தை உலகெங்கும் உள்ளவர்கள் அறியும் வகையில் இந்த சிலையை நிறுவ அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- டாஸ் வென்ற நெல்லை பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 189 ரன்களை குவித்தது.
நெல்லை:
டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் முதல் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
துஷார் ரஹேஜாவுடன் ராதாகிருஷ்ணன் இணைந்தார். இந்த ஜோடி ஆரம்பமே அதிரடியில் இறங்கியது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் பவர் பிளேயில் திருப்பூர் அணி 77 ரன்களை சேர்த்தது.
ரஹேஜா 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 13 பந்தில் 41 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ராதாகிருஷ்ணன் அரை சதம் எடுத்து 50 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கணேஷ், முகமது அலி 50க்கு மேற்பட்ட ரன்களைச் சேர்த்தனர். முகமது அலி 35 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 189 ரன்களைக் குவித்துள்ளது.
இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.
- வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
- 2 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்.
ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அந்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உள்ளிட்டோர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், 2 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் நீட்டித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த நீதிபதியிடம் போலீசார் அனுமதி கேட்டனர்.
போலீசார் அனுமதி கேட்ட நிலையில், ஒரு நாள் மட்டும் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.






