என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் யானை மடுவு, அட்டுக்கல், குப்போபாளைம், நரசீபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன.

    அவ்வாறு நுழையும் யானைகள், விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் வனத்தை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள், வள்ளியம்மன் கோவில் வீதி அருகே உள்ள ஆர்.வி.எஸ். தோட்டம் பகுதிக்குள் நுழைந்தது.

    இந்த தோட்டத்திற்குள் உள்ள வீட்டில் பாண்டியம்மாள் என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர் தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தார்.

    தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், வீட்டின் அருகே சென்றதும், அங்கிருந்த சிமெண்ட் சீட்டை உடைத்து தூக்கி எறிந்தது. மேலும் வீட்டின் மேற்கூரையை தூக்கி எறிந்து சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்ட, பாண்டியம்மாள் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தார். அப்போது 2 யானைகள் வெளியில் நின்றிருந்தன. இதை பார்த்ததும் அச்சத்தில் உறைந்த அவர்கள் சத்தம் எழுப்பினர்.

    இவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், வெளியில் யானை நிற்பதை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டிற்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து அங்கு முகாமிட்டு இருந்த 2 யானைகளையும் வனத்துறையினர் சைரன் எழுப்பி, அங்கிருந்த விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே நின்றது.

    தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 யானைகளில் ஒரு யானை ஆவேசம் அடைந்து, முன்னேறி வந்து, தன்னை விரட்டுபவர்களை துரத்தியது. இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் யானை அருகில் செல்ல பயந்து, சற்று தூரத்தில் நின்றபடி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியை விட்டு நகர்ந்து சென்ற யானை, அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது. அப்போது அங்குள்ள வெள்ளிங்கிரி என்பவரது வீட்டின் ஜன்னல் கதவை பிடித்து இழுத்து சேதப்படுத்தியதுடன், அருகே இருந்த மின் கம்பத்தையும் இடித்து கீழே தள்ளியது. பின்னர் அங்கிருந்து சென்று, அடிவார பகுதியில் நின்று கொண்டன.

    தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் யானைகள் அடர்ந்த வனத்திற்குள் செல்ல மறுத்து, ஊருக்குள் நுழைந்து வருகின்றன.

    யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மின் விளக்குகள் சரியாக எரியாததால் இரவில் வெளியில் வரவும் அச்சமாக உள்ளது. எனவே இங்கு சுற்றி திரியும் யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    • ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று கோரிமேடு, சாரதா கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், அத்வைத ஆசிரம ரோடு உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் சாக்கடை கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள், சாலைகளில் நடந்து சென்றவர்கள் தவியாய் தவித்தனர்.

    மேலும் திடீரென பெய்த மழையால் பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் தாமதத்திற்கு பின்பே வீடு திரும்பினர். குறிப்பாக சாரதா கல்லூரி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியதால் வாகன ஓட்டிகள், மற்றும் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 15 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 1.3, ஏற்காடு 3.6, வாழப்பாடி, ஆனைமடுவு 2, கெங்கவல்லி 4, தம்மம்பட்டி 11, ஏத்தாப்பூர் 3, கரியகோவில் 3, எடப்பாடி 1.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 46.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • தீ விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
    • விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதமானது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் எஸ். ராமலிங்கபுரம் சாலையில் மருத்துவ துணி சலவை செய்யும் ஆலை நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் ஜெயபாலன் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இயங்கி வரும் மருத்துவ துணி உற்பத்தி ஆலைகளில் இருந்து கிரே கிளாத் எனப்படும் மருத்துவ துணியை வாங்கி தனது ஆலையில் அதனை சலவை செய்து வெண்மையாக மாற்றி வழங்கி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவில் ஆலையில் கிரே கிளாத் பண்டல்கள் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரே அறையில் 100-க்கும் மேற்பட்ட பண்டல்கள் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் ஒரு பகுதியில் பற்றிய தீ மள மளவென அனைத்து பகுதிகளிலும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

    தீ விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமணலிங்கேஸ்வரர் கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது.
    • அமராவதி அணையும் கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவது தொடர்கிறது. நேற்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களில் இடி தாக்கியது. இதில் 5-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது. திருப்பூர் அங்கேரிபாளையம் பாலு இன்னோவேஷன் பகுதியில் மழைநீர் சாலையில் முழங்கால் அளவுக்கு சென்றது. இதனால் அப்பகுதியில் இருந்த மின்மாற்றி மற்றும் அந்த வழியாக வந்த சைக்கிள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் தண்ணீரில் பாதிஅளவிற்கு மூழ்கின.

    அவினாசி பச்சாம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த பழமை வாய்ந்த புங்கன், இச்சிவேம்பு உள்ளிட்ட 5 மரங்கள் வேறுடன் முறிந்து விழுந்ததில் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பச்சாம்பாளையம் பகுதி இருளில் மூழ்கியது.

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து அங்கு வந்திருந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பி வேலிகள் மீது மோதியது. இதில் பல இரும்பு தூண்கள் வளைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    அமணலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மொடக்குப்பட்டி ரவி தலைமையில் கோவில் ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை திருமூர்த்தி மலை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாலாறு, தோனி ஆறு உள்ளிட்ட வற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகள் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பாலாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    இன்று காலை 6 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 58.71அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு காண்டூர் கால்வாய் மற்றும் பாலாற்றின் மூலமாக 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போன்று அமராவதி அணையும் கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. அதன் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கனமழை பெய்வதற்கான சூழல் நிலவி வருவதால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    • 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.53,360-க்கு விற்பனையானது.
    • சென்னையில் வெள்ளி விலை இன்று உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.53,360-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் வெள்ளி விலை இன்று உயர்ந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.92-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • ராஜீவ் காந்தி பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்.
    • தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலி.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-


    இந்தியாவை மறுமலர்ச்சியின் பாதையில் வழிநடத்தி, நவீன இந்தியாவை உருவாக்கிய எழுச்சி நாயகன் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்.


    இந்திய சுதந்திர போராட்ட வீரரும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலி.

    • வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்.
    • திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06115) நாளை (புதன்கிழமை), 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4-ந்தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும்.

     இதேபோல் மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06116) வரும் 22, 29 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு சென்றடையும்.

    இந்த ரெயில்கள் நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது.
    • சென்னை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.

    திருவாரூர்:

    திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் தி.மு.க. பங்கேற்றது குறித்து அரசு தான் பதில் சொல்ல வேண்டும். எங்களை பொறுத்த அளவு தி.மு.க. தேனீர் விருந்தில் பங்கேற்காது என்று தான் கூறினார்கள். தி.மு.க. அரசும், கவர்னரும் தொடர்ந்து முரண்பாட்டுடன் இருக்க வேண்டாம் என்பதற்காக தேனீர் விருந்தில் கலந்து கொண்டதாக கூறுகிறார்கள்.

    கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசிடம் கேட்டதற்கு உடனடியாக ஒத்துக் கொண்டார்கள். அதே வேளையில், தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது.

    சொத்து வரி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.

    பாஜக.வுடன் யார் கூட்டணியில் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லாரியில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
    • போலீசார் பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்பாகம் போலீசார் மற்றும் சிப்காட் போலீசார் இணைந்து தூத்துக்குடி மாநகரில் 3-வது மைல் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது லாரியின் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியின் பின்புறம் இருந்த சரக்கை சோதனை செய்தனர். அதில் பேரல்களில் பயோ டீசல் கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த டீசலுடன் லாரியை தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

    லாரியில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் லாரியை ஓட்டிய டிரைவர், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கணக்க நாடார்பட்டி மேல அரியபுரத்தை சேர்ந்த லெட்சுமணன் என்பவரது மகன் சங்கர் (வயது 25) என்பதும், கிளீனர் கடையம் அருகே பால்வண்ணநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் தவமணி (24) என்பதும் தெரியவந்தது.

    மேலும் தவமணி டிப்ளமோ படித்துவிட்டு லேப்டாப் சர்வீஸ் செய்யும் பணி செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் லாரியில் சுமார் 48 பேரல்களில் 9 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் கடத்தி கொண்டு வந்தது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பேரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பயோ டீசல் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

    • ராஜதந்திரத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சரை அழைத்து வந்து விட்டீர்கள்.
    • நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு கேட்டிருக்கலாம்.

    மதுரை:

    மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

    அண்ணாமலை அரசியல் முதிர்ச்சியின்றி பேசி வருகிறார். திமுக - பாஜக இடையிலான உறவை ரகசியமாக வைக்க வேண்டாம். வெளிப்படையாக அறிவித்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள். மக்களுக்கு அல்வா கொடுக்காதீர்கள்.

    வெள்ள நிவாரணம் கொடுக்க வரவில்லை, ஆறுதல் சொல்ல வரவில்லை, அவர் தமிழ்நாட்டுக்கு வர என்ன தகுதி இருக்கிறது... யோக்கியதை இருக்கிறது என்று எல்லாம் கேட்டது யார்? முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்.

    பாதுகாப்புத்துறை அமைச்சரை அழைத்து வந்து விட்டீர்கள். மக்களின் வளர்ச்சிக்கு ராஜதந்திரத்துடன் பீகாரில் நிதிஷ்குமார் எப்படி நிதி வாங்கினார், ஆந்திராவில் எப்படி நிதி வாங்கினார்.

    அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு கேட்டிருக்கலாம்.

    வெள்ள நிவாரண நிதி தரவில்லை, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று கேட்டிருக்கலாம்.

    அதையெல்லாம் விட்டுவிட்டு எங்க அப்பாவை திமுக-காரன் கூட இப்படி பாராட்ட மாட்டான் என்று ஒரு முதலமைச்சர் சொல்வது எப்படி ஏற்றுக்கொள்வது.

    தமிழ்நாட்டின் உரிமையை அடமானம் வைத்து உங்கள் அப்பாவின் பெருமையை புகழ்பாடுவதால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்பது தான் மக்களின் கேள்வி என்று கூறினார்.

    • 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • செல்போன் மற்றும் கம்யூட்டர்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.

    சென்னை:

    சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, முதல் கட்டத் திட்டமாக விமானநிலையம்-விம்கோ நகா், சென்னை சென்டிரல் - பரங்கிமலை என 2 வழித்தடங்களில், 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதைத்தொடர்ந்து, 2-ம் கட்டமாக ரூ,63 ஆயிரத்து 246 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரையில் 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வரையில் 4-வது வழித்தடத்திலும், மாதவரம்- சோழிங்கநல்லூா் வரையில் 5-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. டிரைவர் இல்லாத 62 மெட்ரோ ரெயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் நடந்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் அடுத்த மாதம் (செப்டம்பர்) சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் இயக்குவதற்காக இந்த டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் அடுத்த மாதம் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட முதல் ரெயில் செப்டம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாகவும், பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக இடங்களும் அமைக்கப்படுகிறது. இந்த ரெயில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். ஒரு ரெயிலில் ஆயிரம் பேர் வரையில் பயணம் செய்யலாம்.

    அந்த வகையில் இடவசதியுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. செல்போன் மற்றும் கம்யூட்டர்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ள தண்டவாளங்களில் ரெயில் இயக்கம் குறித்த அதிநவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளது. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் பூந்தமல்லி - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம்.

    சென்னை:

    தமிழக ரெயில்வே திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கேள்விகள் எழுப்பி நேற்று கடிதம் எழுதினார். அதற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தனது எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் பதிலளித்து வெளியிட்ட பதிவு வருமாறு:-

    தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை முந்தைய ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சராசரி ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நிலம் என்பது மாநிலப் பொருளாகும். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். எங்கள் தரப்பில் இருந்து, நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டிற்கு 2 அடி எடுத்து வைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×