என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புழுக்கத்துடன் வியர்வை உடலில் இருந்து வெளியேறும்.
- காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் காற்றின் வடிவத்தை மாற்றியதால் சென்னையில் பகல் வெப்பம் அதிகரிக்கும்.
ராயலசீமாவில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள கொமோரின் பகுதிகள் வரை சூறாவளி சுழற்சியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அல்லது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றை முழுவதுமாக கிழக்கு திசைக்கு மாற்றியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு நகரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். புழுக்கத்துடன் வியர்வை உடலில் இருந்து வெளியேறும் என்று தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
மத்திய தமிழகத்தின் உள் பகுதிகளில் பள்ளத்தாக்கு கோடுகள் இருப்பதால் பல உள்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை குறைவாக இருக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கலாம். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதே வேளையில் வெளிச்சம் வர வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
- லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.
- வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சமூகநீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும்.
லேட்டரல் என்ட்ரி (நேரடி நியமனம்) என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். தகுதிமிக்க பட்டியல்-பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும். ஒன்றிய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்பு வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நியாயமான, சமத்துவமான முறையில் பதவிஉயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும்.
தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற 'கிரீமி லேயர்' முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கிரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட-நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- பதப்படுத்தாமல், சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
- 1½ டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.
அதில் பார்சல் பெட்டியில் ஆட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் வந்த குழுவினர் அந்த ரெயிலில் இருந்த இறைச்சியினை பரிசோதனை செய்தனர்.
அப்போது முறையாக பதப்படுத்தாமல், சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
3 நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியை சென்னைக்கு கொண்டு வந்து ஓட்டல்களில் சப்ளை செய்ய இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 1½ டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் கெட்டுப்போன அந்த இறைச்சியை பரிசோதனை செய்த பிறகு தான் அதன் தன்மை தெரிய வரும் என்று தெரிவித்தனர்.
- கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீடு கட்ட ரூ.3 1/2 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது.
- பொன்னை மேம்பாலம் வருகிற 30-ந்தேதி திறந்து வைக்கப்படும்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலந்துகொண்டு 300 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைய வழங்கி பேசினார்.
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீடு கட்ட ரூ.3 1/2 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது. இதற்க்கு சிலர் ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் கொடு என கேட்பதாக தகவல் வருகிறது. எவனுக்கும் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டாம். அப்படி யாராவது கேட்டால் புகார் அளியுங்கள் அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரம் பேசி வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம். எவனுக்கும் நீங்க ஒத்த பைசாவை தர கூடாது. ரூ.1000 உதவி தொகை வராதவர்கள் குறித்து பட்டியல் தயார் செய்து வருகிறோம். அவர்களுக்கெல்லாம் விரைவில் வரும். பொன்னை மேம்பாலம் வருகிற 30-ந்தேதி திறந்து வைக்கப்படும்.
சேர்காட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையும் அடுத்த மாதம் திறக்கப்படும். காட்பாடி தொகுதியில் இல்லாது என எதுவுமே கிடையாது.
எனது தொகுதிக்கு நான் எதுவும் செய்யும் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு கீழே உள்ள தலைவர், கவுன்சிலர் போன்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும். நான் மட்டும் யோகியனாக இருந்தால் போதாது.
எதிரிகளே இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள். எனக்கு உண்ண உணவாக, மூச்சுக்காற்றாக, ரத்த ஓட்டமாக இருப்பது எனது கழக தொண்டர்கள் தான். அவர்களிடம் நான் சில நேரம் கோபித்துக்கொள்வேன் அது என் உரிமை.
எல்லாம் துரைமுருகன் பார்த்துக்கொள்வார் என மகிழ்ச்சியோடு போங்க, நான் பார்த்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் அ.தி.மு.க. கொண்டு வந்தது. அதற்கு தி.மு.க. லேபிள் ஒட்டியதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கருணாநிதி நாணயம் வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிச்சாமி விவரம் இல்லாமல் பேசுகிறார்.
இதே போலத்தான் அண்ணாவுக்கு வெளியிட்டார்கள், எம்.ஜி.ஆருக்கு வெளியிட்டார்கள் அப்போதெல்லாம் எடப்பாடிக்கு கண் தெரியவில்லையா?.
கருணாநிதியை மாற்றுக் கட்சி எண்ணம் உடையவர்கள் கூட வந்து பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் மறைந்துவிட்ட தலைவர்களை கூட தாறுமாறாக பேசுகிறார்கள். இதற்கெல்லாம் காழ்ப்புணர்ச்சி காட்டக்கூடாது. தென்பெண்ணை பாலாறு இணைப்பு என்பது என்னுடைய லட்சியம் அதற்காக எப்படியாவது முயற்சி எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
- கடந்த 3 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 693 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
சென்னை:
இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சுப் பணியில் உதவியாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
172 உதவியாளர் பணியிடத்திற்கு வழங்கப்பட்ட பணிநியமன ஆணைகளையும் சேர்த்து கடந்த மூன்று ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 693 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் விதமாக 7 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஆலோசகர் பணியிடத்திற்கு உளவியல் முதுகலை பட்டம், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் முதுநிலை பட்டயம், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் பட்டயப்படிப்பு படித்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்புதிய ஆலோசகர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு புனர்வாழ்வு மற்றும் மருத்துவ நிலையத்தில் பணிபுரிவர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மர்ம நபர்கள் 4 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள அத்திபள்ளம் பகுதியில் பாம்பாறு ஆற்றங்கரையோரம் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.
இந்த முருகன் கோவிலில் ஆடி 1-ந் தேதி திருவிழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை உள்ளிட்ட சிறப்பு நாட்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் இருந்த உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் இருந்தது. வழக்கம் போல் நேற்று இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றனர். அப்போது கோவிலுக்குள் சத்தம்வரவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த பார்த்தபோது, மர்ம நபர் 4 பேர் பணம் திருடியது தெரியவந்தது. உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார்.மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது பிடிப்பட்ட நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், சிங்காரப்பேட்டை அருகே உள்ள மாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பூவரசன் (வயது 23) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கைதான பூவரசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்க சமயத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கோவிலில் நடைபெற இருந்த திருட்டு சம்பவத்தை தடுத்ததால், உண்டியல் பணம், நகைகள் திருடு போகமால் தப்பியது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாய்க்கால் சீரமைப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
- கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. வாய்க்கால் சீரமைப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
எனவே நீர் திறப்பை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர். தொடக்கத்தில் 250 கன அடியாக இருந்த தண்ணீர் திறப்பு தற்போது 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நேற்று மாலை 57-வது மைலைக் கடந்த நிலையில் 47 ஆவது மைல் பகுதியாக உள்ள நல்லாம்பட்டியில் உள்ள மழைநீர் வடிகால் பாலத்தில் நேற்று மாலை விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சிறிது சிறிதாக அதிகரித்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது.
தொடர்ந்து விரிசல் அதிகரித்தால் மழைநீர் கால்வாய் உடையும் அபாயம் இருப்பதாக கருதி அப்பகுதி விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டது.

வாய்க்காலில் கசிவு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
இது குறித்து மழைநீர் வடிகால் விரிசலை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் இரவோடு இரவாக தொடங்கினர்.
இதுக்கு அடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், நல்லாம்பட்டி வாய்க்காலுக்கு அடியே மழை நீரும் வாய்க்கால் கசிவு நீரும் வடிந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை உள்ளது.
இந்த சுரங்கப்பாதையின் வழியாக மழை பெய்யும் போதும் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும் போதும் வழக்கமாக தண்ணீர் வெளியேறுவது வழக்கம் தான். இதைத்தான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதாக சிலர் வதந்தி கிளம்பி விட்டிருக்கிறார்கள். தற்போது சுரங்கப்பாதைக்குள் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை கண்டுபிடித்து அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை நல்லாம்பட்டி அருகே ஒட்டங்காடு பகுதியில் கீழ்பவானி கால்வாயின் 47வது மைலில் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள கசிவு பகுதியை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த மழைநீர் வடிகால் மிகவும் பழமையானது.இந்தாண்டு மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணிக்கு போதிய அவகாசம் இல்லை. அடுத்தாண்டு இந்த வடிகாலை சீரமைக்க திட்டம் உள்ளது.

கீழ் பவானி வாய்க்காலில் இருந்து வெளியேறும் கசிவு நீர்
இதில் எப்போதும் தண்ணீர் செல்லும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தாண்டு சற்று கூடுதலாக செல்வதாக சந்தேகம் எழுந்ததால் இடையில் நிறுத்தி சீரமைக்கும் பணியானது முடிக்க வேண்டும் என்பதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
தற்காலிகமாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்விற்கு குறைந்த பட்சம் 15 நாட்கள் ஏற்படும் என்பதால் தற்காலிக பணிகள் மூலம் இந்த போகத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால் உள்ளது. அவற்றில் எந்தவித பாதிப்பும் இல்லை. இனி தண்ணீர் செல்லும் போது மழைநீர் வடிகாலில் கசிவு ஏற்பட்டால் அங்கும் தற்காலிக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழ்பவானி கால்வாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதன் கசிவு நீரை பயன்படுத்தும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் கூடுதலாக கசிவு சென்றுகொண்டிருக்கிறது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 3-வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2-வது தனி செயலாளராக சண்முகம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3-வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் தனி செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமை செயலாளராக ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனி செயலாளர் உமாநாத்துக்கு வணிக வரி, பொதுத்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை, தொழில் துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, விழிப்புப்பணி, நீர்வளத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை, கூட்டுறவு, வீட்டு வசதி, முதல்வரின் அலுவலக நிர்வாகம், சட்டத்துறை என 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்ட அனு ஜார்ஜிற்கு 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பயண ஏற்பாடுகள், கால்நடை, பள்ளிக்கல்வி, விளையாட்டு, ஆதிதிராவிடத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிபதிக்கு 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆண்டுக்கு 2 தடவை ‘டெட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும்.
- தேர்வை நடத்துவது குறித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதி முறைகளின் படி, ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
2024-ம் ஆண்டு 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகால அட்ட வணையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஏப்ரல் மாதம் முடிவடைந்து உள்ள நிலையில் 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை.
இதனால், 'டெட்' தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பி.எட். பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது.
அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியமும் ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வை நடத்த வேண்டும். இப்போது தனியார் சுயநிதி பள்ளிகளில் கூட 'டெட்' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைத் தான் பணிக்கு தேர்வு செய்கிறார்கள்.
அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான போட்டித் தேர்வை எழுத 'டெட்' தேர்ச்சி அவசியம். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு விரைந்து தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது குறித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
- மொட்டை கிருஷ்ணன் குடும்பத்துடன் வெளிநாடு தப்பி ஓட்டம்.
- மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் போனில் பேசியதாகவும் போலீசார் விசாரணை.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன். இவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.
மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், மேலும் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு நெல்சன் மனைவி மோனிஷா தொடர்ந்து அவருடன் போனில் பேசியதாக போலீசார் விசாரணை நடத்திய பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
- குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
- மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி உள்ளது.
சென்னை:
குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையாக கடந்த 14-ந் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி வழிகாட்டி நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் அதன்பேரில் தமிழகத்திலும் பொது சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை தொற்று விமான பயணிகள் மூலம் மற்ற நாடுகளிலும் பரவ வாய்ப்பு இருக்கிறது.
எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகளை கண்காணிக்க சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் முகாம் தொடங்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இல்லாவிட்டாலும் தொடர் பயணங்கள் மூலம் வரும் பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள்.
ஸ்கேனிங், ஸ்கிரீனிங் சோதனை நடத்தப்படும். குரங்கம்மையின் அறிகுறியான கொப்புளங்கள் கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.
பயமுறுத்தும் இந்த தொற்று பரவிய விதம் விசித்திரமானது. 1958-ல் டென்மார்க் தலைநகராமான கோபன் ஹேகனில் உள்ள ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடையே இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் எம்பாக்ஸ் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

1970-ல் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதல் முதலாக மனிதர்களிடம் இந்த வகை வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது.
சின்னம்மை, பெரியம்மை நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் இந்த வைரஸ் பெரியம்மை குடும்பத்தை சேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினார்கள்.
இந்த வைரஸ் மனிதர்களுக்கு எப்படி பரவியது என்பது பற்றி ஆய்வு செய்ததில் எலி, அணில்களிடம் காணப்பட்ட இந்த வைரஸ் அவை மனிதர்களை பிராண்டு வது மற்றும் அவற்றை சமைத்து சாப்பிடுவது மூலம் பரவியது தெரியவந்தது.
தொற்று ஏற்பட்டு 5-ல் இருந்து 21 நாட்களில் இதன் அறிகுறிகள் உடலில் வெளிப்படும். அம்மை நோய் வந்தால் எப்படி உடல் முழுவதும் கொப்புளங்கள் தோன்றுமோ அதே போல் தான் வரும்.
கூடவே காய்ச்சல், இருமல், உடல் வலியும் இருக்கும். அந்த கொப்புளங்கள் அம்மை நோயை போலவே 4 வாரங்களுக்குள் காய்ந்து விழுந்து விடும்.
கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உடையவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தாக்குதல் தீவிரமாக இருக்கும்.
நுரையீரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், பார்வை குறைபாட்டையும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.
மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவும். என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த நோய் தொற்று ஏற்பட்டவரின் எச்சில் மற்றும் விந்து வழியாக பரவும், உடல் முழுவதும் தோன்றிய கொப்புளங்கள் காய்ந்து முற்றிலுமாக குணமாகும் வரை அடுத்தவருக்கு பரவலாம் என்கிறார்கள்.
கடந்த காலங்களில் இந்த நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைந்த சதவீதத்தில் இருந்துள்ளது. ஆனால் கடந்த ஓராண்டில் காங்கோ நாட்டில் 18 ஆயிரத்து 245 பேருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டது. அதில் 919 பேர் உயிரிழந்துள்ளார்கள். இறப்பு 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த நாட்டுக்கு அருகில் இருக்கும் கென்யா, புருண்டி, ருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகளில் இந்த தொற்று பரவி வருகிறது.
குரங்கம்மை கண்டவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இடைவெளி, முகக்கவசம், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள்.
- பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறும்.
- பெண்கள் நன்கு கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் அறிவுரைகளை வழங்கினார்.
பண்ருட்டி:
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பல்வேறு மாவட்டங்களுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல் நிலைப்பள்ளி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
முன்னதாக அவரை பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜேப்பியார் ஸ்டீல்ஸ் ஜாகிர் உசேன்,பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆடிட்டர் தியாகராஜன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்றனர்
இதில் மாவட்ட, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வுசெய்தார். அப்போது பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறும். எனவே பெண்கள் நன்கு கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் அறிவுரைகளை வழங்கினார்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.






