என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ரூ. 17,616 கோடி முதலீட்டில் உருவான 19 திட்டங்கள் தொடங்கி வைப்பு.
    • ரூ. 51,157 கோடி முதலீட்டில் உருவாக இருக்கும் 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா.

    சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 நடைபெற்று வருகிறது. இதில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் பெற்றது. அதோடு 28 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    • அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • இதனால் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 24-ம் தேதி காலை 9.10, 11 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரெயில், பகுதிநேரமாக திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் காலை 11.15, 12 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணம்-திருவள்ளூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது. திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருத்தணி-திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் திருப்பதி செல்லும் மின்சார ரெயில், சென்னை சென்ட்ரல்-திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரெயில், சித்தேரி-அரக்கோணம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.5 ஆயிரத்திற்கு மேல் உள்ள மின் கட்டணத்தை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
    • ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

    சென்னை:

    தமிழகத்தின் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. அதில் சுமார் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு தவிர மீதமுள்ளவை குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை என இதர இனங்களை சேர்ந்தவையாகும்.

    இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது.

    இந்த மின் கட்டணத்தை பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு (2023-24) மட்டும் மின்சார வாரியம், மின்பயன்பாடு கட்டணம், புதிய இணைப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களை சேர்த்து மொத்தம் ரூ,60 ஆயிரத்து 505 கோடி வசூல் செய்துள்ளது.

    அதில் ஆன்லைன் மூலமாக மட்டும் ரூ.50 ஆயிரத்து 217 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதாவது மொத்த வசூலில் இது 83 சதவீதமாகும். இது 2022-23-ம் ஆண்டு இருந்த 52 சதவீதத்தில் இருந்து 31 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெற கூடாது. எனவே தமிழக மின்சார வாரியம் முதலில் ரூ,20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் பெறக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. அதன்பின் இது ரூ,10 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 83 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ரூ,10 ஆயிரம் என்ற ரொக்கம் இனி ரூ.5 ஆயிரமாக அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    அதன்படி மின் அலுவலக கவுண்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

    ஆனால் ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை. இருப்பிமும் ஆன்லைனில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை மூலம் கட்டணம் செலுத்தும் போது சில வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    அதற்கு பதிலளித்துள்ள மின்சார வாரிய அதிகாரிகள், ஆன்லைனில் யுபிஐ, நெட் பேங்கிங் ஆகியவை மூலம் பணம் செலுத்துவதால் கூடுதல் கட்டணம் கிடையாது.

    அதே போல் மத்திய அரசின் பீம் (BHIM) செயலி மூலம் கட்டணம் செலுத்தினால் சில சமயங்களில் ஒரு சதவீதம் முதல் 3 சதவீத கட்டணம் வரை சலுகை வழங்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.

    820 யூனிட்டுக்கு மேல்…

    இதுவரை 2 மாதத்தில் 1,275-க்கும் மேல் யூனிட் மின்சாரம் பயன்படுத்துவர்களுக்கு ரூ,10 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வந்தது. அவர்கள் தான் மின்சார அலுவலக கவுண்ட்டர்களில் காசோலை, டி.டி. அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வந்தனர். அவர்கள் ரொக்கமாக செலுத்த முடியாத நிலை இருந்தது.

    ஆனால் இனி 820 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் அனைவரும் ஆன்லைன் அல்லது மின் அலுவலகங்களில் காசோலை, டி.டி. மூலம் தான் பணம் செலுத்த வேண்டும். குடியிருப்புகளுக்கு தான் 820 யூனிட். மற்றபடி வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றுக்கு இந்த யூனிட் இன்னும் குறையும்.

    • கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியினை கைவிட அதிமுக கோரிக்கை
    • அதிமுக சார்பில் 24.08.2024 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

    பள்ளிக் கல்வித்துறையுடன் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆங்கிலேயர் காலம் முதல் கொடுஞ்சட்டங்களால் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலைக் கள்ளர் சமுதாய மக்கள், கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, எளிய பொருளாதார நிலையிலும் தங்களுக்கு தாங்களே "கள்ளர் காமன் பண்ட்" மூலமாகவும் தங்கள் நிலங்களையும், கடும் உழைப்பையும் கொடுத்து அமைத்து கொண்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாகத்தை பிற்பட்டோர் நலத்துறையிடமிருந்து இருந்து பறித்து, உள்நோக்கத்தோடு பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து 17.08.2024 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    அந்த அறிக்கையில், அரசின் இந்த நடவடிக்கையினால், இதுவரையில் இச்சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்வி கற்கக்கூடிய தளங்கள், வேலைவாய்ப்பு, நெடிய வரலாற்று அடையாளங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் போன்ற பல அடிப்படை உரிமைகள் பறிபோகும் என்பதால், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை விடியா திமுக அரசு உடனடியாகக் கைவிடாவிடில் பாதிப்புக்குள்ளாகிய கள்ளர் சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என்று எச்சரித்திருந்தேன்.

    பேனா சிலை வைப்பதிலும், நூறு ரூபாய் நாணயம் வெளியிடுவதிலும், அதனை விளம்பரப் படுத்துவதிலும் மட்டுமே ஈடுபாடாக உள்ள இந்த விடியா திமுக அரசு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக வரலாறு இல்லை. அதே போல், தற்போதும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாக முறையை மாற்றத் துடிக்கும் தன்னுடைய மக்கள் விரோதப் போக்கில் இருந்து விடியா திமுக அரசு மாறுவதாகத் தெரியவில்லை.

    எனவே, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் 24.08.2024 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மாவட்டம் செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • மனு பாக்கர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கங்களை வென்றார்.
    • மனு பாக்கருக்கு சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

    சென்னை:

    ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கல பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் சென்னை வந்தார்.

    சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு துப்பாக்கி பரிசாக அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு கிரீடம் அணிவித்து பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்தனர்.

    அப்போது மாணவர்களுடன் மனு பாக்கர் உரையாடினார். மாணவர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அவர் அதற்கு பதில் அளித்து பேசினார்.

    அப்போது ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் குறித்து மனு பாக்கர் பேசினார்.

    "வினேஷ் எனக்கு அக்கா போன்றவர். மரியாதைக்குரியவர். நான் அவரை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன். எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர் அவர். கடந்த காலங்களில் அவர் மீள்வதையும் நான் பார்த்துள்ளேன். அவர் இனியும் தொடர்ந்து முன்னேறுவார்" என்று அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு விவரங்கள் வெளியாகி உள்ளன.
    • மருத்துவ கலந்தாய்வுக்கான மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது.

    தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் கடந்த மாத இறுதியில் துவங்கி இம்மாதம் 8 ஆம் தேதி மாலை 5 மணி என்று வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தன.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நாளை காலை துவங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பொதுப்பிரிவினர் நாளை காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

    முதற்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார். 

    • நடிகை சனம் ஷெட்டி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராட முடிவு.
    • தமிழ் திரையுலகிலும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளதாக சனம் ஷெட்டி தெரிவித்தார்.

    நடிகை சனம் ஷெட்டி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை தரக்கோரியும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக காவல் துறை அனுமதி அளிக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சனம் ஷெட்டி மனு அளித்தார்.

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி, "பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து பேச கஷ்டமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளன. கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமைக்காக இங்கு ஏன் போராட வேண்டும் என்று கூறுகிறார்கள்."

    "நேற்று கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. இதில் அப்பள்ளியின் முதல்வர் சம்பந்தப்பட்டு உள்ளார். பெங்களூருவில் 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. மகாராஷ்டிராவில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது."

    "நிர்பயா வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் தண்டனை வழங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்."

    "ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரம் எனக்கு தெரியாது. ஆனால் இதை நான் வரவேற்கிறேன். இது போன்று ஒரு அறிக்கையை அவர்கள் கொண்டு வந்ததற்கு ஹேமாவுக்கும், கேரள அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

    "தமிழ் திரையுலகிலும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் உள்ளன. பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை தமிழ் திரையுலகிலும் உள்ளது. கேரளாவை போன்று தமிழ் திரையுலகிலும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்கள் மற்றும் மிக முக்கியமான நிகழ்வுகளை இந்த திரைப்படம்.
    • இத்திரைப்படம் வாழ்வியலை மட்டுமே சார்ந்த படம் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

    சென்னை:

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வீடியோ மூலம் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

    அதில் சிவகார்த்திகேயன் கூறியதாவது:-

    வாழை திரைப்படம் செல்வராஜ் வாழ்க்கையில் நடந்ததை சினிமா மூலம் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையில் நடந்த விஷயம் என்பதால் ஒரு சந்தோஷமான விஷயத்தை தாண்டி அவர் வாழ்க்கையில் நடந்த மிக பெரிய நிகழ்வை இப்படத்தில் காட்டியுள்ளார்.

    எளிய மக்களின் வலி, வேதனை, கண்ணீர், சந்தோஷம், சிரிப்புகளை அவர்கள் வாழ்க்கையை பதிவு செய்யும் போது அந்த சினிமா ரொம்ப அழகாக இருக்கிறது.

    அதைபோல் வாழை திரைப்படத்திலும் மாரி செல்வராஜ் அவர் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்கள் மற்றும் மிக முக்கியமான நிகழ்வுகளை இப்படத்தில் கூறியுள்ளார்.

    இப்படத்தை பார்க்கும் போது நமக்கு நெருக்கமான ஒருவரிடம் அவர்களில் கதை கேட்கும் போது என்ன உணர்வு வருமோ, அந்த உணர்வு தான் வாழை திரைப்படம். இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள், இசை, எல்லாம் நமக்கு நெருக்கமான ஒரு உணர்வு தருகின்றன.

    இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இது ஒரு உண்மை கதை என்பதால் அதிகமாக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    மாரி செல்வராஜ் மீண்டும் ஒருமுறை பெரிய திரையில் அவருடைய அனுபவத்தை மட்டுமல்ல வலிமையான இயக்குநர் என்பதையும் இப்படத்தில் நிரூபித்துள்ளார். அவருடைய கடந்த இரண்டு படமும் கமர்சியல் படமாக இருந்துள்ளது. இப்படம் முழுக்க முழுக்க வாழ்வியலை மட்டுமே சார்ந்த படமாகியுள்ளது என மாரி செல்வராஜ் அவர்களே கூறியுள்ளார்

    எனக்கு பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு ரொம்ப பிடித்த படமாக வாழை அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் யார்?, அவர் வாழ்க்கை என்ன?, அவர் என்னென்ன விஷயங்களை கடந்து இன்றைக்கு இயக்குநர் ஆனார்? என்பதை தெரிந்து கொள்வதற்கு இப்படம் ஒரு வாய்ப்பாக இருக்கும். இப்படம் விருதுகளை வாங்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்கபடுகிறது.
    • இந்த கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என 150 இருக்கைகள் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 16 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கும், மறுமார்க்கமாக அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும்.

    இந்நிலையில், நாகை - இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவைக்கு போதிய பயணிகள் வருகை இல்லாததால் செப்டம்பர் 15ம் தேதி வரையில், வாரத்திற்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ரூ.7 ஆயிரத்து 500 கட்டணமும், சாதா இருக்கைக்கு ஜி.எஸ்.டி.யுடன் ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலில் ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் அரசியல் கலப்பது சரியல்ல.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்த நாளை காங்கிரசார் இன்று கொண்டாடினார்கள். இதையொட்டி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் சின்னமலையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    அதைத் தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் ராஜீவ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இலவச மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.

    செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதவாதத்துக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்தவர் கலைஞர். அவருக்கு நாணயம் வெளியிட்டது சிறப்பு. அதே நேரம் அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் அரசியல் கலப்பது சரியல்ல. இதை காரணமாக வைத்து பா.ஜகவுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்று ஹேஸ்யமாக சொல்வது தவறு. எங்கள் கூட்டணி உறவு கெட்டியாக உள்ளது.

    மதவாதத்தை எதிர்ப்பதில் காங்கிரஸ் எந்த அளவு தீவிரமாக உள்ளதோ அதே அளவுக்கு தீவிரமாக இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே அவர் அந்த பக்கம் போக மாட்டார். முத்தமிழறிஞர் கலைஞரை பற்றி தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்கு முன்பும் பாஜகவினர் எவ்வளவு வசைபாடினார்களோ அதையும் திரும்ப பெற வேண்டும்.

    ஒன்றிய அரசு தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கி உள்ளது. டீ செலவுக்குக் கூட போதாத இந்த தொகையால் தமிழகத்தில் எந்த ரெயில்வே திட்டத்துக்கும் பலனில்லை. எனவே மத்திய அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயுடன் ரூ.1 கூடுதலாக சேர்த்து ரூ.1001-ஐ மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், விஜய் வசந்த் எம்.பி. மாநில நிர்வாகிகள் டி.செல்வம், தணிகாசலம், தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர் முத்தழகன், தி.நகர் ஸ்ரீராம், இல.பாஸ்கரன், திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
    • அனைத்து நியமனங்களும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    இது சமூக நீதிக்கு எதிரானது. இந்த முறையில் செய்யப்படும் நியமனம் வெளிப்படையாக இருக்காது. எனவே, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர், இயக்குனர்கள் உள்ளிட்ட நிலைகளில் தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நோயாளிகளும், உறவினர்களும் பயந்து ஓடியிருக்கிறார்கள்.
    • காளையார்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வலைத்தள வாசிகளின் சேட்டை சில நேரங்களில் எல்லை மீறி செல்வதும் தொல்லை கொடுப்பதாக மாறுவதும் உண்டு.

    ஆனால் ஒரு உண்மையை பொய்யாக்கி திசை திருப்பும் மோசமான செயல்களில் ஈடுபடுவதுதான் சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    கடந்த 2 நாட்களாக சிவகங்கை பகுதியில் ஒருவரை குரங்கு கடித்ததால் அவர் குரங்கு போலவே மாறி விட்டார். குரங்கு போல் முகத்தை வைத்து கொண்டு கிரில் கதவுகளில் தாவுகிறார். அருகே செல்பவர்களை பார்த்து உருமுகிறார் என்றெல்லாம் வீடியோ பதிவுடன் பரப்புகிறார்கள். அதை யார் பார்த்தாலும் நம்பத்தான் செய்வார்கள்.

    ஆனால் உண்மை அது வல்ல. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்தது.

    காளையார்கோவிலை சேர்ந்தவர் சரவணன். மனநல சிகிச்சை பெற்று வரும் இவர் காளையார்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நோய் முற்றிய நிலையில் அவரை காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு டாக்டர்கள் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள். ஆம்புலன்சில் இருந்து இறங்க மறுத்த சரவணன் அங்கிருந்த கிரில் கதவில் தாவி குதித்து ஏறியிருக்கிறார். அருகில் நெருங்கியவர்களை விரட்டியிருக்கிறார்.

    இதனால் நோயாளிகளும், உறவினர்களும் பயந்து ஓடியிருக்கிறார்கள். பின்னர் பாதுகாவலர்கள் சூழ்ந்து அவரை பிடித்து கைகளை பின்னால் கட்டி சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்தவர் சமூக வலைதளத்தளங்களில் திசை திருப்பி விட்டிருக்கிறார். இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்கள்.

    இப்போது நெட்டிசன்கள் பலர் அடப்பாவிகளா? இப்படியெல்லாமா பண்வீங்க? என்று பதிலுக்கு பதிவிட்டு வறுத்து எடுக்கிறாார்கள்.

    ×