என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் குழு அமைப்பு.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் NCC திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட NCC பயிற்றுநர்கள் ஆறு பேரில், ஐந்து பேரும், இந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    மேலும், வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய போலியான NCC பயிற்றுநர்கள் இதே போன்று, மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றை அமைத்திட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்

    மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், தலைமையில் ஒரு பல்நோக்கு குழு (Multi Disciplinary Team - MDT) ஒன்றை அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்.

    இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா மற்றும் சத்யா ராஜ், காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தினமும் 3 ஆயிரம் முதல் 3,200 துணிகள் சலவை செய்யப்படுகின்றன.
    • ஒவ்வொரு எந்திரமும் 100 கிலோ எடை கொள்ளளவு கொண்டது.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயன்படுத்தும் துணிகளை சலவை செய்ய தனியாக பணியாளர்கள் உள்ளனர். இந்த மருத்துவ மனையில் தினமும் 3 ஆயிரம் முதல் 3,200 துணிகள் சலவை செய்யப்படுகின்றன.

    இந்த துணிகளை சலவை செய்வதற்காக 10 நீராவி எந்திரங்கள் உள்ளன. இவற்றில் 6 நீராவி எந்திரங்கள் ஆங்கிலேயர் காலத்து நீராவி சலவை எந்திரங்கள் ஆகும். மீதமுள்ளவை நவீன கால எந்திரங்கள் ஆகும்.

    ஆங்கிலேயர் காலத்து சலவை எந்திரங்கள் பெல்ட் மூலம் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு எந்திரம் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மற்ற எந்திரங்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக எந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கடந்த வாரம் வரை மேலும் ஒரு எந்திரம் இயங்கியது.

    தற்போது அதன் கியர் பழுதடைந்துள்ளது. பழுது பார்க்கும் பணிக்காக அந்த எந்திரம் காத்திருக்கிறது. மேலும் மற்ற எந்திரங்களையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சலவை பணியாளர்கள் கூறியதாவது:-

    இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆங்கிலேயர் காலத்து எந்திரத்திலேயே சலவை செய்ய மிகவும் பிடித்துள்ளது. இந்த எந்திரங்கள் 1947-ம் ஆண்டுக்கு முன்பே தயாரிக்கப்பட்டது.

    சுமார் 77 ஆண்டுகளாக ஆங்கிலேயர் காலத்து நீராவி எந்திரங்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் துணிகளை துவைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த எந்திரம் பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதாக இருக்கிறது. மேலும் அதிக துணிகளையும் சலவை செய்யும்.

    இந்த எந்திரம் பித்தளை மற்றும் துருப்பிடிக்காத எக்கு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மிகவும் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு எந்திரமும் 100 கிலோ எடை கொள்ளளவு கொண்டது. ஒரு சுற்றுக்கு 75 முதல் 90 துணிகளை சலவை செய்கிறோம். இதற்கு 40 முதல் 45 நிமிடங்கள் ஆகும்.

    மருத்துவமனையில் பயன்படுத்தும் துணிகளில் 60 சதவீத துணிகள் இந்த எந்திரங்களிலேயே சலவை செய்யப்படுகின்றன. இந்த எந்திரங்களை பராமரிக்க தனியாக என்ஜினீயர் ஒருவரும் இருக்கிறார். ஆங்கிலேயர் காலத்து எந்திரங்களை இயங்க வைக்க நாங்கள் முடிந்தவரை முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

    லண்டனில் இருந்து இயக்கப்பட்ட 3 எந்திரங்களில் 2 எந்திரங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. நீராவியில் சலவை செய்யும் பணிகள் தினமும் 8 மணிக்கு தொடங்குகிறது. ஆங்கிலேயர் காலத்து எந்திரங்களில் துணிகளை துவைக்க நாங்கள் பழகி விட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அவினாசி பகுதிகளில் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று மாலை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அவினாசி பகுதிகளில் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்தனர்.

    திருப்பூர் பலவஞ்சிப்பாளையத்தில் குறவர் சமூக மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மிதந்தன. மேலும் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் கடும் சிரமம் அடைந்தனர். அப்பகுதி பெண்கள் கூறும்போது, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். குடியிருப்புக்கு அருகே சமீபத்தில் தடுப்பு சுவர் கட்டியதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் விடிய விடிய தூங்காமல் தவித்தோம். மழைநீர் வடிந்து செல்ல அதிகாரிகள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

    திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் மழை பெய்தபோது, மின்னல் தாக்கியதில் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் இருந்த 70 வயது முதியவர் மீது சுவர் விழுந்து அமுக்கியது. வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்த முதியவரை மீட்டு 108 ஆம்புலன்சு உதவியோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் ராயபுரத்தில் மரம் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக வடக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினார்கள். இதுபோல் குமார் நகர் அவினாசி ரோட்டில் விழுந்த மரத்தையும் வடக்கு தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.


    உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தொடர் மழையால் கடந்த ஒரு மாதமாக அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. உபரி நீர் பிரதான கால்வாய், அமராவதி ஆறு சட்டர்கள் மற்றும் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.09 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1044 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    உடுமலைதிருமூர்த்தி அணை மூலமாக பிஏபி., பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பிஏபி., தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு கடந்த 18-ந் தேதி முதல் 2- ம் மண்டல பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பாலாற்றின் மூலமாக அணைக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடிக்கும் மேலாக நீர்வரத்து உள்ளது. இதனால் 60 அடி உயரம் கொண்ட அணையில் 57.02 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1122 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கோவில் உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகள் மழைநீரில் நனைந்தன. நனைந்த ரூபாய் நோட்டுகள் காய வைத்து எடுக்கப்பட்டது.

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    மேலும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார்.
    • ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    காரைக்குடி:

    மனிதனுக்கு இரண்டு கண்கள் என்றால், சமூக வலைதளத்துக்கு பார்ப்பதெல்லாம் கண்கள்தான். பொது வெளியில் நடக்கும் சம்பவம் அடுத்த விநாடி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதில் ஈடுபட்ட நபரை கதிகலங்க வைத்து விடுகிறது. இதனால் சிக்கிக்கொண்டோரும், பிரபலமானவர்களும் பலர்.

    அதிலும் குறிப்பாக மது போதையில் சிலர் செய்யும் வேடிக்கைகள் ஒருபுறம் ரசிக்க வைத்தாலும், அதற்கு லைக் கொடுத்து, கருத்து சொல்பவர்களின் வார்த்தைகள் சவுக்கடிக்கு சமமாகவும் இருந்துள்ளது. வேடிக்கை, வினோதங்களின் மூலம் தங்களை ஈர்ப்பதற்காகவும் ஒருசிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    அந்த வகையில் செட்டி நாடு புகழ் காரைக்குடியிலும் ஒரு சம்பவம் அரங்கேறி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியான காரைக்குடி அறந்தாங்கி செல்லும் சாலை நேற்று மாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. அப்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அந்தி சாயும் மாலை வேளையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் அந்த பகுதிக்கு வந்தார்.


    அரைக்கால் டவுசர், பனியன் அணிந்திருந்த அவர் வெயில் குறைந்த மழை வாசம் அடித்த குளுகுளு சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார். மேலும் தனது டவுசர் பையில் வைத்திருந்த செல்போனை எடுத்து அதனை பார்த்துக் கொண்டே அந்த சாலையை கடந்து சென்ற பெண்களை பார்த்து கேலி, கிண்டலும் செய்தார்.

    தலைக்கேறிய போதை, தடுமாற்றத்துடன் கூடிய நடை, போதைக்கு ஊறு காயாக கேலி, கிண்டல் வேறு என்று அந்த வாலிபரின் எல்லை அத்துமீறி போனது. பலர் வேடிக்கை பார்க்க, சிலர் செல்போன்களில் வீடியோ எடுக்க, இதெல்லாம் நமக்கு எதற்கு என்று கண்டுகொள்ளாமல் சென்றனர் மற்றும் பலர். அறிவுரை கூறி அப்புறப்படுத்த நினைத்து அருகில் சென்றவர்கள் அச்சத்துடன் திரும்பி வந்தனர்.

    ஏதாவது அசம்பாவித சம்பவத்தில் அவர் இறங்கினால் என்று எண்ணி, நமக்கேன் வம்பு வந்த வழியாக திரும்பினர். இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்து கொண்ட வாலிபரை அங்கிருந்து அனுப்பி வைக்க அதே பகுதியைச் சேர்ந்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் முயற்சி மேற்கொண்டார்.

    உடனடியாக இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தும் யாரும் வர வில்லை. இதற்கிடையே சாலையில் நடுவில் படுத்திருந்த அந்த வாலிபர் எழுந்து ரோட்டில் அங்குமிங்கும் சென்றார். பின்னர் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் மூலம் அவரது நண்பர்களை வரவழைத்து ஒருவழியாக போதை வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • தோழமை கட்சித் தலைவர்களுக்கு இலவசமாக 1 நாணயம்
    • கருணாநிதி நினைவு நாணயம் ரூ.10 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கடந்த 18-ந்தேதி சென்னையில் வெளியிட்டார்.

    இந்த நாணயம் தி.மு.க. தலைமை நிலையமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கிறது. தோழமை கட்சித் தலைவர்களுக்கு இலவசமாக 1 நாணயம் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    அமைச்சர்கள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று ஆர்வமுடன் நாணயங்களை வாங்கிச் சென்றனர்.

    மொத்தம் 1000 நாணயங்கள் இருந்ததில் நேற்று மட்டும் 500 நாணயங்கள் ரூ.50 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன.

    100 ரூபாய் நாணயம் 10 ஆயிரத்துக்கு விற்கப்படுவதால் எம்.எல்.ஏ.க்களே 5 நாணயம் என்ற அளவில்தான் வாங்கிச் செல்கின்றனர்.

    தி.மு.க.வில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வி.ஐ.பி.க்கள் அதிகம் பேர் உள்ளதால் ஒவ்வொருவரும் என்ன விலையாக இருந்தாலும் நாணயத்தை வாங்கிச் செல்வதில் ஆர்வமாக இருந்தனர்.

    வி.ஐ.பி.க்கள் வந்து வாங்கிச் செல்வதால் கைவசம் உள்ள நாணயம் இன்றுடன் தீர்ந்து விடும் என தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதனால் தி.மு.க. தொண்டர்கள் 100 ரூபாய் நாணயம் கிடைக்காதா? என்று ஏக்கத்துடன் உள்ளனர். 100 ரூபாய் கொடுத்து நாணயம் வாங்க வழிவகை செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

    • மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
    • அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பீளமேடு:

    குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

    தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை விமான நிலையத்திலும் விமான பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடங்கிய மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சிங்கப்பூருக்கு தினமும், சார்ஜாவுக்கு 4 நாட்கள், அபுதாபிக்கு 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் மட்டும் இன்றி, பிற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிளும் கோவை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    விமானத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு மருத்துவக்குழுவினர் முதல் கட்டமாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதேபோல் கொப்புளங்கள் உளளனவா? என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.

    நேற்று கோவை விமான நிலையத்திற்கு 3 வெளிநாட்டு விமானங்களில் 275 பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் அல்லது அம்மை கண்டறியப்பட்டால், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகமும், ஏர்போர்ட் சுகாதார மருத்துவ குழுவினரும் இணைந்து பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இருக்கின்றனர். வெளிநாட்டு பயணிகள், பரிசோதனைக்கு பின்பே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அறிகுறிகளளோ, அம்மையோ கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு வசதியாக, விமான நிலைய வளாகத்தில் ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
    • போலீசார் அருண்குமார் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரபால், இவரது மனைவி சவுதாமணி (43), முதுநிலை பட்டதாரி ஆசிரியையான இவர் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.

    இவரிடம் சென்னையை சேர்ந்த அருண்குமார் என்பவர் தொடர்பு கொண்டார். தொடர்ந்து சவுதாமணியின் வீட்டிற்கு வந்த அருண்குமார் அரசு பள்ளியில் அவருக்கு ஆசிரியை பணி வாங்கி தருவதாகவும், அவரது கணவரிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளர் பணி வாங்கி தருவதாகவும் கூறி உள்ளார்.

    இதனை நம்பிய சவுதாமணி, அருண்குமாருக்கு கூகுள் பே மூலம் கடந்த 2021 மற்றும் 22-ம் ஆண்டுகளில் ரூ. 12 லட்சத்து 25 ஆயிரத்து 250 ரூபாயை 15 தவணைகளாக அனுப்பி உள்ளார். ஆனால் அவர் கூறிய படி இதுவரை வேலை வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சவுதாமணி சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய அம்மாப்பேட்டை போலீசார் அருண்குமார் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    • திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த கோவிலில் வேண்டி கொண்டோம்.
    • பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருளப்பட்டி காளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த கோவிலில் வழக்கம் போல இந்த ஆண்டும் தேர் திருவிழா இன்று காலை தொடங்கியது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சார்ந்த சுகனவிலாசம் (வயது 30). அவரது மனைவி அனிதா (27). வங்கி ஊழியரான அனிதாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இருளப்பட்டி காளியம்மன் கோவிலில் குழந்தை வரம் கேட்டு வேண்டியுள்ளார்.

    இந்த நிலையில் அனிதாவுக்கும் குழந்தை பிறந்ததால், அதற்குப் பரிகாரமாக நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக இருளப்பட்டி தேர் திருவிழாவில் 2500 பக்தர்களுக்கு உணவு சமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    அப்போது அங்கு வந்த சிலர் அனிதாவை அன்னதானம் வழங்க விடாமல் தடுத்து கோவிலை விட்டு வெளியேற்றினர். இதனால் தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அனிதா கூறியதாவது:-

    நான் இந்த இருளப்பட்டி பகுதியை சேர்ந்தவள். எனக்கு திருமணமாகி கணவருடன் ஊத்தங்கரையில் வசித்து வருகிறேன். திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த கோவிலில் வேண்டி கொண்டோம். பிறகு எங்களுக்கு குழந்தை பிறந்தது.

    அதற்கு பரிகாரமாக இந்த கோவிலில் தேர்த்திருவிழாவின்போது அன்னதானம் வழங்குவதற்காக வந்தோம். அப்போது மாற்று சமூகத்தை சார்ந்த ஒரு சிலர் பழங்குடியின பெண்ணான நீங்கள் அன்னதானம் வழங்க கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் வேண்டுதல் நிறைவேற்ற ஒத்துழையுங்கள் என கெஞ்சி கேட்டோம். இருந்தபோதிலும் அவர்கள் எங்களை விரட்டினர்.

    இந்த நிலையில் அங்கு வந்த போலீசாரிடமும் நாங்கள் அன்னதானம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் போலீசார் எங்களை இங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக செயல்பட்டனர்.

    நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் போலீசார் எங்களை கோவில் பகுதியில் இருந்து வெளியேற்றி விட்டனர். மேலும் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அரசின் அனுமதி பெற்று அன்னதானம் இடுவதற்கும் அனுமதிக்காமல் எங்களது சமையல் செய்யும் சிலிண்டர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தி மிரட்டினர். இந்த நிலையில் ஒரு வழியாக மாலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டோம் என்று தெரிவித்தார்.

    சம்பவம் குறித்து பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியரிடம் கேட்டபோது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அனைத்து சமூக மக்களும் வழிபாடு செய்வதற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் முழு உரிமை உண்டு. அதை யாராலும் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் அந்த பெண்ணை அன்னதானம் வழங்குவதற்கு எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் அன்னதானம் வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்றார்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து அவர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப் பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காளியம்மன் கோவிலில் பழங்குடியின பெண் அன்னதானம் வழங்குவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • பசுமை ஹைட்ரஜன் யூனிட் நிறுவனம் அமையும் போது சுமார் 1,511 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
    • தென் மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப் ஆக மாறி வருகிறது.

    ன்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி 2021-ம் ஆண்டு அமைந்தது முதல் இதுவரை தொழில் துறைக்காக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கிற மாநிலமாகவும், தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

    அதன் முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

    இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில் 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.


    3-ம் கட்டமாக 2024 ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளும் 14, 54,712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 12,35, 945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

    4-ம் கட்டமாக 27.1.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சக அதிகாரிகள் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

    அதன் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.8.64 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு ஈர்க்கப்பட்டது டன் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி அமெரிக்கா செல்கிறார்.

    அதற்கு முன்னதாக சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் ரூ.17,616 கோடி முதலீட்டில் தங்களது ஆலைகளைத் தொடங்க உள்ளன. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்திர மின்னணுவியல் உபகரண தொழிற்சாலை, திருவண்ணாமலையில் ராயல் என்பீல்டு மோட்டார் தொழிற்சாலை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, விருதுநகரில் அமைக்கப்பட்ட சுந்தரம் பாசனர்ஸ் தொழிற்சாலை, செங்கல்பட்டில் ரெனால்டு நிசான் தொழில்நுட்ப வர்த்தக மையம், கிருஷ்ணகிரியில் வெக் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

    இந்த மாநாட்டில் ரூ.51,157 கோடி முதலீட்டில் அமைய உள்ள 28 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தளம் அமைப்பதற்காக சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 36 ஆயிரத்து 238 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக இப்போது இந்த தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் யூனிட் நிறுவனம் அமையும் போது சுமார் 1,511 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


    இதன் மூலம் தென் மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப் ஆக மாறி வருகிறது.

    தூத்துக்குடியில் அமைக்கப்படும் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பசுமை அம்மோனியாவை ஆதாரமாக வைத்து பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உருவாக்கப்பட உள்ளதாக செம்ப்கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சோஜிட்ஸ் கார்ப் மற்றும் கியூஷூ எலக்ட்ரிக் பவர் உள்ளிட்ட ஜப்பான் நிறுவனங்களுடன் செம்ப்கார்ப் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று நடைபெற்ற புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விழாவில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • மெமு சிறப்பு ரெயில் இன்று திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.
    • மின்சார ரெயில் நாளை மற்றும் 24-ந்தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரெயில் இன்று (21-ந் தேதி) வரை திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நாளை மற்றும் 24-ந் தேதிகளிலும் இந்த மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.10, 11 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் மற்றும் திருத்தணிக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் 24-ந் தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

    மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து காலை 11.15, பகல் 12 மணிக்கும், திருத்தணியில் இருந்து பகல் 12.35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.

    வேலூா் கன்டோன்மன்டில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சித்தேரி வரை மட்டும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தரவரிசைப் பட்டியலில் 42,236 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனா்.
    • தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசைப் பட்டியலில் 42,236 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனா். இதன்மூலம் ஓரிடத்துக்கு 4 போ் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு மக்கள் நல்வாழ்வுத் துறை இணை யதளத்தில் இன்று (புதன் கிழமை) தொடங்கியது. அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள் காலை 10 மணி முதல் இணையவழியில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களைத் தோ்வு செய்தனர்.

    27-ந்தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் மருத்துவ கல்லூரி இடங்களை தேர்வு செய்யலாம். 28-ந் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் 29-ந் தேதியும், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் 30-ந் தேதியும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

    30-ந்தேதிமுதல் செப்டம்பர் 5-ந்தேதி நண்பகல் 12 மணி வரை இட ஒதுகீட்டு ஆணையை இணையதளத்தில் பதி விறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெற உள்ளது.

    நாளை காலை 8 மணிக்கு விளையாட்டு வீரா்களுக்கும், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கும், 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    அதைத் தொடா்ந்து, காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    நீட் ஹால் டிக்கெட், மதிப்பெண் அட்டை, 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை இணைய தளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    • மாவணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.


    இந்த விழாவிற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்று மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    ×