search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நடுரோட்டில் கால்மேல் கால்போட்டு படுத்து செல்போன் பார்த்த வாலிபர்
    X

    நடுரோட்டில் கால்மேல் கால்போட்டு படுத்து செல்போன் பார்த்த வாலிபர்

    • சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார்.
    • ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    காரைக்குடி:

    மனிதனுக்கு இரண்டு கண்கள் என்றால், சமூக வலைதளத்துக்கு பார்ப்பதெல்லாம் கண்கள்தான். பொது வெளியில் நடக்கும் சம்பவம் அடுத்த விநாடி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதில் ஈடுபட்ட நபரை கதிகலங்க வைத்து விடுகிறது. இதனால் சிக்கிக்கொண்டோரும், பிரபலமானவர்களும் பலர்.

    அதிலும் குறிப்பாக மது போதையில் சிலர் செய்யும் வேடிக்கைகள் ஒருபுறம் ரசிக்க வைத்தாலும், அதற்கு லைக் கொடுத்து, கருத்து சொல்பவர்களின் வார்த்தைகள் சவுக்கடிக்கு சமமாகவும் இருந்துள்ளது. வேடிக்கை, வினோதங்களின் மூலம் தங்களை ஈர்ப்பதற்காகவும் ஒருசிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    அந்த வகையில் செட்டி நாடு புகழ் காரைக்குடியிலும் ஒரு சம்பவம் அரங்கேறி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியான காரைக்குடி அறந்தாங்கி செல்லும் சாலை நேற்று மாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. அப்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அந்தி சாயும் மாலை வேளையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் அந்த பகுதிக்கு வந்தார்.


    அரைக்கால் டவுசர், பனியன் அணிந்திருந்த அவர் வெயில் குறைந்த மழை வாசம் அடித்த குளுகுளு சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார். மேலும் தனது டவுசர் பையில் வைத்திருந்த செல்போனை எடுத்து அதனை பார்த்துக் கொண்டே அந்த சாலையை கடந்து சென்ற பெண்களை பார்த்து கேலி, கிண்டலும் செய்தார்.

    தலைக்கேறிய போதை, தடுமாற்றத்துடன் கூடிய நடை, போதைக்கு ஊறு காயாக கேலி, கிண்டல் வேறு என்று அந்த வாலிபரின் எல்லை அத்துமீறி போனது. பலர் வேடிக்கை பார்க்க, சிலர் செல்போன்களில் வீடியோ எடுக்க, இதெல்லாம் நமக்கு எதற்கு என்று கண்டுகொள்ளாமல் சென்றனர் மற்றும் பலர். அறிவுரை கூறி அப்புறப்படுத்த நினைத்து அருகில் சென்றவர்கள் அச்சத்துடன் திரும்பி வந்தனர்.

    ஏதாவது அசம்பாவித சம்பவத்தில் அவர் இறங்கினால் என்று எண்ணி, நமக்கேன் வம்பு வந்த வழியாக திரும்பினர். இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்து கொண்ட வாலிபரை அங்கிருந்து அனுப்பி வைக்க அதே பகுதியைச் சேர்ந்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் முயற்சி மேற்கொண்டார்.

    உடனடியாக இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தும் யாரும் வர வில்லை. இதற்கிடையே சாலையில் நடுவில் படுத்திருந்த அந்த வாலிபர் எழுந்து ரோட்டில் அங்குமிங்கும் சென்றார். பின்னர் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் மூலம் அவரது நண்பர்களை வரவழைத்து ஒருவழியாக போதை வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×