கருணாநிதி நினைவு நாணயம் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை

தோழமை கட்சித் தலைவர்களுக்கு இலவசமாக 1 நாணயம்கருணாநிதி நினைவு நாணயம் ரூ.10 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
கருணாநிதி நினைவு நாணயம் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை
Published on

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கடந்த 18-ந்தேதி சென்னையில் வெளியிட்டார்.

இந்த நாணயம் தி.மு.க. தலைமை நிலையமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கிறது. தோழமை கட்சித் தலைவர்களுக்கு இலவசமாக 1 நாணயம் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அமைச்சர்கள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று ஆர்வமுடன் நாணயங்களை வாங்கிச் சென்றனர்.

மொத்தம் 1000 நாணயங்கள் இருந்ததில் நேற்று மட்டும் 500 நாணயங்கள் ரூ.50 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன.

100 ரூபாய் நாணயம் 10 ஆயிரத்துக்கு விற்கப்படுவதால் எம்.எல்.ஏ.க்களே 5 நாணயம் என்ற அளவில்தான் வாங்கிச் செல்கின்றனர்.

தி.மு.க.வில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வி.ஐ.பி.க்கள் அதிகம் பேர் உள்ளதால் ஒவ்வொருவரும் என்ன விலையாக இருந்தாலும் நாணயத்தை வாங்கிச் செல்வதில் ஆர்வமாக இருந்தனர்.

வி.ஐ.பி.க்கள் வந்து வாங்கிச் செல்வதால் கைவசம் உள்ள நாணயம் இன்றுடன் தீர்ந்து விடும் என தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனால் தி.மு.க. தொண்டர்கள் 100 ரூபாய் நாணயம் கிடைக்காதா? என்று ஏக்கத்துடன் உள்ளனர். 100 ரூபாய் கொடுத்து நாணயம் வாங்க வழிவகை செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com