என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மணிவண்ணனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவலில் இருக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
    • மணிவண்ணன் என்பவர் ஆர்காடு சுரேஷ்- யின் உறவினர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    சென்னை:

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சொமோட்டோ உடை அணிந்து வந்து வெட்டிய கும்பலை ஒருங்கிணைத்த மணிவண்ணனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் மணிவண்ணனை தற்போது 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    மேலும் மணிவண்ணன் என்பவர் ஆர்காடு சுரேஷ்- யின் உறவினர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    மணிவண்ணன், "சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோர் சொமேட்டோ ஊழியர்கள் போல உடை அணிய வைத்து நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக கொலை செய்ததில் முக்கிய பங்காற்றியவர்"

    மேலும் "கூலிப்படையாக செயல்பட்ட தனது நண்பர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுப்பதாக கூறி அழைத்து வந்து கொலையில் மணிவண்ணன் ஈடுப்படுத்தியுள்ளார்" என்பதும் தெரியவந்துள்ளது.

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை.
    • நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ. 75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா?

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன். இவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.

    மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், மேலும் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு நெல்சன் மனைவி மோனிஷா தொடர்ந்து அவருடன் போனில் பேசியதாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    மேலும், மொட்டை கிருஷ்ணன், நெல்சனின் மனைவி மோனிஷா ஆகியோர் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து. எதற்காக 75 லட்சத்தை மொட்டை கிருஷ்ணனுக்கு அனுப்பினார் என்பது குறித்தும், மோனிஷாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்

    அதற்கு, வழக்கு தொடர்பாகவும் நண்பர் என்ற முறையிலும் பணம் அனுப்பியதாக மோனிஷா பதில் கூறியதாக சொல்லப்படுகிறது.

    இதனையடுத்து, மோனிஷா அளித்த தகவல்கள் உண்மைதானா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ. 75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர். 

    • தவெக கட்சியின் கொடியை நாளை விஜய் அறிமுகப்படுத்துகிறார்.
    • தமிழக வெற்றி கழகத்தின் பாடலும் நாளை வெளியிடப்படுகிறது.

    நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அக்கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

    தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

    நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்.தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • உமாராணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கிருந்து காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நாள் ஒன்றுக்கு சுமார் 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கார்த்தியின் மனைவி உமாராணி(வயது30) ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு உமாராணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.

    பால் பாக்கெட்டுகள் தயாராகி வரும்போது அதனை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் உமா ராணி இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த துப்பட்டாவும், அவரது தலை முடியும் அருகில் இருந்த எந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது.

    கண்இமைக்கும் நேரத்தில்அதில் இழுக்கப்பட்ட உமா ராணி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவரது தலை எந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டிலும், உடல் கீழே தரையிலும் விழுந்தது. இதனை கண்டு அருகில் நின்று கொண்டு இருந்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    தகவல் அறிந்ததும் துணைப் போலீஸ் சூப்பிரண்டு கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியான உமா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான உமாராணியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் பொம்மியம்பட்டி கிராமம் ஆகும். இவரது கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இது தொடர்பாக திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
    • பாலியன் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு குழு செல்கிறது.


    ------------

    நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அளித்து வந்துள்ளார்.

    அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழு விரைகிறது.

    அதன்படி, இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு குழு செல்கிறது. இந்த குழு நாளை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறது.

    2 நாட்கள் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்த உள்ளனர்.

    15 நாளில் பரிந்துரை அறிக்கை அளிக்க முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • பலரும் நெடுஞ்சாலைத்துறைக்கும், உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
    • ஒரு கடைக்கு 2 கைக்குழந்தைகளுடன் பெண்கள் குடை பிடித்த படி வந்தனர்.

    மதுரை:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, விருதுநகரில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே சாலைகள் மோசமாக உள்ள நிலையில் திடீர் மலை காரணமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் மாறி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மழைநீர் தேங்கியிருக்கும் பள்ளங்களில் விழுந்து காயமடைவது நிகழ்ந்து வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் மிதமாகன மலை பெய்தது. சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. நேற்று சாத்தூரில் உள்ள ஒரு கடைக்கு 2 கைக்குழந்தைகளுடன் பெண்கள் குடை பிடித்த படி வந்தனர்.

    கடை அருகே நெடுஞ்சா லைத்துறையால் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மழைநீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. இதை அறியாமல் கைக்குழந்தைகளுடன் வந்த 2 பெண்களும் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர்கள் விரைந்து செயல்பட்டு 2 கைக்குழந்தைகள், பெண்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.

    பெண்கள் 2 குழந்தையுடன் பள்ளத்தில் விழும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதற்கு பலரும் நெடுஞ்சாலைத்துறைக்கும், உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.


    • குரங்கம்மை குறித்த காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என பரிசோதனை
    • யாருக்காவது அறிகுறி இருப்பது தெரிய வந்தால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படும்.

    ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் குரங்கம்மை தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் குரங்கம்மை தொற்று நோய் பாதிப்பு இதுவரையில் இல்லை. ஆனாலும் பொது சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம், துறைமுகங்களில் குரங்கம்மை நோய் குறித்த தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. குரங்கம்மை குறித்த காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என பரிசோதனை செய்யப்படுகிறது.

    விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு ஏற்பாட்டை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் இன்று ஆய்வு செய்தார். டாக்டர் குழு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்து அறிகுறி இருந்தால் அவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர் களிடம் கூறியதாவது:-

    சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் குரங்கம்மை நோய் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் 108 ஆம்புலன்ஸ் தற்காப்பு கவச உடை அணிந்து ஊழியர்களுடன் தேவை ஏற்படின் பயணித் திட ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி, மதுரை, திருச்சி, கோவையில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு தனிமைப்படுத்துதல் வார்டு அைமக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு பரிசோதனை நிலையத்தில் குரங்கம்மை கண்டறியும் வசதி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பரிசோதனைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

    யாருக்காவது அறிகுறி இருப்பது தெரிய வந்தால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், இ.கருணாநிதி எம்.எல்.ஏ., இயக்குனர் செல்வ விநாயகம், சங்கு மணி மற்றும் விமான நிலைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
    • ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.

    சென்னை:

    சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ்நாட்டின் தொழில் துறை வரலாற்றிலும், வளர்ச்சி வரலாற்றிலும் இது மிக மிக முக்கியமான நாள்!

    நம்முடைய பொருளாதாரத் திறனை உலகிற்கு எடுத்துக் காட்டும் நாளாகவும், தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உணர்த்தும் நாளாகவும் இந்த நாள் அமைந்திருக்கிறது.

    கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். மாநாடுகளை நடத்து வதைவிட, அந்த மாநாடுகள் மூலமாக எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தோம் என்பதில்தான், வெற்றி அடங்கியிருக்கிறது!

    அந்த மாநாடு மூலமாக நாம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை-631. ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 6.64 லட்சம் கோடி ரூபாய்! இதன் மூலமாக 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.


    தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாகத்தான், ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.

    உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் தொழில் நிறுவனங்களை தொடங்கினால் மட்டும் போதாது; உங்களைப் போன்று இருக்கின்ற மற்ற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள்… தொழில் தொடங்க வையுங்கள்…

    தமிழ்நாடு அரசின் தொழில்துறை தூதுவர்களாக நீங்கள் எல்லோரும் மாற வேண்டும்.

    நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த மூன்று ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது. அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்து, அதன்மூலமாக, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் இலக்கை அடைவதற்காக நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.

    இந்த இருமுனை முயற்சி, இப்போது சாதகமான பலன்களை தந்து வருகிறது. இன்றைய தினம் பல்வேறு வகையான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன்.

    * தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்,

    * ஜவுளி மற்றும் ஆடைகள்,

    * கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட இருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்ன வென்றால், இதில் பெருமளவிலான வேலை வாய்ப்புகள் பெண்களுக்கானவை!

    பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்ற நம்முடைய அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சாதனை மேலும் ஊக்கமளிக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் நிலைக்கத்தக்க வளர்ச்சியை உறுதி செய்வதில் நம்முடைய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

    ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    130-க்கும் மேற்பட்ட 'பார்ச்சூன் 500' நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளதும், தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்புத் திறனுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது.

    நம்முடைய இளைஞர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில், பல்வேறு வகைகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். எனவே, எங்கள் இளைஞர்களின் திறன்களை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, அரசு செயலாளர் அருண்ராய், மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, செந்தில் ராஜ், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச் செல்வி மோகன், செயல் இயக்குனர் சினேகா கலந்து கொண்டனர்.

    • மண்டபம்-பாம்பனை இணைக்கும் புதிய ரெயில் பாலம்.
    • பாலத்தில் உறுதி தன்மை குறித்து சோதனை.

    ராமேஸ்வரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரெயில்பாலம் அடிக்கடி பழுதடைந்து வந்தது. இதையடுத்து புதிய பாலம் கட்ட மத்திய அரசு முடிவெடுத்தது.

    அதன்படி ரூ.545 கோடி மதிப்பில் மண்டபம்-பாம்பனை இணைக்கும் வகையில் பிரமாண்டமாகன புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. அடுத்த மாதம் திறக்கப்படும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில் பாலத்தில் உறுதி தன்மை குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பாம்பன் ரெயில் பாலத்தில் இன்று என்ஜின் மற்றும் 11 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. 20 கி.மீட்டர் முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    அப்போது பாலத்தின் நடுவே உள்ள தூக்குபாலத்தின் உறுதி தன்மை, அதிர்வுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புதிய பாலத்தில் ரெயில் இயக்கியது அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர்.
    • அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார் டிரைவர் கனகராஜ். இவர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை அடிக்க சென்றனர். அப்போது காவலாளியை கொன்று விட்டு கொள்ளையடித்து சென்றனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்த நிலையில் கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இறந்தார். இந்த கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர். இவர் கனகராஜின் சிம்கார்டை எரித்து சாட்சியங்களை அழித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அழகு துரையின் சட்டையை பிடித்து தள்ளியதாக போலீசார் தனபாலை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் நேற்று தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது . அவரை உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிறையில் இருந்த போதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொட்டுக்காளி படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை.
    • கொடுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் கொட்டுக்காளி. இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது.

    சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த வரிசையில், கொட்டுக்காளி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் பாராட்டினார்.

    இத்துடன் படக்குழுவை பாராட்டி நடிகர் கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கொட்டுக்காளி என்ற மத்திய அரசுச் சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்தில் இருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்ற குறிப்பைப் பார்த்ததுமே தமிழ் சினிமா ராக் யுகத்திலிருந்து மீண்டு நவீன கதைசொல்லி ஒருவனின் களமாகிவிட்டது புரிகிறது."

    "தம்பி சூரியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் இல்லை மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் தெரியவில்லை, பாண்டியன் எனும் கதாபாத்திரம்தான் தெரிந்தார். காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடியலுக்காகக் கூட கூவாமல் குழம்பி நிற்கிறது."

    "மறுபுறம் நம் கண்ணுக்குத் தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்தச் சேவலையே வெறித்துப் பார்க்கிறாள் 'கொட்டுக்காளி' டைட்டில் திரையில், கண் இமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறித் தப்பிக்கிறது சேவல், வெறித்துப் பார்த்த பெண்ணின் கண்ணில் சின்ன எதிர்பார்ப்பு, பின் இரு உறவினர்கள் சேவலை துரத்திப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்."

    "பெண்ணின் கண்ணில் நம்பிக்கை மங்குகிறது. இவள்தான் நாயகி உலகத்தைத் தலைகீழாக அண்ணாந்து பார்த்தபடி அறிமுகமாகிறான் பாண்டி, அவன் கழுத்தில் ஒரு வெண்சுண்ணாம்புக் களியைத் தடவி விடுகிறாள் ஒரு பெண், பாண்டிக்குத் தொண்டைக் கட்டாகவும் இருக்கலாம் அல்லது புற்றுநோயின் ஆரம்பக் கட்டமாகக்கூட இருக்கலாம். ஓர் இளம்பெண்ணின் கல்லூரிக் காதலையும் கேன்ஸரையும் எந்த ஒரு புரிகலும் இல்லாது அணுகும் ஒரு கிராமத்துக் குடும்பம்."

    "கிராமம் என்றால், சிமென்ட் சாலை, வாகன வசதி, செல்ஃபோன், டாஸ்மாக், சானிட்டரி நாப்கின், 24 மணி நேர மின்சாரம் என 21-ஆம் நூற்றாண்டின் நவீன வசதிகள் நிறைந்த கிராமம். இருப்பினும் எங்க வீட்டு பிள்ளைக்குப் பேய் பிடிச்சுருக்கு. பேய் ஓட்டக் கூட்டிப்போறோம்' என்று விசாரிப்பவர்களிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன் வழிமொழிகிறது குடும்பம்."

    "போகிற வழியெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள் விற்கும் வண்டி ஒன்று பேயாய் ஆடிச்செல்கிறது. கண்ணேறு தவிர்க்கும் அசுர முகங்கள் இன்னொரு வண்டியில் பேயாடுகிறது. நடுவழியில் டாஸ்மாக் பேய் என்று பல பேய்களின் ஆட்டம் தென்பட்டாலும் அவை பூசாரிகளால் விரட்ட முடியாத பேய் எனப் புரிந்துகொள்கிறோம்."

    "இது பேய்க் கதைதான் காதல் பேய்க் கனத, நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை டைட்டில் கார்டில் வரும் 'இயற்கைக்கு நன்றி என்ற வாசகத்தின் பொருள், ஒளிப்பதிவிலும் ஒலிப்பதிவிலும் தெரிகிறது."

    "இயற்கைதான் படத்தின் இசை குலதெய்வக் கோயிவை நெருங்குகையில் சிறுவன் கார்த்திக் வாயால் கொடுக்கும் சினிமாப் பாணி பிள்னணி இசைதான் ஒரு சின்ன கிண்டலுடன் இந்தப் படத்தில் அவை இல்லை என்பதை நினைவுபடுத்துகிறது. ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன். பூசாரி என்று பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம் காலம் மாறிவிட்டதை மற்ற பாத்திரங்கள் புரிந்துகொள்ளாவிடினும் பார்வையாளர்களாகிய நமக்கு படம் பிடித்துக் காட்டப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள்.
    • யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கலந்து கொண்டார். பின்னர் மணப்பாறையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளர் சீர் மரபினர் பள்ளிகளை இணைப்பை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 24-ந் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எல்லா துறை சார்ந்து இருக்கின்ற பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று 2023-24 ம் ஆண்டு அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்தவர்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தார்கள்.

    அந்த அறிவிப்பு வந்த பின் அதற்கு தனி குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து இருக்கின்ற அமைச்சர்கள் கருத்துக்களை என்னிடம் வழங்கினார். அதுகுறித்து அறிக்கை உள்ளது. ஆனால் அதுகுறித்து எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.

    பல அமைப்புக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதை எயல்லாம் தொகுத்து முதல்வரிடம் கொடுத்துள்ளோம். இறுதியாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்கள். ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போரட்டம் நடத்தலாம்.

    ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் வியூகத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது எந்தவிதத்திலும் சரியானது அல்ல.

    கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள். ஆனால் கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதல்வர் முடிவெடுத்த பின் தங்களின் கருத்தக்களை தெரிவிக்கலாமே தவிர யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்பது என்னுடைய கருத்து.

    அரசு பள்ளிகளில் உள்ள ஐடெக் லேப்களில் தனியாக ஆசிரியர் தேவை என்பதை நானும் உறுதி செய்கிறேன். 3 ஆண்டுகளில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுப்பதுடன் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தருவேன் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள்.

    இதில் எதிர் கட்சித் தலைவர் எந்த குரலும் கொடுக்காத நிலையில் இறுதி முடிவு எடுக்காத ஒரு விஷயத்திற்கு போராட்டம் என்பது தேவையில்லாதது.

    எடப்பாடி பழனிசாமி 2026-ம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இப்போதே அரசியல் செய்ய நினைக்கிறார். ஆர்ப்பாட்டம்-பேராட்டத்தை கைவிடுங்கள். தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×