என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடந்த 19-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தையல் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தப்படி, இந்த ஆண்டுக்கு பவர்டேபிள் உரிமையாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வை பனியன் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும்.
ஆனால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், 7 சதவீத கூலி உயர்வை வழங்காமல் உள்ளனர்.
இதுவரை வழங்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி விட்டு கடந்த 19-ந் தேதி முதல் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பனியன் உற்பத்தியாளர்களிடம் இருந்து துணிகளை வாங்குவதையும், தைத்து கொடுத்த பனியன் துணிகளை டெலிவரி கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்தி உள்ளனர். திருப்பூரில் 300-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
இந்தநிலையில் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நிலை குறித்து நேற்று அறிவிப்பதாக தெரிவித்தனர். அதன்படி சங்கத்தின் செயலாளர் முருகேசன் கூறும்போது, '2 பெரிய நிறுவனங்கள் மட்டும் 7 சதவீத கூலி உயர்வை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த 2 நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்களை பெற்று செய்து கொடுக்கப்படும். அதேவேளையில் 7 சதவீதம் கூலி உயர்வு கொடுக்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பது, டெலிவரி கொடுப்பது இல்லை என்று முடிவு செய்து வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்கிறோம் என்றார். இதன் காரணமாக தையல் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
- முத்தமிழ் முருகன் மாநாடு 2 தினங்கள் நடைபெறவுள்ளது.
- அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட அனுமதி அளித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் 2 தினங்கள் நடைபெற உள்ளது.
ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும், உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால் தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
மாநாட்டிற்கு வருகை தரும் அனைத்து பொதுமக்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம். எனவே பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.
மேலும் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் மற்றும் மாநாட்டினை காண வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விவரங்கள், ஏதேனும் சந்தேகங்கள் உள்ளிட்ட விபரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 மற்றும் இலவச தொடர்பு எண்-1800 425 9925 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்தது
- பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111.90 அடியை எட்டியுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று வரை அணைக்கு வினாடிக்கு 835 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வினாடிக்கு தற்போது 2,295 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111.90 அடியை எட்டியுள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 110 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 117.20 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 121.45 அடியை எட்டி உள்ளது. இந்த 2 அணை பகுதிகளிலும் இன்றும் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 15.50 அடி மட்டுமே இருக்கிறது.
அந்த அணைக்கு நீர்வரத்து ஏதும் இல்லை. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 26 அடியை எட்டியுள்ளது.
- சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
- எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர்.
அரியலூர்:
அரியலூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவுற்ற பிறகு மின்சாரப் பேருந்துகள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
சென்னையில் கையடக்க கருவியோடு டிக்கெட் வழங்குகின்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்களை போன்ற தொண்டர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக வேண்டும் என்று காத்திருக்கிறோம்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச்.ராஜா தான் தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கானவர். உதயநிதி செயல்பாட்டை மக்கள் அறிவார்கள். அதனால் தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகி உள்ளார்.
ஆனால் எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர். எடப்பாடி பழனிச்சாமி ஒரு அடிப்படை அரசியல் கூட தெரியாமல் முதல்வரானவர். நாணயம் வெளியீடு என்பது ஒரு அரசு விழா. அரசு விழா நடைபெறும் போது மத்திய அரசு, மாநில அரசு இணைந்து பங்கேற்புடன் நடைபெற்று உள்ளது.
தி.மு.க. சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தனது முதுகை முதலில் பார்க்கட்டும். பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும். காய்ந்த மரம் கல்லடிபடும் என்ற அடிப்படையில் ஆளுங்கட்சியை எல்லோரும் விமர்சிப்பது வழக்கம்.
அதுபோல சீமான் விமர்சிக்கிறார். ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார். அவர்களெல்லாம் மக்களால் ஒதுக்கி தள்ளப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு இந்த ஆண்டு 120 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள ரூ.25,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு இந்த ஆண்டு 120 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 120 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை அவர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.5.12 கோடியில் 10,000 சதுர அடியில் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக தரம் உயர்த்தப்பட்ட SEOC மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- ஆசிரியரின் அட்டூழியத்தை மூடி மறைத்த தலைமை ஆசிரியர்.
- 3 பேர் மீது நடவடிக்கை? கல்வி அதிகாரிகள் விசாரணை
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சமபவத்தன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா தலைமையிலான பணியாளர்கள் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது அந்த பள்ளியில் 7, 8, 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 9 பேர், தங்களிடம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் நடராஜன் (வயது 54) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருந்த தாகவும் கூறினர்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இடைநிலை ஆசிரியர் நடராஜ், பிரச்சனை தெரிந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் மீது சிறுமுகை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பள்ளியில் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொந்தரவு செய்ததும், இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள், மூத்த பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் இச்சம்ப வத்தை போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடைநிலை ஆசிரியர் நடராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் இந்த பிரச்சினை தெரிந்தும், நடவடிக்ைக எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணையில் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் கைதான ஆசிரியர் நடராஜனின் அட்டூழியத்தை மூடிய மறைத்தது உறுதியானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

போக்சோ வழக்கில் கைதாகி உள்ள நடராஜன் இதற்கு முன்பாக அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி பள்ளியில் பணியாற்றி வந்ததும், அப்போது அங்கும் இதே போன்று எழுந்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறைக்கு சென்று பின்னர் வெளியே வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கிருஷ்ண கிரியில் பள்ளி ஒன்றில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேட்டுப்பாளையத்தில் ஒரு ஆசிரியர் கைதாகி உள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.
- இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது.
- 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
தமிழகத்தின் தலைநகராக பரந்து விரிந்து காணப்படும் சென்னை நகருக்கு இன்று 385-வது பிறந்த நாள். அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிறது.
இந்தியாவில் வணிகம் செய்ய ஆங்கிலேயர்கள் 1600-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினர். அவர்கள் மசூலிப்பட்டினத்தில் முதலில் கம்பெனியை தொடங்கி வணிகம் செய்தனர்.
ஆங்கிலேயர்கள் போலவே டச்சுக்காரர்கள், ஸ்பெயின், போர்த்துகீசியர்கள் ஆகியோரும் இந்தியாவில் வணிகம் செய்தனர்.

அவர்களுக்குள் போட்டிகள் அதிகரிக்கவே ஆங்கிலேயர்கள் புதிய கம்பெனி அமைப்பதற்கு தென் பகுதியில் ஒரு இடத்தை தேடினர். இதற்காக ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ்டே ஆகிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
அப்போது டமர்லா வெங்கடபதி நாயக் மற்றும் அவரது சகோதரர் அய்யப்ப நாயக்கர் என்ற உள்ளூர் நாயக் மன்னர்களிடம் இருந்து கூவம் ஆற்றின் அருகில் மதராசப்பட்டினம் என்ற பகுதி அடங்கிய ஒரு பெரிய இடம் ஆங்கிலேயர்களால் வாங்கப்பட்டது.
1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி இந்த இடத்தை ஆங்கிலேயர்கள் வாங்கியதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த நாள் தான் தற்போது சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர்கள் வாங்கிய அந்த நிலத்தில் 1640-ம் ஆண்டு ஒரு பெரிய கோட்டையை கட்டத் தொடங்கினர். அப்போது முதல் அந்த பகுதி நகரமாக வளர்ச்சி அடைய தொடங்கியது. இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
கோட்டைக்கான கட்டுமான பணிகள் 1653-ம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆங்கிலேயர்களுக்கு பணி செய்ய வந்தவர்கள், கோட்டை பணியில் ஈடுபட்டவர்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி மக்கள் குடிபெயரத் தொடங்கினர்.

கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் மிக பழமையான கிராமங்கள் ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான குடியிருப்புகளில் ஆங்கிலேயர்கள் வசித்தனர்.
அந்த பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்பட்டது. அதே போன்று கோட்டையை சுற்றி இந்தியர்கள் வாழ்ந்த நகரம் கருப்பு நகரம் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக கோட்டை அமைந்த பகுதி ஜார்ஜ் நகரம் என்றே குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையே கோட்டை மற்றும் ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்திய பகுதி மதராசப்பட்டினத்திற்கு அருகில் இருந்ததால் அப்பகுதி உள்ளூர் மக்களால் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
அதே போன்று கோட்டை கட்ட நிலம் வழங்கிய மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக், அவரின் தந்தை பெயரான சென்னப்ப நாயக் என்பதை நினைவுகூர சென்னப்பட்டினம் என்ற பெயரை அப்பகுதிக்கு சூட்டினார்.
இதனால் புதிதாக விரிவடைந்த நகரத்திற்கு பெயர் மதராசப்பட்டினமா அல்லது சென்னப்பட்டினமா என்ற சந்தேகம் இருந்தது. கோட்டை மற்றும் சுற்றிள்ள பகுதிகள் இணைந்து நகரமாக உருவான நிலையில், வடக்கு பகுதி மதராசப்பட்டினம் என்றும், தெற்கு பகுதி சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.

நாளடைவில் இந்த நகரம் முழுவதுமே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர், பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்த சாந்தோம், நெசவாளிகள் வாழ்ந்த சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சிறிய கிராமங்களை படிப்படியாக மெட்ராஸ் நகரத்துடன் இணைத்து ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்தினர்.
திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களும் மெட்ராஸ் நகரத்துடன் இணைந்தது. 1688-ம் ஆண்டு மெட்ராஸ் பகுதிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது.
அதன்பிறகு பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்புகளை இணைத்து "மெட்ராஸ் மாகாணம்" உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் மிகபெரிய இடத்தை பெற்றது. மெட்ராஸ் மாகாணத்தை மற்ற நகரங்களுடன் இணைக்க ரெயில் பாதைகள் உருவாக்கப்பட்டன.
மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. காவல்துறையும் ஏற்படுத்தப்பட்டு, நீதிமன்றமும் கட்டப்பட்டது. ஐகோர்ட்டு, சென்னை பல்கலைக்கழகம், மாநில கல்லூரி, சென்ட்ரல் ரெயில் நிலையம் ஆகியவை அப்போதுதான் உருவாக்கப்பட்டன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.
அதன் பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969-ம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ் 1996-ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றப்பட்டது.
அதன் பிறகு சென்னை நகரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய தொடங்கியது. சென்னை நகரின் பரப்பளவு பரந்து விரியத் தொடங்கியது. சென்னையை சுற்றிலும் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை வேகமான வளர்ச்சியை பெற்றன.

அதன் காரணமாக சென்னை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி என்ற அந்தஸ்தோடு திகழ்கிறது. இதனால் பல்வேறு துறைகளிலும் சென்னை நகரம் முதலிடம் பெற்று சிறப்புடன் திகழ்கிறது.
பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சென்னையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சுமூகமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
சென்னையில் தற்போது 1 கோடியே 22 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். சென்னைக்கு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, போக்குவரத்து, மருத்துவம், அறிவியல், அரசியல், பொழுதுபோக்கு, உணவு என்று அனைத்து வகைகளிலும் சென்னை நகரம் நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.
தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்படும் சென்னை சில அம்சங்களில் நாட்டின் முதன்மை நகரமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள் கொண்ட சிறப்பு சென்னைக்கு உண்டு.
மேலும் சிறந்த மருத்துவம் அளிக்கும் நகரமாக சென்னை திகழ்கிறது. நாட்டிலேயே அதிக கார்கள் உற்பத்தியாகும் நகரமாகவும் சென்னை உள்ளது. ஐ.டி. தொழில் தொழில் நுட்பத்திலும் மற்ற நகரங்களுக்கு வழிகாட்டும் இடமாக சென்னை உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் நிறைந்த இடம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்களே இதற்கு சாட்சியாக திகழ்கின்றன.
இந்த நிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் தலைநகராக, பேரும் புகழோடும் விளங்கும் சென்னை மாநகரின் பிறந்த நாளை அனைவருமே கொண்டாடி மகிழ்வோம்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
- தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக, வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்கிறார். முதலமைச்சர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.
மூத்த அமைச்சர் உள்பட 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, புதிதாக 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
- பொது அரசியலில் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை உண்டு.
- மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.
தூத்துக்குடி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது அரசியலில் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு இயக்கம் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார் நடிகர் விஜய்.
இன்றைக்கு அவருடைய கட்சியினுடைய கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றுவதாக அறிவிப்பு வந்து இருக்கின்றது. மக்கள் பணி, இயக்கப் பணி, மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அந்த வகையில் மக்களின் நம்பிக்கையை பெறுபவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது உறுதி.
புதிய கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிற தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் விஜய்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாலியல் தொந்தரவு என்பது உலக அளவில் இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மிருகத்தனமான பாலியல்கள் செய்திகளை கேட்கும்போது வருத்தமாக இருக்கின்றது.
இந்த பாலியல் சீண்டலில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருவது, பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் யார் என்று முதல் நிலையிலே தெரிந்தாலே உடனடியாக அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான். அப்படி கடுமையான தண்டனை இருக்குமேயானால் அடிப்படையில் பயம் இருக்கும்.
சட்டம், ஒழுங்கு எங்கு கெடுவதாக இருந்தாலும் அதற்கு குடிப்பழக்கம், போதைப் பொருட்கள் தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதனுடைய தாக்கம் பாலியல் தொல்லைக்கும் வழி வகுக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு வேதனைக்கும், வருத்தத்திற்கு உரிய விஷயம். பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று தெரிந்தால் நேரம், காலம் தாழ்த்தாமல் உடனடியாக 20 மணி நேரம், 48 மணி நேரத்தில் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குருமூர்த்தியிடம் சிலர் வாக்குவாதம் மற்றும் தகராறிலும் ஈடுபட்டனர்.
- தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்து சரமாரியாக தாக்கினர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 48). இவர் ராஜபாளையத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகிறார்.
மேலும் விருதுநகர் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளராகவும், ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.
குருமூர்த்தி தனது அலுவலகத்தை ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் காம்ப்ளக்சில் அமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருந்தார்.
இதற்கிடையே ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு வரும் நபர்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக குருமூர்த்திக்கும், மற்ற பயிற்சி பள்ளிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது. சிலர் குருமூர்த்தியிடம் வாக்குவாதம் மற்றும் தகராறிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பயிற்சி பள்ளியை சேர்ந்த வேல்முருகன் உள் பட 6 பேர் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் குருமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்து அவரை சரமாரியாக தாக்கினர்.

இதில் குருமூர்த்தி பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கடைக்காரர் கள் அங்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக் டர் பவுல் ஏசுதாஸ், பலத்த காயம் அடைந்த குருமூர்த் தியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் குருமூர்த்தி தாக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தலைமறைவான வேல்முருகன் உள்பட 6 பேர் கும்பலையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜபாளைத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.53,680-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.53,680-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.92-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக தவெக கொடி அமையும்.
- ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.
சென்னை:
சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை நடிகர் விஜய் வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசியல் பயணத்தை தொடங்கி பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தேன். அப்போதில் இருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.
* தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன்.
* தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக தவெக கொடி அமையும்.
* தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்.
* ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.
* என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம்.
* நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.
* தவெக கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதில் பெருமை, கொடிக்கான விளக்கத்தை விரைவில் சொல்வேன் என்று கூறினார்.






