என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ரகசிய இடத்தில் வைத்து சிவராமனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
- சிவராமனுக்கு விஷம் ரத்தத்தில் கலந்து இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காவேரிப்பட்டணம் காந்திநகர் காலனியை சேர்ந்த சிவராமன் (35 )என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அரசியல் கட்சியை சேர்ந்த அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
மேலும் பள்ளி மாணவி பலாத்கார சம்பவத்தை மறைக்க முயன்றதாக பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உள்பட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் சிவராமன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
ரகசிய இடத்தில் வைத்து சிவராமனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தப்பித்து ஓட முயன்றபோது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பலத்த பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சிவராமன் எலிகளுக்கு கொடுக்கப்படும் விஷ மாத்திரையை கைது செய்யப்பட்ட 18-ந் தேதி அன்று சாப்பிட்டதாக போலீசாரிடம் நேற்று தெரிவித்தார். உடனடியாக அவருக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ரத்த பரிசோதனையும் செய்தனர்.
அப்போது அவர் எலிகளுக்கான விஷ மாத்திரையை தின்றதும், அந்த விஷம் ரத்தத்தில் கலந்து இருப்பதையும் டாக்டர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கார் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.
- சரக்குவேனின் பின்பகுதி தனியாக உடைந்து கொரட்டூர் ஏரிக்குள் விழுந்தது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் பகுதியில் இருந்து கோயம்பேடு நோக்கி இன்று அதிகாலை சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. டிரைவர் பாலகிருஷ்ணன் வண்டியை ஓட்டினார். பட்டரைவாக்கம் மேம்பாலத்தில் வந்த போது எதிரே வந்த கார் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.
கார் மோதிய வேகத்தில் சரக்குவேனின் பின்பகுதி தனியாக உடைந்து சுமார் 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள கொரட்டூர் ஏரிக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த நபருக்கும், சரக்கு வேன் டிரைவர் பாலகிருஷ்ணனுக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு போலீசுக்கு தெரிவிக்காமல் அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது.
இதற்கடையே கொரட்டூர் ஏரிக்குள் சரக்கு வாகனத்தில் பின்பகுதி மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கொரட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரிக்குள் விழுந்து கிடந்த வாகனத்தின் பாகத்தை மீட்டனர்.
கார் மோதிய விபத்தில் சரக்குவேனின் பின்பகுதி மட்டும் கழன்று ஏரிக்குள் விழுந்ததால் முன்பகுதியில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். காரின் பதிவு எண்ணை வைத்து அதனை ஓட்டிவந்தவர் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- கோலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார்.
- உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறுப் பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில், உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 குறித்து விளக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட கோலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது.
- வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை!
சென்னை:
தமிழகத்தின் தலைநகராக பரந்து விரிந்து காணப்படும் சென்னை நகருக்கு இன்று 385-வது பிறந்தநாள். அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிறது.
சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது.
வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை!
இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்!
பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
- வாழை படம் நாளை வெளியாகிறது.
- வாழை படத்தின் Pre Release விழா சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்தது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாழை படத்தை பார்த்து விட்டு சோகத்துடன் வெளியே வந்த இயக்குநர் பாலா, மாரிசெல்வராஜை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பின்பு சிறிது நேரம் மாரி செல்வராஜ் பக்கத்தில் அமர்ந்த பாலா தன்னை ஆசுவாசப்படுத்தினார்.
மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போர்க்களத்தில் விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள 2 யானைகளும் நிற்கின்றன.
- 4½ நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளும் துள்ளல் போட வைக்கின்றன.
தமிழக வெற்றிக் கழக பாடல் இன்று வெளியிடப்பட்டது. பின்னணியில் போர்க்கள காட்சிகளுடன் கூடிய வீடியோ பாடலாக வெளியாகி இருக்கும் அந்த பாடலை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
போர்க்களத்தில் 2 யானைகளில் அமர்ந்துள்ள இருவர் போர் வீரர்களை யானையை கொண்டு விரட்டி கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதையடுத்து மத யானைகளான அந்த 2 யானைகளையும் அடக்கி மக்களை காப்பதற்கு போர் வீரன் (விஜய்) குதிரையில் மின்னல் வேகத்தில் வருகிறார்.
அதே போர்க்களத்தில் விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள 2 யானைகளும் நிற்கின்றன. போர் வீரன் குதிரையில் வந்து இறங்கியதும் 2 யானைகளும் அவனது உத்தரவுக்கிணங்க செயல்பட்டு 2 மாத யானைகளையும் துதிக்கையில் தாக்கி கீழே சாய்ப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோக்களை பரப்பி வரும் விஜய் கட்சியினர் அரசியல் களத்தில் எதிரிகளை இப்படித்தான் விஜய் சாய்க்கப் போகிறார் என்கிற வாசகங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
4½ நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளும் துள்ளல் போட வைக்கின்றன. தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பொறக்குது.
தமிழா தமிழா நாம் வாழப் போறோமே... சட்டசபையை அலங்கரிப்போம் ரெட்டை யானை பலம் கொடுக்கும் என்பது போன்ற வரிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.
- மதுரைக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட இறைச்சி மாயம்.
- 1700 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல்
சென்னை
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மதுரை சென்ற பிக்கானீர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கெட்டுப்போன இறைச்சி கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 1700 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர்.
5 நாட்களுக்கு முன்னர் வெட்டப்பட்டு தெர்மாகோல் பெட்டிகளில் வெட்டி உரிக்கப்பட்ட ஆடுகளை மடக்கி வைத்து ரெயிலில் கொண்டு வந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 1700 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே ஒரு கண்டெய்னர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ எடை கொண்ட இறைச்சி மாயமாகி உள்ளது. 30 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பெட்டிகள் அனைத்தும் மாயமாகி உள்ளது.
அவை சென்னை வருவதற்கு முன்பே ரெயில் பெட்டியில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி கெட்டுப்போன இறைச்சி சென்னையில் உள்ள ஓட்டல்களில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி சில்லரை விலையில் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் இருந்து இறைச்சியை கடத்தி வந்த கும்பல் இதுபோன்று பலமுறை கெட்டுப்போன இறைச்சியை எடுத்து வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு ஒரு கிலோ இறைச்சி ரூ.500 என நிர்ணயம் செய்து விற்பனை செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து சென்னையில் உள்ள அசைவ உணவகங்கள் மற்றும் பிரியாணி கடைகளில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை மாநகரில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி தொடர்ச்சியாக பிடிபட்டு வருவது அசைவ உணவு பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் ஓட்டல் உணவுகள் ஆபத்தாவை
தானோ? என்கிற அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்தே காணப்படுகிறது.
- ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. இவர்களில் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.
- 10-ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிய ருளினார்.
நிறைவு நாளான 10-ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
காலை 5.35 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.35 மணிக்கு நிலைக்கு வந்தது.
நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் அஜித், தலைமை கணக்கர் அம்பலவாணன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், பணியாளர்கள் ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், முருகேசன், கார்த்திகேயன், பால்ராஜ், மாரிமுத்து, ஜெகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா புறப்படுகிறார்.
- மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற அந்த நிகழ்ச்சியை தமிழக அரசு நடத்தியது.
சென்னை:
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா புறப்படுகிறார்.
அதற்கு முன்னதாக அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியமைக்க உள்ளதாகவும் மூத்த அமைச்சர் உள்பட சிலரது பதவி பறிக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தது.
அதாவது மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு 2 அமைச்சர்களின் பதவி பறிக்கப்படுவதாகவும், 3 புதியவர்கள் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வந்தன. அதாவது நாளைய தினம் (23-ந் தேதி) நல்ல நாளாக இருப்பதால் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று பரபரப்பான தகவல் வந்த வண்ணம் இருந்தன.
இந்த தகவல் உண்மையா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் நேரடியாகவே, கேட்க முனைந்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் பேரிடர் மேலாண்மைத் துறைக்கான (மாநில அவசரகால செயல்பாட்டு மையம்) புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
கேள்வி: அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளிவருகிறதே?
பதில்: அதுபற்றி எனக்கு தகவல் வரவில்லை என்று தெரிவித்தார்.
இதன் மூலம் அமைச்சரவை மாற்றம் இப்போதைக்கு இல்லை என தெரிய வருகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மேலும் கேட்கப்பட்ட கேள்விகள் வருமாறு:-
கே: பேரிடர் மேலாண்மை மையத்தில் என்னென்ன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது?
ப: எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன தேவைப்படுமோ அதையும் கொண்டு வருவோம்.
கே: கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் இதே போல் மையம் அமைக்கப்படுமா?
ப: படிப்படியாக கொண்டு வரலாம் என இருக்கிறோம்.
கே: கலைஞர் நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழ்நாடு அரசின் விழாதான் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறி இருக்கிறாரே? ஆனால் நீங்கள் அதை மத்திய அரசின் விழா என சொல்லி இருக்கிறீர்கள்?
ப: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற அந்த நிகழ்ச்சியை தமிழக அரசு நடத்தியது.
கே: உங்கள் அமெரிக்க பயணத்தில் என்னென்ன முக்கியத்துவம் இருக்கும்? அங்குள்ள தமிழ் தொழில் அதிபர்களை சந்திக்கும் திட்டம் உள்ளதா?
ப: அமெரிக்காவில் முதலீட்டாளர்களோடு சந்திப்பு உள்ளது. எல்லோரையும் பார்க்கிறோம். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பிறகு அதன் முடிவுகளை அப்போது கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குரங்கணி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குரங்கணி டாப் ஸ்டேஷன், முதுவாக்குடி, கொழுக்குமலை, முட்டம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் போடியின் முக்கிய நீர் ஆதாரமான குரங்கணி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீரோடையில் கட்டப்பட்டுள்ள சுமார் 7 அடி ஆழமுள்ள நீர் தேக்க தொட்டி மற்றும் தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் குரங்கணி அருவி, நீரோடைக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக மஞ்சளாறு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து எலிவால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.

தமிழகத்திலுள்ள அருவிகளில் மிகவும் உயரமானது எலிவால் அருவி. இந்த அருவி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் முதன் முதலில் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.
எனவே எலிவால் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இதேபோல் கும்பக்கரை அருவியில் கடந்த 12ம் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வித்தித்தனர். தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.
- விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப் பாளையம் கிராமத்தில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சென்றவாரம் ஊர் கவுண்டரின் 2 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் இன்று விடியற்காலையில் மலைக்காரி ஆயா அலமேலு என்பவரின் 5 ஆடுகளை பல நாய்கள் சேர்ந்து கடித்து கொன்றுள்ளது. எனவே காட்டுப்பாளையம் பிரம்மதேசம் புதூர் பகுதியில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுவதால் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






