என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள்.
- மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அருகே கிட்டனஅள்ளியில் கர்ப்பிணி பெண்ககளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் இணை இயக்குநர் சாந்தி, தலைமையில் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவினர் கிட்டன அள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள், சிறிது நேரம் காத்திருந்து திடீரென வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.
விசாரித்தில் கர்ப்பிணிக்கு 8 வருடத்திற்க்கு முன்னர் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதும், தற்போது வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என தெரிந்ததால் கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை அடுத்த குள்ளப்பநாயக்கனூரை சேர்ந்த சித்ராதேவி (42) என்பவரை பிடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சித்ராதேவியை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- காதல் திருமணம் செய்த இவர்களை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
- மனைவி, மகளை கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி அருகே உள்ள அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 35). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அஜித்தா (வயது 33) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது பிரத்விகா (5) என்ற மகள் உள்ளார். இந்த குழந்தை தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.
காதல் திருமணம் செய்த இவர்களை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அரண்மனைப்புதூர் அருகே உள்ள முல்லை நகரில் வாடகை வீட்டில் சதீஸ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தனர். சதீஸ்குமார் தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
மேலும் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும் பைனான்ஸ் தொழில் செய்தும் வந்துள்ளார். தற்போது இவரது மனைவி அஜித்தா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
அஜித்தா தனது தேவைகளை ஒரு பேப்பரில் எழுதி தனது மகளிடம் கொடுத்து விடுவார். அதனை பார்த்து சதீஸ்குமார் என்ன வேண்டுமோ அதனை வாங்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை முதல் இரவு வரை பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பல முறை தொடர்பு கொண்டும் இணைப்பு கிடைக்காததால் சந்தேகமடைந்தனர்.
இதனையடுத்து அஜித்தாவின் தந்தை மற்றும் சகோதரனுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் என்ன பிரச்சனை என்று விசாரிக்குமாறு பைனான்ஸ் கம்பெனியில் இருந்து தெரிவித்தனர்.
அஜித்தாவின் தந்தை மற்றும் அவரது தம்பி வீட்டுக்கு வந்த போது உட்புறமாக கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அஜித்தா மற்றும் அவரது மகள் கத்திக் குத்து காயங்களுடன் கொடூரமாக இறந்து கிடந்தனர். கணவர் சதீஸ்குமார் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வீட்டில் சோதனை செய்த போது சதீஸ்குமார் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், தனது பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவர் எழுதியிருந்தார். காதல் திருமணம் செய்து சந்தோசமாக வாழலாம் என நினைத்தோம். ஆனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, அதனை தீர்த்து வைக்க யாரும் வரவில்லை. இதனால் என் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தேன். இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. நான் இல்லாத உலகத்தில் அவர்கள் இருக்க கூடாது என்பதாலும் அவர்கள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பாத காரணத்தாலும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளேன். என்னை அனைவரும் மன்னித்து கொள்ளுங்கள். இவ்வாறு சதீஸ்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
காதல் திருமணம் செய்த மனைவி, மகளை கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.
- காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்களாக என மீனவர்கள் தெரிவித்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்களில் கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதாலும், கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.
இதனால் இந்த பகுதியை சேர்ந்த சுமார் 5,000 மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் வலையில் வாவல், காலா, ஷீலா, திருக்கை, நண்டு இறால், உள்ளிட்ட அனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்தன. மீன்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது. இதனால் அதிகப்படியான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.
இந்த நிலையில் கடலுக்குச் சென்று அதிக மீன்களை பிடித்து வரலாம் என்று நினைத்த மீனவர்களுக்கு, கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
சுறைகாற்றின் வேகத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வீடுகளில் 2-வது நாளாக முடங்கிப் போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்திய பைபர் படகுகளும் கடற்கரையில் ஓய்வெடுக்கின்றன. காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்களாக என மீனவர்கள் தெரிவித்தனர்.
- சென்னை திருமழிசை பகுதியைச் சேர்ந்த அஜஸ் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார்.
- விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.
திருச்சி:
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. பஸ்சை சாத்தூரைச் சேர்ந்த அழகுராஜா என்பவர் ஓட்டிச் சென்றார். சென்னை திருமழிசை பகுதியைச் சேர்ந்த அஜஸ் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார்.
இதில் 28 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை 2.15 மணி அளவில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ்ஸின் பின்பக்க டயர் வெடித்து.
உடனே சுதாகரித்துக் கொண்ட டிரைவர் பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார். இதை அடுத்து சில நொடிகளில் டயர் வெடித்த பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது. இதை கவனித்த டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரும் பஸ்ஸில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை எழுப்பி அனைவரையும் கீழே இறக்கினர்.
இதற்கிடையே சற்று நேரத்தில் தீ வேகமாக மளமளவென பரவி பஸ் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் உதவி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்தியவர்த்தனன் தலைமையில் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் நாலாபுறமும் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் தீக்கிரையாகி எலும்பு கூடானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. ஆனால் பயணிகள் அவசர அவசரமாக இறங்கியதால் சிலரது உடைமைகள் பஸ்ஸில் சிக்கிக் கொண்டது.
அந்த உடமைகள் தீக்கிரையாகின. பின்னர் அந்த பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் மாற்று பேருந்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறை வீரர்கள் கூறும்போது, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். பஸ்ஸின் டீசல் டேங்க் வெடித்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பாலத்தில் கூட சேதாரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
இந்த தீ விபத்தும் காரணமாக மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.
- ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
- இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
* சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
* ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்தவேண்டும்.
* சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்குந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
* சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
* விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார்.
- மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை அசோக்குமார் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார்.
போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது அவரது வலது கால் முறிந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று காலை தகவல்கள் வெளியானது.
இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் காவேரிப்பட்டினம் நடேசா திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை அசோக்குமார் (61) படுகாயம் அடைந்தார்.
தலையில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
- தமிழகத்தில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை.
- தும்மும் போது வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது.
சென்னை:
ஆப்பிரிக்கா நாடுகளை ஆட்டம் காண செய்த குரங்கம்மை, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் 116 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி இருக்கிறது. இந்தியாவில் இந்த நோய் பரவி விடாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது உத்தரவின்பேரில், பொது சுகாதாரத்துறை குரங்கம்மை தடுப்பு பணிகளில் முனைப்பு காட்டி வருகிறது.
குரங்கம்மை அறிகுறி, தடுப்பு பணிகள் மற்றும் தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-
1958-ம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, குரங்கம்மை நோய். தற்போது இந்த நோய் உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக மாறி உள்ளது. குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.
உலக நாடுகளில் பலருக்கும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. தமிழகத்தில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை. தீவிர காய்ச்சல், உடல் வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறியாகும்.
குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக 104 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டால், ஆம்புலன்ஸ் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து அழைத்து செல்லப்படுவார்கள். சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவனத்தில் அவர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கோவை அரசு ஆஸ்பத்திரி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிகளில் தலா 10 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள 116 நாடுகளுக்கு யார் எல்லாம் சென்றுள்ளார்கள் என்பதை அறிய, 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.
தும்மும் போது வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. மேலும் உடலில் சிரங்கு, காயங்களை தொடுவதின் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபரின் கறைபட்ட ஆடைகள், கிருமி தொற்றியுள்ள துணிகள், படுக்கைகள் போன்றவற்றை தொடுவதின் மூலமும் குரங்கம்மை பரவுகிறது. உடலுறவு மூலம் இந்த நோய் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. சில நேரம் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவ வாய்ப்புகள் உள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை பராமரிப்பவர்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும், குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே குரங்கம்மை நோய் குறித்த அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது.
- எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். கடந்த 19-ந்தேதி சிவராமன் கைது செய்யப்பட்டார்.
போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பி ஓட முயற்சித்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதற்கு மாவு கட்டு போடப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன் திடீரென சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைது செய்யப்படுவதற்கு ஒருநாளைக்கு முன்னதாகவே எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடந்தது. அதில் பங்கேற்ற 8-ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் சிவராமன் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மொத்தம் 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் அவசர கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோல நேரில் விசாரணை நடத்தி உரிய பரிந்துரைகள் அளிக்க சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழுவும் அமைத்தார்.
சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டது குறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில் "மாணவி பலாத்கார வழக்கில் கைதாகி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிவராமன் சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் அவர் எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், தற்போது தப்பி ஓட முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு சிவராமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து, அவர் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
தற்போது சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டடார்" நேற்று விளக்கம் அளித்திருந்தார்.
- கலைஞரின் இந்த நூல்கள் அனைத்தும் நூலுரிமை தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படும்.
- உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுமைமை ஆக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் கருணாநிதி படைத்துள்ளார்கள்.
தனியொரு மனிதரால் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என எண்ணும் வண்ணம் கலைஞர் சாதனை படைத்துள்ளார்.
கலைஞரின் இந்த நூல்கள் அனைத்தும் நூலுரிமை தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படும்.
தமிழ்நாட்டில் மட்டும் இன்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
- தலைமைச் செயலாளர் உடன், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் உடன் இருந்தார்.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்துள்ளார். தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, தலைமைச் செயலாளர் உடன், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் உடன் சென்றுள்ளார்.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்
- சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும்
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்," வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று அதாவது ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதேபோல் நாளை முதல் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் சில இடங்களில் மட்டும் பகலில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
- கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது.
இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை நீக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு உடன்படாத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஒரே படத்தை இரு கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சியினர் கூறியுள்ளனர்.






