என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
- தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
பழனி:
பழனி மலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி தருகிறார். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் வசதிகளும் உள்ளன. பழனியில் தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பழனியில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநாட்டையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. பழனி மலைக்கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
அதன்படி தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் இன்று தொடங்குகிறது.
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார். அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.
'உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.'
பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கத்தில் காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், நாதஸ்வரம்-தவில் மங்கள இசையுடன் மாநாடு தொடங்குகிறது.
காலை 8.55 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலை வகிக்கிறார். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வேல் கோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். பின்னர் 9.30 மணிக்கு சீர்காழி கோ.சிவசிதம்பரத்தின் இறைவணக்கத்துடன் மாநாடு தொடங்குகிறது.
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகத்தில் பூதாகாரமாக வெடித்தது.
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பல்வேறு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சு கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த வழக்கில் தமிழக காவல் துறை கைது செய்தவர்களில் மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை மற்றும் ஜோசப் என நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 17 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசார் பரிந்துரைத்தனர்.
அதன்படி முதற்கட்டமாக நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி, பாடல் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
- தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. அதன் தொடர்ச்சியாக அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தார்.
நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நேற்று (ஆகஸ்ட் 22) காலை அறிமுகம் செய்து வைத்தார். இதை கொண்டாடும் விதமாக நடிகர் சௌந்தரராஜா, அவர்மீது உள்ள பாசத்தின் காரணமாக, அவரின் அன்புதம்பியும், மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக அறக்கட்டளை சார்பாகவும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை தனது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து சென்று, அங்குள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வைத்து விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சணையும், பூஜையும் செய்து, கட்சி கொடியை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய்யிடம் வழங்க முடிவு செய்துள்ளார். மேலும், விஜய் மற்றும் அவர் துவங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோவிலில் வேண்டினார்.
சிறப்பு பூஜையை தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா மதுரை மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுகத்தை கொண்டாடும் வகையில், இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மீது தான் கொண்டுள்ள தீரா அன்பு மற்றும் தமிழக மக்கள் மீது தலைவர் விஜய் வைத்துள்ள பேரன்பின் வெளிப்பாடாக நடிகர் சௌந்தரராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியதாக தெரிவித்தார்.
- சிவராமனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அதிமுக, பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான் சாகப்போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என வருத்த கடிதம் எழுதியிருந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலி பயிற்சியாளர் சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, அவரது தந்தையும் மதுபோதையில் கீழே விழுந்து இறந்தார்.
சிவராமனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அதிமுக, பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி சிவராமன் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
சிவராமன் குற்ற உணர்வில் தற்கொலை செய்து இறந்துபோனார். இந்த மனவேதனையில் அவரது அப்பா மது அருந்தி சாலையில் விழுந்து இறந்துவிட்டார்.
சிவராமன் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிந்ததும் அவரை காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள்தான். நான் சாகப்போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என வருத்த கடிதம் எழுதியிருந்தார்.
அதைக் கட்சி தம்பிகளிடம் கொடுத்து விசாரிக்க சொன்னேன். தான் செய்தது தவறு என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.இதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இது தற்கொலைதான். இதற்கு பின்னால் யாரும் இல்லை" என தெரிவித்துள்ளார்.
- சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 15 மண்டலங்களில் மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
- 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த, 6.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ், 15 மண்டலங்களில் மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில், விரிவாக்கத்திற்கு முன்பு இருந்த 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 6.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள சென்னை மாநகராட்சி. இந்தப் பணிக்கான டெண்டருக்காக, வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிக்கூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரும் நோக்கிலும், சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன.
- பல கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய சிவராமன் தற்கொலை செய்து கொண்டது, மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சென்னை:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார். சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று காலை தகவல்கள் வெளியானது.
இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், காவேரிப்பட்டினம் நடேசா திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மேலும், அவரது தந்தை திரு. அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.
போலி NCC பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது ? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி NCC முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா? சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி NCC முகாம்கள் நடத்தி அவர்களுக்கு NCC சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா ? போலி NCC பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ? போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.
ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் விடியா திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி NCC முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
- சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
- சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
பிறகு, நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காவல்துறை என்னுடைய துறை என்பதால் இந்த நிகழ்ச்சி கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
நானே பதக்கம் வாங்கியது போன்று மகிழ்ச்சியாக உள்ளது. பதக்கம் வென்ற காவலர்களுக்கு வாழ்த்துகள்.
பதக்கங்களுக்கு பின்னால் உள்ள உங்கள் உழைப்பு தலை வணங்கத்தக்கது. அமைதியான மாநிலத்தில் தான் வளமும், வளர்ச்சியும் இருக்கும்.
இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் பெருமைமிகு மாநிலமாக திகழ, காவல்துறையின் பங்கு முக்கியமானது.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது.
காவல்துறையினரின் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது. மக்களை பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
காவல் துறையை மேலும் நவீனப்படுத்தி வருகிறோம்.
காவல்துறையை நவீனமயமாக்கியவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. காவல் துறையில் மகளிருக்கு வாயப்பு அளித்தது கருணாநிதி தான்.
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடங்களில் பணி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
- விழாவில் 159 மத்திய அரசு பதக்கங்களும் 301 முதலமைச்சர் பதக்கங்களும் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர், சென்னை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இங்கு, காவல்துறையினர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, காவல்துறையினருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பதக்கங்களை வழங்கி கவுரவித்து வருகிறார்.
அதன்படி, காவல், ஊழல் தடுப்பு, தீயணைப்பு, சிறை, சீர்திருத்த பணி, ஊர்க்காவல், தடய அறிவியல் துறையினருக்கு பதங்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விழாவில் 159 மத்திய அரசு பதக்கங்களும் 301 முதலமைச்சர் பதக்கங்களும் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.
சோமரசம்பேட்டை காவல் நிலைய காவலர் பி.செந்தில் குமாருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
- 4 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும், பூந்தமல்லி கிளை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் கைதான மணிவண்ணன் உள்பட 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கோபி, குமரன், ராஜேஷ் ஆகியோரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட மணிவண்ணன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உத்தரவை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும், பூந்தமல்லி கிளை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
- மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
- ஓடும் ரெயிலில் சண்முகவேலனிடம் பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
ஈரோடு:
மன்னார்குடியில் இருந்து கோவை வரை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி கோவையை சேர்ந்த சண்முகவேலன் என்பவர் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்து உள்ளார்.
அப்போது ஈரோடு ரெயில் நிலையம் வந்த போது ரெயிலில் இருந்த சண்முகவேலின் விலை உயர்ந்த மொபைல் மற்றும் நவரத்திரன மாலை, நவரத்தின கல் மோதிரம், டிராவல் பேக் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.
சண்முகவேல் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சண்முகவேலன் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ஈரோடு ரெயில்வே போலீசார் இச்சம்பவம் தொடர்பாக மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள வெளி பகுதியில் இருந்த பூங்காவில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் அங்கும், இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ராமசாமிபுரம், 2-வது தெருவை சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது 48) என தெரிய வந்தது.
மேலும் ஓடும் ரெயிலில் சண்முகவேலனிடம் பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து சங்கரபாண்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மொபைல், நவரத்தின கற்களை உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது சங்கரபாண்டியன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சங்கரபாண்டியன் மீது ஏற்கனவே சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகள், சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு, கழுகுமலை போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், சிவகாசியில் 1, ராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் 1, தூத்துக்குடியில் 3 திருட்டு வழக்குகள், தென்காசியில் 1 திருட்டு வழக்கு என மொத்தம் 22 திருட்டு வழக்குகள் சங்கர பாண்டியன் மீது நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சங்கரபாண்டியன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- சுங்கச்சாவடியில் பணியிலிருந்த போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நள்ளிரவு நடந்த விபத்தில் பணியில் இருந்த ஊழியர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
கடலூர் மாவட்டம் ராசாபாளையத்தை சேர்ந்தவர் கணேசன்( வயது 31 ).இவர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை பார்த்துவந்தார். நேற்று இரவு இவர் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழி எண் 4-ல் பணியில் இருந்தார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றுக்கு சுங்கவரி செலுத்துவதற்காக பணியில் இருந்த கணேசன், மணிகண்டன் ஆகியோர் கார்டிரைவரிடம் சுங்கவரியை வசூலித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அதே மார்க்கத்தில் ஒரு லாரி காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தது, மேலும் அதே திசையில் வந்த முட்டை லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துசுங்கச்சாவடி வழி எண் 4-ல் வரி செலுத்த நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் நின்று கொண்டிருந்த லாரி, காரின் மீது மோதி அங்கு வரி வசூல் செய்து கொண்டு இருந்த கணேசன், மணிகண்டன் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திய முட்டை லாரி டிரைவர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காங்கேயம் பகுதியை சேர்ந்த முத்துக் குமாரை (வயது29) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுங்கச்சாவடியில் ஊழியர்கள் அங்குள்ள பூத்தில் அமர்ந்து பணி செய்யாமல் வெளியில் நின்று பணி செய்வதால் இச்சம்பவம் நடந்ததாகவும், சுங்கச்சாவடியில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு இதற்கு காரணம் என்று அங்கு பணி செய்யும் மற்ற ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விபத்தில் பலியான கணேசனுக்கு அஞ்சலை தேவி என்ற மனைவியும் ஹரிஷ் என்ற மகனும் ரித்திஷா என்ற மகளும் உள்ளனர். சுங்கச்சாவடியில் பணியிலிருந்த போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மழை நீரில் சிறுவன் மூழ்கி பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 33). இவரது மனைவி சங்கீதா (28). இவர்களது மகன் சக்திவேல் (3). கிருஷ்ண குமார் அருகில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகுமார் வீட்டின் அருகே மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. அந்த தண்ணீரில் சக்திவேல் விளையாட சென்றுள்ளான். மழைநீர் அதிகமாக தேங்கிக் கிடந்ததால் அதில் சக்திவேல் மூழ்கினான்.
இதனிடையே சங்கீதா தனது மகனை காணாமல் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். தொடர்ந்து மழைநீர் தேங்கி நின்ற இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சக்திவேல் தண்ணீரில் மிதந்துள்ளான்.
உடனடியாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேங்கி கிடந்த மழை நீரில் சிறுவன் மூழ்கி பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






