திருப்பூரில் தேங்கி கிடந்த மழைநீரில் மூழ்கி சிறுவன் பலி

மழை நீரில் சிறுவன் மூழ்கி பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் தேங்கி கிடந்த மழைநீரில் மூழ்கி சிறுவன் பலி
Published on

திருப்பூர்:

திருப்பூர் மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 33). இவரது மனைவி சங்கீதா (28). இவர்களது மகன் சக்திவேல் (3). கிருஷ்ண குமார் அருகில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் திருப்பூர் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகுமார் வீட்டின் அருகே மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. அந்த தண்ணீரில் சக்திவேல் விளையாட சென்றுள்ளான். மழைநீர் அதிகமாக தேங்கிக் கிடந்ததால் அதில் சக்திவேல் மூழ்கினான்.

இதனிடையே சங்கீதா தனது மகனை காணாமல் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். தொடர்ந்து மழைநீர் தேங்கி நின்ற இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சக்திவேல் தண்ணீரில் மிதந்துள்ளான்.

உடனடியாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேங்கி கிடந்த மழை நீரில் சிறுவன் மூழ்கி பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com