என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ரூ.1 கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.
- என்னிடம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
மதுரை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் பக்ரைன் நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தேன். அங்கு அருகில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த வினி என்ற ஏஞ்சல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்தப் பெண் கேரளாவில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதில் அதிக வருமானம் வரும் என்றும், எனவே அதில் என்னை முதலீடு செய்ய சொன்னார். அதனை நம்பி நான் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ரூ.1 கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.
தொழிலில் வரும் லாபத்தை எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார். நான் வழங்கிய பணம் மற்றும் அதற்கான லாபம் குறித்து அந்த பெண்ணிடம் பல முறை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்தார். கடந்த மாதம் அவரை நேரில் சந்திக்க அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்றேன்.
அப்போது அவர் அங்கு இல்லை. மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அந்த பெண் என்னைப் போன்று பல பேரிடம் தொழில் தொடங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ளார் என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கைகள் இல்லை. எனவே என்னிடம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். எனது பணத்தையும் மீட்டுத்தர வேண்டுமென புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து இரண்டு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.
- நாளை முதல் சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
- அவிநாசிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி நீர்நிலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை அகற்ற கோரியும் அந்தப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், தன்னார்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நாளை முதல் சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இன்று சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு அவிநாசிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- முதல்வரின் பகல் கனவு என்றும் பலிக்காது.
- தமிழ்நாட்டில் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது.
சேலம் மாவட்டம் வனவாசியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார்.
* முதல்வரின் பகல் கனவு என்றும் பலிக்காது.
* கடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 30 சதவீதம் மட்டுமே சரிந்தது. பல தொகுதிகளில் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது.
* தமிழ்நாட்டில் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது. அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்று கூறினார்.
- தற்போது மாநகர பகுதியில் மீண்டும் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.
- ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் டவுன், தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் மொத்தம் 55 வார்டுகள் இருக்கின்றன.
இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கூட்ட நெரிசலான இடங்களிலும் அமைந்துள்ளது.
இந்நிலையில் மாநகர பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சாலைகள் பரபரப்பாகவே இயங்கும்.
இந்த நிலையில் ஆங்காங்கே நாய்கள் மற்றும் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவை வாகனங்களில் மோதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகி விட்டது.
சாலைகளில் திரியும் மாடுகளால் தொடர் விபத்துகளும், வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாநகராட்சி நிர்வாகித்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்ததன் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அவ்வப்போது சிறை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது மாநகர பகுதியில் மீண்டும் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு திருமால் நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி ஸ்வதிகா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி சாலையில் சில அடி தூரம் போய் விழுந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து மாணவியை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி இருந்தது. அவை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாநகரில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது தொடர்கதையாகி வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மாட்டின் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
- தீபாவளிக்கான தனியார் பஸ் ஒன்றுக்கு 1 கி.மீ.-க்கு ரூ.51.25 கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
- கிடைக்கும் வருவாயை விட ரூ.3000 வரை தனியாருக்கு கூடுதலாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
தீபாவளியையொட்டி தனியார் பஸ்களையும் வாடகைக்கு எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு தேவைக்கேற்ப தனியார் பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அரசின் இந்த முடிவிற்கு சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன் கூறுகையில்,
* தீபாவளிக்கான தனியார் பஸ் ஒன்றுக்கு 1 கி.மீ.-க்கு ரூ.51.25 கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
* அனைத்து இருக்கைகளும் நிரம்பினாலும் இல்லாவிட்டாலும் ரூ.51.25 கொடுக்க வேண்டும்.
* அரசு பஸ் ஒன்று 1 கி.மீ. ஓடினால் சராசரியாக ரூ.32 வருவாய் கிடைக்கும்.
* அரசு பஸ் வருவாய் ரூ.32, தனியார் பஸ் செலவு ரூ.51.25.
* அரசு பஸ்சை ஒப்பிடுகையில் தனியாருக்கு கூடுதலாக ரூ.19 அரசு கொடுக்கிறது.
* சென்னை-திருச்சிக்கு அரசு பஸ் முழுவதும் நிரம்பினால் ரூ.28,600 வருவாய் கிடைக்கும்.
* தனியார் பஸ் ஒன்றுக்கு அரசு கொடுக்க உள்ள தொகை ரூ.32,000.
* கிடைக்கும் வருவாயை விட ரூ.3000 வரை தனியாருக்கு கூடுதலாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
* தனியார் நிறுவனங்கள், கூடுதல் பஸ்களை இயக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.
* தனியார் பஸ்களில் பயணிகள் இருந்தாலும் இல்லை என்றாலும் தனியாருக்கு பணம்.
* சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும்போது கூட்டம் இல்லை என்றால் என்ன நிலை?
* தனியாருக்கு கொடும் பணத்தை அரசு பஸ்களுக்கு கொடுத்தால் என்ன?
அரசிடம் கூடுதல் பஸ்கள் இருக்கும்போது தனியார் பஸ்கள் ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி
- பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இன்று 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி 397 பேருக்கு நேரடியாகவும், 6238 பேருக்கு பல்கலைக்கழகம் மூலமாகவும், 16 பேருக்கு பதக்கம் என மொத்தம் 6635 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏற்கனவே கடந்த 2 பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்க வில்லை. தொடர்ச்சியாக இன்று கொடைக்கானலில் நடந்த பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் கோவிசெழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் காரணமாகவே உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கொடைக்கானல் வந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை இங்குள்ள சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். செயலாளர் சந்திரமவுலி கவர்னருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து பொருளாளர் ராமசுப்பிரமணியம், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நினைவு பரிசு வழங்கினார்.

அதன் பின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றி பேசியதாவது:-
தோல்வியை கண்டு துவளாமல் பின் வாங்கிச் செல்லாமல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து அதனையே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றினால் சாதனையாளராக ஜொலிக்க முடியும்.
வெற்றிக்கு முதல் காரணமாக மாணவர்கள் நேர மேலாண்மை , கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இயற்பியல் பாடத்தை இயற்கை மற்றும் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி படிக்க வேண்டும்.
எனது வெற்றிக்கு முதல் காரணம் என் தாயின் அறிவுரைகள் தான். எனவே மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலும் அதற்கு பிறகும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உங்களுடைய இலக்கு உயர்வானதாக இருந்தால் உங்கள் பள்ளிக்கும், உங்கள் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித் தரும்.
இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய எக்சாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
- சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.
- புதுவை பாஜக தலைவரை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி, கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி புதுவை மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. இதனால் பாஜக தலைவர் மாற்றப்படுவார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக தலைவர் செல்வ கணபதிக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அவர் ஆஜராக வேண்டும்.
இந்நிலையில் பாஜக-வின் தேசிய தலைவர் நட்டா அவசர அழைப்பின் பேரில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்று அவரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் புதுவை பாஜக தலைவரை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் புதிய புதுவை மாநில பாஜக தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என கட்சியினரிடையே தகவல் பரவி வருகிறது.
- கோரம்பள்ளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளை கனிமொழி பார்வையிட்டார்.
- நிரந்தர சீரமைப்பு பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களை கனிமொழி அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிரந்தர மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் முன்னிலையில், கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர், வசவப்பபுரம் - கருங்குளம் கிராமத்தில் உள்ள குட்டைக்கல் கண்மாயில் ரூ.75 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரை பலப்படுத்துதல், தடுப்புச்சுவர், மதகு அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும், கோரம்பள்ளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, காலங்கரை - அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உப்பாற்று ஓடையின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம வங்கியின் மூலம் ரூ.14 கோடியே 88 லட்சம் மதிப்பில் நடந்து வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளையும், ஓடையின் கரைகளை பலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நிரந்தர சீரமைப்பு பணிகளையும் உரிய காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த கனிமொழி எம்.பி. பெண் பஞ்சாயத்து தலைவர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்று பஞ்சாயத்து துணை தலைவருக்கு அறிவுரை வழங்கினார்.
- திமுக கூட்டணி கட்சிகளுக்குள் விவாதம் தான் உள்ளதே தவிர விரோதம் இல்லை.
- மழை வந்தபோது சேலத்திற்கு ஓடி பதுங்கியவர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ வேணுவின் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் முன்னாள் எம்எல்ஏ கி.வேணு.
* திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளுடன் கூறாத நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
* தேர்தலுக்காகவோ, பதவிக்காகவோ உருவாகாமல் கொள்கைக்காக உருவாக்கப்பட்டது திமுக கூட்டணி.
* திமுக கூட்டணி கட்சிகளுக்குள் விவாதம் தான் உள்ளதே தவிர விரோதம் இல்லை.
* திமுக ஆட்சியை நினைத்து எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை.
* செல்லா காசாக உள்ள எடப்பாடி பழனிசாமி பொறாமையில் தான் திமுக அரசு சரிந்து கொண்டிருக்கிறது என கூறுகிறார்.
* மழை வந்தபோது சேலத்திற்கு ஓடி பதுங்கியவர் எடப்பாடி பழனிசாமி.
* திமுக கூட்டணி உடைந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி ஜோசியம் கூறுகிறார்.
* தனது கட்சியில் உள்ள குழப்பங்களை சரிசெய்ய முடியாமல் திமுகவை குறை கூறுகிறார் இபிஎஸ்
* கனவு காண வேண்டாம், 2026ல் மட்டுமல்ல அதனை தொடர்ந்து வரும் அத்தனை தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும் என்று கூறினார்.
- இன்று காலை தண்ணீர் வரத்து சீரானது.
- சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று காலை 8 மணி முதல் அனுமதி
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கொட்டித்தீர்த்த கன மழை யின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாது காப்பு கருதி அருவிகளில் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று காலை தண்ணீர் வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று காலை 8 மணி முதல் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
- கவர்னர் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- தமிழ்த்தாய் வாழ்த்தின் அந்த வரிகள் பிரபலமடைந்து வருகிறது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழக கவர்னர் ரவி வருகை புரிந்தார். இன்று கொடைக்கானலில் உள்ள சங்கரா வித்யாலயா பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
கவர்னர் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் டி.டி. தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி வார விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி விடப்பட்டு இருந்ததை பல்வேறு கட்சியினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வந்தனர்.
இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தின் அந்த வரிகள் பிரபலமடைந்து வருகிறது. இன்று கொடைக்கானல் வந்த கவர்னர் ரவியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்புறம் மற்றும் அவர் பங்கேற்க சென்ற வழிகளில் திராவிடர் தமிழர் மன்றம் சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வாசகங்கள் இடம் பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டன. நேற்று இரவு வரை இந்த போஸ்டர்கள் தெரியாத நிலையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டதால் அதனை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர்.
- தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
- 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கோவை:
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்த நிலையில் மாலை 6 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது.
6 மணிக்கு தொடங்கிய மழையானது இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. பலத்த இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த இந்த மழையால் கோவையில் உள்ள முக்கிய சாலைகளான திருச்சி சாலை, சத்தி சாலை, அவினாசி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் அருவி போன்று கொட்டியது. அதில் வாகன ஓட்டிகள் நனைந்தவாறு வாகனங்களை இயக்கி சென்றனர்.
பணிமுடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கனமழை பெய்ததால் ஏராளமானோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு செல்ல முடியாமல் தவித்தனர். மழையில் இருந்து தப்பிக்க பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
குறிப்பாக அவினாசி சாலையில் சென்றவர்கள், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு அடியில் மழைக்கு ஒதுங்கினர். எல்.ஐ.சி சந்திப்பு பகுதியில் ஏராளமானார் தங்களது மோட்டார் சைக்கிளுடன் ஒதுங்கியதாலும், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.
இதுதவிர லங்கா கார்னர் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம், சிவானந்தா காலனி ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றினர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் இந்த பகுதிகளில் போக்குவரத்து சீரானது. வழக்கம் போல வாகனங்கள் பாலத்தின் கீழ் வழியாக செல்வதை காண முடிந்தது.
புறநகர் பகுதிகளான பெரிய நாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
பாலமலை பகுதியில் கொட்டி தீர்த்த மழை காரணமாக மலையில் இருந்து உற்பத்தியாகி பெரிய நாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், கோட்டைப்பிரிவு வழியாக செல்லும் ஏழு எருமைப் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மத்தப்பாளையத்தில் இருந்து ஒன்னிப்பாளையம் வழியாக செல்லும் இந்த சாலையில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
மழையால் இந்த பாலத்தில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அப்போது மின்தடை ஏற்பட்டதால் தண்ணீர் செல்வது தெரியவில்லை. அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களில் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டன.
இதனால் அதிர்ச்சியான காரில் இருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர். 2 கார்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இன்று காலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகிறார்கள்.
தொண்டாமுத்தூர் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழைக்கு புதுப்பாளையம் என்ற இடத்தில் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கி தீ பிடித்து எரிந்தது.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வாகனங்களில் சாலையில் ஊர்ந்தபடியே சென்றன. பல இடங்களில் வெள்ளநீருடன் சாக்கடை நீரும் கலந்தது. மழையால் மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. போக்குவரத்து மட்டும் பாதிக்கப்பட்டது.
அதேபோல் ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
மழையால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கோவையில் பெய்த கனமழையால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு விமான நிலையம் பகுதியில் 8 செ.மீ மழையும், கோவை தெற்கு தாலுகாவில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:-
விமான நிலையம்-87.60, வால்பாறை பி.ஏ.பி-74, சோலையார்-72, வால்பாறை தாலுகா-71, கோவை தெற்கு-70, பெரியநாயக்கன் பாளையம்-58, வேளாண் பல்கலைக்கழகம்-47, மேட்டுப்பாளையம-31, மாக்கினாம்பட்டி-39.






