என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
- மாநாட்டிற்கு வரும் கழகத் தோழர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள்.
சென்னை :
தமிழக வெற்றிக்கழகத் தலைமை நிலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க, வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நமது கழகத்தின் சார்பில், கழகத் தலைவரின் ஒப்புதலோடு. மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், மாநாட்டிற்கு வரும் கழகத் தோழர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள்.
- தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்.
- தாம்பரம்- நெல்லை இடையே நவம்பர் 4-ந்தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி, சென்ட்ரல்-செங்கோட்டை, சென்ட்ரல்-மங்களூரு, தாம்பரம்-கன்னியாகுமரி, கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே ஏற்கனவே தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, நெல்லை- தாம்பரம் இடையே நவம்பர் 3-ந்தேதியும், தாம்பரம்- நெல்லை இடையே நவம்பர் 4-ந்தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- மயிலம் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அவ்வையார்குப்பம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்காததால் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக திண்டிவனத்திற்கு சென்றுக் கொண்டிருந்த அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைப்பிடித்து பஸ் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மயிலம் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பல்வேறு பணிகளுக்காக சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பஸ்சில் சிக்கி தவித்தனர்.
- இது தொடர்பான அரசாணையும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் எம்.எம்.ஆர்.
- ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக உள்ளது.
மகப்பேறு இறப்புகளை தடுக்கும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்) அமைக்கும் பணியை தமிழக சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது. மகப்பேறு இறப்பு விகிதத்தை (எம்.எம்.ஆர்.) குறைக்க இந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான பணிக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பணிக்குழு தரவுகளை ஆய்வு செய்து, பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் 74.25% தாய் இறப்புகள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விரிவான பிறப்புக்கு முந்தைய திட்டமிடல் முறையை கொண்டு வரவும், ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், பெரிய அளவிலான திறன் வளர்ச்சி சார்ந்த பயிற்சி முகாம்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு எம்.எம்.ஆர். 54 க்கு மேல் இருக்கும் வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டு வரவும் பணிக்குழு முடிவு செய்தது.

நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிந்துரைகள், பாதுகாப்பான கருக்கலைப்பு நடைமுறைகள், துறைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு போன்ற பரிந்துரைகளும் வழங்கிப்பட்டது. இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தலைமை தாங்கினார். இது தொடர்பான அரசாணையையும் துறை வெளியிட்டுள்ளது.
வெளியீட்டின் படி, 2014-2024 வரையிலான தரவுகளின்படி, 72% இறப்புகள் கிராமப்புறங்களில் நிகழ்ந்தன, மீதமுள்ள 28% நகர்ப்புறங்களில் நிகழ்ந்தன. தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, தேனி, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் எம்எம்ஆர் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் எம்.எம்.ஆர். ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 55க்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டது.
சமீபத்திய மாதிரிப் பதிவு முறை (சாம்பில் ரெஜிஸ்டிரேஷன் சிஸ்டம்) தரவுகளின்படி, தமிழ்நாட்டின் எம்.எம்.ஆர். ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக உள்ளது. தேசிய சராசரி ஒரு லட்சம் பிறப்புகளில் 97 ஆக உள்ளது. இது கேரளாவில் 19, மகாராஷ்டிராவில் 33, தெலுங்கானா 43, ஆந்திரா 45, ஜார்கண்ட் 130 மற்றும் குஜராத்தில் 57 ஆக உள்ளது.
- தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் குறை ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள்.
- நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து இருக்கும்.
ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். அதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் குறை ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள்.
ஆகவே, 13 ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றுவதோடு, நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.
- மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்படுகிறது.
- உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தி வரை 3 நாட்களுக்கு அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்படுகிறது.
மேலும், உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
- சனாதன தர்மம் என்பது தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது இதுகுறித்து தமிழசை கூறுகையில், " உண்மையில் ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டார்.
பிரியங்கா காந்தி போட்டியிடுவதன் மூலம், இது வாரிசு அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது. பாஜக ஒரு இளம் பெண் வேட்பாளரைத் தொகுதியில் நிறுத்தியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் பங்களிப்பு என்ன? எனவே இனி மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.
மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது குறித்து அவர் கூறுகையில், "சனாதன ஒழிப்பு மாநாட்டில் அவர் பங்கேற்றார்.
அந்த மாநாட்டின் பெயர் 'சனாதன தர்மத்தை ஒழித்தல். அப்படியென்றால், அவருடைய வார்த்தைகள் திரிக்கப்பட்டவை என்று எப்படிச் சொல்ல முடியும்? டெங்குவை ஒழிப்பது போல் சனாதன தர்மமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
அவர், சனாதன தர்மத்தை பாகுபாடு என்றும், எஸ்டி/எஸ்சி மற்றும் சமூக நீதிக்கு எதிராகவும் தவறாக விளக்குகிறார்.
சனாதன தர்மம் என்பது தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை. அவர்கள் மக்களிடையே வேறுபாடு காட்ட விரும்புகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
- நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 17.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23.10.2024) காலை 05.30 மணி அளவில் புயலாக (டானா) வலுபெற்று, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் பாரதீப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 610 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி அதிகாலை வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.
இது, வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24ஆம் தேதி இரவு 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், 23-ஆம் தேதி மாலை முதல் 24 ஆம் தேதி காலை வரை மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- நூலகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
- விழாக்கள் நவம்பர் 4-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில் அடுத்த மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்யப்போவதாக அறிவித்தார்.
அதன்படி முதல் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் கோவை வருகிறார். காந்திபுரத்தில் 6.9 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடியில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2-வது ஐ.டி. பார்க் வளாகத்தை திறந்து வைக்கிறார். பீளமேடு பகுதியில் ஏற்கனவே ஐ.டி. பார்க் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்காக பொதுப்பணித்துறை மூலம் கோவை விளாங்குறிச்சி தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் இந்த புதிய ஐ.டி. பார்க் கட்டப்பட்டது. இதை முதலமைச்சர் திறந்துவைத்து ஐ.டி. பொறியாளர்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாக்கள் நவம்பர் 4-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் கோவை வருவது உறுதியாகிஉள்ளது. ஆனால் விழா 4-ந் தேதி நடைபெறுமா, தள்ளிப்போகுமா என்பது தெரியவில்லை. காரணம் 4-ந் தேதி என்பது தீபாவளி விடுமுறைக்கு பிறகு வரும் முதல் வேலைநாளாக ஆகும். இதனால் முதலமைச்சர் வருகை தேதி முறைப்படி அறிவிக்கப்பட்டதும் தெரிவிக்கிறோம் என்றனர்.
- திருச்சி மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே துப்புரவு பணியாளர்கள் தரையில் படுத்து தூங்கினர்.
- பேச்சுவார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச ஆரம்பித்தனர்.
திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் அன்றாடம் சுமார் 400 டன் குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு முழுவதும், விடிய விடிய போராட்டம் நீடித்தது.
இதன் காரணமாக திருச்சி மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே துப்புரவு பணியாளர்கள் தரையில் படுத்து தூங்கினர்.
இந்நிலையில் இன்று காலை தொடர்ந்து போராட்டம் 2-வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பேச்சுவார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச ஆரம்பித்தனர். இதை அறிந்த பேச்சுவார்த்தைக்குச் சென்ற நிர்வாகிகள் உடனடியாக மீண்டும் திரும்பி வந்தபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
- சிவானந்தா காலனியில் வசிக்கும் மற்றொரு தொழில் அதிபர் வீட்டிலும் இன்று வருமான வரிச்சோதனை நடந்தது.
- கோவையில் ஒரேநாளில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை:
கோவை சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசிக்கும் தொழில் அதிபர் வீட்டுக்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். அவர்கள் தொழில் அதிபரின் நிறுவனம் தொடர்பாக வரவு-செலவு விவரங்களை கேட்டறிந்து சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசிக்கும் தொழில் அதிபர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சிவானந்தா காலனியில் வசிக்கும் மற்றொரு தொழில் அதிபர் வீட்டிலும் இன்று வருமான வரிச்சோதனை நடந்தது.
கோவையில் ஒரேநாளில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாவட்டத்திலேயே அதிகபட்சமாக நத்தத்தில் 7 செ.மீ மழை பதிவானது.
- கனமழை காலங்களில் இந்த சாலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு 9.30 மணியளவில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
பின்னர் 10 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்ட சுரங்கப்பாதையில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன. ஏற்கனவே மழைக்காலம் தொடங்கியது முதலே இந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
மாவட்டத்திலேயே அதிகபட்சமாக நத்தத்தில் 7 செ.மீ மழை பதிவானது. மேலும் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே இடைவிடாத கனமழை கொட்டி வருகிறது. நேற்று இரவும் பெய்த கனமழைக்கு பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தும் மின் கம்பங்கள் சாய்ந்தும் விழுந்தன.
பெரியகுளத்தில் இருந்து 18 கி.மீ தூரத்தில் அடுக்கம் கிராமம் உள்ளது. இங்கிருந்து 12 கி.மீ தூரம் கடந்தால் பெருமாள்மலை வந்தடையும். இப்பகுதி மக்களுக்கு இந்த சாலை மட்டுமே முக்கிய வழித்தடமாக உள்ளது.
கனமழை காலங்களில் இந்த சாலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதே போல் இன்றும் அடுக்கம் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து பாதை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சாலையின் நடுவே விழுந்த பாறையை உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் 27.40, காமாட்சிபுரம் 53, நத்தம் 72.50, நிலக்கோட்டை 25, சத்திரப்பட்டி 10.20, வேடசந்தூர் 49, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 46, பழனி 20, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 16.50, பிரையண்ட் பூங்கா 15 மி.மீ என மாவட்டத்தில் ஒரே நாளில் 335.20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






