என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
    • ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல; உலகத்தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப்போராட்டம். ஈழத்தில் வாழ்ந்த தொப்புள்கொடி உறவுகள் வன்முறையின் மீது தீராக்காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரே நாளில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவில்லை.

    இனவெறி சிங்களவர்களின் இனவழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற கொடுஞ்சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டம்தான். 30 ஆண்டுகாலம் இனவாத இலங்கை அரசின் கொடும் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறுவழியின்றிதான் தமிழினத்தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும்.

    எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை.

    போராடினாலும் சாவோம்; போராடாவிட்டாலும் சாவோம்! ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச்சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றே எம்மினச்சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர்.

    கடந்த 2009ஆம் ஆண்டு இருபது நாடுகள் கூடி தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மண் விடுதலைக்குப் போராடி வீரக்காவியங்களான மாவீரர்த்தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

    ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனிடையே நேற்று அணைக்கு வினாடிக்கு 1,718 கனஅடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 1,670 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இன்று அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 4160 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகளும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுகளும் கலந்து தென்பெண்ணை ஆற்றில் வருகிறது.

    இதனால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ரசாயன நுரை குவியல், குவியலாக வெளியேறி காற்றில் பறந்து விவசாய நிலங்களில் படர்வதால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடித்து வருகிறது.

    ரசாயன நுரையுடன் பாய்ந்து செல்லும் வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்தது. தரைப்பாலத்தில் பல அடி உயரத்திற்கு நுரை காணப்படுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன கழிவுகளுடன் நுரை பொங்கி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

    • சென்னை, தஞ்சையில் 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
    • ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸ் அலுவலகத்திலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். ரூ.27 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது.

    இந்த வழக்கில் புகார் கூறப்பட்ட ஸ்ரீராம் குழும அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    நேற்று ஒரே நாளில் சென்னை, தஞ்சையில் 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அலுவலகத்தில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸ் அலுவலகத்திலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

    • புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் ரெயில்களும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சில ரெயில்களும் ரத்து.
    • சென்ட்ரல் இருந்து காலை புறப்பட்டு புவனேஸ்வர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான 'டானா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் ரெயில்களும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சில ரெயில்கள் உள்பட 30 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே நேற்று முன்தினம் தெரிவித்தது. இந்த நிலையில், கூடுதலாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12830) இன்று (24-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்ட்ரல் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு புவனேஸ்வர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12829) நாளை (25-ந் தேதி) ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய கடைகள் அமைப்பதற்கான ஏலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
    • நாளை முதல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்களுக்கு பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

    அதில், 1 முதல் 8 வரை உள்ள கடைகளுக்கு ரூ.2.25 லட்சம், 9 முதல் 24 வரை உள்ள கடைகளுக்கு ரூ.4 லட்சம், 26 முதல் 38 வரை உள்ள கடைகளுக்கு ரூ.5.60 லட்சம், 42 முதல் 50 வரை உள்ள கடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தொகைக்கு பட்டாசு கடைகள் ஒதுக்கப்பட்டு, நாளை முதல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்களுக்கு பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய கடைகள் அமைப்பதற்கான ஏலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அருகே காமதேனு கூட்டுறவு வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

    சென்னை:

    அமெரிக்காவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால், அவர்கள், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை என்று கூறி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய குடும்பநல கோர்ட்டு மறுத்துவிட்டது.

    இதை எதிர்த்து மனைவி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், "குற்றவியல் வழக்குகளில்தான் விசாரணைக்கு நேரில் ஆஜராவது கட்டாயமாகும். இதுபோன்ற விவாகரத்து வழக்கில் காணொலி வாயிலாக ஆஜராக வாய்ப்பு அளிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அமெரிக்காவில் வசிக்கும் தம்பதியிடம் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

    • ஆளும்கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி விஜய்யின் அரசியல் மாநாட்டில் நடப்பதை காண காத்திருக்கிறார்கள்.
    • விஜய் கட்சி மாநாட்டிற்கு சில கட்சிகள் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளன.

    சென்னை:

    தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. விறுவிறுப்பான ஏற்பாடுகள், தமிழகம் முழுவதும் இருந்து திரளும் தொண்டர்கள் என தமிழக வெற்றிக்கழகம் அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறது.

    இந்த அரசியல் மாநாட்டில் தான் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து பேச இருக்கிறார். தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீடுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் தான் விஜய் பேச இருக்கிறார். 2026-ம் ஆண்டு தனது அரசியல் பாதை என்ன? கூட்டணியா, தனித்தா? என்பது குறித்தெல்லாம் இந்த மாநாட்டில் தான் விஜய் தெளிவுபடுத்த இருக்கிறார்.

    ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இன்றைக்கு விக்கிரவாண்டி நோக்கியே திரும்பி நிற்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் விஜய்யின் அரசியல் நடவடிக்கையை உற்று நோக்கியே வருகிறார்கள்.

    மாநாட்டுக்கு எவ்வளவு பேர் வருவார்கள், மாநாட்டின் எழுச்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தெல்லாம் கட்சிகள் ஒரு கணக்கு போட்டு தான் வைத்திருக்கின்றன.

    விஜய்யும் ஒரு அரசியல் கணக்கு போட்டு வைத்திருக்கிறார், அந்த கணக்கு என்ன? என்பது இந்த மாநாட்டில் தான் தெரியும். ஆளும்கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி விஜய்யின் அரசியல் மாநாட்டில் நடப்பதை காண காத்திருக்கிறார்கள்.

    அரசியலில் எந்த விஷயமும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். விஜய் கட்சியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ஆளுங்கட்சி அமைச்சர் கூட சமீபத்தில் தங்கள் கட்சி நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

    விஜய் கட்சி மாநாட்டிற்கு சில கட்சிகள் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளன. விஜய்யின் மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் மாநாடு என்பதால் இந்த மாநாடு குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் விஜய் கட்சியில் இணைய இருக்கிறார்கள். அவர்கள் யார்? யார்? என்பது மாநாடு நடக்கும்போது தான் தெரியும். பிரபல நடிகர்களும் இணைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாநாட்டுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, பார்த்து விஜய் செய்து வருகிறார். எந்த கட்சியும் முன்னெடுக்காத வகையில் மகளிருக்கு தனி பாதுகாப்பு வசதி, அனைத்து தரப்பினருக்கும் எந்த சிக்கலும் வராத வகையில் சட்ட ஆலோசனை குழு, வாகனங்கள் வழிகாட்டும் குழு என 27 குழுக்களை அமைத்து இருக்கிறார். அந்த குழுக்களை ஒருங்கிணைக்க ஒட்டுமொத்த ஒரு ஒருங்கிணைப்பு குழுவையும் அமைத்து வருகிறார்.

    உடல் நலம், பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம் என்று விஜய் விடுத்த வேண்டுகோளும் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இப்போதே விக்கிரவாண்டி திருவிழாக்கோலம் பூண்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் மாநாட்டு பணிக்காக வந்திருக்கும் தொண்டர்கள் தங்கள் வீட்டு விஷேசம்போல் அணி திரண்டு தீயாய் மாநாட்டு வேலைகளை பார்த்து வருகின்றனர்.

    தங்களை வழி நடத்தும் தளபதிக்காக மாநாடு நடைபெறும் 27-ந் தேதியை தீபாவளிபோல் கொண்டாட காத்திருக்கின்றனர், தமிழக வெற்றிக்கழகத்தினர். விக்கிரவாண்டியில் குவிந்து வரும் தொண்டர்கள், விறுவிறுப்பான மாநாட்டு பணிகள், அரசியலில் விஜய் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழக அரசியல் களத்தை சூடேற்றி வருகிறது.

    • டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
    • தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலாக வலுப்பெற்று, நேற்று டானா புயலாக மாறியது.

    கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

    இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடற்பகுதியில் ஒடிசாவின் பிட்டார்கனிகா மற்றும் தமரா பகுதியை ஒட்டிய பூரி- சாகர் தீவு இடையே கரையை கடக்கும். இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான காலக்கட்டத்தில் கரையை கடக்கும். இந்த தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அதற்கு முன்பாக, காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ நடைபெற்றது. இதைதொடர்ந்து, பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இந்த ரோடு-ஷோவில் பங்கேற்ற கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அன்னை சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் படைசூழ இன்று பிரியங்கா காந்தி வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதற்கான ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சி. மாபெறும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் அவரது குரல் உயர்ந்து இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை பதிவு.
    • யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம்.

    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவை சிகிச்சையின்போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.

    இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

    ஆபரேசன் தியேட்டருக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என டாக்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனை மீது தடை இருந்தாலும், ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பொழிச்சலூர் தபால் நிலையத்தில் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்புதற்காகச் சென்றுள்ளார்.
    • 30 ரூபாயை அலுவலரிடம் கொடுத்து மீதி சில்லறை 50 பைசாவை கேட்டுள்ளார்.

    50 பைசாவை திரும்பித் தராத போஸ்ட் ஆபீசுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 3 அன்று சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் பொழிச்சலூர் தபால் நிலையத்தில் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்புதற்காகச் சென்றுள்ளார். தபால் செலவாக ரூ.29.50 பைசா வந்துள்ளது.

    ஆனால் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் Pay U யுபிஐ சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பழுதடைந்தால் 30 ரூபாயை அலுவலரிடம் கொடுத்து மீதி சில்லறை 50 பைசாவை கேட்டுள்ளார். ஆனால் டிஜிட்டல் பெண்மன்ட் பழுதாகி உள்ளதால் தபால் செலவு ரவுண்டாக ரூ.30 என்று கூறி மீதி சில்லறை தர மறுத்துள்ளார்.

    எனவே இதனை எதிர்த்து அந்த நபர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்த நிலையில் இதுதொடர்பான விசாரணையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனது சொந்த பணமான 50 பைசாவை இழந்து பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடாக ரூ.15,000 வழங்கும்படி போஸ்ட் ஆபீசுக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு.
    • அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார்.

    சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

    சிஎம்டிஏ அலுவலகத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சிஎம்டிஏ அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.

    அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.

    அவர், அமைச்சர் பதவியில் இருந்தபோது 1058% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தாம்பரத்துக்கு அருகே உள்ள பெருங்களத்தூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

    அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுத்தியதாகக் கூறி, வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×