என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடல் அலைகள் 2 மீட்டர் முதல் 5 மீட்டர் உயரம் வரை சீற்றமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
- டானா புயல் கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
மத்திய கிழக்கு வங்கக் கடல் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, கடந்த திங்கட் கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. அது நேற்று முன்தினம் காலை 5.30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெற்றது.
நேற்று அதிகாலை அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றது. இதனால் அது சக்தி வாய்ந்த புயலாக மாறியது. இந்த புயலுக்கு கத்தார் நாடு வழங்கிய டானா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி ஒடிசா மாநிலம் பார தீப்புக்கு தென்கிழக்கே சுமார் 300 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவிலும் டானா புயல் நகர்ந்தபடி உள்ளது. இது இன்று ஒடிசா வங்க கடலோர பகுதியை நெருங்கி செல்லும்.
டானா புயல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி உள்ளது என்று வானிலை இலாகா கூறி உள்ளது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. டானா புயல் தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்தபடி இருந்தது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்யத் தொடங்கி உள்ளது.
டானா புயல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒடிசா மாநிலம் பூரிக்கும் மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் டானா புயல் கரையை கடக்கத் தொடங்கும் என்று இன்று காலை வானிலை இலாகா அறிவித்துள்ளது.

நாளை அதிகாலை வரை புயல் கரையை கடந்தபடி இருக்கும். அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. கடல் அலைகள் 2 மீட்டர் முதல் 5 மீட்டர் உயரம் வரை சீற்றமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
புயல் கரையை கடக்கும் போது சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் டானா புயல் கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து ஒடிசாவிலும், மேற்கு வங்காளத்திலும் புயல் நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஒடிசாவில் மட்டும் சுமார் 5000 ஆயிரம் புயல் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.
நிவாரண முகாம்களில் தங்குபவர்களுக்கு உணவு, உடை, மருந்து வசதிகள் செய்து கொடுப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சுமார் 10 லட்சம் பேர் கடலோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
டானா புயலின் தாக்கம் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளிலும் இருக்கும் என்பதால் சுமார் 1.14 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய ரெயில்வே சுமார் 200 ரெயில்களை ரத்து செய்துள்ளது.
கிழக்கு மற்றும் தென் கிழக்கு ரெயில்வே நிர்வாகமும் ஏராளமான ரெயில்களை ரத்து செய்து இருக்கிறது.
'டானா' புயல் காரணமாக அங்குல், புரி, நாயகர், கோர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திர பாரா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கான அபாயம் உள்ளதாக அரசு கண்டறிந்துள்ளது.
இந்த 14 மாவட்டங்களில் முதன் மையாக கடலோரப் பகுதியில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.
'டானா' புயலைக் கருத்தில் கொண்டு ஒடிசா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6 மணி முதல் 15 மணி நேரத்துக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 56 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தவிர உள்ளூர் மீட்பு படையினரையும் ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்கள் தயார் நிலையில் வைத்துள்ளன.
- ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.
- தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலமாக பேசி இருக்கிறார்.
திருச்சி:
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க.விற்கு எதிராக பேசியிருந்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த அரசு வக்கீல் முரளி கிருஷ்ணன் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
எக்ஸ் வலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள 2 வரிகளை தூக்கியதற்காக கொந்தளிப்பதா? என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்று மிகவும் கண்ணியக் குறைவாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்கிற நோக்கத்தோடும் ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.
இது சமூக வலைதளத்தில் பரவி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதனால் எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மனச்சோர்வு அடைந்து, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
தமிழ்த்தாய் வாழ்த்தை சீமான் மிகவும் கொச்சைப்படுத்தி அரசின் உத்தரவின்றி தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை மிகவும் கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசி வருவதால் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றியும் அதன் மீது உள்ள நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே சீமான் மீது குற்றவியல் சட்டம் மற்றும் தேச துரோக வழக்கினை பதிவு செய்து அவருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
- நினைவு நாள் அரசு விழாவாக இன்று கடைபிடிக்கப்பட்டது.
- காளையார்கோவிலில் அக்டோபர் 27-ந் தேதி குருபூஜை விழா.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த சுதந்திர போராட்டத்தில் மருதுபாண்டியர்களை வெள்ளையர்கள் கைது செய்து தூக்கிலிட்டனர்.
இதையடுத்து கடந்த 222 ஆண்டுகளாக அக்டோபர் 24-ந்தேதி திருப்பத்தூரில் அவர்களது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் சுவிடிஷ் மிஷின் மருத்துவமனை வளாகத்தில் மருது இருவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டு அவர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு மண்டபத்தில் நினைவு நாளை அரசு விழாவாக இன்று கடைபிடிக்கப்பட்டது. இன்று காலை மருது சகோதரர்களின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தேசிய கொடியை ஏற்றி வைத்து மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, உதவி ஆணையர் ரெங்க நாதன், தாசில்தார் மாணிக்க வாசகம், காவல் துறை துணை கண்காணிப் பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கே.ஆர். பெரிய கருப்பன், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று காலை பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவு இடத்தில் அக்டோபர் 27-ந் தேதி குருபூஜை விழா நடைபெற உள்ளது.
- தாசில்தார் அலுவலகத்தில் இருந்தவர்களை வெளியில் விடாமல், கதவை பூட்டி விட்டு, அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
- சோதனையில் ஏராளமான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தாசில்தாராக கோமதி என்பவர் உள்ளார்.
இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் அனுபோக சான்றிதழ், அடங்கல் உள்ளிட்ட பல சான்றிதழ்களை வழங்குவதற்காக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், இதை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அலுவலகம் நேரம் முடிந்த பிறகு இங்கு வந்து சான்றிதழ்களை பெற்று செல்வதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்றிரவு கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த புரோக்கர் ஒருவர் தப்பியோட முயன்றார். உடனடியாக அவரை பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.
பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்தவர்களை வெளியில் விடாமல், கதவை பூட்டி விட்டு, அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
மேலும், கோத்தகிரி தாசில்தார் கோமதி, அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
இரவு 7 மணிக்கு தொடங்கிய சோதனையானது விடிய விடிய நடந்தது. அதிகாலையிலேயே சோதனை முடிந்து போலீசார் திரும்பி சென்றுள்ளனர். இந்த சோதனையின்போது தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.10 ஆயிரத்து 200 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.
மேலும் தாசில்தார், துணை தாசில்தார், 2 வி.ஏ.ஓ.க்கள் ஆகியோரின் வங்கி கணக்கில் பட்டா, சிட்டா உள்ளிட்ட சான்றிதழ் வாங்குவதற்காக ரூ.6 லட்சத்திற்கு மேல் லஞ்சமாக பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
- சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
குனியமுத்தூர்:
பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்களில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பணி நிமித்தமாக வருவோர் என ஏராளமான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.
இன்று காலை பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று கோவைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (27) என்பவர் ஓட்டுனராக இருந்தார். கண்டக்டராக கதிரேசன் (55) என்பவர் இருந்தார்.
அதிகாலை நேரம் என்பதால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருவோர் உள்பட 40 பயணிகள் பஸ்சில் இருந்தனர்.
காலை 8 மணியளவில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதை பார்த்த டிரைவர் சுரேஷ் அதிர்ச்சியானார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்ந்த அவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.
பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 40 பேரையும் உடனடியாக பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கினர்.
அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஸ்சின் முன்பகுதியில் எரிய தொடங்கிய தீ பஸ் முழுவதும் வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஸ்சின் இருக்கைகளும் எரிந்து விட்டன. பஸ் தற்போது பாதி எரிந்த நிலையில் உள்ளது.
தகவல் அறிந்து செட்டிப்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் எரிந்த பஸ்சை பார்வையிட்டனர்.
பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.
என்ஜினில் புகை வருவதை பார்த்ததும் டிரைவர் உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ் நிறுத்தி பயணிகளை கீழே இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 40 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
காலை நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த அரசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
- இர்பான் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும்.
- பிரசவம் நடைபெற்ற மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த 'யூ டியூபர்' இர்பான்-ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை இர்பான் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என டாக்டர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் இர்பான் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
தனது மனைவியின் பிரசவத்தின்போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய யூடியூபர் இர்பான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். இர்பான் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. பிரசவம் நடைபெற்ற மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- போதிய பாதுகாப்பு வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத்துறை நிராகரித்துள்ளது.
- பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
மேலும் தற்காலிக பட்டாசு கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத்துறை அமல்படுத்தியுள்ளது.
பட்டாசுக் கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக தீயணைப்புத்துறை இயக்குனரும், டி.ஜி.பி.யுமான ஆபாஷ்குமார் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு வெடிபொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.
தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விற்பனை உரிமம் கோருவோர் தீயணைப்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம். இதில், தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழே முக்கியமானது. இந்தச் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பிற துறையினரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற முடியும்.
நடப்பாண்டில் தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு 9,177 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன. இதில் 6,585 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,911 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் களஆய்வு செய்யப்பட்டு, ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனா்.
போதிய பாதுகாப்பு வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத்துறை நிராகரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்து உள்ளன.
இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால், பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகளுக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு சுமார் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன.
இதில் தகுதியான 7,200 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் வகையில் தீயணைப்புத் துறை சார்பில் கடந்த ஒரு மாதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 321 பள்ளிகள், 61 கல்லூரிகள், 598 பொது இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் 61 ஆயிரத்து 100 பேர் பங்கேற்றுள்ளனர். விழிப்புணர்வு நிகழ்ச்சி தீபாவளி வரை நடைபெறும் என்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குத் தொடங்கி ஏ.டி.எம். கார்டு பெறலாம்.
- தொடங்கப்படும் கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை:
கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குத் தொடங்கி ஏ.டி.எம். கார்டு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்திய கால வேளாண் கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் குடிமைப்பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம், கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து நியாய விலைக் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள் நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்ததான கையேடுகள் விநியோகிக்கவும், நியாய விலைக்கடை பணியாளர்களை கொண்டு, சேமிப்புக் கணக்கு துவக்குவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் துவக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக, துவக்கப்படும் கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நியாய விலைக் கடைகள் மூலம் துவக்கப்படும் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு வங்கியின் மூலம் வழங்கப்படும் மின்னணு பரிவர்த்தனை வசதிகள் ஏ.டி.எம். கார்டு வசதியினையும் மற்றும் வங்கிச் சேவையினை எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கான கணக்கு துவக்கியவுடன் இவ்வசதிகள் அடங்கிய தொகுப்பு அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கு துவக்கிடவும் இதன் மீதான நடவடிக்கைகளை கண்காணித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான நம்பியூர், சத்தி, கொடிவேரி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது.
கோபி:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆற்றின் வழியாக கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இதனால் கொடிவேரி தடுப்பணை ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது.
இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். வெளி மாநில பயணிகளும் வந்து செல்கிறார்கள். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அணைக்கு வருவது வழக்கம். இதனால் இங்கு மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான நம்பியூர், சத்தி, கொடிவேரி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் அதிகளவில் சென்று வருகிறது.
இதே போல் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கும் கணிசமான தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் 860 கன தண்ணீர் அடி வெளியேறி வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் அந்த பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.
இதனால் அங்கு இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் நுங்கும், நுரையுமாக செல்கிறது. இதையொட்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்படுகிறது என நீர்வளத்துறை அதி காரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து இன்று குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் கொடிவேரிக்கு வந்து இருந்தனர். அங்கு தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- மக்களை கவரும் வகையில் கடைகளிலும் பல்வேறு சலுகை அறிவிப்புகளும் வெளியிட்டுள்ளனர்.
- பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கோவை:
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் சில நாட்களே இருப்பதால் கோவையில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள், பலகார கடைகள் உள்பட அனைத்து கடைகளிலுமே மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
மக்கள் தங்களுக்கு தேவையான புதுத்துணிகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்கி செல்கின்றனர். மக்களை கவரும் வகையில் கடைகளிலும் பல்வேறு சலுகை அறிவிப்புகளும் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பகல் நேரங்களில் கடைவீதிக்கு செல்ல முடியாதவர்களின் வசதியை கருத்தில் கொண்டு நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறக்க கோவை மாநகர போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாநகரில் உள்ள கடைவீதிகளில் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் அன்றாட வேலை பாதிக்காத வகையில் கடைவீதிக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக கடை மற்றும் வியாபார நிறுவனங்களின் விற்பனை நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தீபாவளி பண்டிகை வரை கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபார தளங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு 1 மணி வரை செயல்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் அனுமதிக்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
- கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிலையில் புறக்கணிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறக்கணித்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிலையில் புறக்கணிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு 54,714 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்.
இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவர்னரின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வரும் காரணத்தால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து புறக்கணித்திருத்ததாக கூறி உள்ளார்.
- வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. அதே மாதம் 24-ந் தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720
22-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
21-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
20-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240
19-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-10-2024- ஒரு கிராம் ரூ. 112
22-10-2024- ஒரு கிராம் ரூ. 112
21-10-2024- ஒரு கிராம் ரூ. 110
20-10-2024- ஒரு கிராம் ரூ. 109
19-10-2024- ஒரு கிராம் ரூ. 107






